இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கீழ்ப்படிதலின் விளைவுகள்!

அநேக மனிதர்கள் அர்ச்சிஷ்டவர்களைக் கண்டு பாவிக்க கடினமாய் முயலுகிறார்கள். பல தடவைகள் முயற்சித்தும் வெற்றி பெற முடியாமல், இறுதியாக, உத்தமதனம் எல்லோருக்கும் உரியது அல்ல, மாறாக அது கடவுளால் விசேஷமாக அழைக்பபட்டவர்களுககும், அதற்கெனக் குறிக்கப்பட்டோருக்கும் மாத்திரமே உரியது என்ற சாக்குப்போக்கோடு தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். தமது சொந்தத் திட்டங்களை நிறைவேற்றும்படியாக கடவுள் குறிப்பிட்ட தனி மனிதர்களை ஒரு விசேஷ அளவிலான அர்ச்சிஷ்டதனத்திற்கு அழைக்கிறார் என்பது உண்மைதான். ஆனாலும் இப்படி விசேஷ முறையில் அவரால் அழைக்கப்படாதவர்கள் உத்தமதனத்திற்கான பந்தயத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள் என்று சொல்வது தவறானது. அது கடவுளின் பரிசுத்த வார்த்தைக்கு முரண்பட்டதாக இருக்கிறது. உங்கள் பரலோகப் பிதா உத்தமரா யிருப்பது போல நீங்களும் உத்தமராயிருக்க வேண்டியுள்ளது. அப்படியிருக்க, பலவீனத்தின் அடிப்படை ஆதாரம் எங்கிருக்கிறது? உத்தமதனமடைய முயற்சிக்கிற அநேகர் அதைக் கடினமானதாகவும், உத்தமதனமடைவது ஏறத்தாழ சாத்தியமேயில்லாதது என்றும் காண்பது ஏன்? கடவுள் அவர்களுக்கு உதவியையும், ஆறுதல்களையும், ஒவ்வொரு கஷ்டத்தின் மேலும் வெற்றி பெறும் தைரியத்தையும் அவர்களுக்குத் தர மறுக்கிறாரா? அவர் முன்பு வழக்கமாக இருந்தபடி, இன்று தமது பொக்கிஷங்களை அவ்வளவு தாராளமாகத் தருவதில்லையா? இல்லை! இவை காரணங்கள் அல்ல. கடவுள் முன்பு இருந்ததை விட இப்போது அதிகத் தாராளமுள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், “பாவம் பெருகின இடத்தில் வரப்பிரசாதம் அபரிமிதமாய்ப் பெருகிற்று” என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். நம் தீமையின் நாளில் பாவம் பெருக்கெடுக்கிறது என்பதை நாம் எல்லோரும் நிச்சயமாக ஒத்துக் கொள்ளுவோம். அதற்கான காரணம் இதுதான்: சுயத்திற்கு மரித்தவர்களாக இன்று மிகச் சிலரை மட்டுமே அவர் காண்கிறார்! தமது மணவாட்டிகளுக்கு மத்தியிலும் கூட! சுயத்திற்கு மரித்த ஒருத்தியை அவர் காண்கிற போது, அவள் மீது தமது மிக விலையேறப்பெற்ற பொக்கிஷங்களைத் திரளாகப் பொழிகிறார். இவ்வளவு பெரிய பாவியாக தன்மட்டில் கடவுள் இவ்வளவு நல்லவராக இருக்க முடியும் என்பது பற்றி அந்த தாழ்ச்சியுள்ள ஆத்துமம் அதிசயிக்கும்படி செய்கிறார். ஆ! அவருக்கு எல்லைகள் கிடையாது. இத்தகைய மிகப் பெரும் சந்தோஷங்களை உள்ளடக்கிக் கொள்ள சின்ன மனித இருதயத்தால் முடியாது என்பதால், கடவுள் தமது கொடைகளைக் குறைத்துக் கொள்ளும்படி, தடுமாற்றமடைந்த அந்த ஆத்துமம் கூக்குரலிடும் அளவுக்கு, தமது பரலோக சந்தோஷங்களால் அவர் அந்த ஆத்துமத்தை வளப்படுத்துகிறார்.

