இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியில் காணப்படுகிறபடி கிறீஸ்துநாதருடன் திவ்விய நற்கருணை ஐக்கியம்!

 ஜூன் 19, 1943

சேசு கூறுகிறார்:

திவ்விய நற்கருணையின் உண்மையான பலன்களைப் பெற்றுக் கொள்வதற்கு, அது எப்போதாவது உட்கொள்ள வேண்டிய ஒன்றாகக் கருதப்படாமல், வாழ்வில் அடிப்படை சிந்தனையாக ஆக்கப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது.

ஆன்ம எதிரிகளுடனான உங்கள் போராட்டம் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. இந்தப் போராட்டத்தை ஒரு தொடர்ச்சியான பரிசாக உங்களுக்குத் தந்தபடி, உங்களுக்குள் வரத் துரிதப்படுகிற, அல்லது உங்களுக்குள் வந்திருக்கிற திவ்விய நற்கருணையாக என்னை நினைத்தபடி நீங்கள் வாழ்வது அவசியம். மனிதன் தன் ஆவியில் என்னிடமிருந்து பிரியாமல் வாழ்வது அவசியம், திவ்விய நற்கருணையிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிரில் செயல்படுவது அவசியம், சூரியனைச் சுற்றி வரும் கோள்களைப் போல, நற்கருணைக்கு வெளியேயுள்ள தங்கள் சுற்றுவட்டத் திலிருந்து ஒருபோதும் விலகிப் போகாமல், அதன் மகத்துவப் பேரொளியால் வாழ்வது அவசியம்.

இங்கேயும், மரியாயையே உங்கள் முன்மாதிரிகையாக நான் முன்வைக்கிறேன். என் திருமாதாவாகிய மரியாயின் வாழ்வு நற்கருணை சார்ந்ததாக இருந்தது. சின்ன பலிப்பொருளாகிய மரியாவின் வாழ்வும், முற்றிலும் நற்கருணை சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.

நற்கருணை என்பதற்கு ஐக்கியம் என்பதுதான் பொருள் என்றால், மாமரி கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுவதும் திவ்விய நற்கருணையைச் சார்ந்தே வாழ்ந்தார்கள். ஏனெனில் நான் ஒரு மனிதனாக உலகில் இருக்கத் தொடங்குவதற்கு முன்பே என் திருத்தாயாரில் இருந்தேன். ஒரு மனிதனாக நான் உலகிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகும் கூட, அவர்களில் இருப்பதை நான் நிறுத்திக் கொள்ளவே யில்லை. கீழ்ப்படிதலானது கடவுளின் உச்ச அளவுக்கு அர்ச்சிக்கப் பட்டு, நான் அவர்களது திருவுதரத்தில் மனுவுருவான கணம் முதற்கொண்டு நாங்கள் ஒருபோதும் பிரிந்ததேயில்லை, இந்தத் திருவுதரம் எவ்வளவு பரிசுத்தமானதாக இருந்தது என்றால், என்னைப் பெற்றுக் கொள்ளும் எந்த ஒரு நற்கருணைப் பாத்திரமும் அதன் அளவுக்கு பரிசுத்தமானதாக இருந்ததில்லை.

கடவுளின் திருநெஞ்சில் மட்டுமே மரியாயின் பரிசுத்த தனத்தை விட மேலான, உத்தமமான பரிசுத்ததனம் இருக்கிறது. திரியேக சர்வேசுரனுக்குப் பிறகு, அவர்களே பரிசுத்தர்களில் எல்லாம் அதிபரிசுத்தவதியாக இருக்கிறார்கள்.

அழியக்கூடிய மனிதர்களே, மரியாயின் பேரழகை, அது இருக்கிறபடியே காண உங்களுக்கு அருளப்படுமானால், நீங்கள் அந்தப் பரவச நிலையிலேயே எப்போதும் ஆழ்ந்திருப்பீர்கள், அந்தக் காட்சியால் நீங்கள் அர்ச்சிக்கப்படுவீர்கள். என் தாயார் என்னவாக இருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு விளக்கக்கூடிய ஒப்புமை எதுவும் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. பரிசுத்தர்களாக இருங்கள், அப்போது அவர்களைக் காண்பீர்கள்.

கடவுளைக் காண்பது மோட்சத்திலுள்ள பாக்கியம் பெற்ற ஆத்துமங்களின் பேரின்பமாக இருக்கிறது என்றால், அங்கே மாமரியைக் காண்பது ஒட்டுமொத்த மோட்சத்திற்கும் பேரின்பமாக இருக்கிறது! ஏனெனில் அவர்களைக் காண்பதில் பேரின்பம் அனுபவிப்பவர்கள் சம்மனசுக்களின் விலாசங்களும், அர்ச்சிய சிஷ்டவர்களின் படையணிகளும் மட்டுமல்ல, மாறாக பிதாவும், சுதனும், இஸ்பிரீத்துசாந்துவும் தங்கள் அன்பின் திரித்துவத்தின் அனைத்திலும் அதிக அழகான கைவேலையாக மாமரியைக் கண்டு தியானித்து பேரானந்தம் அடைகிறார்கள்!

