மர்மமான திராட்சைச் செடி!

மர்மமான திராட்சைச் செடி பற்றிய கனவு ஓர் உவமை யாகும். 

பாகம் 1 : மனச்சான்றின் பல்வேறு நிலைகள்: 

அ) முழுவதும் இலைகள் மட்டும். நற்செயல்கள் போன்ற தோற்றம், ஆனால் நிஜத்தில் ஒன்றுமில்லாமை. இது கடவுளை மகிழ்விக்கும் எண்ணமில்லாத சிறுவர்களைக் குறிக்கிறது. 

ஆ) நன்கு பழுத்த, ஆனால அழுகிய சுவையுள்ள பெரிய திராட்சைக் குலைகள். பாவம் இருதயத்தை அசுத்தப்படுத்துகிறது. பாவத் திற்குப் பின் வருத்தம் வருகிறது. தேவ அருளும் மனசாட்சியும் அவற்றைக் குணமாக்கும்.

இ) அழகிய, ஆரோக்கியமான சிவந்த நிறமுள்ள திராட்சைக் குலைகள். இவை தங்களுக்குக் காட்டப்படும் அக்கறையோடு ஒத்துழைக்கும் சிறுவர்களைக் குறிக்கிறது. (துரதிருஷ்ட வசமாக இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு). மகிழ்ச்சி யால் பிரகாசிக்கிற சிறுவர்கள்.

எது எப்படியோ, நான் மற்றொரு கனவும் கண்டேன். இதை நான் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும். பெரிய வியாழன் இரவில் நான் கண்ணயர்ந்த மாத்திரத்தில், நம் குருக்களும், துறவியரும், சிறுவர்களும் என்னைச் சூழ்ந்திருக்க, இந்த முகப்பு மண்டபங்களில் நான் நின்று கொண்டிருப்பதாகக் கனவு கண்டேன். அதன்பின் நீங்கள் எல்லோரும் மறைந்து விட்டீர்கள். நான் சுவாமி ருவா, சுவாமி காலியேரோ, சுவாமி ஃப்ரான்செஸியா, சுவாமி சாவியோ, இளம் ப்ரெட்டி ஆகியோரோடு மட்டும் மைதானத் தினுள் நுழைவது போலத் தோன்றியது. சற்று தூரத்தில் ஜோசப் புஸ்ஸெட்டியும், ஜெனோவா குருமடத்தைச் சேர்ந்தவரும், நம் நல்ல நண்பருமான சுவாமி ஸ்டீபன் ரூமியும் நின்று கொண்டிருந்தனர்.

திடீரென, நாம் இப்போது அறிந்திருக்கிற ஆரட்டரி தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு, தன் தொடக்க காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படித் தோற்றமளித்தது. அந்தக் காலத்தில் இப்போது நான் குறிப்பிட்டவர்கள் மட்டும்தான் என்னோடு இருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் ஆரட்டரியோடு இணைந் திருந்த விளையாட்டுத் திடலை அடுத்து, மிகப் பரந்த, பண்படுத்தப் படாத நிலங்கள், நம் சிறுவர்கள் தங்கள் விளையாட்டுகளின் போது அடிக்கடி வழிதவறிச் சென்று விடுகிற கோட்டைப் புல்வெளிகள் வரைக்கும் பரந்து விரிந்து காணப்பட்டன.

