சலேசிய சபையின் போராட்டங்கள்!

1879, மே 9 அன்று ஒரு தீர்க்கதரிசனக் கனவு டொன் போஸ்கோவால் விவரிக்கப்பட்டது. அதில் சலேசிய சபைக்கு அழைக்கப்படுபவர்கள் எதிர்கொள்ள வேண்டிய இரக்கமற்ற போராட்டங்களை அவர் கண்டார். மேலும் எல்லோருக்குமான பயனுள்ள அறிவுரைகளையும், எதிர்காலத்திற்குரிய சில மிகப் பயனுள்ள உத்தரவுகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

முதலில் சில சிறுவர்களுக்கும், பல்வேறு அம்சங்களையும், பல்வேறு உடலமைப்புகளையும், விசித்திரமான ஆயுதங்களையும் கொண்டிருந்த போர்வீரர்களுக்குமிடையே ஒரு மிகக் கடுமையான, நீண்ட போர் நிகழ்ந்தது. முடிவில் மிகச் சிலர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர்.

அதன்பின் பிரமாண்ட அளவிலான இராட்சத மிருகங் களுக்கும், முழு ஆயுதந்தரித்தவர்களும், நல்ல போர்ப் பயிற்சி பெற்ற வர்களுமான சிறந்த திடகாத்திரமுள்ள மனிதர்களுக்குமிடையே மற்றொரு அதிகக் கடுமையான, பயங்கரமான போர் நடைபெற்றது. அவர்கள் ஒரு மிக உயரமான, மிக அகலமான ஒரு கொடியைச் சுமந்து கொண்டிருந்தனர். அந்தக் கொடியின் மையத்தில் பொன் எழுத்துக்களில் மரியா ஆவ்க்ஸீலியும் க்றீஸ்தியானோரும் - கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரி என்ற வார்த்தைகள் வரையப் பட்டிருந்தன. இந்தப் போர் நீண்டதாகவும், பெரும் இரத்தக் களறியாகவும் இருந்தது. ஆனால் இந்தக் கொடியைப் பின்பற்றிய வர்கள் அணுக முடியாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு மிகப் பரந்த சமவெளியின் எஜமானர்களாகவே நிலைத்திருந்தார்ள்.

முந்திய போரில் உயிர் பிழைத்திருந்த சிறுவர்கள், இவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு வகையான போர்ப்படையை உருவாக்கினார்கள். ஒவ்வொருவரும் வலக் கரத்தில் ஒரு பரிசுத்த பாடுபட்ட சுரூபத்தையும், இடக்கரத்தில் கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரியின் ஒரு சிறிய கொடியையும் போராயுதமாக வைத்திருந் தனர். இந்தக் கொடிகள் முதலில் சொன்ன கொடியைப் போன்றவை யாக இருந்தன.

புதிய வீரர்கள் அந்தப் பரந்த சமவெளியில் பல போர்ப் பயிற்சிகளைச் செய்தனர். அதன்பின் அவர்களில் சிலர் கிழக்கு நோக்கியும், ஒரு சிலர் வடக்கு நோக்கியும், பலர் தெற்கு நோக்கியும் பிரிந்து சென்றனர்.

இவர்கள் மறைந்ததும், அதே போர்கள் மீண்டும் தொடங்கி நடந்தன. அதே போர்ப்பயிற்சிகள், அதன்பின் அதே திசைகளில் புறப்பாடுகள்.

முதல் போர்களில் பங்குபெற்ற சில வீரர்களை நான் அடையாளம் கண்டுகொண்டேன். பிற்பாடு நிகழ்ந்த போர்களைச் சேர்ந்தவர்கள் நான் அறியாதவர்கள், ஆனாலும் அவர்களுக்கு என்னைத் தெரியும் என்பது போல அவர்கள் நடந்து கொண்டனர், என்னிடம் பல கேள்விகள் கேட்டனர்.

இதன்பின் மிக விரைவில் பல்வேறு நிறங்களிலான பிரகாசமான சிறிய தீச்சுவாலைகள் மழையாகப் பொழிந்தன. இடி இடித்தது, அதன்பின் வானம் வெளிவாங்கியது. நான் மிக இன்ப மான ஒரு தோட்டத்தில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். அர்ச். பிரான்சிஸ் சலேசியாரைப் போலத் தோன்றிய ஒரு மனிதர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் என்னிடம் ஒரு சிறு புத்தகத்தைத் தந்தார். அவர் யாரென்று நான் கேட்டேன். “புத்தகத்தில் உள்ளதை வாசியும்” என்று அவர் பதில் சொன்னார்.

