இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - அரசகுல உறவு

பட்டணத்தில் அரசகுலத்தைச் சேர்ந்த ஒரு மாது இருந்தாள். அவளை அவள் உறவினர்கள் “சின்ன ஆச்சி' என்றழைப்பர். ஆறு ஆண்டு காலம் கண் குருடாய் அவதிப்பட்டாள். அப்போஸ்தலர் செய்யும் புதுமைகளைக் கேள்விப்பட்டதும் அவரை அணுகித் தனது கண்கள் பார்வை பெற அவர் உதவி செய்ய வேண்டினாள். அவளது வேண்டுகோளுக்கு இரங்கி அப்போஸ்தலர் அவளை மந்திரிக்க, அவள் கண்கள் திறக்கப்பட்டன. அதனால் அவள் பேரானந்தம் அடைந்தாள் என்று சொல்லவும் வேண்டுமா? 

அவள் தனக்குக் கிடைத்த பெரும் உதவியை எங்கும் விளம்பரப்படுத்தினாள். ஒரு நாள் அவளுடைய தங்கை மகளும் அரசன் மஹாதேவனின் மைத்துனனாகிய கிருஷ்ணன் மனைவியுமாகிய 'மகு தானி என்பவள் அவளைப் பார்த்ததும் வியப்புற்று " சின்னாச்சி! உங்களுடைய கண்கள் இப்போது நன்றாகப் பார்வையடைந்து விட்டனவே; மருந்தொன்றும் இல்லாமலே குணமாயிற்றாமே. உங்களுக்குப் பார்வை கொடுத்தவர் ஒரு கடவுளாகத் தான் இருக்கவேண்டும்'' என்றாள்.

சின்னாச்சி : அம்மா! எத்தனையோ பேர் அவர் சலுகையை அடைந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரை உச்சரித்துப் பலரைக் குணப்படுத்தியிருக்கிறார்.

மகு : அப்படியானால் நானும் அவரைப் போய்ப் பார்க்கலாமா?

சின்: அதற்கென்ன தடை? நாளைக்கே போகலாம், அவர் மக்களுக்குப் போதித்துக் கொண்டிருப்பார். பெண்கள் இருக்குமிடமாகப் போ; அவரைக் கண் கூடாகப் பார்ப்பாய். அவரது இனிய மொழிகளையும் கேட்பாய்!

அடுத்த நாள் தனது பல்லக்கில் ஏறிக்கொண்டு சீத்தாராமன் வீடு நோக்கிச் சென்றாள் மகு தானி. மக்கள் திரள் வீடு நிறையவும் வெளியிலும் இருந்தது. மகு தானி பல்லக்கை விட்டு இறங்கினாள். உள்ளே செல்ல வழியில்லை; இதைக் கண்ட அவளுடைய வேலையாட்கள் மற்ற ஆட்களை அடித்துப் பின் தள்ளி மகு தானிக்கு வழி விடும்படி துன்புறுத்தினர்.

இதை அறிந்த தோமையார்.

ஏழைகளை வதைக்காதீர்கள். உபதேசம் கேட்க வருகிறவர்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். அவர்கள் என் அண்டையிலிருக்கட்டும்'' என்று அழுத்தமாகச் சொன்னார். இதைக் கேட்ட மகு தானி தன் ஆட்களை அடக்கி விட்டுக் கூட்டத்தினூடே விரைந்து சென்று, அப்போஸ்தலர் பாதத்தில் குப்புற வீழ்ந்து, "ஆண்டவரின் அப்போஸ்தலரே! எங்களை மன்னியும். நாங்கள் அறியாது செய்து விட்டோம் " என்று மன்றாடினாள். 

உடனே அவளை எழுந்திருக்கச் செய்து ''மகளே! ஆண்டவரின் சமாதானம் உனக்கு உண்டாவதாக! உனது உயர்ந்த நிலைமையின் பேரிலாவது அல்லது செல்வத்தின் மீதாவது நம்பிக்கை வைக்காதே! அவை புகைபோல் தோன்றி மறைந்து போகும் தன்மையன. ஆனால் அழியாத செல்வத்தைத் தேடுவாயாக'' என்றார். அதற்குப்பின் தமது உபதேசத்தைத் தொடர்ந்து செய்தார். 

