இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே!

திருச்சபையின் ஞான அதிகாரிகளில் சிலருக்கு அதி மேற்றிராணியார், கர்தினால் என்ற மகிமைப் பட்டங்கள் வழங்கப்பட்டு வருவது போன்று, வெகு சொற்பப்பேர் களுக்குப் பிதாப்பிதா என்னும் கெளரவப் பட்டமும் வழங்கப்பட்டு வருகின்றது. 

உதாரணமாக அலெக்ஸாந்திரியா, கான்ஸ்டான்டிநோபிள், லிஸ்பன், கோவா முதலான இடங்களின் அதிமேற்றிராணிமார்கள் பிதாப் பிதாக்கள் என அழைக்கப்படுகின்றனர். “பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே” என்று திருச்சபை தேவதாயைப் புகழும்போது இப்பிதாப்பிதாக்களையல்ல, பழைய ஏற்பாட்டிலிருந்த பிதாப்பிதாக்களையே குறிப்பிடுகிறது.

பிதாப்பிதா என்னும் சொல், கிரேக்கச் சொல்லான பாத்ரியார்க்கா (Patriarcha) என்பதின் மொழிபெயர்ப்பாகும். இச்சொல் ஒரு குடும்பத்தின் அல்லது கோத்திரத்தின் முதல் தந்தையைக் குறிக்கும். மனுக்குலத்தின் ஆதித் தகப்பனான ஆதாமையும், ஜலப் பிரளயத்திற்குப் பின் தோன்றின மக்களுக்குத் தந்தையான நோவாவையும் பிதாப்பிதா என்று அழைக்கலாம். 

ஆயினும் பிதாப்பிதா என்ற பட்டம் சிறப்பாகப் பழைய ஏற்பாட்டில் தோன்றிய இஸ்ராயேலரின் பன்னிரு கோத்திரங்களின் முதற் தந்தை களாகிய ரூபன், சிமையோன், லேவி, யூதா, தான், நெப்தாலி, காத், ஆசேர், இசாக்கார், சாபுலோன், சூசை, பெஞ்சமின் என்பவர்களையும், அவர்களின் தந்தையாகிய யாக்கோபுவையும். அவருடைய தந்தையான ஈசாக்கு என்பவரையும், பாட்டனான அபிரகாமையும் மட்டுமே குறிக்கும். 

எனவே, பழைய ஏற்பாட்டில் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிரஜைகளின் ஆதிப் பிதாக்களான இப்பதினைந்து பேர்களும் பிதாப்பிதாக்களாவர். தாவீது அரசரையும் பிதாப்பிதா எனத் திருச்சபை அழைக்கின்றது.

கடற்கரை மணலைப்போன்று ஆபிரகாமின் சந்ததியைப் பலுகச் செய்யப் போவதாக தேவன் அவருக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். அவருடைய சந்ததியினின்று உலக மீட்பர் பிறப்பாரெனவும் கூறியிருந்தார். ஆபிரகாமும், அவருக்குப் பின் தோன்றிய பிதாப்பிதாக்களும் உலக இரட்சகர் எப்போது வருவாரென்று ஆவலுடன் காத்திருந்தனர். 

யூதாவின் கோத்திரத்தில் கிறீஸ்துநாதர் பிறப்பார் என்று தேவன் யாக்கோபின் மூலம் அறிவித்திருந்தார் (ஆதி. 49:10). அவ்விதமே சர்வேசுரனால் குறிக்கப்பட்ட காலம் வந்தவுடன், சுதனாகிய சர்வேசுரன் யூதாவின் கோத்திரத்தில் உதித்த மரியம்மாளின் உதரத்தில் மனிதனாகக் கர்ப்பந்தரித்து இவ்வுலகில் பிறக்கச் சித்தமானார்.

ஆதித் தாய் தந்தையரின் பாவத்தால் மோட்சம் அடைபட்டிருந்தமையால், தங்கள் சாவிற்குப் பின் அவ்விடம் செல்ல முடியாத நிலையில் பாதாளங்களில் இருந்த பிதாப்பிதாக்களுடைய ஆத்துமங்களுக்கு இச்சம்பவம் எவ்வளவோ ஆறுதலைத் தந்திருக்கும்! 

தாங்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் உலகில் அவதரித்து விட்டார் என அறிந்து அவர்கள் மனம் எவ்வளவு அக்களித்திருக்கும்! அப்பரம தேவனை இவ்வுலகிற்குப் பெற்றுத் தந்த தாயை நினைத்து அவர்கள் எவ்வளவு ஆனந்தித்திருப்பார்கள்! சர்வேசுரன் உலக மீட்பரை அனுப்புவோம் என்று பிதாப்பிதாக்களுக்கு அளித்த வாக்கு மரியாயிடமாய் நிறைவேறிற்று.

“பிதாப்பிதாக்களின் நம்பிக்கையான மரியாயே! பிதாப் பிதாக்கள் மெசியாவின் வருகைக்காக எவ்வளவோ ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுடைய ஆவலை நீர் பூர்த்தி செய்தீர். மெசியாவை இவ்வுலகத்திற்குப் பெற்றுக் கொடுத்தீர். நாங்கள் பிதாப்பிதாக்களை விட அதிகப் பாக்கியவான்களே. அவர்கள் காத்திருந்தது போன்று நாங்களும் மெசியாவின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய நியதி ஏற்படவில்லை. விசுவாச ஒளியால் உலக இரட்சணியத்தின் பரம இரகசியத்தை நாங்கள் அறிந்துள்ளோம். 

அது மட்டுமன்று; பிதாப்பிதாக்கள் எதிர் பார்த்த தேவன் இதோ எங்கள் மத்தியில் என்றென்றும் பரிசுத்த பரம திவ்விய நற்கருணையில் வாசம் செய்கிறார். அத்தேவனை, எங்கள் முழுச் சத்துவத்துடன் நேசிக்க வேண்டிய வரத்தைப் பெற்றுத் தந்தருளும்.” 


பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!