இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

சமாதானத்தில் பல வகைகள் உண்டு. விசுவாச ஒளியால் நம் சந்தேகங்கள் அனைத்தும் தீர்ககப்பட்டால், நம் அறிவில் சமாதானத்தைக் கொண்டிருக்கிறோம். ஓர் அளவற்ற பொக்கிஷத்தை சொந்தமாகக் கொண்டிருப்பதால், நம் இருதயத்தின் ஏக்கங்கள் அனைத்தும் முழுமையாக திருப்திப்படுத்தப் பட்டால், நம் இருதயங்களில் சமாதானத்தைக் கொண்டிருக்கிறோம். நம் பாவங்கள் அனைத்தும் கழுவப்படும்போது, நம் மனச்சாட்சியில் சமாதானத்தைக் கொண்டிருக்கிறோம்; நம் எல்லா ஆசாபாசங்களும் வெற்றிகொள்ளப் பட்டு, அறிவுக்குக் கீழ்ப்பட்டவையாக ஆக்கப்படும்போது நம் கீழ் சுபாவத்தில் (கீழாங்கிஷம்) நாம் சமாதானத்தைக் கொண்டிருக்கிறோம்.

சேசுவே நம் சமாதானமாக இருக்கிறார். நாம் அவரைப் பின்செல்வோ மென்றால், இருளில் நடக்க மாட்டோம்; ஆகவே நம் அறிவுகளில் நாம் சமாதானத்தைக் கொண்டிருப்போம். சந்தேகம், அறியாமை ஆகியவற்றின் பயங்கரமுள்ள விளைவுகள் சத்தியத்தின் பிரகாசமுள்ள ஒளிக்கதிர்களால் அகற்றப்படும், ஏனென்றால் சேசுவே சத்தியமாக இருக்கிறார். (“நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்.”) கத்தோலிக்கர்களாகிய நாம் அபூர்வமாகவே இந்த மாபெரும் சமாதானத்தைப் பெரிதாக மதிக்கிறோம், ஏனென்றால் சந்தேகத்தில் வாழ்வது எத்தகைய கசப்பான வேதனை என்பதை நாம் அறியாதிருக்கிறோம். சந்தேகத்தையும், நிச்சயமின்மையையும் விட அதிகத் துன்பம் தருவதும், அதிக வாதைப்படுத்துவதும் வேறு எதுவும் இருப்பது அபூர்வமானது. கடவுளின் விசுவாசம் என்ற கொடையால் வரும் சமாதானம், கத்தோலிக்க வேதத்தைத் தழுவியவர்களால் பெரிதாக மதித்துப் போற்றப்படுகிறது. கத்தோலிக்கர் ஆவதிலுள்ள எல்லாக் கஷ்டங்களும், கடவுளின் திருச்சபை தன் பிள்ளைகளுக்குத் தருகிற சமாதானம் என்னும் மாபெரும் கொடைக்கு மிகக் குறைந்த விலையாக இருக்கின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள்.

சேசு நம் இருதயத்தின் சமாதானமாக இருக்கிறார். சிருஷ்டிக்கப்பட்ட எதையும் கொண்டு மனித இருதயம் திருப்தியாக்கப்பட முடியாது. உலகின் எல்லா உடமைகளும் ஒரு மனித இருதயத்தைத் திருப்திபபடுத்த முடியாது. அது அளவற்ற ஒன்றிற்காக ஏங்குகிறது. “எங்கள் இருதயங்கள உமக்காகப் படைக்கப்படுகின்றன, ஓ சர்வேசுரா, அவை உம்மில் இளைப்பாறும் வரை, அவற்றிற்கு இளைப்பாற்றி இல்லை” என்று அர்ச். அகுஸ்தினார் கூறினார். கடவுளை சொந்தமாகக் கொண்டிருப்பது மட்டும்தான் நம் ஏக்கங்களைத் தீர்த்து வைக்கும். சேசுவே நம் கடவுளாக இருக்கிறார். தம்மைச் சொந்தமாகக் கொண்டிருக்க அவர் நம்மை அனுமதிக்கிறார். ஆகவே சேசுநாதரைச் சொந்தமாகக் கொண்டிருக்கிற பாக்கியம் பெற்ற ஆத்துமம் உண்மையான இருதய சமாதானத்தைக் கொண்டிருக்கிறது. அது வேறு எதற்காகவும் ஏங்குவதில்லை. தங்களை சேசுவுக்குத் தருகிறவர்களுக்கு அவர் தம்மையே தருகிறார். ஓ, ஓர் அளவற்ற பொக்கிஷத்திற்கு நாம் எத்தகைய ஓர் அற்ப விலை தருகிறோம்! வாருங்கள், நாம் நம் முழு இருதயத்தோடு நம்மை சேசுவுக்குக் காணிக்கையாக்குவோம், அப்போது அவர் தம்மை நமக்குத் தருவார்.

