"கிறீஸ்துநாதர் மரித்தோருக்கும், ஜீவியருக்கும் கர்த்தரா யிருக்கும் பொருட்டே மரித்து உயிர்த்திருக்கிறார்'' (உரோ.14:9). புனிதர்கள் சேசுநாதருடைய திருமரணத்தைக் கண்டுதியானித்து, இவ்வளவு அதிக அன்புள்ள ஒரு கடவுளின் மீதுள்ள அன்பிற்காகத் தங்கள் உயிரையும், எல்லாவற்றையுமே தருவதும் கூட மிகக் குறைவானதுதான் என்று நினைத்தார்ள். எத்தனை வேதசாட்சிகள் அவருக்காகத் தங்கள் உயிரைப் பலியாக்கினார்கள்! எத்தனை கன்னியர்கள் தங்கள் நிமித்தமாக உயிரைக் கையளித்த சர்வேசுரனுடைய பேரன்க்குப் பதிலன்பு செலுத்தும்படியாக, அரசர்களையும் பிரபுக்களையும், பெரும் செல்வந்தர்களையும் மணக்க மறுத்து, மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவிக் கொண்டார்கள்! சேசுநாதருக்காக நீ என்ன செய்திருக்கிறாய்?
"ஒரு காரியம்தான் அவசியமானது'' (லூக்.10:42). இந்த அவசியமான ஒரே ஒரு காரியம் என்ன? செல்வங்களைக் குவிப்பதும், பதவிகளை அடைவதும், புகழ் பெறுவதும் அவசியமானவை அல்ல. கடவுளை நேசிப்பது ஒன்றே அவசியமானது. கடவுளுக்காகச் செய்யப்படாத எந்தக் காரியமும் இழக்கப்பட்டதாகவே இருக்கிறது. இதுவே தேவ சட்டத்தின் மிகப் பெரியதும், முதன்மையானதுமான கட்டளையாக இருக்கிறது. வேதப் பிரமாணத்தில் எல்லாம் பெரிய கட்டளை எது என்று கேட்ட பரிசேயர்களுக்கு, ""உன் தேவனாகிய ஆண்டவரை உன் முழு இருதயத்தோடு நேசிப்பாயாக . . . இதுவே எல்லாவற்றிலும் பெரிதும், முதன்மையுமான கட்டளை'' என்று சேசுநாதர் பதிலளித்தார் (மத்.22:37,38). ஆனால், கட்டளைகளில் எல்லாம் பெரியதாகிய இந்தக் கட்டளைதான் மனிதர்களால் அதிகமாக வெறுப்படுகிறது; ஒரு சிலர் மட்டுமே இதை நிறைவேற்றுகிறார்கள். பெரும்பாலான மனிதர்கள் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும், ஏன், மிருகங்களையும் கூட நேசிக்கிறார்கள். ஆனால் தங்கள் கடவுளை அவர்கள் நேசிப்பதில்லை. இவர்களைப் பற்றியே அர்ச். அருளப்பர், அவர்களிடம் உயிரில்லை, இவர்கள் செத்தவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்: ""சிநேகியாதவன் மரணத்தில் நிலை கொண்டிருக்கிறான்'' (1 அரு. 3:14). கடவுளின் மீது ஓர் ஆன்மாவுக்குள்ள அன்பின் அளவைக் கொண்டே அதற்குரிய வெகுமதி அளவிடப்படுகிறது என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார்.
ஆகவே, கடவுளை நம் முழு இருதயத்தோடும் நேசிக்க வேண்டுமென்ற இந்தக் கட்டளை நமக்கு எவ்வளவு பிரியமானதாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்திப்போம். சேசுநாதரை விட அதிக மேன்மையுள்ளதும், அதியற்புதமானதும், அதிக வல்லமையுள்ளதும், அதிக வளமுள்ளதும், அதிக அழகுள்ளதும், அதிக தாராளமுள்ளதும், அதிக இரக்கமுள்ளதும், அதிக நன்றியுள்ளதும், அதிகம் நேசத்திற்குரியதும், அதிகம் அன்புள்ளதுமான வேறு யாரை, அல்லது எதை நாம் நேசிப்பதற்காகக் கடவுள் நமக்குத் தர முடியும்?
