இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இடையர்கள் வந்து சேசுபாலனை ஆராதிக்கிறார்கள்.

9 ஜூன்  1944. நற்கருணைத் திருநாளுக்கு முந்திய மாலை.

என் போதகரான சேசுவின் முன்னிலையில் எழுதுகிறேன்.  அவர் இங்கே எனக்காக இருக்கிறார்.  எனக்காக மட்டுமே இருக்கிறார்.  இவ்வளவு நீண்ட நாட்களுக்குப் பின் அவர்   திரும்பவும் வந்திருக்கிறார், எனக்காகவே வந்திருக்கிறார்.

“அது எப்படி?” என்று நீங்கள் கேட்பீர்கள்: “கிட்டத்தட்ட ஒரு மாதமளவாக நீ பார்க்கிறாய், கேட்கிறாய்.  இப்பொழுது அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருப்பதாகச் சொல்வதெப்படி?” என்று.

பல தடவைகள் நான் வார்த்தையாலும் எழுத்தாலும் ஏற்கெனவே உங்களிடம் கூறியுள்ளதை மீண்டும் கூறுகிறேன்:

பார்ப்பதிலும் கேட்பதிலும் ஒரு வேறுபாடு இருக்கிறது.  மற்றவர்கள் சார்பில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் என் சார்பாக, முழுவதும் எனக்கெனவே பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கின்றது.  மற்றவர்களுக்காக என்பதில், நான் கண்டு கேட்கும் காரியங்களை அப்படி அப்படியே திருப்பிச் சொல்லும் பார்வையாளராக இருக்கிறேன்.  அவைகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்குமானால் அவை எப்போதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களாக இருப்பதுதான் காரணம்.  அவற்றால் நான் அடையும் மகிழ்ச்சி புற மகிழ்ச்சிதான்.  நான் தெளிவாக உணர்வதை இவ்வார்த்தை சரியாகக் கூறவில்லை.  வேறு வார்த்தையும் எனக்கு அகப்படவில்லை.  சுருக்கத்தில், அதற்கு உதாரணமாக: ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பதால் அல்லது ஒரு அழகான காட்சியைக் காண்பதால் ஏற்படும் மகிழ்ச்சியைக் கூறலாம்.   ஒருவன் அதனால் நெகிழ்கிறான், அதை அனுபவிக்கிறான், அதன் பொருத்தத் தன்மையை வியக்கிறான்.  இன்னாருடைய இடத்தில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது என்று எண்ணுகிறான்.  ஆனால் நான் எனக்கெனவே காணவும் கேட்கவும் செய்யும்போது, நானே அந்த ஆளாகி விடுகிறேன்.  நான் கேட்கும் வார்த்தை எனக்குரியது.  நான் காணும் ஆள் எனக்குரியவர்.  ஆண்டவரும் நானும், மாதாவும் நானும், அருளப்பரும் நானும்,  உயிரோடு, எதார்த்தமாக, உண்மையாக ஒருவர்க்கொருவர் சமீபமாக இருக்கிறோம்.  ஒரு படத்தில் பார்ப்பது போல் என் முன்பாக அவர்கள் காட்சியளிக்கவில்லை.  ஆனால் என் படுக்கையருகே, என் அறையில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டு, அமர்ந்தபடி, நின்றபடி, மேஜை நாற்காலிகளில் சாய்ந்து கொண்டு, உயிருள்ளவர்களாய், என் விருந்தினராய் அவர்கள் இருக்கிறார்கள்.  எல்லார் சார்பிலும் நான் காணும் காட்சியிலிருந்து இது முழுவதும் வேறுபட்டது.  ஒரே வார்த்தையில், அவை யாவும் “என்னுடையவை.” 

அப்படியே சேசு இன்று வந்துள்ளார்.  நேற்று பிற்பகலிலிருந்தே அவர் இங்கே இருக்கிறார்.  அவருடைய வழக்கமான வெண் தந்த நிற கம்பளி ஆடை அணிந்திருக்கிறார்.  அது மோட்சத்தில் அவருடைய ஆடையிலிருந்து நிறத்திலும் எடையிலும் வேறுபட்டிருக்கிறது.  மோட்சத்தில் அவர் அணிந்துள்ளது, பருப் பொருளல்லாத லினனால் செய்யப்பட்டு எவ்வளவு பிரகாசமானதென்றால், ஒளி நூலால் நெய்யப்பட்டது போலிருக்கும்.