தாழ்ச்சியுள்ள மனிதராகிய அர்ச். பிரான்சிஸ் சவேரியர், தமது சின்ன மனித இருதயம் கடவுளுடைய மாபெரும் ஆறுதல்களைக் கொள்ளும்அளவுக்கு பெரிதாக இல்லை எனபதால், அவர் தமது தாராளத்தைக் குறைத்துக கொள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. இன்றும்கூட, சில ஆத்துமங்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய சின்ன மனித இருதயம், கடவுள் அவர்களுக்குத் தருகிற வரப்பிரசாதங்கள், ஆறுதல்களின் பெருங்கடல்களை உள்ளடக்க முடியாத அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கிறது. இந்த பாக்கியமுள்ள ஆத்துமங்கள் யர்? ஒருவேளை அவர்கள் ஒருபோதும் கனமான பாவங்களுக்குள் விழுந்திராத ஆத்துமங்களாக இருப்பார்களோ? இல்லவேயில்லை. மிகப் பெரும் பாவிகளும் கூட, இந்தப் பாக்கியமுள்ளவர்களுக்குள் ஒருவராக இருக்கிறார்கள். அப்படியானால் அவர்களிடம் ஒருவேளை நாம் கொண்டிருப்பதை விட அதிகமான வேறு திறமைகள், அல்லது அதிக செயலூக்கமுள்ள தன்மைகள், அல்லது அதிக உறுதியான நிலைமை வரம் ஆகியவை இருக்கலாம். இல்லை! நாம் எந்தக் களிமண்ணால் உண்டாக்கப்பட்டிருக்கிறோமோ, அதே களிமண்ணால்தான் அவர்களும் உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் அவர்களுடைய மகிழ்ச்சியின் இரகசியம் எங்கே இருக்கிறது? அவர்கள் சுயத்திற்கு மரித்தவர்களாகவும், கடவுளுக்கு உயிர்த்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களால் கூடுமானால், மற்ற ஆத்துமங்களுக்குத் தரப்படுவதற்காக, தங்கள் பேறுபலன்களைக் கூட கைவிட்டு விட்டார்கள். கடவுளின் நல்ல மகிழ்ச்சிக்காகவும், மனிதனின் இரட்சணியத்திற்காகவும் மட்டுமே அவர்கள் உழைக்கிறார்கள். கடவுள் விரும்புவதை மட்டும், அவர் விரும்புகிற விதத்தில் மட்டும் அவர்கள் செய்கிறார்கள். அதன்பின் அதற்குரிய வெகுமதியை ஏற்றுக் கொள்ள அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். அது அதிகம் தேவைப்படுகிற யாராவது ஒரு அதிக ஏழையான சகோதரனுக்கு அதைக் கொடுக்கும்படி தங்கள் தெய்வீக மணவாளரிடம் அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஆத்துமங்கள் சுயத்திற்கு மரித்தவர்கள், சேசுநாதர் இவர்களை அதிகப் பிரியத்தோடு நேசிக்கிறார். தமது பொக்கிஷங்களை தங்களுக்குத் தருவதைவிட, மற்றவர்களுக்குத் தரும்படியாக எவ்வளவுக்கு அதிகமாக அவர்கள் அவரிடம் சொல்கிறார்களோ, அவ்வளவுக்கு அதிகமாக அவர் அவர்களை நேசிக்கிறார், அவர்களை ஆசீர்வதிக்கிறார், அவர்களுடைய வெகுமதியை இரட்டிப்பாக்குகிறார். தங்களிடமுள்ள எல்லாவற்றையும் மற்றவர்களுக்காக விட்டு விடுவதாக வாக்களிப்பதன் மூலம் அவர்கள் சேசுநாதரின் தாராளத்திலிருந்து தப்பித்து விட முடியாது. சேசுநாதர் நன்மைத்தனத்தின் வற்றாத பெருங்கடலாக இருக்கிறார். அவர் தங்களுக்குத் தந்த எல்லாவற்றையும் அவர்கள் விட்டு விடுகிற போது, அவர் இன்னும் அதிகமாக அவர்களுக்குத் தருகிறார். அதுதான் அவருடைய மிகப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் தருவதில் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பதால், அது அவர்களுடைய மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

இந்த ஆத்துமங்கள் தங்கள் மேலதிகாரிகளை வெறுப்பதில்லை, அவர்களுக்கு விசேஷ நட்புகள் எதுவுமில்லை, எந்த ஒரு விசேஷ வேலையைப் பற்றிய, அல்லது வேலை செய்யும் ஒரு விசேஷ இடத்தைப் பற்றிய ஏக்கமும் இல்லை. அவர்கள் கவனிக்கப் படுவதற்கும் புகழப்படுவதற்கும் பதிலாக, மறக்கப்படுவார்கள், நிந்திக்கப்படுவார்கள். அவர்கள் புகழ்ச்சியை முற்றிலுமாக மறுக்கிறார்கள். கடவுளுக்கு நிந்தையான எதுவும் பேசப்பட்டால் ஒழிய அவர்கள் கோபமடைவதில்லை. யார் மட்டிலும் அவர்கள் கடுமையான வெறுப்புக் கொள்வதில்லை. (யார் பேரிலாவது அவர்கள் கடும் வெறுப்பை உணர்ந்தால் பரிவுணர்ச்சியைக் கொண்டு அதை உடனே நசுக்கி விடுகிறார்கள்.) அவர்கள் பணத்தையும், உடமைகளையும் நிந்திக்கிறார்கள். அடுத்த தியானத்தில் அவர்கள் இந்த ஆத்தும விடுதலையின் நிலையை, சுய சித்தத்திலிருந்து இந்த சுதந்திரத்தை வந்தடைவதற்கு அவர்களுக்கு உதவிய வழிகளைப் பற்றி நாம் சிந்திப்போம்.


சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப்பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!