கடவுளை விட அதிக மேன்மையுள்ளவன் யார்? சிலர் ஐநூறு அல்லது ஆயிரம் வருட குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறார்கள். ஆனால் நம் பிதாவாகிய சர்வேசுரனின் மேன்மை நித்தியமானது. அவர் அனைத்திற்கும் ஆண்டவராக இருக்கிறார். கடவுளுக்கு முன்பாக மோட்சத்திலுள்ள சகல சம்மனசுக்களும், பூமியிலுள்ள அனைத்து உயர்குடியினரும், ஒரு துளி நீரைப் போல, அல்லது ஒரு மணற்துகளைப் போல் இருக்கிறார்கள். ""அவர் முன் சகல ஜனங்களும் ஏற்றச் சாலினின்று ஒழுகும் நீர்த் துளி போலவும், தராசில் ஒட்டியுள்ள தூசு போலவும் பாவிக்கப்படுகின்றனர். இதோ தீவுகள் எல்லாம் சிறு தூசுத் துகளாகக் காணப்படுகின்றன'' (இசை. 40:15).
கடவுளை விட அதிக வல்லமையுள்ளவன் யார்? தாம் விரும்பும் எதையும் செய்ய அவரால் முடியும். தமது சித்தத்தின் ஒரு செயலைக் கொண்டு அவர் உலகைப் படைத்தார். மற்றொரு செயலைக் கொண்டு, தாம் விரும்பும்போது அதை அழிக்கவும் அவரால் முடியும்.
அவரை விட அதிக செல்வமுள்ளவன் யார்? அவர் பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள செல்வங்கள் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்.
அவரை விட யார் அதிக அழகுள்ளவன்? கடவுளின் அழகுக்கு முன்பாக, சிருஷ்டிகளின் அழுழகுகள் மங்கி மறைந்து போகின்றன.
அவரை விட யார் அதிக தாராளமுள்ளவன்? நன்மைகளைப் பெற நமக்குள்ள ஆசையை விட, அவற்றை நமக்குத் தர அவர் அதிக ஆசை கொண்டிருக்கிறார் என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.
அவரை விட யார் அதிக இரக்கமுள்ளவன்? பூமியின் மீதுள்ள அனைவரிலும் அதிகக் கொடியவனும், பக்தியற்றவனுமாகிய ஒரு பாவி கடவுளுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தி, தனது பாவங்களுக்கு மனஸ்தாபப்படுகிறான் என்றால், கடவுள் உடனே அவனை மன்னித்து, அவனை அரவணைத்துக் கொள்கிறார்.
அவரை விட யார் அதிக நன்றியுள்ளவன்? அவர் பொருட்டு நாம் செய்யும் மிகச் சிறிய செயலுக்கும் கூட அவர் வெகுமதி தராமல் இருப்பதில்லை.
அவரை விட யார் அதிக நேசத்திற்குரியவன்? கடவுள் எவ்வளவு நேசத்திற்குரியவராக இருக்கிறார் என்றால், மோட்சத்தில் வெறுமனே அவரைப் பார்த்து, அவரை நேசிப்பதன் மூலமாக, புனிதர்கள் நித்தியத்திற்கும் தங்களைப் பூரண மகிழ்ச்சியும், திருப்தியும் கொள்ளச் செய்யும் ஒரு சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். நரகவாசிகளின் வாதைகளில் எல்லாம் மிகப் பெரிய வாதை, இந்தக் கடவுள் எவ்வளவோ அதிக அன்புக்குரியவர், மனதிற்கு இனியவர் என்பதையும், அவரை இனி தங்களால் நேசிக்க இயலாது என்பதையும் அறிவதிலிருந்தே எழுகிறது.
ஓ அளவற்ற நன்மைத்தனமே! ஓ அளவற்ற நேசமே! என் இனிய நேசத்திற்குரிய சேசுவே, நான் என்னை மறந்து, உம்மை நேசிப்பதையும், மகிழ்விப்பதையும் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்காதிருக்கும்படியாக, உமது அன்பால் என் இருதயத்தை நிரப்பும். இப்போது நான் என் சரீரத்தையும், என் ஆத்துமத்தையும், என் சித்தத்தையும், என் சுதந்திரத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். இப்போது வரை உம்மை மிகவும் மனநோகச் செய்யும் விதமாக நான் என்னையே திருப்திப்படுத்தத் தேடி வந்திருக்கிறேன். சிலுவையில் அறையுண்ட என் நேசரே, இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இனி என் தேவனும், என் சர்வமுமான உம்மைத் தவிர வேறு எதையும் நான் தேட மாட்டேன்.
