இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இதோ, நமது கரங்களில் உன்னை எழுதி வைத்திருக்கிறோம்

ஓ, சேசுநாதரின் திரு மரணம் நமக்குத் தருகிற இரட்சணிய நம்பிக்கை எவ்வளவு மேலானதாக இருக்கிறது! "அவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பிடுகிறவர் யார்? கிறீஸ்துநாதரோ? அவரே (நமக்காக) மரித்தவர். பின்னும் அவரே உயிர்த்தெழுந்தவர்; அவரே சர்வேசுரனுடைய வலதுபாரிசத்திலிருக்கிறவர்; நமக்காகப் பரிந்து பேசுகிறவரும் அவரே'' (உரோ.8:34). நமக்குத் தண்டனைத் தீர்ப்பிட வேண்டியவர் யார் என்று அப்போஸ்தலர் கேட்கிறார். அவர், நித்திய சாவுக்கு நம்மைத் தீர்ப்பிடாதபடி, தம்மைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிட்டுக் கொண்டார். இதிலிருந்து, அர்ச். வில்லனோவா தோமையார் நம்மிடம்: பாவியே, உன் பாவத்தை விட்டு விட நீ மனதாயிருக்கிறாய் என்றால், பிறகு ஏன் பயப்படுகிறாய்? உனக்குத் தண்டனைத் தீர்ப்பிடாதபடி மரித்த ஆண்டவர் எப்படி உனக்குத் தண்டனைத் தீர்ப்பிட முடியும்? நீ அவருடைய திருப்பாதங்களிடம் திரும்பி வரும்போது, நீ தம்மை விட்டு விலகி ஓடிக் கொண்டிருந்த போது, உன்னைத் தேடி மோட்சத்திலிருந்து இறங்கி வந்தவர் எப்படி உன்னைத் துரத்த முடியும் என்று சொல்லி நம்மை உற்சாகப் படுத்துகிறார்: ""பாவியே, எதைப் பற்றி நீ பயப்படுகிறாய்? நீ தண்டனைத் தீர்ப்புப் பெறாதபடி உனக்காக மரித்தவர், இப்போது மனஸ்தாபமுள்ளவனாக இருக்கிற உனக்கு எப்படித் தண்டனைத் தீர்ப்பிட முடியும்? உன்னைத் தேடிக் கொண்டு மோட்சத்திலிருந்து வந்தவர், உன்னை எப்படித் துரத்தியடிக்க முடியும்?'' ஆனால், நம் இரட்சகர் தாமே இசையாஸின் வழியாக: ""இதோ நமது கரங்களில் உன்னை எழுதியிருக்கின்றோம்; உன் பட்டணத்து மதில்கள் நம் கண்கள் முன் எப்போதும் இருக்கும்'' என்று சொல்லி நமக்குத் தருகிற ஊக்கம் இன்னும் பெரியதாக இருக்கிறது (இசை.49:16). என் ஆடே, உனக்காக நான் என்ன விலை கொடுக்கும்படி நீ செய்திருக்கிறாய் என்று பார். உனக்காக நான் அனுபவித்திருக்கிற இந்தக் காயங்களில், என் கரங்களின் மீது உன்னைப் பொறித்து வைத்திருக்கிறேன்; இவை உனக்கு உதவும்படியும், உன் எதிரிகளிடமிருந்து உன்னைக் காக்கும்படியும் எனக்கு எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்; என்னை நேசி, நம்பிக்கை கொண்டிரு.