நாங்கள் என் படுக்கையறை ஜன்னலின் கீழ் இப்போதிருக்கிற தொழிற்கூடத்திற்கு அருகில் அமர்ந்தோம். அங்கே முன்பு எங்களுக்கு ஒரு காய்கறித் தோட்டமிருந்தது. நாங்கள் நம் இல்லத்தையும், சிறுவர்களையும் பற்றிப் பேசத் தொடங்கினோம். திடீரென மிக அழகிய ஒரு திராட்சைச் செடி - அது வழக்கமாக அங்கே இருந்த திராட்சைச் செடியேதான் - பழைய பினார்டி கூடத்தின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள நீரூற்றைத் தாங்கி நிற்கும் இந்தத் தூணுக்கு முன்பாக நிலத்திலிருந்து முளைத்து வரத் தொடங் கியது. (டொன் போஸ்கோ நின்று கொண்டிருந்த மேடைப்பகுதி இந்தத் தூணை ஒட்டியதாக இருந்தது.). இவ்வளவு அதிகமான வருடங்களுக்குப் பின் அந்தத் திராட்சைச் செடி தோன்றியது பற்றி நாங்கள் அதிசயித்துப் போனோம். இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும் என்று நாங்கள் வியந்தோம். இதனிடையே அந்தத் திராட்சைச் செடி ஒரு மனிதனின் உயரத்திற்கு வளர்ந்து, எண்ணற்ற கிளைகளையும், பற்றுக் கொடிகளையும் எல்லாத் திசைகளிலும் பரப்பியது. இறுதியாக அது மைதானம் முழுவதையுமே மூடிய தோடு, அதற்கு அப்பாலும் பரவியது. மர்மமான விதத்தில் அதன் கிளைகள் மேல் நோக்கி வளராமல், காணக்கூடிய எந்தத் தாங்குதலும் இல்லாத மிக விஸ்தாரமான ஒரு மரங்கள் அடர்ந்த நிழற்தோட்டத்தைப் போல, நிலத்திற்கு இணையாகப் பரவின. முளைவிடும் அதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருந்தன. அதிசயமான முறையில் அதன் கிளைகள் நல்ல ஆரோக்கியமானவை யாகவும், திடமானவையாகவும் இருந்தன. விரைவில் அழகிய திராட்சைக் குலைகள் தோன்றின, அளவில் பெரிதாகின, ஊதாசிவப்பு நிறத்தைப் பெற்றன.

“இந்தத் திராட்சைச் செடி இவ்வளவு விரைவாக எப்படி வளர்ந்திருக்க முடியும்?” என்று நாங்கள் ஒருவரையொருவர் பிரமிப்போடு கேட்டுக் கொண்டோம். “இதற்கெல்லாம் என்ன அர்த்த ம்?"

“பொறுத்திருந்து பார்ப்போம்” என்று நான் பதிலளித்தேன்.

நான் அந்தத் திராட்சைச் செடியை முழு கவனத்தோடு பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென திராட்சைக் குலைகள் அனைத்தும் தரையில் விழுந்து, உயிர்த் துடிப்பும், சந்தோஷ உற்சாகமும் உள்ள சிறுவர்களாக மாறின. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மைதானம் முழுவதும், திராட்சைச் செடியால் மூடப்பட்ட பகுதி முழுவதும் சிறுவர்களால் நிரப்பப்பட்டது. அவர்கள் குதித்து விளையாடிக் கொண்டு, உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். அது கண்டு ரசிக்க வேண்டிய காட்சியாக இருந்தது. அங்கே, அந்த வழக்கத்துக்கு மாறான பிரமாண்டமான கொடிப் பந்தலின் கீழ், ஆரட்டரியிலும், மற்ற சலேசியப் பள்ளிகளிலும் இது வரை இருந்தவர்களும், இப்போது இருப்பவர்களும், இனி இருக்கப் போகிறவர்களுமான அனைத்து சிறுவர்களையும் என்னால் காண முடிந்தது. மிக ஏராளமான சிறுவர்கள் நான் அறியாதவர்களாக இருந்தார்கள்.

என் கனவுகளில் எப்போதுமே ஒரு வழிகாட்டி தோன்றுகிறார் என்று உங்களுக்குத் தெரியும். நல்லது, சரியாக இந்தக் கனவின் இந்த இடத்தில், ஓர் அந்நியர் என் பக்கத்தில் தோன்றினார். அவர் என்னோடு நின்று சிறுவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்மமான திரை திடீரென எங்கள் முன் தோன்றி, இந்த மகிழ்ச்சியான காட்சியை எங்களிடமிருந்து மறைத்தது.

அந்தத் திராட்சைச் செடியின் உயரமே இருந்த இந்தத் திரை தன் முழு அகலத்திலும் செடியின் கிளைகளிலிருந்து ஒரு மேடைத் திரையைப் போலத் தொங்கிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. இப்போது எங்களால் காண முடிந்ததெல்லாம் பிரமாண்டமான பச்சைக் கம்பளத்தைப் போலப் பரந்து விரிந்திருந்த திராட்சைச் செடியின் மேல் பாகம் மட்டுமே. இதனிடையே, சிறுவர்களின் உற்சாகமிக்க இரைச்சல் திடீரென மனச்சோர்வூட்டும் அமைதியாக வெகு சீக்கிரத்தில் மாறிப் போனது.