இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - மகிழ்ச்சி தேடும் முயற்சி!

கடந்த 12 அதிகாரங்களையும் படித்த பலர் ஜெபம், தவம், இந்த இரண்டைப் பற்றியும் ஒரு வெறுப்பு எண்ணம் கொண்டிருக்கக் கூடும். மேலெழுந்த முறையாக அவர்கள் நினைக்கக் கூடும். ஜெப வாழ்வையும், தவ வாழ்வையும் மேற்கொள்வதாயிருந்தால் நிச்சயம் தாங்கள் மகிழ்ச்சியாயிருக்க முடியாது என்று கருதக்கூடும்.

ஆனால் இந்த நினைவுக்கு நேர்மாறாக உள்ளது உண்மை. கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை விட மகிழ்ச்சியாய் வாழ்வதற்குரிய வேறு எளிய வழி எங்குமில்லை. சுவிசேஷத்திலும், தங்களைத் தாங்களே பரலோக இராச்சியத்துக்காக பரித்தியாகம் செய்கிறவர்கள் இந்த உலகிலேயே நூறு மடங்கு பெறுவார்கள் என்றும், மறுமையில் முடிவற்ற வாழ்வை அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது (மாற். 10:30).

பாத்திமாவில் கேட்கப்பட்டதே ஒரு விண்ணப்பம்: அதாவது, மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நம்மை முழுவதும் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று. இதை ஏற்று நாம் நம்மை முழுவதும் நம் அன்னையின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுப்போமானால், உலகமாகிய இந்தக் கண்ணீர்க் கணவாயில் நமக்குக் கிடைத்தற்கரிய பெரும் மகிழ்ச்சியை நாம் காண்போம். அர்ச்சியசிஷ்டவர்களின் ஞானமும் அனுபவமும் இதைப் போதிய மட்டும் நமக்கு நிரூபிக்கின்றன.

மரியாயின் மாசற்ற இருதயத்துக்குத் தன்னை முழுவதும் ஒப்புக்கொடுப்பதனால் விளையும் மிகப் பெரிய நன்மை எதுவென் றால், அது ஒரு கிறீஸ்தவனின் வாழ்வை முழுமைப்படுத்துகின்றது. தத்துவ ஞானிகள் “நிறைந்த நன்மை” என்று அழைக்கிறார்களே, அதை நாம் அடையலாம். கிரேக்கர்கள் இவ்வித முழு வாழ்வைத்தான் இயற்கை முறையில் மகிழ்ச்சியின் உச்சகட்டம் என அழைத்தார்கள். ஆனால் ஒரு கிறீஸ்தவனுக்கோ, இந்த உச்சக்கட்ட மகிழ்ச்சி என்பது இதை விட எவ்வளவோ அதிக ஆழமுள்ளதாயிருக்கிறது.

கிறீஸ்துவைப் பின்செல்லுதல் இவ்வுலகிலேயே நூறு மடங்கு மானிட முறைப்படியான மகிழ்ச்சியை அளிக்குமானால், பரிசுத்த கன்னித் தாய்க்கு முழுமையான சுய வசீகரம் செய்து, அவர்களுக்குத் தன்னை முற்றுமாக ஒப்புக்கொடுத்தல் என்பது, தன்னிலே கிறீஸ்துவுக்கே அவ்வாறு அர்ப்பணம் செய்வதாக இருப்பதால், அதுவே எல்லா தத்துவ வேதசாஸ்திர அடிப்படையிலும் அமைந்த மகிழ்ச்சியின் கொடுமுடியாக இருக்க வேண்டுமே!

சுபாவ மகிழ்ச்சியும், சுபாவத்துக்கு மேற்பட்ட தெய்வீக மகிழ்ச்சியும் எப்போதும் இணைந்தே செல்லும் தன்மை உடையவை. இந்த உண்மை அநேகமாக உணரப்படுவதில்லை. “சுபாவத்திற்கு மேற்பட்ட தெய்வீக வாழ்வு வாழ முயற்சிப்பதுதான் ஒரு மனிதன் சுபாவ முறையான உண்மை வாழ்வு வாழ வழியாகும்” என்றும், “சுபாவத்தை முழுமைப்படுத்தும் வரப்பிரசாதமானது, சுபாவத்தை அதன் உண்மையான நிலையில் வைத்துக் கொள்கிறது” என்றும் டாக்டர் எட்வர்ட் லீன் என்பவர் கூறுகிறார்.