அவருடைய விரல்கள் நீண்டும்  நுனி நோக்கி ஒடுங்கியும் நாட்பட்ட தந்த நிறத்தை எட்டும் வெண்மையாயும் உள்ளன.  அவர் முகம் நீண்டு வெளிறி இருக்கிறது.  கண்கள் இருண்ட நீல இரத்தினமாய், இனிமையும் தோரணையும் கொண்டிருக்கின்றன.  கண் புருவங்கள் அடர்ந்த பழுப்பாய், இளம் பொன்னுடன் செந்நிற பிரதிபிம்பங்களை ஏற்படுத்துகின்றன.  அவருடைய நீண்ட முடி மென்மையானது.  அதில் சூரிய வெளிச்சம் படும் இடங்களில் அது அதிக பிரகாசமுள்ள இளம்  பொன் செந்நிறமாயும், சுருள்களின் தாழ்வுகளில் மங்கியும் காணப்படுகின்றது.  அவர் இங்கே இருக்கிறார்!  அவர் இங்கே இருக்கிறார்!!  அவரைப் பற்றி நான் எழுதுகிறேன்!  அவர் புன்னகை புரிகிறார்!  இப்படி அவர் வியாரெஜியோ என்ற இடத்தில் செய்வது வழக்கம்... அர்ச். வாரத்திலிருந்து அதை நிறுத்தி விட்டார்.  இதனால் மிகுதியான சஞ்சலம் எனக்கு ஏற்பட்டது.  எனக்கு அவர் இல்லாமல் போய்விட்டார்.  இதனால் என் துயரம், ஏறக்குறைய நம்பிக்கையிழப்பின் காய்ச்சலாகி விட்டது.  அதோடு அவரை நான் தரிசித்த இடத்தில் நான் இருந்த ஆறுதலும் எனக்கு இல்லாமல் போய்விட்டது.  அந்த இடத்தில், “அவர் இதிலே சாய்ந்திருப்பார், இங்கே உட்கார்ந்திருப்பார்.  இங்கே என் தலை மீது தம் கரத்தை வைப்பதற்குக் குனிந்தார்” என்று என்னால் சொல்லக்கூடிய ஆறுதல்  எனக்கிருந்தது. அதையும் இங்கே நான் இழந்தேன். என் உறவினர்கள் இறந்த இடம் இது என்று சொல்லவும் எனக்குக் கூடாமற் போயிற்று.

ஓ! ஒருவன், தான் அனுபவித்திருந்தாலொழிய அதைக் கண்டுபிடிக்க முடியாது.  இதெல்லாம் எனக்கு இருந்ததாக பாசாங்கு செய்வதல்ல இது.  இவையெல்லாம் இலவசமான வரங்கள் என்று நாம் நன்கறிவோம்.  நாம் அவற்றிற்குத் தகுதி பெற்றவர்களல்ல என்பதும் நமக்குத் தெரியும்.  அவை நமக்கு அருளப்படும்போது அவை நீடித்திருக்கும் என நாம் எதிர்பார்க்கவும் கூடாது.  அவை எவ்வளவிற்கு அருளப்படுகின்றனவோ அவ்வளவிற்கு நாம் நம்மைத் தாழ்த்தி, தன்னையே நமக்களிக்கிற அளவில்லாத அழகினோடும் ஐசுவரியத்தோடும் ஒப்பிட்டு, நமது அருவருப்புக்குரிய தரித்திரத்தை நாம் ஒப்புக்கொள்கிறோம்.  ஆனால் தந்தையே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  ஒரு மகன் தன் தாயையும் தந்தையையும் பார்க்க விரும்புவதில்லையா?  ஒரு மணவாட்டி தன் மணாளனைப் பார்க்க விரும்புவதில்லையா?  மரணமோ அல்லது நீண்ட பிரிவோ தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்க முடியாமல் செய்யும்போது அவர்கள் துன்பப்படுவதில்லையா?  அவர்கள் வாழ்நத இடத்தில் தாங்கள் வாழ்வதில் ஆறுதலடைவதில்லையா?  அந்த இடங்களை விட்டுப் பிரிய நேரிட்டால், அங்கே இல்லாத அந்த உறவினர், தன் அன்புக்குப் பதிலன்பு காட்டிய இடத்தையும் இழப்பதற்காக அவர்கள் இரட்டிப்பாக துயரப்படுவதில்லையா?  இப்படி துன்பப்படுகிறவர்களைக் குற்றம் சொல்ல முடியுமா?  முடியாது.  ஆனால் என்னைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?  என்னுடைய தந்தையும் மணாளனும் சேசு இல்லையா?  மிக அன்புள்ள தந்தையையும் மணாளனையும் விட அதிக அன்புள்ள தந்தையும் மணாளனும் அவரல்லவா?

