இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மகா புத்தியுடைத்தான கன்னிகையே!

தாய் என்ற முறையில் மரியாயை இதுவரை போற்றிப் புகழ்ந்தோம். இனி, பரிசுத்த கன்னிகை என்ற முறையில் அவர்களைப் புகழ்ந்து கொண்டாட திருச்சபை ஆசிக்கிறது. ஏவாளின் புதல்விகளில் எவரிடத்தும் விளங்காத விவேகமும், புத்தியும் கன்னித் தாயிடத்தில் காணப்பட்டமையின் அக்காரணம் பற்றி அவர்களை வாழ்த்துதல் முறையன்றோ!

ஒரு கன்னியிடத்தில் முதன்மையாய்த் துலங்க வேண்டியது விவேகமெனில் மிகையாகாது. ஏனெனில் விவேகமில்லையேல் கன்னிமைக்குப் பழுது நேரிடும். நம் கன்னிமாமரியோ தன் சிறு வயதிலிருந்தே உலக மாய்கையினின்று விலகி நிற்கிறார்கள். தன் கன்னிமையைத் தேவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறார்கள். மனித ரூபத்தில் தோன்றிய கபிரியேல் சம்மனசைக் கண்டதும் பயந்து நடுங்குகிறார்கள். ஏகாந்த வாழ்வில் பழகியவர்கள் ஓர் மானிட உருவம் தன் முன் தனிமையில் நிற்பதைக் கண்டு அஞ்சுவது இயல்புதானே! இரட்சகரின் மாதாவாக அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பரம இரகசியத்தை வெளிப்படுத்துகிறார் தேவதூதர். 

ஆம், ஓர் தாய்! சாதாரண ஒரு மனிதனுக்கல்ல; மனிதாவதாரம் எடுக்கவிருக்கும் கடவுளுக்கே தாயாகும் தனி உரிமை!--யார்தான் இதை விரும்ப மாட்டார்கள்? எனினும் கன்னிமாமரி அதி விவேகம் உள்ளவர்களாயிருந்ததினால் உடனே தனது சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. “என்ன! நான்... ஒரு கன்னிகை... கற்பந்தரிப்பது?... அதெப்படியாகும்? நான் புருஷனை அறியாதவளாயிற்றே” என்று சொல்லி விளங்கக் கூறும்படி கேட்கிறார்கள். தேவ வல்லமையால், அவர்கள் தன் கன்னிமையை இழக்காது ஓர் குமாரனைப் பெறும் விதத்தை விளக்கிக் காட்டுகிறார் தேவதூதன். “இஸ்பிரீத்துசாந்துவானவர் உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னத கடவுளுடைய வல்லமை உமக்கு நிழலிடும்.” மரியாயின் சந்தேகம் தீர்ந்தது. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இவர்களே!

தங்கள் பெருமையை ஊரறியப் பறைசாற்றுவது விசேஷமாய்ப் பெண்களின் வழக்கம். கன்னிமாமரிக்குக் கிடைத்திருக்கும் மகிமை உலகப் பெண்களில் எவருக்கும் கிடைக்காத மகிமை. எனினும் தனக்குக் கிடைத்த மேலான மகிமையை தனது பத்தாவாகிய நீதிமானான சூசையப்பரிடம் முதலாய் வெளியிடவில்லை. அவர்கள் குழந்தையுடன் இருப்பதை அறிந்து, சூசையப்பர் சொல்லொண்ணா சஞ்சலப்படும் போதும் அவர்கள் உண்மையை உடைத்துக் கூறி சந்தேகத்தைத் தீர்க்க வில்லை. ஒருநாள் வரும்; அந்நாளில் உண்மை உலகிற்குப் பட்டப் பகல் வெட்டவெளிச்சம் போல் வெளியாகும் என்று தேவ பராமரிப்பில் முழு நம்பிக்கை கொண்டு மெளனமாயிருக்கிறார்கள்.

தம் குழந்தையைப் புகழ்ந்து பிறர் ஒன்று சொல்ல, அதைச் சாக்கிட்டு மற்றும் பல சொல்லிப் பெருமை கொள்வது தாய்மார் இயல்பு. கன்னித்தாய் மரியாயோ தன் மகன் சேசுவைப் புகழ்ந்து பிறர் பேசும் பொழுது, அவர்களுடன் சேர்ந்து மேலும் பல புகழ் கூறவில்லை. உண்மையை உரைக்கத் தயங்க வேண்டியதில்லைதான். ஆனால் அவர்கள் மகா புத்திசாலி--மகா விவேகி--கிறீஸ்து நாதரின் தெய்வீகத்தை உலகமறிய கடவுளால் குறிக்கப் பட்ட நாளுக்காக அமைதியுடன் காத்திருக்கிறார்கள். இதுதான் புத்தி; இதுதான் விவேகம் என்னும் புண்ணியம்.