சேசுவோடு இந்த ஐக்கியத்தின் ஒரு விளைவாக, நம் ஆசாபாசங்களில் நாம் சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். நம் மாம்சத்தில் இருக்கக் கூடிய பிறர்சிநேகமின்மை, ஆங்காரம், பேராசை, புலனிச்சை போன்றவையும், அவற்றிற்கொப்பான மற்ற தீமைகளுமாகிய எல்லாவற்றையும் நசுக்கி அழித்தபடி, வரப்பிரசாதம் நம் ஆத்துமத்திற்குள் வருகிறது. இந்தத் தீமைகள் அழிக்கப்படும்போது, அன்றாட வாழ்வின் வெளியரங்கத் தீமைகள் நம் ஆத்தும சமாதானத்தை அழித்து விடுவதில்லை. மற்றவர்களின் கனிவற்ற வார்த்தைகள் நம்மைக் காயப்படுத்துவதில்லை; நோய் நம்மைக் கவலைக்குள்ளாக்குவதில்லை; வேலை நம்மைச் சோர்ந்து போகச் செய்வதில்லை; கீழ்ப்படிதல் நம்மை சிறைப்படுத்துவதில்லை; இன்பம் நம்மை வசீகரிப்பதில்லை; பணம் நம்மை அடிமைப்படுத்துவதில்லை. இந்தத் தொல்லை தருகிற மாம்சத்தின் இச்சைகளிலிருந்து விடுபட்டிருப்பது எத்தகைய ஆசீர்வாதமாக இருக்கிறது! திவ்ய நன்மையின் வழியாக, சேசுநாதர் அந்த சமாதானத்தின் மூலாதாரமாக இருக்கிறார்.

ஆனால் இன்னுமொரு சமாதானமும் உண்டு - மனச்சாட்சியின் சமாதானம். நாம் பாவம் செய்துவிடும்போது, கடவுளிடமிருந்து நம்மை நாமே வெட்டிப் பிரித்துக் கொள்கிறோம். ஓர் அந்நிய நாட்டில் வாழ்வது போல வாழ்கிறோம். நாம் கவலையோடும், அமைதியின்றியும், அச்சமும், கவலையுமுள்ளவர்களாகவும் இருக்கிறோம். உலகத் தேடுதல்களுக்குள் தலைகுப்புற நம்மையே நாம் வீசியெறிவதன் மூலம் நமது எளிய, காயப்பட்ட மனச்சான்றின் கவனத்தைத் திருப்ப நாம் முயற்சி செய்கிறோம். இத்தகைய நிலையில் வாழ்வது எத்தகைய வாதையாக இருக்கிறது! அது நரகத்தின் முன்சுவையாக இருக்கிறது. ஆனால் சேசுவே நம் சமாதானமாகவும், மறு ஒன்றிப்பாகவும் இருக்கிறார். சிலுவையில் மரிப்பதன் மூலம் அவர் அந்தப் பாவக் கடனைச் செலுத்துகிறார். அதன்பின் அவர் அந்தப் பரிதாபத்திற்குரிய பாவியின் அருகில் வந்து, ஒற்றுமைப் பந்தனத்தின் தேவத்திரவிய அனுமானத்தின் (பச்சாத்தாபம்) வழியாக ஒரு புதிய, மகிழ்ச்சியான வாழ்வை அவனுக்குத் தருகிறார். பாவியானவன் அதை ஏற்றுக் கொண்டால், சேசு அவனுக்கு சமாதான முத்தம் அளிக்கிறார். என்ன ஒரு மகிழ்ச்சி! என்ன ஒரு விடுதலை! மகிழ்ச்சியின் சூரியன் அந்தப் பரிதாபத்திற்குரிய மனந்திரும்பிய பாவியின் மீது பிரகாசிக்கத் தொடங்குகிறது. வாழ்க்கை ஒரு ரோஜா வண்ணத்தைப் பெற்றுக் கொள்கிறது. ஒளியுள்ள மலர்களோடும், உல்லாசமான பறவைகளோடும் கூடிய ஒரு புதிய வசந்த காலம் குளிர்கால அவதிகள் அனுபவிக்கிற ஆத்துமத்திற்குள் வந்திருக்கிறது. ஆயினும் இந்தப் பெரிய வாய்ப்பினால் அகமகிழ்கிறவன் அந்தப் பாவி மட்டும் அல்ல. தவஞ்செய்கிற ஒரேயொரு பாவியைக் குறித்து பரலோகத்தில் மாபெரும் அக்களிப்பு உண்டாயிருக்கும் என்று சேசு கூறினார். ஆம், சம்மனசுக்களும், அர்ச்சிஷ்டவர்களும் அக்களிக்கிறார்கள், பக்தி உருக்கத்தோடு, “தே தேயும்” என்ற நன்றிக்கீதத்தைப் பாடுகிறார்கள், ஏனென்றால் இறந்து போயிருந்த ஓர் ஆத்துமம் உயிர் பெறுகிறது - காணாமற் போயிருந்த ஓர் ஆத்துமம் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேசுவின் நேச இருதயத்தில்தான் எல்லாவற்றிலும் பெரிய மகிழ்ச்சி இருக்கிறது. பரிதாபத்திற்குரியதாக இருந்த ஓர் ஆத்துமத்திற்கு மீண்டும் உயிரும், மகிழ்ச்சியும், சூரிய ஒளியும் அளிப்பதாகிய இரக்கத்தின் மாபெரும் அற்புதத்தை நிறைவேற்றுவதற்கு அந்த ஆத்துமம் அவரை அனுமதிக்கும்போது, அவர் எவ்வளவோ மகிழ்ச்சியாயிருக்கிறார்!


எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!