அவர்  எனக்கு அவ்வாறிருக்கிறார் என்பதை என் தாய் மரணமடைந்த போது நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதிலிருந்து நீங்கள் தீர்மானிக்கலாம்.  நான் வேதனைப்பட்டேன்.  இன்னும் நான் அழுகிறேன்.  ஏனென்றால், என் தாயின் குணம் அப்படியிருந்தும் நான் அவளை நேசித்தேன்.  அந்த கடினமான நேரத்தை நான் எப்படித் தாண்டினேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  சேசு அங்கே இருந்தார்.  அவரோ என் தாயை விட எனக்கு அதிக அருமையானவர்.  நான் ஒன்று சொல்லட்டுமா?  எட்டு மாதங்களுக்கு முன் என் தாயின் மரணத்தைப் பற்றி அப்பொழுது வேதனைப்பட்டதைவிட அதிகமாக இப்பொழுது படுகிறேன்.  காரணம், கடந்த இரண்டு மாதங்களாக எனக்கெனவே சேசுவும் எனக்கெனவே மாதாவும் இல்லாதிருந்தேன்.  இப்பொழுதும்தான் என்ன - ஒரு விநாடி அவர்கள் என்னை விட்டு அகன்றால் ஒரு நோயுற்ற அநாதைபோல், தன்னந்தனிமைப்பட்டு, அந்த குருர நாட்களின் மனித வேதனைக்குள் மீண்டும் விழுகிறேன்.

என்னை சேசு பார்த்துக் கொண்டிருக்கவே நான் இதை எழுதுவதால் நான் எதையும் மிகைப்படுத்திக் கூறவுமில்லை, மாற்றவுமில்லை.  அப்படி நான் செய்து பழக்கமுமில்லை.  அப்படியே இருந்தாலும் கூட சேசு என்னைக் கவனித்துக் கொண்டிருக்கையில் அப்படி நீடித்துச் செய்வது சாத்தியமில்லை.

என் வழக்கத்திற்கு மாறாக இதை நான் இங்கு எழுதியிருக்கிறேன்.  ஏனென்றால் மாதாவைப் பற்றிய காட்சிகளில் நான், பரிதாபத்திற்குரிய என்னுடைய சுயத்தை இடையே நுழைப்பதில்லை.  காரணம் அவர்களின் மகிமைகளைத் தொடர்ந்து கூற வேண்டும் என அறிந்திருக்கிறேன்.  மாதாவின் தாய்மையானது ஒவ்வொரு விநாடியிலும் மகிமைகளின் மகுடமாக இல்லையா?  எனக்கு அதிகம் சுகமில்லாமலிருக்கிறது.  எழுதுவதே பெரிய பாரமாயிருக்கிறது.  எழுதியபின் மிகவும் பலவீனமாயிருக்கிறது.  ஆயினும் மாதா அதிகமாய் நேசிக்கப்படும்படியாக அவர்களை அறியச் செய்வதில் நான் எதையும் பொருட்படுத்தவில்லை.  என் தோள்கள் வலிக்கலாம்.  என் இருதயம் தளரலாம்.  வெடிக்கிற மாதிரி என் தலை வலிக்கலாம்.  என் காய்ச்சல் ஏறலாம்.  அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல.  கடவுளுடையவும் மாதாவுடையவும் கருணையால் அவர்களை அழகோடும் அன்புக்குரியவர்களாகவும் நான் காண்கிறேன்.  மாதா அறியப்படட்டும்!  அதுவே எனக்குப் போதுமானது.