ஒரே கடவுளாகிய சிருஷ்டிகரையும், அவர் ஒருவரையே வணங்குதல் அவசியம் என்பதையும் பற்றி விவரமாகச் சகலரும் வியப்புறும் வண்ணம் பேசி முடித்தார். மாலையானதும் அங்கு கூடியிருந்தோர் அனைவரையும் ஆசீர்வதித் தனுப்பினார். கிருஷ்ணன் மனைவியின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து: "மகளே! சமாதானமாகப் போய் வா! நம் ஆண்டவர் உன்னைத் தம் அடியாளாகத் தெரிந்து கொள்வாராக! இயேசு உன்னைக் காப்பாற்றுவார். போய் வருவாயாக!" என்று ஆறுதல் சொல்லியனுப்பினார். அவள் தன் இல்லத் திரும்பியதும் தன் அறையினுள் தனித்திருந்து, அப்போஸ்தலர் சொன்னவற்றைப் பற்றித் தியானித்து மனம் உருகிக் கண்ணீர் சிந்திக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

அரசன் மஹாதேவனின் கிட்டின உறவினன் கிருஷ்ணன். அவன் வெளியே போயிருந்து வீடு வந்ததும், குளித்துவிட்டுச் சாப்பாட்டு அறைக்குச் சென்றான். அவனது மனைவி அங்கில்லை. எங்கேயென்று கேட்டான். அவள் தாதியர், "தலைவிக்கு வர விருப்பமில்லையாம்" என்றார்கள். இதைக்கேட்ட கிருஷ்ணன் தன் மனைவியின் அறைக்குச் சென்று "கண்ணே! ஏன் இன்று கவலையாய் இருக்கின்றாய்?" என்று வினவினான்.

மனை : உடம்பு அலுப்பாயிருக்கின்றது.

கிருஷ் : அந்த மாய வித்தைக்காரனைப் பார்க்கப் போனதினாலா?

மனை : அதனால் அல்ல.

கிருஷ் : பின் எதனால்? சொல் 

மனை : ''எனக்கே தெரியாது.

கிருஷ் : விபரீதம் ! நீ வெளியிற் போனதே காரணம். என்னன்பே! உன் நிலைமையைச் சிறிதும் எண்ணாது அம்மந்திரவாதியிடம் போகலாமா? வீட்டில் கௌரவமாக உன் தாதியருடன் கூடி விளையாடிக் காலத்தைப் போக்குவதை விட்டு, அவனிடம் போனது நம் நிலைமைக்குக் குறைவன்றோ? போனது போகட்டும். எழுந்திரு; என்னோடு உணவு கொள்; வா. உன்னை விட்டு நான் சாப்பிட முடியாது.

மனை - எனக்கு மிக்கக் கலக்கமாக இருக்கின்றது. என்னைத் தொந்தரவு செய்யாது விட்டுப் போக உம்மை மன்றாடுகிறேன்.

கிருஷ் : உன்னுடன் மகிழ்வாகச் சாப்பிடுவதற்காகவன்றோ அரசனது அழைப்பையே ஏற்றுக் கொள்ளாது இங்கு வந்தேன். நீயோ, நான் வருந்திக் கூப்பிட்டும் வர மாட்டேன் என்கின்றாய்! என்னுடன் சாப்பிட உனக்கு விருப்பமில்லையா?

மனை : தயவு செய்து என்னை மன்னியுங்கள். எனக்கு என்னவோ மனது நன்றாயில்லை.

கிருஷ்ணன் அவளை விட்டுவிட்டுத் தன் காரியங்களைக் கவனிக்கச் சென்றான். இரவு கழிந்தது. விடிந்ததும் கிருஷ்ணன் தன் காலைக் கடனை முடித்து விட்டு, அரசனைச் சந்திக்கப் போய் விட்டான். மகு தானியோ அப்போஸ்தலரைத் தரிசிக்கப் புறப்பட்டாள். சீத்தாராமன் வீட்டில், விடியும் முன்னரே வந்து கூடிய மக்களுக்குத் தோமையார் போதித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் மக்களைப்பார்த்து "மக்களே! நேற்று இவ்விடம் வந்து நமது பிரசங்கத்தைக் கேட்டபின் இயேசுவை முழு மனத்தோடு விசுவசிக்கும் குறிகளுடன் தோன்றிய நங்கை யார், உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். 

