இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அவனவன் சரீரக் கிரியைகளைக் கொண்டு தீர்க்கிற தீர்ப்பு!

சர்வேசுரன் மனிதனுக்கு ஆத்துமத்தையும் சரீரத்தையும் கொடுத்து, அழிந்து போகிற சரீரம் பிழைக்க அழிவுள்ள வஸ்துக்களையும், என்றென்றைக்கும் இருக்கிற ஆத்துமத்துக்குப் பிழைப்பாக அழியாத ஞான நன்மைகளையும் கட்டளையிட்டார். மனிதன் அழிந்து போகிற சரீரம் பிழைக்கிறதற்கு மிகுந்த கவனத்துடன் பாடுபடுகிறது போல், அழியாத ஆத்துமம் பிழைக்கச் சற்றாகிலும் கவனம் செலுத்தி பாடுபடாமல் போகிறான். ஆகையால் அவனுடைய கிரியைகளைக் கொண்டுதான் நடுத்தீர்வையினுடைய கடினம் நீதி என்று காண்பிக்கப்படும். ஒரு மனிதன் வழிப் பிரயாணம் போகிறபோது, கொள்ளைக்காரர், துஷ்ட மிருகங்கள் கையில் அகப்படாத படிக்கு ஆன துணையும், ஆயுத பலமும், பசிக்குக் கட்டுச் சோறும், பலகாரம் முதலான பட்சணங்களும் கொண்டு போகிறான்.

பரலோக வழியில் நடக்க உன் ஆத்துமத்திற்குத் சம்மனசுக்களுடைய துணையும், ஞான ஆயுதங்களும், தேவப் பிரசாதப் பட்சணங்களும் தேடாதது என்ன? உன் உடமை உற்பத்திப் பொருள் களவாய்ப் போகாதபடிக்கு நல்ல பெட்டிகளிலே போட்டுப் பூட்டி, பலத்த வீட்டிலே வைத்து, காவல் கட்டு செய்து வைக்கிறாய். தோட்டம், வயல் அழியாதபடிக்கு வேலி அடைத்துக் குடிசை கட்டிக் காக்கிறாய். உன் ஆத்தும் செல்வமாகிய தேவப் பிரசாதங்களைப் பாவமென்கிற கள்வன் கொண்டுபோகாத படிக்குப் பஞ்சேந்திரிய வாசல்களைப் பூட்டாததேன்? நல்ல நினைவு என்கிற காவல் கட்டு வையாததேன்?

தப செப தியானம் என்கிற குடில்களைக் கட்டிக்காக்காதது ஏன்? உன் சரீர வியாதி குணமாக, வேண்டிய கசப்பான கஷாயங்களைக் குடிக்கிறாய், கனமான சாப்பாடுகளை விலக்குகிறாய், கசப்பு, புளிப்பு முதலானதை விட்டுப் பத்தியமாயிருக்கிறாய். எத்தனை இறுக்கமாயிருந்தாலும் காற்றுப்படாமல் வீட்டில் அடைபட்டிருக்கிறாய். ஆனால் ஆத்தும் வியாதியாகிய பாவத்தைப் பரிகரிக்கவும், நரக மரணத்துக்குத் தப்பிப் போகவும், பாவசங்கீர்த்தனம் முதலிய ஞான மருந்து உட்கொள்ளாமலும், பாவத்துக்கு ஏதுவான தோழர்களை விலக்காமலும், ஒரு நாளாவது ஒரு சந்தி , உபவாசமாயிராமலும், செப், தப், தியானம் முதலிய சுகிர்த ஒழுக்கங்களை அநுசரியாமலும் போகிறதென்ன? வேடிக்கை, விநோதம், கூத்தாட்டங்களைப் பார்க்க, விடியுமட்டும் உறங்காமல் விழித்திருக்கிறாய். உன் இரட்சணியத்திற்காக ஒரு மணி நேரம் விழித்திருக்க முடியாமல் போகிறதென்ன?