ஆம், என் சேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன், உம்மில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். என்னைக் காப்பாற்றுவதற்கு, ஆம், நீர் மிகப்பெரிய தொகையைக் கொடுக்க வேண்டியிருந்தது; உண்மையில் என்னை இரட்சிப்பதற்கு நீர் எந்த விலையும் தந்திருக்க வேண்டியதில்லை. எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பது உமது சித்தமாக இருந்திருந்தால், எவனும் அழிந்து போயிருக்க மாட்டான். என் பாவங்கள் என்னை அச்சப்படுத்துகின்றன என்றால் உமது நன்மைத்தனம் என்னை உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் நன்மையைப் பெற்றுக்கொள்ள எனக்கிருக்கும் ஆசையை விட, எனக்கு நன்மை செய்வதற்கு நீர் அதிகமான ஆசை கொண்டிருக்கிறீர். ஆ என் அன்புக்குரிய இரட்சகரே, நான் யோபுவோடு சேர்ந்து: ""நீர் என்னைக் கொன்றாலும், நான் உம்மில் நம்பிக்கை வைப்பேன், நீரே என் இரட்சகராய் இருக்கிறீர்'' என்று உம்மிடம் சொல்வேன் (யோபு.13). நீர் என்னை உமது பிரசன்னத்திலிருந்து துரத்துவதா யிருந்தாலும், ஓ என் நேசரே, என் இரட்சகராகிய உம்மில் நம்பிக்கை வைப்பதை நான் விட்டுவிட மாட்டேன். உமது இந்தத் திருக்காயங்கள் எனக்கு மிகவும் அதிகமாகச் செய்துள்ளன, இந்தத் திரு இரத்தம் உமது இரக்கத்திலிருந்து ஒவ்வொரு நன்மையையும் பெற்றுக் கொள்வேன் என்று நம்பும்படி என்னை ஊக்குவிக்கிறது. பிரியமுள்ள சேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மை நேசிக்கிறேன்; உம்மில் என் நம்பிக்கையை வைக்கிறேன்.

அர்ச். பெர்னார்ட் நோயுற்றிருந்தபோது ஒரு நாள் கடவுளின் நீதியாசனத்திற்கு முன்பாகத் தாம் இருக்கக் கண்டார். அங்கே பசாசு அவருடைய பாவங்களைப் பற்றி அவரைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தது. அவர் பரலோகத்திற்குத் தகுதி பெறவில்லை என்று அது அவரிடம் கூறியது: புனிதர் பதிலுக்கு, ""நான் பரலோகத்திற்குத் தகுதியற்றவன் என்பது உண்மைதான், ஆனால் சேசுநாதர் இந்த இராச்சியத்தில் இருவித உரிமைகளைக் கொண்டிருக்கிறார். முதலாவது, அவர் தம் சுபாவப்படி கடவுளின் திருச்சுதனாக இருக்கிறார். இரண்டாவதாக, தமது மரணத்தால் அவர் அதை விலைக்கு வாங்கியிருக்கிறார். இவற்றில் முதலாவது உரிமையில் அவர் திருப்தியடைகிறார். இரண்டாவதில், அந்த உரிமையை அவர் எனக்குத் தருகிறார். ஆகவேதான் நான் பரலோகத்தைக் கேட்கிறேன், அதைப் பெற்றுக்கொள்வேன் என்றும் நம்புகிறேன்'' என்றார். நாமும் இப்படியே சொல்லலாம்; ஏனெனில் துன்பங்களால் எரிக்கப்பட்டு சாக சேசுநாதர் கொண்டிருந்த சித்தம், மனஸ்தாபமுள்ளவர்களும், மனந்திரும்பும் பிரதிக்கினை உள்ளவர்களுமான சகல பாவிகளுக்கும் பரலோகத்தைப் பெற்றுத் தருவதைத் தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதனாலேயே அப்போஸ்தலரும், ""நமது விசுவாசத்தின் ஆதி கர்த்தாவும், அதைப் பூரணமாக்குகிறவருமாகிய சேசுநாதரை எப்போதும் கண்முன்பாக வைத்துக்கொண்டு, நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற யுத்தத்துக்குப் பொறுமையோடு ஓடக் கடவோம். அவர் சந்தோஷ ஜீவியம் தமக்குமுன் வைக்கப் பட்டிருக்க, அவமானத்துக்குக் கூச்சப்படாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார்'' என்கிறார் (எபி.12:1,2). ஆகவே, தமது திருப்பாடுகளின் பேறுபலன்களோடு, வெற்றியையும், நித்திய முடியையும் நமக்கு வாக்களிக்கிற சேசுநாதரை நம் கண்களுக்கு முன்பாக வைத்துக் கொண்டு, நம் எதிரிகளை எதிர்த்துப் போரிட நாம் தைரியமாக ஓடுவோமாக.

