நிறைய ஆன்மாக்கள் நித்திய அழிவுக்கு உள்ளாவதன் காரணம்!

“கெட்ட நண்பர்கள், கெட்ட புத்தகங்கள், கெட்ட பழக்கங்கள் ஆகியவைதான் இவ்வளவு அதிகமானோர் நித்தியத்திற்கும் இழக்கப்படுவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன” என்று என் வழிகாட்டி வியந்தபடி கூறினார்.

நான் முன்பு கண்டிருந்த அந்த வலைகள் உண்மையில் சிறுவர்களை நித்திய அழிவிற்கே இழுத்துச் சென்று கொண்டிருந்தன. இவ்வளவு அதிகமானோர் நித்திய அழிவுக்குச் செல்வதைக் கண்டு, நான் மன அமைதியை இழந்து கதறியபடி: “எங்கள் சிறுவர்களில் இவ்வளவு அதிகமானவர்களின் முடிவு இப்படி இருக்குமானால், நாங்கள் செய்யும் வேலையெல்லாம் வீண்தான். இத்தகைய துயர நிகழ்வுகளை நாங்கள் எப்படித் தடுக்க முடியும்?” என்று கேட்டேன்.

“இது அவர்களுடைய இப்போதைய நிலைதான். இப்போது அவர்கள் இறப்பார்கள் என்றால், நிச்சயமாக அவர்கள் அங்குதான் போவார்கள்.”

“அப்படியானால் அவர்களை நான் எச்சரிக்கும்படியாகவும், மோட்சம் செல்லும் பாதைக்கு அவர்களைத் திரும்பக் கொண்டு வரும்படியாகவும், அவர்களுடைய பெயர்களைக் குறித்துக் கொள்ள என்னை அனுமதியும்.”

“நீர் எச்சரித்தால், அவர்களில் சிலர் திருந்தி விடுவார்கள் என்று நீர் உண்மையாகவே நம்புகிறீரா? அந்தச் சமயத்திற்கு உம்முடைய எச்சரிக்கை அவர்களைத் தூண்டலாம், ஆனால் விரைவில் அவர்கள் அதை மறந்து விட்டு, “இதெல்லாம் வெறும் கனவுதான்” என்று சொல்லி விடுவார்கள். அதன்பின் முன்பை விட அதிக மோசமானதைச் செய்யவும் தொடங்கி விடுவார்கள். மற்றவர்களோ, தங்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டதை உணர்ந்து, திருவருட்சாதனங்களைப் பெறுவார்கள், ஆனால் அது சுயவிருப்பப்படி நடக்காது, அவற்றால் எந்தப் பேறுபலன்களும் அவர்களுக்குக் கிடைக்காது. மற்றவர்கள் நரகத்தைப் பற்றிய ஒரு கண நேர அச்சத்தால் பாவசங்கீர்த்தனம் செய்வார்கள், ஆனால் அப்போதும் பாவத்தை விட்டு விலக மாட்டார்கள்.”

“அப்படியானால் இந்தப் பரிதாபத்திற்குரிய சிறுவர்களைக் காப்பாற்ற வேறு வழியே இல்லையா? தயவு செய்து, அவர்களுக்காக நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லும்.”

“அவர்களுக்கு மேலதிகாரிகள் இருக்கிறார்கள்; அவர் களுக்கு இவர்கள் கீழ்ப்படியட்டும். அவர்களுக்கு விதிகள் இருக்கின்றன. அவற்றை அனுசரிக்கட்டும். அவர்களுக்குத் திருவருட் சாதனங்கள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.”

சரியாக இந்நேரத்தில் சிறுவர்களின் புதிய கூட்டம் ஒன்று உருண்டு வந்தது. கதவுகள் கண நேரத்தில் திறந்தன. “நாம் உள்ளே போவோம்” என்றார் என் வழிகாட்டி!