இதற்குப் பிறகு, பரந்த ஒரு நிலப்பரப்பை நான் காண்கிறேன்.  நிலா நேரே மேலே இருக்கிறது.  நட்சத்திரங்கள் குவிந்திருக்கிற வானத்தில் அது அமைதியாகப் பயணம் செய்கிறது.  இருண்ட நீல வெல்வெட் பட்டு விதானத்தில் பதிக்கப்பட்ட வைரக் குமிழ்கள் போல் நட்சத்திரங்கள் உள்ளன.  சந்திரன் அவற்றின் நடுவே புன்னகை செய்கிற அதன் பெரிய வெண் முகத்திலிருந்து பூமியை நோக்கி ஒளிக் கற்றைகள் பாய்ந்து அதை வெண்மையாக்குகின்றன.  அந்த வெண்மையான பின்னணியில் இலை உதிர்ந்து மரங்கள் கூடுதல் உயரமாகவும் கறுப்பாகவும் தெரிகின்றன.  எல்லைகளில் இங்குமங்குமாக எழும்பும் தாழ்வான சுவர்கள் பாலைப்போல் வெண்மையாகக் காணப்படுகின்றன.  தூரத்தில் தெரியும் ஒரு சிறிய வீடு ஒரு கராரா சலவைக்கல் பாளம் போலிருக்கிறது.

எனக்கு வலப்புறத்தில், இருபக்கம் தாழ்ந்த முரடான சுவர்களாலும் மற்ற இரு பக்கங்களிலும் முட்செடி வேலியும் கொண்ட ஒரு வளவைக் காண்கிறேன்.  சுவரிலிருந்து கூரை இறக்கப்பட்டிருக்கிறது.  அதன் உட்புறத்தில், கட்டுமானம் பாதி மர வேலை பாதியாக உள்ளது.  கோடை காலத்தில் மரவேலை மறைப்பை எடுத்து விட்டால் அது ஒரு முற்றம் போல் பயன்படும்.  அந்த அடைப்பிற்குள்ளிருந்து இடைக்கிடையே ஆடுகள் கத்தும் குரல் விட்டு விட்டுக் கேட்கிறது.  அது கனவு காணுகிற அல்லது மிகப் பிரகாசமாயிருக்கிற நிலவொளியைக் கண்டு சூரிய உதயம் வந்து விட்டதோ என்று உணருகிற ஆடுகள் கூப்பிடுவதா யிருக்கலாம்.  பிரகாசம் பளிச்சென்று மிக கூர்மையாகிறது.  அது வரவர அதிகரிக்கிறது.  சந்திரன் பூமியை நெருங்குவதுபோல் அல்லது ஒரு வினோத நெருப்பினால் வெளிச்சம் மின்னுவது போலிருக்கிறது.

ஓர் இடையன் கதவின் வழியே எட்டிப் பார்க்கிறான்.  ஒரு கையால் தன் கண்களை மறைத்துக் கொண்டு மேலே உற்றுப் பார்க்கிறான்.  நிலா வெளிச்சத்திற்காக கண்ணை மறைக்க வேண்டியது வராது.  ஆனால் நிலாவின்  இவ்வெளிச்சம் மிகப் பிரகாசமாயிருந்து கண்களைக் கூச வைக்கிறது - குறிப்பாக இருட்டுக்குள்ளிருந்து வருகிறவர்களை.  எல்லாம் அமைதியா யிருக்கின்றன.  ஆனால்  இந்த நிலவின் அதிபிரகாசமான வெளிச்சம் ஆச்சரியமாயிருக்கிறது.  இடையன் தன் கூட்டாளிகளைக் கூப்பிடுகிறான்.  எல்லாரும் வாசலுக்கு வருகிறார்கள்.  ரோமம் படர்ந்து பல வயதுத் தரப்பில் அவர்கள் இருக்கிறார்கள்.  சிலர் இருபது வயதுக்குட்பட்டவர்கள்.  சிலர் நரைமுடி பெற்றவர்கள்.  இந்த நூதன நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுகிறார்கள்.  இளவயதினர் பயப்படுகிறார்கள்.  ஒருவன் சுமார் பன்னிரண்டு வயதுடையவன் - அழத் தொடங்குகிறான்.  பெரிய இடையர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். 