மேலும், “இஸ்பிரீத்துசாந்துவானவரைக் (பரிசுத்த ஆவி யைக்) கொண்டிருக்கும் ஆன்மா மகிழ்ச்சியின் சாரத்தையே தன்னுள் கொண்டுள்ளது; ஏனென்றால் இஸ்பிரீத்துசாந்துவானவரின் தூண்டுதல் ஆன்மாவின் நடுநரம்பைத் தொட்டு விடுகிறது. அதுவே மகிழ்ச்சியின் மூலகாரணம்” என்று அதி சங். போலோ கூறுகிறார்.

மகிழ்ச்சியைத் தேடி அலைகிற மனிதர்கள் இரண்டு அடிப் படைத் தவறுகளுக்கு உள்ளாகிறார்கள். முதல் தவறு, பொதுவாக யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதாவது, தற்சமயம் நாம் படும் துன்பம் துயரம் மாறிவிட்டால் நமக்கு மகிழ்ச்சி எட்டிவிடும் என்று எண்ணுவது. உதாரணமாக, நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் தங்கள் நோய் மட்டும் தீர்ந்து விட்டால் தாங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியா யிருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அல்லது வறுமையில் வாடுகிறவர்கள், தாங்கள் செல்வந்தர்களாகி விட்டால் மகிழ்ச்சியைக் கண்டு விடலாம் என்று கருதுகிறார்கள். மூப்பு அடைந்து வருகிறவர்கள் தங்கள் வழுக்கைத் தலையையும், நரைத்த உரோமங்களையும் பற்றிக் கவலைப்பட்டு, தாங்கள் இழந்துவிட்ட இளமையைப் பற்றி வருந்தி, அதைத் திரும்பவும் பெறுவதற்கு எதையும் செய்யலாம் என்று நினைக் கிறார்கள்.

இப்படி நினைப்பது பெரிய ஏமாற்றம். தினசரிப் பத்திரிகை களைப் புரட்டினால், வாழ்வில் மகிழ்ச்சி காண முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் பட்டியலில், துக்கத்தினால் தற்கெலை செய்பவர்கள் பணக்காரர்கள், உடல் நலத்தோடு இருக்கிறவர்கள், இளைஞர்கள் என்று காண்கிறோம்.

மற்றொரு அடிப்படைத் தவறு எதுவென்றால், தாங்கள் அடைந்து அனுபவிக்கக் கூடிய ஏதாவது இன்பத்தை விட்டுக்கொடுத்து விட நேரிட்டால், அது மகிழ்ச்சிக் குறைவை ஏற்படுத்தும் என்று நினைப்பதுதான்.

இதுவும் அப்படியல்ல. 

தன்னை ஒறுத்து பரித்தியாகம் செய்வதும், தவ முயற்சிகளைச் செய்வதும் மகிழ்ச்சியைக் கெடுத்து விடும் என்று நினைப்பதுதான் இக்காலத்திய பெரிய ஏமாற்றமாகும். இத்தவறி னால் இலட்சக்கணக்கான மக்கள் தவம் என்ற தங்கப் பாதை வழியாக கடவுளுடைய ஐக்கியத்தைப் பெற முடியாமல் போகிறார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. ஆனால் மகிழ்ச்சியைத் தேடியலையும் ஒருவன்--தனக்கு அனுமதிக்கப்பட்ட மகிழ்ச்சிகளையே தேடியலைந்தாலும், இறுதியில் இந்த மகிழ்ச்சிகள் மீது அவன் கொண்டிருந்த விருப்பமும், பற்றுதலும் உண்மை நிலையிலிருந்து அவனைத் தூரத்தில்தான் கொண்டு சென்றுள்ளன என்று கண்டு கொள்கிறான். இந்த மகிழ்ச்சிகள் அவனை உண்மையான நல்வாழ்வை நோக்கி ஒரு படி கூட ஏற விடவில்லை என்று காண்கிறான்; அவன் ஆன்மாவை அவை ஒரு சிறு அளவு கூட மேலே எழுப்பவில்லை; ஆன்மா மேலே எழும்ப வேண்டுமானால், உலகப் பொருட்களி லிருந்து அவன் விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்று அறிகிறான். மகிழ்ச்சி விரும்பும் மனிதன் கண்டிப்பாக இறுதியில் கண்டடைவது சலிப்பு, மன உடைவு, எரிச்சல். வேறு எதுவுமிராது?

கடவுளை அறியாத இனத்தாரிடையே கிளேயாத்துஸ் என்று ஒருவர் இருந்தார். அவர் தம் உல்லாச வாழ்வைத் துறந்து விட்டு ஏத்தென்ஸ் பட்டணத்திலுள்ள வயல் உழைப்பாளிகளுக்கு ஊழியம் செய்யச் சென்றார்.

