இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடலின் ஆபத்திலிருந்து மீட்பு

1832 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் இரண்டு மீன்பிடிப் படகுகள் கடலில் எழும்பிய புயலால் தத்தளித்தன. செய்தி பரவியதும் அநேகர் கடற்கரைக்கு ஓடி வந்தனர். இரு படகுகளும் புயலுக்குப் பலியாகிவிடக் கூடிய நிலையில் சுற்றிச் சுழன்றன. படகைச் செலுத்தியவர்களால் ஒன்றும் இயலவில்லை. ஆபத்து முற்றிய நிலையில் அங்கிருந்த சிலர் அர்ச். பிலோமினம்மாளைக் கூப்பிட்டழைத்தனர். எல்லோரும் சேர்ந்து: “பிலோமினாவால் எல்லாம் கூடும். அர்ச். பிலோமினம்மாளே, எங்களைக் காப்பாற்றும்'' என்று ஓலமிட்டனர். இரு படகுகளும் கரையில் கொண்டு சேர்க் கப்பட்டன. ஆனால் இந்த மகிழ்ச்சி பூர்த்தியாகவில்லை. ஒரு படகின் மாலுமியின் பிள்ளைகள் இருவர் புயல் வேகத் தில் கடலில் வீசப்பட்டு விட்டனர். அவர்கள் அலைகளுக்கு நடுவில் போராடுவதை சிலர் கண்டு, “அங்கே அங்கே'' என்று கூறவும் ஜனங்கள் அந்த சிறு பிள்ளைகளையும் காப்பாற்றி, செய்யும் புதுமையைப் பூர்த்தி செய்யும்படி அர்ச். பிலோமினம்மாளிடம் மன்றாடினார்கள். 

கடவுளின் அதிமிக மகிமைக்காக அச்சிறுவரில் ஒருவன் - இளையவன் (வயது 8) அர்ச். பிலோமினம்மாளைப் பார்த்து: “கப்புச்சின் சுவாமி கொண்டுவந்த அர்ச்சியசிஷ்டவளே, எங்களைக் காப்பாற்றும்'' என்று வேண்டிக்கொண்டான். மக்களும் குழந்தைகளின் தகப்பனும் ஏக்கத்தோடு கரையில் நின்று செபித்தனர். புதுமை முற்றுப் பெற்றது. சிறுவர்கள் இருவரும் அலைகளின் நடுவிலிருந்து ஆபத்தின்றிக் கரையில் சேர்க்கப்பட்டார்கள்!