சரீரத்தை அலங்கரிக்க ஒரு ஆடை போதாமல் உடுப்பு மேல் உடுப்பு, ஆபரணத்தின் மேல் ஆபரணம் அணிகிறாய். உன் ஆத்துமத்தை அலங்கரிக்கிறதற்கு வேண்டிய நற்குணங்களையும், திவ்விய நற்கருணையையும் தேடாததேன்? வயிற்றுப் பசிக்குக் கஞ்சியும், பருக்கையும் போதாதென்று பத்துவகைக் கறியும், சோறும் தின்ன ஆசைப்படுகிறாய். ஆத்துமப் பசிக்கு நீ அறிந்திருக்கிற மந்திரம் ஒன்றிரண்டே போதுமென்கிறாய். கலியாணம், காட்சி, புகழ், பெருமைக்கு உன் கையில் உள்ள பணமும் போதாமல், கடன் வாங்கிச் செலவழிக்கிறாய். கோயில் திருநாள் பெருநாள் செலவுக்கு உன் கைப்பணம் செலவழிக்காத படிக்கு ஊரிலே வரி வசூலித்து நடத்தச் சும்மா பார்த்திருக்கிறாய். வீண் தியாகங்களுக்கும், குடி, சூது, பல விளையாட்டுக்கும் உதாரமாய்ச் செலவழித்து, கோயில் காணிக்கைக்கும், பிச்சைக்கும் கொடுக்கக் கதியில்லை என்று பின்வாங்கிப் போகிறாய். சிநேகிதர், தோழர், பிரபுக்களை வெகு உபசாரம் செய்து வலிய விருந்துக்கு அழைக்கிறாய். வயிறு எலும்போடு ஒட்டிப் போகப் பசித்துக் கிடக்கிற பிச்சைக்காரரைக் கிட்டே வர விடாமல் துரத்தி விடுகிறாய்.

வெள்ளாண்மைப் பயிரிடுகிறவன் தான் கொஞ்ச நாள் பிழைக்கிறதற்காக வெயிலிலேயும், மழையிலேயும் அலைந்து திரிந்து, குளிர், பனி ஒறுத்து, கல், காடு, முள், முரடுகளிலே நடந்து, சரீரம் முழுவதும் வேர்த்து, நெற்றி தண்ணீர் நிலத்திலே விழப் பாடுபடுகிறான். வியாபாரியோ பற்பல தேசங்களைச் சுற்றித் திரிகிறதிலே, கள்ளர் பயத்தினால் வயிற்றிலே நெருப்பைக் கட்டிக்கொண்டு திரிகிறது போலத் திரிந்து, கடல் பிரயாணத்தையும் பாராமல் பிரயாசைப்பட்டுப் பணம் சம்பாதிக்கிறதற்கு எந்த வருத்தமும் பெரிதல்ல என்றிருக்கிறான். படைவீரன் கொஞ்ச சம்பளத்துக்காக இரா நித்திரை, பகல் ஓய்வு இல்லாமல், பசி, தாகம் அநுபவித்துச் சமயம் வந்த போது தன் உயிரை முதலாய்க் கொடுக்கிறான். கொல்லன், கன்னான் இரவும் பகலுமாய் உலைக்களத்திலே வெந்து வீண் பிரயாசைப்படுகிறான். இப்படி யே அந்தந்தத் தொழிலாளிகள் சரீரப் பிழைப்புக்காக இவ்வளவு கஸ்தி வாதைகளை நல்ல மனதோடு அனுபவிக்கும் போது ஊழியுள்ள மட்டும் நிலைநிற்கிற ஆத்துமப் பிழைப்புக்கு அற்பமாவது கஷ்டம் ஏற்றுப் பிரயாசைப்படாதிருப்பது நியாயமோ?

சரீரப் பிழைப்பு, கையும் மெய்யுமாகக் காண்கிற பலனானபடியினாலே செய்கிறோம். ஆத்துமப் பலன் காணவில்லையே என்று சொல்வாயோ? அப்படிச் சொல்லாதே. ஏனென்றால், வேலையிலே காண்கிற பலன் அதைச் செய்கிறவன் கொடுத்தால் உண்டு, கொடாவிட்டால் இல்லை. வெள்ளாண்மையிலே விளைந்தால் உண்டு, இல்லாவிட்டால் இல்லை. தொழிலிலே ஆதாயம் வந்தால் உண்டு, இல்லாவிட்டால் இல்லை. இப்படி அநேக முறை ஒன்றும் கிடையாமல் கையிலே உள்ளது, மடியிலே உள்ளதெல்லாம் தோற்றுப் போகக் காண்கிறோம். ஆத்தும ஊழியத்திலே காண்கிற பலன் சர்வேசுரன் கொடுக்கிறதினால் ஒருபோதும் தப்ப மாட்டாது. வெள்ளாண்மை, வியாபாரத்திலே ஒன்றுக்கு நாலு, பத்து ஆதாயம் காணுமென்றால், ஆத்துமத்துக்குச் செய்கிற புண்ணிய வியாபாரத்திலே ஒன்றுக்கு நூறு இவ்வுலகத்திலே காணப்படுகிறதுமல்லாமல், அவ்வுலகத்திலே அளவில்லாத பலனும் உண்டாயிருக்கும் என்று சர்வேசுரன் வாக்களித்துள்ளார். அப்படியிருக்க, நீ ஆகாயத்தையும், பூமியையும் நம்பியும், ஒரு மனுஷனுடைய வார்த்தையை நம்பியும், ஒரு சீட்டை நம்பியும், ஆயிரம் செலவழிக்கிறாய். ஆயிரம் நிலத்திலே சிதறிப் போடுகிறாய். சர்வேசுரனுடைய வாக்கியத்தை ஒரு கால் காசுக்கு முதலாய் நம்பவில்லை. இதற்கு என்ன நியாயம் சொல்லுவாய்?