இருக்கிறவர்களில் மூப்பனான இடையன்:  “அடே பைத்தியக்காரா, எதைக் கண்டு நீ பயப்படுகிறாய்?  ஆகாயம் அமைதியாயிருப்பது உனக்குத் தெரியவில்லையா?  தெளிந்த நிலா ஒளியை நீ கண்டதில்லையா?  நீ எப்போதும் உன் அம்மா வளர்த்த பிள்ளை தானே?  நீ காண வேண்டியவை பல உள்ளன.   ஒரு தடவை நான் லெபனான் மலைக்கும் அதைத் தாண்டியும் போயிருக்கிறேன்.  மிக உயரம்.  நான் அப்போது இளமை.  நடப்பது சுகமாயிருந்தது.  அப்போ நான் நல்ல வசதியோடும் இருந்தேன்... ஒரு நாள் எப்படிப்பட்ட பிரகாசத்தை நான் கண்டேனென்றால் எலியாஸ் தன் அக்கினி ரதத்தில் திரும்பி வருகிறார் போலும் என்று நான் எண்ணினேன்.  அப்போது ஒரு வயோதிபர் - அன்று வயோதிபர் அவர்தான் - என்னிடம்:  “ஒரு பெரிய ஆச்சரியமான காரியம் உலகத்தில் நடக்கப் போகிறது” என்று சொன்னார்.  அது எங்களுக்குத் துரதிர்ஷ்டமான காரியமாயிருந்தது.  ஏனென்றால் உரோமைப் போர்ச் சேவகர்கள் வந்தார்கள்.  ஓ, நீ போதிய காலம் வாழ்ந்தால் பல காரியங்கள் நடக்கக் காண்பாய்” என்கிறான்.

ஆனால் அந்த இடைச் சிறுவனுக்கு அந்த மூப்பனின் வார்த்தை கேட்கிறதாகத் தெரியவில்லை.  பயம் தெளிந்தவனாய், முன்பு தான் பாதுகாப்புத் தேடி நின்ற ஒரு வலிமையான இடையனுக்குப் பின்னாலிருந்து நழுவி, வாசலைத் தாண்டி, அந்தக் கூரைக்கு முன்னாலிருக்கிற புல் அடர்ந்த இடத்திற்கு வருகிறான்.  அவன் மேலே பார்த்துக் கொண்டே உறக்கத்தில் நடக்கிறவனைப் போல் அல்லது அவனைக் கட்டாயமாய்க் கவர்ந்திழுக்கிற ஏதோ ஒன்றால் மயக்கப்பட்டவன் போல் போகிறான்.  அவன் ஒரு கட்டத்தில் “ஓ!” என்று குரல் கொடுத்து தன் கரங்களைச் சற்று விரித்தபடி ஸ்தம்பித்து நிற்கிறான்.  மற்றவர்கள் வாயடைத்துப் போய் ஒருவரையயாருவர் பார்க்கிறார்கள்.

அவர்களுள் ஒருவன்:  “இந்த முட்டாளுக்கு என்ன வந்தது?” என்கிறான்.

இன்னொருவன்: “நாளைக்கே இவனை இவன் அம்மாவிடம் அனுப்பி விடுகிறேன்.  என் ஆடுகளின் காவலுக்கு பைத்தியங்கள் வேண்டியதில்லை” என்கிறான்.

முன்பு பேசிய மூப்பன்: “அவனைக் கண்டிப்பதற்கு முன் நாம் போய்ப் பார்ப்போம்.  உறங்குகிறவர்களையும் கூப்பிடுங்கள்.  உங்கள் கம்புகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.  அது ஒரு காட்டு விலங்காயிருக்கலாம் அல்லது திருடனாயிருக்கலாம்...” 

மற்றவர்கள் உள்ளே சென்று மற்ற இடையர்களையும் அழைத்துக் கொண்டு பந்தங்கள் தடிகளுடன் வெளியே வருகிறார்கள்.  அவர்கள் அந்தச் சிறுவனிடம் போய்ச் சேருகிறார்கள்.

“அங்கே! அங்கே! மரத்திற்கு மேலே!  அதோ வருகிற ஒளியைப் பாருங்கள்! நிலவின் கதிரில் அது வருவது போலிருக்கிறது!  அது பக்கத்தில் வருகிறது!  என்ன அழகாயிருக்கிறது!” என்று சிறுவன் மெல்லச் சொல்கிறான்.

“கொஞ்சம் கூடுதல் பிரகாசமுள்ள ஒளியைத்தான் நான் காண்கிறேன்.” 