நான் புத்தகத்தைத் திறந்தேன். ஆனால் அதை என்னால் சரியாக வாசிக்க முடியவில்லை . ஆயினும் இந்த மதிப்பு மிக்க வார்த்தைகளை என்னால் வாசிக்க முடிந்தது:

நவசந்நியாசிகளுக்கு: எல்லாவற்றிலும் கீழ்ப்படிதல். கீழ்ப்படிதலின் மூலமாக அவர்கள் ஆண்டவரின் ஆசீர்வாதத்தையும் மனிதர்களிடம் நற்பெயரையும் சம்பாதித்துக் கொள்வார்கள். விழிப்பாயிருப்பதன் மூலம் அவர்கள் தங்கள் ஆன்ம எதிரிகளின் கண்ணிகளை எதிர்த்துப் போரிட்டு வெல்வார்கள்.

வார்த்தைப்பாடுகள் தந்துள்ள துறவிகளுக்கு: கற்பு என்னும் புண்ணியத்தை நேசப் பொறாமையுடன் பாதுகாத்துக் கொள்ளுதல். சக துறவிகளின் நற்பெயரை நேசித்தல், சபையின் கண்ணியத்தை வளர்த்தல்.

இயக்குனர்களுக்கு: ஒவ்வொருவரும் எதன் மூலம் கடவு ளுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்களோ, அந்த சபை விதிகளைத் தாங்களும் அனுசரிக்கவும், மற்றவர்கள் அவற்றை அனுசரிக்கச் செய்யவும் எல்லா விதத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ளுதல், அதற்கான எத்தகைய உழைப்பிற்கும் தயாராயிருத்தல்.

மடத்து அதிபருக்கு: தம்மையும், தமக்குக் கீழ்ப்பட்டவர் களையும் கடவுளுக்காக வெற்றி கொள்வதற்கான முழுமையான சுய தகனப்பலி.

இன்னும் பல காரியங்கள் அந்தப் புத்தகத்தில் அச்சிடப் பட்டிருந்தன. ஆனால் அதற்கு மேல் என்னால் வாசிக்க முடிய வில்லை . ஏனெனில் காகிதம், மை இரண்டுமே நீல நிறமாகத் தோன்றின.

ஆழ்ந்த அமைதியுள்ள முகத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் நான் மறுபடியும், “நீர் யார்?” என்று கேட்டேன்.

“நல்லவர்கள் அனைவருக்கும் என் பெயர் தெரியும். சில எதிர்கால நிகழ்வுகளை உமக்குத் தெரிவிக்கும்படி நான் அனுப்பப் பட்டிருக்கிறேன்.”

“எந்த நிகழ்வுகள்?”

''ஏற்கனவே காட்டப்பட்டவைகளும், நீர் கேட்கப் போகிறவையும்.”

“தேவ அழைத்தல்கள் அதிகரிக்க நான் என்ன செய்ய வேண்டும்?”

“சலேசியர்கள் தங்கள் புண்ணியமுள்ள நடத்தையின் மூலம் பல தேவ அழைத்தல்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மிகப் பெரும் பிறர்சிநேகத்துடன் தங்கள் மாணவர்களைக் கையாள வேண்டும், அவர்கள் அடிக்கடி திவ்விய நன்மை வாங்கும்படி வற்புறுத்த வேண்டும்.”

“நவசந்நியாசிகளை ஏற்றுக் கொள்வதில் கடைப்பிடிக்கப்பட வேண்டியது என்ன?”

“சோம்பேறிகளையும், போஜனப் பிரியர்களையும் விலக்க வேண்டும்.”

“வார்த்தைப்பாடுகளை அனுமதிப்பதில்?'

“கற்புக்கு உத்தரவாதம் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.”

“எங்கள் இல்லங்களில் உள்ள நல்லுணர்வு மிகச் சிறப்பான முறையில் காப்பாற்றப்படுவது எப்படி?”

“எழுதுவதன் மூலமும், சந்திப்பதன் மூலமும், வரவேற்பதன் மூலமும், கனிவோடு நடத்துவதன் மூலமும்; மடத்து அதிபர் இவற்றை மிக அடிக்கடி செய்ய வேண்டும்.”

“வேதபோதகங்கள் தொடர்பாக எங்கள் நடத்தை எப்படி இருக்க வேண்டும்?”

“நல்லொழுக்கத்தில் உறுதியாக இருப்பவர்கள் மட்டுமே அங்கு அனுப்பப்பட வேண்டும்; யார் மீதாவது கடுமையான சந்தேகம் இருந்தால், அவர் திரும்ப அழைக்கப்பட வேண்டும்; உள்நாட்டு தேவ அழைத்தல்களை அதிகரிப்பது எப்படி என்று ஆராய வேண்டும்.”

“எங்கள் சபை நன்றாக செயல்படுகிறதா?”

"குயி யுஸ்துஸ் எஸ்த் யுஸ்திஃபிச்சேத்தூர் அதுக். நோன் ப்ரோக்ரேதி எஸ் ரெக்ரேதி. குயி பெர்செவேராவேரித் சால்வுஸ் எரித் - நீதியுள்ளவன் எவனோ, அவன் இன்னும் அதிக நீதிமானாக்கப் படுவானாக. இதில் முன்னேறுதலோ, பின்வாங்குதலோ இல்லை. நிலைத்திருப்பவன் மீட்டு இரட்சிக்கப்படுவான்.”

