இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரண பயங்கரம்!

பிறந்தவன் எவனும் இறக்க வேண்டும் என்று பாவத்துக்குத் தண்டனையாகச் சர்வேசுரன் கட்டளையிட் டிருக்கிறார். அந்தக் கட்டளைக்கு, அவருடைய திருக்குமாரன், தேவமாதா முதல் சகல மனிதரும் உட்பட்டு நடந்து கொண்டு வந்ததைக் கண்டு வருகிறோம். மனுஷன் ஒருவன் பிறக்கிறபோது, சந்தோஷமும், இறக்கிற போது துக்கமுமாயிருந்து, அவனவன் பிறந்த நாளை எழுதி வைத்துக் கொண்டு, அந்த நாளைக் கொண்டாடுவார்கள். இறக்கும் நாளைக் குறித்து ஒரு சிந்தனையும் இல்லை. நமது கண் எதிரில் சாகிறவர்களையும், முன்னே இறந்து போனவர்களையும் கண்டறிந்து, நமக்கும் இப்படி வருமே என்பதைச் சற்றும் நினைக்கிறதில்லை. இன்னான் செத்தான் என்கிற வார்த்தையைக் கேட்டவுடனே, அவனுக்காகக் கொஞ்சம் அங்கலாய்த்துப் பெருமூச்சு விட்டு, அப்புறம் மறந்துபோய் ஒன்றும் நினையாமல் இருக்கிறார்கள்.

அது எத்தன்மையதெனில், ஆற்றங்கரையிலுள்ள மரங்களிலே, ஓடி ஆடிப் பாய்கிற குரங்குகளிலே யாதொன்று தப்பித் தவறி ஆற்றிலே விழுந்து செத்தால், மற்றக் குரங்குகள் பல சேஷ்டைகளால் தங்கள் துக்கத்தைக் காண்பிக்கும். செத்த குரங்கை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் அது காணாப் பிணமாய்ப் போனால், அந்தக் குரங்குகள் மறுபடி முன் போலே ஓடி ஆடித் திரியும். வெடி சத்தம் கேட்டவுடனே கொக்கு குருவிகள் எல்லாம் பயப்பட்டுப் பறந்து ஓடிப் போகும். சற்று நேரம் பொறுத்து மறுபடியும் அந்த இடத்திலேயே வந்து கூடும். புத்தியில்லாத மிருகங்கள் இப்படிச் செய்கிறது அதிசயமல்ல. அறிவு, நினைவு, புத்தியுள்ள மனுஷன் மிருகங்களிலும் கடை கெட்ட மிருகமாய்ப் போகிறானே. அதற்கு அதிசயப்பட வேண்டும் அல்லோ ? ஆனால் எரேமியாஸ் என்பவர் மனுஷர் மரணத்தை நினைக்கும்படிக்குக் குயவன் செய்தொழில் இடத்திலே போய்ப் பாருங்கள் என்றார். அதிலே மண்கலம் வனை கிறதையும், உடைந்து போகிறதையும் பார்த்தால், சரீரமும் இப்படிப் போகிறதென்று நினைவு உண்டாகும். சாலமோன் என்கிறவரோ இழவு வீட்டுக்குப் போங்கள் என்றார். அவனவன் தேடின பொருள் எல்லாம் செத்தபின்பு அவனவனுக்கு உதவாமல் போகிறதைக் காணலாம்.

யாராவது ஒருவனைக் கொல்லத் தீர்வையிட்டுக் கொலைக்களத்துக்கு கூட்டிக் கொண்டு போகிற போது, அவன் சீவனுடனே போனாலும் சாகப் போகிறானென்று சொல்லுகிறதல்லாமல், சீவிக்கப் போகிறானென்று சொல்லுவாரில்லை. அடிமரத்திலே கோடரி வெட்டு விழுகிற போது மரம் விழுந்து போகு மென்று சொல்லுகிறதல்லாமல், வளருமென்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். அப்படியே உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனுஷனும் சாக வேண்டுமென்று சர்வேசுரன் தீர்வையிட்ட போதே, மனுஷன் நடக்க நடக்க, ஆயுள் குறைந்து அவனைப் புதைக்கும் குழி விரைந்து வரும். நேற்று நினைத்த நினைவு இன்றைக்கு இல்லை. நேற்றுப் பேசின பேச்சும் நேற்று தின்ற சாப்பாடும், செலவழித்த செலவும் இன்றைக்கு உண்டோ ? எல்லாம் கடந்து போச்சுது. இனிமேல் அவனவன் நினைக்கிறதும் செய்கிறதும் அழிந்து போகிறதன்றி ஒன்றும் நிலைநிற்கப் போகிறதில்லை.

ஒருவனை உனக்கு எத்தனை வயதென்று கேட்டதற்கு, ஒரு வயதும் இல்லையென்றான். புண்ணியத்திலே செலவழித்த காலமே வயதாயிருக்குமே தவிர, மற்றது வீணாயிருக்கும். உன்னைக் கொல்லுகிறவர்களும், புதைக்கிறவர்களும் உன்னைத் தொடர்ந்து கொண்டு திரிகிறதைக் காணவில்லையோ? உன் உடலுக்குள்ளேயிருக்கிற வாதம், பித்தம், சிலேட்டுமம் என்கிற வியாதிகளே உன்னைக் கொல்லுகிற கொலைகாரராம். உன் மனதிலே இருக்கிற பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்கிற மூன்று தீக்குணங்களே உன்னை நரகக் குழியிலே புதைக்கக் கொண்டு போகிற தூதர்களாம். உன் உடலே உனக்குப் பகை. சீவிக்கிற பொருள் எல்லாம், உன்னைக் கொல்லுகிற ஆயுதம். உன்னுடைய ஊணுறக்கமே உனக்குச் சாவு. நீ நடக்கிற நடையும் உன்னுடைய சதையும் கொழுப்புமே உனக்குச் சத்துரு. பஞ்ச பூதங்களே உனக்கு விரோதிகள். அசாத்திய வியாதி முந்நூறு உண்டென்றும், திடீரென சாகிற வகைகள் தொண்ணுாற்றேழு என்றும் சில சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கின்றது.