“ஆம்.  எனக்கும் அது தெரிகிறது!” 

“எனக்கும் தெரிகிறது!” 

இப்படியே மற்றவர்களும் சொல்கிறார்கள்.

“இல்லை.  ஏதோ ஓர் உருவம் எனக்குத் தெரிகிறது” என்கிறான் ஒருவன்.  அவன்தான் மாதாவுக்குப் பால் கொடுத்துதவிய இடையன் என்று நான் அடையாளம் காண்கிறேன்.

“அது... அது ஒரு சம்மனசு!  இதோ அவர் கீழே இறங்குகிறார்!  பக்கத்தில் வருகிறார்... கடவுளின் தூதர்முன் எல்லாரும் முழங்காலிடுங்கள்!” என்று கத்துகிறான் அந்தச் சிறுவன்.

ஒரு நீண்ட, வணக்கம் நிரம்பிய “ஓ!!!” என்ற ஒலி எழுகிறது அந்த இடையர்களிடமிருந்து.  அவர்கள் முகம் தரையில்பட விழுகிறார்கள்.  அவர்கள் எவ்வளவிற்கு மூத்தவர்களாயிருக்கிறார்களோ அவ்வளவிற்கு இந்தப் பிரகாசமுள்ள தரிசனையால் நசுக்கப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.  இளையவர்கள் முழங்காலில் நிற்கிறார்கள். மேலும் மேலும் அருகில் வந்து கொண்டிருக்கிற சம்மனசைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  அவர் இப்போது சுற்றுச் சுவரின் நேரே நடு ஆகாயத்தில் நின்று விடுகிறார்.  தம் பெரிய இறக்கைகளை அசைத்தபடி நிற்கிறார்.  முத்தின் ஒளியாக, அவரைச் சூழ்ந்த வெண்மையான நிலா வெளிச்சத்தில் அவர் நிற்கிறார்.

“பயப்படாதீர்கள்.  தீமை அல்ல உங்களுக்கு நான் கொண்டு வருவது.  ஒரு பெரிய மகிழ்ச்சியை உங்களுக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் உலகின் எல்லா மக்களுக்கும் அறிவிக்கிறேன்.  இன்று தாவீதின் நகரத்திலே கிறீஸ்துவான இரட்சகர் பிறந்துள்ளார்!” என்று அவர் சொல்கிறார்.  சம்மனசின் குரல் யாழும் இராப்பாடியின் குரலும் கலந்த இன்னிசையாக இருக்கிறது.

“இன்று தாவீதின் நகரத்தில் இரட்சகர் பிறந்திருக்கிறார்!” அவர் இப்படிக் கூறும்போது, மிஞ்சும் மகிழ்ச்சியின் அடையாளமாக தம் இறக்கைகளை அகல அகல விரித்து அசைக்கிறார்.  அந்த இறக்கைகளிலிருந்து பொன் ஒளிப் பொறிகளும் இரத்தினக் கற்களும் வரிசையாக உதிர்வன போல் தெரிகின்றது.  அது அந்தக் கூரை வீட்டின் மேல் வான வில்லாலான வெற்றி வளைவுபோல் காணப்படுகின்றது.

“... கிறீஸ்துவான இரட்சகர்!” என்று சொல்லும்போது, சம்மனசானவர் கூடுதல் ஒளியோடு பிரகாசிக்கிறார்.  அவருடைய இறக்கைகள் அசையாமல் மேல் நோக்கி நிற்கின்றன.  அவை நீல மணிக் கடல் மேல் இரண்டு அசையாமல் நிற்கும் பாய்மரங்கள் போலிருக்கின்றன.  இரண்டு ஒளிரும் சுவாலைகள் மோட்சத்திற்கு எழுவதைப்போலிருக்கின்றன.

சம்மனசானவர் தொடர்ந்து: “கிறீஸ்துவெனும் ஆண்டவர்” என்கிறார்.  அப்படிச் சொல்லும்போது அவர் கதிர்வீசும் தம் இறக்கைகளைக் கொண்டு, முத்து ஆடையின் மேல் வைரம் பதித்த போர்வையால் மூடுவதுபோல் தம்மை மூடிக் கொண்டு தலை பணிந்து ஆராதிக்கிறார்.  நெஞ்சின்மீது கரங்களைக் குறுக்காக வைத்திருக்கிறார்.  குனிந்திருக்கும் அவருடைய சிரசு மடிக்கப்பட்ட இறக்கைகளால் மூடப்பட்டிருக்கிறது.  சில வினாடிகளுக்கு ஒரு நீண்ட அசைவற்ற உருவமே காணப்படுகிறது.