நாலு மரக்கால் விளைச்சலுக்கு எடுத்துக் கொள்ளுகிற பிரயாசை மோட்ச பாக்கியத்தை அடைய எடுத்துக் கொள்ளுவதில்லை. மண் வீடு கட்ட நீ படும் பிரயாசம் மாணிக்க வீடாகிய மோட்ச மாளிகைக்காகப் பிரயாசைப்படவில்லை. கொஞ்ச நாள் நிலை நில்லாத அதிகாரத்தை, பதவிகளைப் பெற எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் போல் ஒருக்காலும் அழியாத மோட்ச மகிமைக் கிரீடத்துக்காகச் செய்யவில்லை. உலகத்திலே புகழ், வெகுமானம் பெறுகிறதற்குள்ள ஆசை, சர்வேசுரனுடைய பிள்ளை என்கிற பேர் பெறுகிறதற்கு இல்லை. இராஜாக்கள், பிரபுக்கள் வாசலிலே ஊழியம் செய்யப் படுகிற பாடு, சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யப் படுகிறதில்லை. நாளை பேதலிக்கப் போகிற உற்றார், பெற்றார், சிநேகிதருடைய துணையும், ஆதரவும் தேடுகிறது போல் மோட்சவாசிகளுடைய துணையும், உதவியும் தேடுவாரில்லை.

ஒருநாள் உதவி செய்தவன் பேரிலேவைத்த நேசம், எந்நாளும் உதவி செய்கிற சர்வேசுரன் பேரிலே வைக்கவில்லை. பாவச் செயல்கள் பேரிலுள்ள ஆசையும், சுறுசுறுப்பும் புண்ணியச் செயல்கள் பேரிலே இல்லை. சரீர வாதைக்குள்ள பயம் ஆத்தும் வாதைக்கு இல்லை. உடமை, உற்பத்தி, உற்றார், பெற்றார், உறவின் முறையார் சேதப்பட்டுப் போனதற்கு உள்ள வருத்தம் ஆத்துமம் சேதப்பட்டுப் போகிறதற்கு இல்லை. இப்படியே நீ செய்த சகல செய்கைகளினால் ஆத்துமத்தையும் பரலோகத்தையும் கவனிக்காமல் விட்டு, சரீரத்தையும் பூலோகத்தையும் விரும்பித் தேடினபோதே அந்தந்தக் செய்கைகளினாலேயே நடுத்தீர்க்கப்படுவாய். இவ்வுலகத்தின் மேல் வைத்த கெட்ட நம்பிக்கையே உனக்குக் கொலையும், நரகமுமாயிருக்கும் என்று பார்.

சீசாரா என்பவன் தன்னைக் கொல்ல வருகிற நடுவனுக்குப் பயப்பட்டு ஓடிப் போகிறபோது, இழயல் என்ற ஒரு ஸ்திரீ அவனைக் கண்டு, மகா இரக்கமாய் பேசி, பயப்படாதே, நான் உன்னை ஒளித்து வைத்துத் தப்ப விடுவேன் என்று தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போனாள். இவனும் சந்தோஷமாய் அவளை நம்பி, தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்று, போர்வை போர்த்துக் கூடாரத்தில் படுத்துக் கொண்டு, தாகமாயிருக்கிறது என்று கேட்க, நல்ல பால் குடிக்கக் கொடுத்து, அவன் உருத் தெரியாமல் நன்றாய் மூடிவைத்தாள்.

அவன் இளைப்பாறிச் சுகமாய் நித்திரை போகையில், அந்த ஸ்திரீ ஒரு நீள ஆணியையும், சுத்தியலையும் கொண்டு வந்து, அவன் தலையிலே வைத்து, நிலத்தில் உருவிப் போக அடித்து அறைந்து கொன்று போட்டு, பராக்கென்ற நடுவனைக் கண்டு, இதோ நீ தேடுகிற எதிரி, இங்கே செத்துக் கிடக்கிறான் என்று காண்பித்தாள். இப்படியே பாலருசியையும், படுக்கையின் சுகத்தையும், ஒரு ஸ்திரீயினுடைய வார்த்தையையும் நம்பினவனுக்கு இப்படி வந்ததென்றால், நீ உலகம், பசாசு, சரீரம் என்கிற மூன்று எதிரிகளை நம்பி, உலகக் காரியங்களிலேயே ஈடுபட்டுத் திரிகிற போது, உனக்கு எப்படி வர மாட்டாது?

இந்த மூன்று ஆசை எனப்பட்ட திரையினால் உன் ஆத்தும் தீபங்களை மறைத்திருக்கிற போது, எப்படிப் பரலோகத்தைக் காண்பாய்? உடனே பாவ மயக்கத்தை விட்டுச் செய்த பாவத்துக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.