மேலும் கடவுளை விட அதிக நேசமுள்ளவர் யார்? பழைய வேதப் பிரமாணத்தில், கடவுள் தங்களைக் கனிவோடு நேசிக்கிறாரா என்று மனிதர்கள் சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால், நமக்காக அவர் சிலுவையின் மீது மரிப்பதைக் கண்ட பிறகு, மிகுந்த கனிவோடும், ஆசையோடும் அவர் நம்மை நேசிக்கிறார் என்பதில் நாம் எப்படி சந்தேகம் கொள்ள முடியும்? நாம் நம் கண்களை உயர்த்தி, சர்வேசுரனுடைய மெய்யான திருச்சுதனாகிய சேசுநாதர் ஒரு மரத்தில் ஆணிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை உற்று நோக்குவோம். அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின் தீவிரத்தை தியானிப்போம். அந்தச் சிலுவையும், அந்தத் திருக்காயங்களும், அவர் மெய்யாகவே நம்மை நேசிக்கிறார் என்று கூக்குரலிட்டு அறிக்கையிடுகின்றன என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். முப்பது ஆண்டுகளாகத் துயரம் நிறைந்த ஒரு வாழ்வு நடத்தியதையும், அதன்பின், தமது சொந்த திரு இரத்தத்தால் நம் பாவங்களைக் கழுவிப் போக்குமாறு, அவமானமுள்ள சிலுவை மரத்தின் மீது கடும் வாதைகளுக்கு மத்தியில் மரித்ததையும் விட அதிகமாக, நமக்குத் தமது பெரும் நேசத்தை எண்பிக்க அவர் வேறு என்னதான் செய்ய முடியும்? ""கிறீஸ்துநாதர் நம்மை நேசித்து, நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார்'' (எபே.5:2). ""இவர் நம்மைச் சிநேகித்து, தமதுஇரத்தத்தினாலே நம்முடைய பாவங்களினின்று நம்மைக் கழுவினார்'' (காட்சி.1:5). ""கடவுளை விசுவசிக்கிற ஒருவனுக்கு, அவரைத் தவிர வேறு எதையும் நேசிப்பது எப்படி சாத்தியமாகும்?'' என்று அர்ச். பிலிப் நேரியார் கேட்கிறார். மனிதர்கள் மீது கடவுள் கொண்டுள்ள அன்பைத் தியானித்து, ஒரு நாள் அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் மணியடித்து, இவ்வளவு நேசத்திற்குரியவராகிய கடவுளை நேசிக்கும்படி பூமியின் மக்களினங்கள் அனைத்தையும் அழைக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தாள்! ""நம் கடவுளுக்குத் தகுதியுள்ளபடி அவரை நேசிப்பதற்கு, நமக்கு ஓர் அளவற்ற அன்பு தேவைப்படும்; நாமோ, வீணான, இழிவான காரியங்களின் மீது நமது அன்பை வீசியெறிகிறோம்'' என்று அர்ச். பிரான்சிஸ் சலேசியார் அடிக்கடி கண்ணீரோடு கூறுவது வழக்கமாக இருந்தது.
ஐயோ, என் சேசுவே, எத்தனை தடவைகள் உமது நட்பை நான் உதறித் தள்ளி, உமது அளவற்ற மகத்துவத்தை அவமதித்து, சாத்தானுக்கு என்னை அடிமையாகக் கையளித்திருக்கிறேன்! எல்லாவற்றிற்கும் மேலாக, இவ்வளவு கேவலமாக உம்மை அவமானப்படுத்தியதற்காக நான் துக்கப்படுகிறேன். ஆ என் தேவனே, என் சித்தம் உம்மை மகிழ்விப்பதைத் தவிர வேறு எதையும் விரும்பாதபடி, அதை உமது பரிசுத்த அன்பின் இனிய கயிறுகளைக் கொண்டு உமது திருப்பாதங்களோடு சேர்த்துக் கட்டியருளும். உம்முடைய திருச்சித்தத்தையே அடியேன் என் வாழ்வின் ஒரே வழிகாட்டியாகக் கொண்டிருப்பேனாக. நான் எல்லாவற்றையும் விட்டு விலகுகிறேன். நீர் மட்டுமே எனக்குப் போதுமானவராக இருக்கிறீர்.