சம்மனசு மீண்டும் அசைகிறார். இறக்கைகளை விரிக்கிறார்.  தலையை நிமிர்த்துகிறார்.  ஒரு புன்னகையுடன் மிளிர்கிறார்.  “இந்த அடையாளங்களால் நீங்கள் அவரைக் கண்டு கொள்வீர்கள்:  ஒரு எளிய தொழுவம்.  பெத்லகேமுக்குப் பின்புறம் கட்டும் துணிகளில் பொதியப்பட்ட ஒரு குழந்தை மிருகங்களுடைய முன்னிட்டியில் கிடத்தப்பட்டிருக்கும்.  ஏனெனில் தாவீதின் நகரத்திலே மெசையாவுக்கு ஒரு கூரை கிடைக்கவில்லை” என்று கூறும்போது அவர் முகம் கனத்து துயரமாகவே காணப்படுகிறார்.

ஆனால் மோட்சத்திலிருந்து அநேக சம்மனசுக்கள் - ஆ! எத்தனை! எத்தனை!! - இறங்கி வருகிறார்கள்.  அவரைப் போலவே இருக்கிறார்கள்.  இறங்கி வரும் சம்மனசுக்களாலான ஏணி போல் அவ்வரிசை காணப்படுகிறது.  அவர்கள் அக்களிப்போடு வருகிறார்கள்.  தங்கள் மோட்ச ஒளியால் நிலவின் ஒளியை மங்கச் செய்கிறார்கள்.  அவர்கள் அறிவிக்கும் தூதரைச் சூழ்கின்றார்கள்.  இறக்கைகளை அடித்துக் கொள்கிறார்கள்.  நறுமணம் வீசுகிறார்கள்.  சிருஷ்டிப்பின் மிக அழகிய குரல்களின் ஒருமிக்க சிறப்புக்கு உயர்த்தப்பட்டு, அதன் ஞாபகப்படுத்துதலாயிருக்கிற இனிய நாதங்களை எழுப்புகிறார்கள்.  ஓவியமானது சடப்பொருள் ஒளி ஆவதன் வெளிப்பாடானால், இங்கே, கடவுளின் அழகின் ஒரு குறிப்பை மனிதர்களுக்குக் கொடுக்கிற இசையின் வெளிப்பாடாக சங்கீதம் அமைகிறது.  இந்த சங்கீதத்தைக் கேட்பது மோட்சத்தை அறிவதாகும்.  அங்கே எல்லாம் அன்பின் ஒருங்கிணைதலா யிருக்கிறது. ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மாக்களை மகிழ்விப்பதற்காக அது கடவுளிடமிருந்து புறப்படுகிறது.  ஆன்மாக்களிடமிருந்து அது மீண்டும் புறப்பட்டு கடவுளைச் சென்றடைந்து:  “நாங்கள் உம்மை நேசிக்கிறோம்” என்று சொல்லுகிறது.

சம்மனசுக்களின் “மகிமைப்” பாடல் அமைதியான நாட்டுப் புறமெங்கும் விரிகிற வட்டங்களாகப் பரவுகிறது.  அதனோடு பிரகாசமான ஒளியும் பரவுகிறது.  முன் நேரத்தில் வருகிற        ஒளியை வரவேற்க பறவைகள் தங்கள் பாடலை இணைக்கின்றன.  முன்கூட்டி வரும் சூரியனுக்கு தங்கள் கதறல்களை ஆடுகளும் கூட்டுகின்றன.  ஆனால் முன்பு குகைத் தொழுவில் எருது கழுதையைப் பற்றி நான் நினைத்தது போலவே இந்த மிருகங்களும் தங்கள் சிருஷ்டிகரை - மனிதனாகவும் கடவுளாகவும் தங்களை நேசிக்க இறங்கி வந்திருக்கிற அவரை வரவேற்க அப்படிச் செய்வதாக எண்ணிக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது.

பாடல் மெல்ல மங்குகிறது.  ஒளியும் மெல்ல மறைகிறது.  சம்மனசுக்கள் மேலே மோட்சத்திற்குச் செல்கிறார்கள்...