சுத்திகரம் செய்ய வேண்டிய நாள் வருகிறது. பரிசுத்ததனத்தின் ஊற்றே தன்னிடமிருந்து பிறந்ததினால் தான் சுத்திகரச் சடங்கை அனுசரிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாமரிக்கு நன்றாகத் தெரியும். எனினும் தன்னிடத்தில் நிறைவேறிய இப்பெரும் அற்புதத்தை மற்றவர்கள் அறிய விரும்பாதவர்களாய்த் தாழ்மையுடன் வழக்கத்திற்கு உடன்படுகிறார்கள்; தேவ அனுசாரத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். இக்காரணத் தாலேயே பன்னிரண்டு வயதில் காணாமல் போன சேசுவை ஜெருசலேம் பட்டணத்துக் கோவிலில் வேதபாரகர் நடுவில் கண்டபொழுது, தன் மகனது தெய்வீகத் தன்மையையும், தனது கன்னிமையையும் எவரும் அறியாதபடி பேசுகிறார்கள். “மகனே, ஏன் எங்களுக்கு இவ்விதம் செய்தீர்? இதோ உமது தந்தையும் நானும் வியாகுலத்தோடு உம்மைத் தேடி அலைந் தோமே?” விவேகமுள்ள தாய் தன் மகனிடம் பேசும் முறை இதுவன்றோ?

சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட விவேகிகளான கன்னியருக்கு ஒரு சிறந்த மாதிரியாக விளங்குகிறார்கள் நம் மாதா. மனமாகிய விளக்கில் தேவசிநேகம் என்னும் எண்ணெய் வார்த்து, செம்மறிப் புருவையின் மணச் சடங்கிற்கு அவர்கள் என்றும் தயாராயிருந்தார்கள். அர்ச. பெர்நார்து சொல்லுவது போல, “இப்பரிசுத்த கன்னிகையின் தீபம் என்றும் மங்காது ஒளிவீசியது” (Serm. ii., in Assumpt. B.M.V.). 

இதோ! நாமும் மோட்சத்தில் இராஜ பந்திக்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். நாம் நினையாத நேரத்தில், “இதோ! மணமகன் வருகிறார்; அவரை எதிர்கொண்டு அழைத்து வாருங்கள்” என்ற குரலொலி நமக்குக் கேட்கும்; நள்ளிரவிலோ, பட்டப் பகலிலோ, படுக்கை யிலோ, படிக்கையிலோ, வீட்டிலோ, நாட்டிலோ, எவ்விடத்திலோ, எந்நேரத்திலோ, எவ்விதமோ நாம் அறியோம். அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?

“மரியே! ஒளியின் மக்களாகிய நாங்கள் இந்நாள் வரையில் இருளின் மக்களைக் காட்டிலும் அறிவீனர்களா யிருந்தோம். பகுத்தறிவில்லாப் பறவைகள், கடவுள் தங்களுக்கு அளித்துள்ள இயற்கையுணர்ச்சியைக் கொண்டு பொழுது விடியும் நேரமறிந்து கூவுகின்றன. புழுப் பூச்சிகள் மழைக் காலத்துக்கு வேண்டிய உணவை முன்னதாகவே சேர்த்து வைக்கின்றன. ஆனால் பகுத்தறிவு படைத்த நாங்களோ, அவ்வறிவைப் பயன்படுத்தித் தின்மையை விலக்கி, நன்மையைச் செய்யாது, அநித்திய சுகவாழ்வைத் தேடுவதிலும், அழிந்துபோகும் இன்பத்தை நாடிச் சுகிப்பதிலுமே காலங்கடத்தி வருகிறோம். எம் அன்னையே! அழியா நித்திய வாழ்வைப் பொறுத்த மட்டில் குருடர்களாயிருக்கும் எங்களுக்காக உமது மகனும் எங்கள் இரட்சகருமான சேசுவிடம் மன்றாடும். நாங்கள் எல்லாவற்றிற்கும் முதலில் எங்கள் இரட்சண் யத்தைத் தேட வேண்டிய வரப்பிரசாதத்தைத் தரும்படி அவரை மன்றாடும். நாபால் மீது தாவீதுக்கிருந்த கோபத் தைத் தனது விவேகத்தால் தணித்த அபிகாயல் (1 அரசர் 25) என்பவளை ஒத்த ஞான அபிகாயலே! புண்ணிய மாமரியே! நீர் பரம பிதாவின் ஏக குமாரனைப் பெற்றெடுத்தீர் - அவர் உமது வார்த்தையைத் தட்ட மாட்டார். ஆகையால் பாவிகளாகிய எங்கள் மீது வரக்கூடிய தேவ கோபத்தைத் தடுத்து எங்களைக் காத்தருளும். “ 


மகா புத்தியுடைத்தான கன்னிகையே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!