நாங்கள் இருவரும் ஒருபோதும் பிரிந்ததேயில்லை. வாக்களிக்கப்பட்ட மெசையாவுக்காகக் காத்திருந்த தனது கன்னிமை யுள்ள, மாசற்ற திரு இருதயத்தின் பலம் முழுவதையும் கொண்டு அவர்கள் என்னை ஏக்கத்தோடு நாடித் தேடிக் கொண்டிருந்தார்கள். மோட்சத்தின் உள்ளாழங்களிலிருந்து என்னை வெளியே ஈர்த்து வந்த அனைத்திலும் அதிகப் பரிசுத்தமான ஆசையின் ஐக்கியம் அது! ஆசீர்வதிக்கப்பட்ட மங்கள வார்த்தை நிகழ்ச்சியின் நேரம் தொடங்கி, சிலுவை மரண வேளை வரையிலும் இன்னும் அதிக உயிரோட்டமுள்ளதாக இருந்த ஐக்கியம் அது!

எங்கள் ஆவிகள் எப்போதும் அன்பினால் இணைக்கப்பட் டிருந்தன. என் வேதசாட்சியத்தின்போதும், நான் அடக்கம் செய்யப் பட்டிருந்த நாட்களிலும் எங்களிடையே அனைத்திலும் அதிகத் தீவிரமான அன்பின் ஐக்கியமும், மிகப்பெரும் வேதனையும் இருந்தன. என் மகிமையான உயிர்ப்புக்கும், பரலோக ஆரோகணத்திற்கும் பிறகு, மகா பரிசுத்த அன்னையும், அவர்களது திவ்விய சுதனும் அவர்களது பரலோக ஆரோபண நாளில் நித்திய ஐக்கிய நிலையை அடைந்தார்கள். ஆனால் அந்நாள் வரையிலும் எங்களிடையே இருந்தது திவ்விய நற்கருணை ஐக்கியமே.

மாமரியே உத்தமமான திவ்விய நற்கருணை சார்ந்த ஆத்துமமாக இருந்தார்கள். நேசப் பற்றுதலைக் கொண்டும், சம்மனசுக்களுக்கும் மேலான பரிசுத்ததனத்தைக் கொண்டும், தொடர்ச்சியான ஆராதனையைக் கொண்டும் தன் கடவுளை மகிழ்விக்க அவர்களால் முடிந்தது. என்னால் மட்டுமே ஜீவித்துக் கொண்டிருந்த அந்த மாசற்ற இருதயத்திடமிருந்து நான் எப்படிப் பிரிய முடியும்? வசீகரிக்கப்பட்ட அப்ப, இரசத்தை அவர்கள் உட்கொண்டபின், என் சரீரப் பிரசன்னம் நீங்கிய பின்னும், நான் அவர்களில் நிலைத் திருந்தேன்.

பூமியின்மீது நான் அவர்களுடைய மகனாக இருந்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் என் தாயாரால் பேசப்பட்ட வார்த்தைகள் தேவநற்கருணையாகிய எனக்கும், தேவ நற்கருணைப் பாத்திரமாகிய அவர்களுக்குமிடையே நடந்த உரையாடல்களோடு ஒப்பிடவும் இயலாதவையாக இருந்தன. ஆனால் அந்த வார்த்தைகள் மனித மனம் அறிந்து கொள்ள முடியாதவையாகவும், மனித உதடுகள் திருப்பிச் சொல்ல முடியாதவையாகவும் இருக்கும் அளவுக்கு, மிதமிஞ்சிய தெய்வீகமுள்ளவையாகவும், மிதமிஞ்சிய மாசற்றதனம் உள்ளவையாகவும் இருந்தன. ஜெருசலேம் தேவாலயத்தில் குரு மட்டுமே ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழை இருந்த பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்தார். ஆனால் பரலோக ஜெருச லேமின் தேவாலயத்திற்குள் சர்வேசுரனாகிய நான் மட்டுமே நுழைகிறேன், நான் மட்டுமே என் தாய் மாமரியாகிய மகா பரிசுத்த உடன்படிக்கைப் பேழையின் இரகசியங்களை அறிந்து கொள் கிறேன்!

மாமரியைக் கண்டுபாவிக்கப் பாடுபடுங்கள். அது மனித சுபாவத்திற்கு மிகக் கடினமானது என்பதால், உங்களுக்கு உதவும்படி மாமரியிடமே கேளுங்கள். மனிதனால் ஆகாதது, கடவுளால் ஆகும் - அது மரியாயில், மரியாயோடு, மரியாயின் வழியாகக் கேட்கப் பட்டால், இன்னும் அதீதமாகவே அவரால் இயலும்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...