வருத்தம், நகைப்பு, சந்தோஷத் தினாலும், மூச்சடைப்பு, முள் விக்கிக் கொள்ளுகிறதி னாலேயும் சாவு வருகின்றது. ஒருவன் வீதியிலே, ஒருவன் வாசலிலே, ஒருவன் குதிரைமேலே, ஒருவன் பல்லக்கின் மேலே, இப்படி எண்ணிக்கை இல்லாத விதமாய்ச் திடீரென செத்துப் போகிறார்கள். கொலை செய்யப்படப் போகிறவன் சந்தோஷமாய்ச் சீவிக்கிறதெப்படி? விளையாட்டுக்களைக் கண்டால் சந்தோஷிப்பானோ? பொன், வெள்ளி, ஆபரணங்கள் தன் காலடியிலே விழுந்திருந்தாலும் எடுக்க மனம் வருமோ? சாகப் போகிற நினைவு பெரிதாயிருக்குமல்லாமல் வேறே என்ன நினைவு வரும்? அப்படி நீ சாகவிருக்கையிலே உனக்குச் சந்தோஷம் என்ன? நகைப்பு என்ன? கைவீச்சு என்ன ? ஒய்யார நடை என்ன? மண்ணோடு மண்ணாய்ப் போகிற உனக்கு வீடு வாசல், தோட்டந் துரவு, காணி பூமி. உடமை உற்பத்தி என்ன? உற்றார், பெற்றோர், சேர்ந்தார், சிநேகிதர் ஏது? சாவையும், அதினாலே வருகிற பொல்லாப்பையும் நினையாதபடி யினாலே மோசம் போகிறாய். அப்படி வராதபடிக்குச் சில பெரியவர்கள் புத்தியோடு செய்கிறதைப் பார்.

சலதீன் என்கிற அரசன் ஆசியாவென்றும், ஆப்பிரிக்காவென்றும் உலகத்தில் இரு கண்டத்திலே அநேக விஸ்தாரமான இராச்சியப் பங்கெல்லாம் தனக்குக் கீழ்ப்படியச் செய்து, வீதிவலம் வருகிறபோது, தன்னுடைய சவம் மூடும் பரிவட்டங்களை முன்னுக்குக் கொண்டு போகச் செய்து பல நாடுகளை ஆண்டதினாலே கண்ட பலன் இவ்வளவுதான் என்று பறைசாற்றக் கட்டளை செய்தான். வேறொரு இராஜா தான் வீதியிலே புறப்படுகிற நேர மெல்லாம் தன்னுடைய பல்லக்கை முன்னுக்குக் கொண்டு போகச் செய்தான். மேலும் ஒரு இராஜா, இன்றே நீ சாவாய் என்கிற வார்த்தையைத் தனக்கு நாள்தோறும் நினைப்பூட்டத் தக்கதாக ஒரு பெரியவருக்குப் படியும் சம்பளமும் கொடுத்துக் கிட்ட வைத்துக் கொண்டிருந்தான்.

மகாத்துமாவாயிருந்த அர்ச். எரோணிமுஸ் முதலான தபோதனர்கள், மண்டை ஓட்டைக் கையிலே பிடித்துக் கொண்டு திரிந்தார்கள். இந்த அர்ச்சிஷ்டவர்களைப் போல சாவை நினைத்துத் தவம் செய்தவர்கள், நித்திய சீவியத்தை அடைந்தார்கள். பாவீ! உன்னுடைய நினைவு மேகத்திலும் அதிகமாய் இருண்டு கொண்டிருக்கிறதோ? தினம் தினம் மனிதர் சாகிறதையும், பிணத்தைப் பல்லக்கில் வைத்துத் தோளில் சுமந்து கொண்டு போகிறதையும், மண்ணிலே போட்டு அடக்குகிறதையும் கண்டு சற்றும் தெளியாதோ? மற்றவர்களுக்கு வருகிற சாவு உனக்கும் வருமென்று நினைக்கவில்லையோ? நினைத்திராமல் அசந்திருக்கிற போது சாவு வருமென்று ஆண்டவர் திருவுளம் பற்றினார். அந்த வார்த்தை தப்புமோ?

சலனிய தேசம் ஆண்டு கொண்டிருந்த ஒரு இராஜ குமாரன் ஒரு நிலத்திலே அக்கினி கொழுந்து விட்டு எரிகிறதைக் கண்டு இது யாரோ ஒரு அரசன் சாகிறதற்கு அடையாளமென்று வீண் சகுனமாய்ச் சொன்னான். சொன்ன அன்று இராத்திரியிலேயே அவனே செத்துப் போனான். தனக்கு வந்த சாவை மற்றவர்களுக்கென்று நினைத்துத் தன் சீவனும், இராச்சியமும், உலக வாழ்வும் சடுதியிலே இழந்து போனான். ஐயையோ மூடா ! பாவத் திரையால் புத்திக் கண்ணை ஏன் மூடுகிறாய்? பாவ மயக்கத்தை விட்டுச் செய்த பாவத்துக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.