பரலோகத்தில் நமக்கு ஓர் இடத்தை ஆயத்தம் செய்வதற்காகத் தாம் அங்கு சென்றிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்: ""உங்கள் இருதயங்கள் கலங்காதிருக்கக் கடவது. . . நான் உங்களுக்கு ஓர் இடத்தை ஆயத்தம் செய்யப் போகிறேன்'' (அரு.14:1,2). பிதா நம்மைத் தமக்குத் தந்திருப்பதால், நாமும் அவரோடு பரலோகத்தில் இருக்க வேண்டுமெனத் தாம் விரும்புவதாக அவர் பிதாவிடத்தில் சொல்லியிருக்கிறார், இன்னும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே யிருக்கிறார்: ""நீர் எனக்குத் தந்தருளினவர்கள்... நான் இருக்கிற இடத்தில் என்னோடிருக்க வேண்டுமென்று மனதாயிருக்கிறேன்'' (அரு.17:24). ஏற்கனவே தன் குற்றங்களுக்காக நரகத் தீர்ப்புப் பெறத் தகுதியுள்ளவனும், அதன் தண்டனைகளிலிருந்து தப்ப வழியறியாதவனுமான பாவியிடம் நித்தியப் பிதாவானவர், ""என் திருச்சுதனை எடுத்து, உனக்குப் பதிலாக அவரை எனக்கு ஒப்புக் கொடு'' என்றும், நித்திய சுதனானவர், ""என்னைப் பெற்றுக் கொண்டு நரகத்திலிருந்து உன்னை விடுவித்துக்கொள்'' என்றும் சொல்வதை விட, ஆண்டவரிடமிருந்து ¼று என்ன பெரிய இரக்கத்தை நாம் எதிர்பார்த்திருக்க முடியும் என்று அர்ச். ஆன்செல்ம் கேட்கிறார்: ""பாவியாயிருந்து, தன்னை மீட்டுக்கொள்ள இயலாத ஒருவனிடம், ""என் ஒரே பேறான திருச்சுதனை ஏற்றுக் கொண்டு, உன் இடத்தில் தண்டிக்கப்படும்படியாக, அவரை ஒப்புக்கொடு'' என்று பிதாவாகிய சர்வேசுரனும், ""என்னை ஏற்றுக்கொண்டு, உன்னை இரட்சித்துக் கொள்'' என்று திருச்சுதனும் சொல்வதை விட அதிகமான வேறு எந்த இரக்கத்தை நாம் கற்பனை செய்ய முடியும்?''

ஆ, என் நேசப் பிதாவே, உமது திருச்சுதனை என் இரட்சகராகத் தந்தருளியதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; நான் அவரது மரணத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; மேலும், அவரது பேறுபலன்களின் பொருட்டு, இரக்கத்திற்காக நான் உம்மிடம் மன்றாடுகிறேன். என் இரட்சகரே, நீர் நித்திய சாவினின்று என்னை விடுவிப்பதற்காக உமது திரு இரத்தத்தையும், உமது உயிரையுயம் தந்தருளியதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ""ஆகவே, உமது விலைமதியாத திரு இரத்தத்தால் நீர் மீட்டுக் கொண்ட உமது ஊழியர்களுக்கு உதவும்படி நாங்கள் உம்மை மன்றாடுகிறோம்.'' ஆகவே, கலகக்காரராகிய உமது ஊழியர்களாகிய எங்களுக்கு உதவும், ஏனெனில் நீர் மிகப் பெரியதொரு விலை கொடுத்து எங்களை மீட்டுக் கொண்டீர். சேசுவே, என் ஒரே நம்பிக்கையே, நீர் என்னை நேசிக்கிறேன். எதையும் செய்ய நீர் வல்லமையுள்ளவராக இருக்கிறீர்; என்னை ஒரு புனிதனாக்கும். நான் பலவீனனாக இருக்கிறேன் என்றால் எனக்குப் பலம் தாரும்; நான் செய்த பாவங்களின் காரணமாக நான் நோயாளியாக இருக்கிறேன் என்றால், உமது ஒரு துளி இரத்தத்தை என் ஆத்துமத்தில் விழச் செய்து என்னைக் குணமாக்கும். உமது அன்பையும், இறுதி நிலைமை வரத்தையும் எனக்குத் தந்து, உமது வரப்பிரசாதத்தில் நான் மரிக்கச் செய்தருளும். எனக்கு மோட்சத்தைத் தாரும்; உமது பேறுபலன்களின் வழியாக நான் அதை உம்மிடம் கேட்கிறேன், அதைப் பெற்றுக்கொள்வேன் என்றும் நம்பியிருக்கிறேன். ஓ என் பூரண அழகுள்ள தேவனே, நான் என் முழு ஆத்துமத்தோடும் உம்மை நேசிக்கிறேன்; உம்மை எப்போதும் நேசிப்பேன் என்று நம்புகிறேன். ஓ, உம்மை மட்டுமே நேசிக்க விரும்பும் ஒரு நீசப் பாவிக்கு உதவி செய்தருளும்!