இடையர்கள் தங்கள் எதார்த்த நிலையை மீண்டும் அடைகிறார்கள்.

“நீங்கள் கேட்டீர்களா?” 

“நாம் போய்ப் பார்ப்போமா?” 

“ஆடுகள்?” 

“நாம் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியத்தானே போகிறோம்.  அவற்றிற்கு ஒன்றும் நேரிடாது...” 

“எங்கே போவது?” 

“அவர் இன்று பிறந்திருக்கிறார் என்று தூதன் சொல்லவில்லையா?  பெத்லகேமில் அவர்களுக்குத் தங்க இடம் கிடைக்கவில்லை என்றும் சொன்னாரே!”  இப்படிக் கூறுவது, பால் கொடுத்த அந்த இடையன்.  அவன் மேலும் தொடர்ந்து: “என்னுடன் வாருங்கள்.  அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.  அந்த அம்மாவை நான் கண்டேன்.  எனக்கு ரொம்ப வருத்தம்.  அவர்களைப் பற்றித்தான்.  அவர்கள் எங்கே போக வேண்டுமென்று நான் சொல்லிக் கொடுத்தேன்.  அவர்களுக்காகத் தான்.  தங்குவதற்கு இடம் கிடைக்காது போகக் கூடும் என்று நினைத்தேன்.  அந்த மனிதனிடம் அவர்களுக்கென கொஞ்சம் பால் கொடுத்தேன்.  அந்த அம்மா இள வயது.  அழகோடிருந்தார்கள்.  நம்மிடம் பேசிய சம்மனசைப் போல கருணையுடன் நல்லவர்களாயிருக்க வேண்டும்.  வாருங்கள், கொஞ்சம் பால், பால் கட்டி, ஆட்டுக் குட்டிகளும் பதனிட்ட தோல்களும் எடுத்துக் கொண்டு போவோம்.  அவர்கள் மிக வறியவர்களாயிருக்க வேண்டும்... அப்பாலன், அவர் பெயரைச் சொல்ல நான் துணிய மாட்டேன்.  ஓ! அவர் எவ்வளவு குளிரில் இருக்க வேண்டும்!  நானும் ஒரு சாதாரண ஸ்திரீயுடன் பேசுவதுபோல் அந்த அம்மாவிடம் பேசிவிட்டேனே!...” 

அவர்கள் குடிசைக்குள் போய் சற்று நேரத்தில் வெளியே வருகிறார்கள்.  சிலர் சிறு பாத்திரங்களில் பால், சிலர் வேய்ந்த புல்லில் உருண்டையான பாற்கட்டிகள், சிலர் கூடையில் ஆட்டுக் குட்டிகள், பதனிட்ட தோல் ஆகியவற்றைக் கொண்டு வருகிறார்கள்.

“போன மாதம் ஈன்ற ஓர் ஆட்டை நான் கொண்டு வருகிறேன்.  அதன் பால் மிக நன்றாக இருக்கும்.  அந்த அம்மாவிற்கு பாலில்லாத பட்சம் இது இதுவும்.  அவர்கள் இள வயதாயும் வெளிறிப் போயும் இருந்தார்கள்.  நிலவொளியில் மல்லிகைபோல” என்று கூறுகிறான் நேற்று மாலையில் பால் கொடுத்து உதவிய இடையன்.  அவனே மற்றவர்களை வழிநடத்தியும் செல்கிறான்.

குடிசையை அடைத்து விட்டு வளவையும் சாத்திவிட்டு பந்தங்களுடன் நிலா வெளிச்சத்தில் நடக்கிறார்கள்.  நாட்டுப்புற பாதை வழியாக குளிர் காலத்தால் இலையுதிர்ந்த முட்செடி வேலிகளூடே செல்கிறார்கள்.

அவர்கள் பெத்லகேமைச் சுற்றிக் கொண்டு குகைகள் இருந்த இடத்தை எதிர்த்திசையிலிருந்து வந்தடைகிறார்கள்.  ஆதலால் மற்ற நல்ல குகைகளைக் கடந்து வர வேண்டிய அவசியமில்லை.  அவர்கள் வந்த பாதையில் சேசு பிறந்திருந்ததுதான் முதல் குகையாயிருந்தது.