செனேக்கா என்ற அறிஞர்: “மகிழ்ச்சி என்பது புண்ணியக் கிரியைகளின் பலன்” என்றும், “இன்பம் என்பது தாழ்ந்ததும், பலவீனமானதும், அழிந்து ஒழிவதும், வெட்கத்துக்குரியதுமானது” என்றும் கூறியுள்ள கூற்றை இக்காலத்திய ஞாயிறு உல்லாசினிகள் கேட்டால் என்ன நினைப்பார்கள்! (ம்e ணுeழிமிழி ஸஷ்மிழி). 

இங்கே இரண்டாவது குறிப்பிட்ட அடிப்படைத் தவறுதான், அர்ச். லூயிஸ் மோன்போர்ட் கூறிய மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக அநேகர் தங்களை சேசுவுக்குக் கையளிப்பதற்கு இடையூறாக இருக்கிறது. காரணம் அவரே கூறுவது போல, நாம் உண்மையாகவே நம்மை மாமரியின் மாசற்ற இருதயத்தின் வழியாக சேசுவுடன் இணைத்துக் கொள்ள வேண்டுமானால், எப்படியும் சிறுகச் சிறுகவேனும் உலகப் பொருட்கள் மீது நம் பற்று பாசத்தை விட்டுவிட வேண்டியது வரும்.

அர்ச். லூயிஸ் கூறும் இந்தக் கையளித்தலில் முதல் காரியம் நம் சொந்த விருப்பங்களைக் கடவுளின் விருப்பத்திற்காக விட்டுக் கொடுப்பதேயாகும். ஆனால் அதோடு நாம் இதையும் மறந்து விடக் கூடாது: அதாவது கடவுள் நம் உண்மையான மகிழ்ச்சியைத்தான் இப்போதும் மறுமையிலும் விரும்புகிறார் என்பதை.

யாராவது ஒருவன் புதிதாக மாமரியின் மீது பக்தி கொள்ளத் துவக்கிய உடனே அவனுக்குப் பல இடையூறுகளும், இடர்ப்பாடுகளும் ஆரம்பித்து விடும். அர்ச். லூயிஸ் மோன்போர்ட் என்பவரே கூறுகிறார்: பெருந்தொகையானவர்கள் இந்த மாதாவின் பக்தியின் வெளிப்புறத் திலேயே நின்று விடுகிறார்கள். அதற்கு மேல் அவர்கள் செல்வதில்லை என்று.

அப்படியானால், உலக முழுவதற்கும் இந்த வலிமை வாய்ந்த “வரப்பிரசாத இரகசியத்தை” நாம் எப்படிக் கொடுக்க முடியும்? இந்தப் பாதையோ தவம் நிறைந்த பாதை. தற்கால மனிதன் தன்னுடைய உலகாதாயப் போக்காலும், ஆசாபாசத்தாலும், தானே தேடிக் கொண்ட வறண்ட வெற்று நிலத்தின் ஓரத்தில் வந்து நிற்கிறான்! அவன் காலகாலமாய் விளைந்து முதிர்ந்த ஞானத்துக்குக் காது கொடுப்பது நல்லது. இதை அவன் வெகுகாலம் கைநெகிழ்ந்து விட்டாலும் இப்போதாவது அதற்குக் காது கொடுப்பது நல்லது.

நவீன கால மனிதனின் மனதை நிறைக்க வேண்டிய பெரிய உண்மை எதுவென்றால், “ஒறுத்தலும் தவமும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். தனி மனிதனுக்கும் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும், நாடுகளுக்கும், ஏன் உலக முழுவதற்குமே மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.” 

இதுவே காலகாலமாக தீர்க்கதரிசிகளாலும், பிதாப்பிதாக் களாலும் நமக்குக் கொடுக்கப்பட்ட செய்தியாகும். இதே செய்திதான் கிறீஸ்துவின் வாழ்விலும் அவர் திருத்தாயாரின் வாழ்க்கையிலும் நாம் அறியும் செய்தி. லூர்து நகரிலும், பாத்திமா காட்சிகளிலும் உரைக்கப் பட்டதும் இதே “ஒறுத்தல், தவம்” என்னும் செய்திதான். இதுவே திருச்சபையின் நிரந்தர போதனை. இதுவே அர்ச்சியசிஷ்டவர்களின் நடைமுறை.

தற்கால மனிதன் இதை ஏற்பானானால் அர்ச். லூயிஸ் காட்டிய வழியை அடையும் வாசல் அகலத் திறக்கப்படும். அதிலிருந்து என்ன பிறக்கும்? உலகின் மிகப்பெரிய விசுவாச யுகம்--சரித்திரமே கண்டிராத அளவுக்கு, விசுவாச யுகம் அருளப்படும்.