“அது இன்னும் அதிகமாக வளர்ச்சியடையுமா?"

“மடத்து அதிபர்கள் தங்கள் பணியைச் செய்து கொண் டிருக்கும் வரையில் அது முன்னேறும், அதன் முன்னேற்றத்தைத் தடுக்க யாராலும் முடியாது.”

“அது நீண்ட காலம் நிலைத்திருக்குமா?”

“உமது சபை உறுப்பினர்கள் உழைப்பையும், மட்டுமிதத்தையும் நேசிக்கும் வரையிலும் சபை நீடித்திருக்கும். இந்தத் தூண்களில் ஒன்று தவறும்போது, உமது மாளிகை நொறுங்கி விழுந்து, மேலதி காரிகளையும், அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களையும் நசுக்கி விடும்.”

இச்சமயத்தில் நான்கு மனிதர்கள் ஒரு சவப்பெட்டியைச் சுமந்த படி தோன்றினர். அவர்கள் என்னை நோக்கி நடந்து வந்தார்கள்.

“இது யாருக்காக?” என்று நான் கேட்டேன்.

“உமக்காக.” 

“சீக்கிரத்திலா?"

“இதைப் பற்றிக் கேட்காதீர். நீர் அழிவுக்குட்பட்டவர் என்பதை மட்டும் நினைவில் கொண்டிரும்.”

“இந்த சவப் பெட்டியின் மூலம் நீர் எதைக் குறித்துக் காட்டு கிறீர்?”

“உமக்குப் பிறகு, உமது மகன்கள் எதையெல்லாம் அனுசரிக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, அவற்றை யெல்லாம் நீர் உயிரோடு இருக்கும்போதே அவர்கள் செய்யும்படி நீர் கவனித்துக் கொள்ள வேண்டும். இதுதான் நீர் உம் மகன்களுக்கு விட்டுச் செல்ல வேண்டியிருக்கிற தந்தை வழிச் சொத்தும், உடன்படிக்கையுமாக இருக்கிறது. ஆயினும் நீர் அதைத் தயார் செய்து, அதை முழுமை பெற்றதாகவும், நன்கு அனுசரிக்கப்படுவ தாகவும் விட்டுச் செல்ல வேண்டும்.”

“எங்களுக்காகக் காத்திருப்பவை எவை, மலர்களா அல்லது முட்களா?”

''நிறைய ரோஜாக்கள் இருப்பில் உள்ளன, நிறைய ஆறுதல்கள், ஆயினும் அடுத்து வரவிருப்பவை மிகக் கூர்மையான முட்கள்தான். அவை எல்லா விதமான ஆழ்ந்த கசப்பையும், வேதனையையும் விளைவிக்கும். நிறைய ஜெபம் தேவைப்படுகிறது.”

“(மடங்களை ஸ்தாபிக்க) நாங்கள் உரோமைக்குச் செல்ல வேண்டுமா?”

“ஆம், ஆனால் மெதுவாக, மிக அதிகமான விவேகத்தோடும், நன்கு ஆராயப்பட்ட எச்சரிக்கையோடும்.”

“என் இவ்வுலக வாழ்வின் முடிவு அண்மையில் உள்ளதா?”

“இதைப் பற்றிக் கவலைப்படாதீர். உமக்கு சபைவிதிகள் இருக்கின்றன, புத்தகங்கள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு என்ன வெல்லாம் போதிக்கிறீரோ, அவற்றையெல்லாம் நீரும் செய்யும். விழிப்பாயிரும்!”

நான் இன்னும் நிறைய கேள்விகள் கேட்க விரும்பினேன். ஆனால் மின்னல்களோடு சேர்ந்து ஒரு பலத்த இடி முழக்கத்தை நான் கேட்டேன். அதே வேளையில் சில மனிதர்கள் அல்லது பயங்கரமுள்ள அரக்க ஜந்துக்கள் என்னைத் துண்டு துண்டாய்க் கிழித்து விடுமாறு என்னை நோக்கி விரைந்து வந்தன. அந்தக் கணத்தில் மனச்சோர்வூட்டும் ஓர் இருள் என் பார்வையிலிருந்து எல்லாவற்றையும் மறைத்தது. என் முடிவு வந்து விட்டது என்று நான் எண்ணினேன். ஆகவே வெறிபிடித்தவனைப் போல் அலறத் தொடங்கினேன். அதன்பின் நான் கண்விழித்து, இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்று உணர்ந்து கொண்டேன். அப்போது அதிகாலை 4.45 மணி ஆகியிருந்தது.

இதில் நமக்குப் பயனுள்ளது எதுவும் இருக்குமானால், அதை நாம் ஏற்றுக் கொள்வோம். எல்லாக் காரியங்களிலும், கடவுளுக்கே என்றென்றும் நித்திய காலமும் தோத்திரமும், மகிமையும் உண்டாவதாக.