அதற்குச் சீத்தாராமன், " அவள் பெயர் மகு தானி அரசகுலத்தைச் சேர்ந்தவள். அவள் கணவன் கிருஷ்ணன்; அரசனின் மைத்துனன். அவன் கெட்டவன். அரசனைத் தன் கைவசப்படுத்தி வைத்திருக்கின்றான். அரசன் அவன் சொல்லைத் தட்டமாட்டார். அவனைப் பெரிதும் மதித்துப் போற்றுகிறார். கிருஷ்ணனோ மகு தானி மீது மிக்க அன்புள்ளவன். அவளைப்பற்றி எங்கும் புகழ்வான். அவளைப் போல் அழகும் குணமும் அமையப்பெற்ற வேறொரு பெண் அகிலம் முழுதும் அலைந்து தேடினாலும் அகப்படுவது அரிது என்று அரசனிடமே கூறியுள்ளான். அவளும் தன் கணவனை உள்ளன்புடனே நேசிக்கின்றாள். அவன் சொல்லை அணுவளவும் தட்டமாட்டாள். நீர் போதிப்பதெல்லாம் அவனுக்கு விபரீதமாயிருப்பதுமன்றி அவற்றை வெறுக்கவும் செய்வான். ஆகையால், அவன் மகு தானியை உமது போதனைப்படி நடக்க விடமாட்டான்" என்று பதிலிறுத்தார். 

இதைக்கேட்ட தோமையார் "நாம் அவ நம்பிக்கைப்பட லாகாது. ஆண்டவர் அவளுக்கு அருள் அளித்திருந்தால், விசுவாசத்தின் வித்து அவள் இருதயத்தில் வீழ்ந்திருந்தால், இவ்வுலக ஆசைகளையும் வெறுப்பாள். மரணத்துக்குக் கூட அஞ்சாள்" என்றார். அப்போஸ்தலர் இவ்வாறு பேசி முடித்தும் முடியாததுமாயிருக்கும் நேரத்தில் மகு தானி அங்கு வந்தாள்; அவரது கடைசி வார்த்தைகள் அவள் காதில் விழுந்தன. உடனே அவரண்டை சென்று அவரது திருவடியில் விழுந்தாள், "சுவாமி! உமது போதனைகளெல்லாம் என் இருதயத்தில் ஆழப்பதிந்துவிட்டன உம்மாலேயே விசுவாச விதை என் இருதயத்தில் விதைக்கப்பட்டு உள்ள து அது அங்கு பலன் அளிக்க உம்முடைய உதவி தேவை. இயேசு கிறிஸ்துவின் அன்பிற்கு என்னைத் தகுதியுள்ளவளாய் ஆக்குவீராக'' என்று பணிவுடன் வேண்டினாள். தோமையார் அவளை ஆசீர்வதித்தபின் தமது பிரசங்கத்தைத் தொடர்ந்து சொன்னார். மகு தானி ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் மனதில் பதித்தாள். கிறிஸ்து மட்டில் அவளுக்கு அன்பு அதிகரித்தது. விசுவாசத்தில் உறுதி அடைந்தாள். மாலை நேரமாகிவிடவே தனது இல்லம் புறப்பட்டாள்.

கிருஷ்ணன் நடுப்பகலில் தனது வீட்டிற்குச் சென்றான். மனைவி அங்கில்லை. இல்லாள் எங்கேயென ஆங்கிருந்த பணிப்பெண்களை வினவினான். "அந்த அந்நிய மனிதனைக் காணப்போன அம்மாள் இன்னும் வரவில்லை. அங்கேயே இருக்கிறார்கள் போலும்' என்றாள் ஒருத்தி. இதைக் கேட்டதும் அளவற்ற கோபம் கொண்டான். முன்னமேயே இதைப்பற்றித் தனக்கு அறிவிக்காததற்காக ஏவலாட்கள் மீது சீறினான். மகு தானியின் வருகைக்காக ஆத்திரத்தோடு காத்திருந்தான். 

மாலை நேரத்தில் தான் மகு தானி வீடு வந்தாள். அவளைக் கண்டதும் கடுங்கோபங் கொண் டு, இது வரையில் எங்கிருந்தாய்?'' என்று கேட்டான். நான் வைத்தியரிடம் போயிருந்தேன்'' என்று கூறினாள். கிருஷ்ணனோ, ''ஒ! அந்த மாயவித்தைக்காரனிடமோ? அவனையா வைத்தியனென்று அழைக்கின்றாய்? அதுவும் விந்தைதான்'' என்றான். அதற்கு மகு தானி, ''உண்மையில் வைத்தியரே' மற்ற வைத்தியர்களெல்லாரும் ஒரு நாள் அழிந்து போகும் உடல் வியாதியைக் குணப்படுத்துகிறார்கள். அந்த உத்தமரோ எக்காலமும் அழியாத ஆத்தும நோய்களைக் குணப்படுத்துகிறார்" என்றாள். 

இதைக்கேட்டுக் கவலையும் கோபம்மும் கொண்டான் கிருஷ்ணன். மனைவியை மனத்தில் வெறுத்தான். அப்போஸ்தலரைப் பகைத்தான். ஆனால் வெளியில் காட்டவில்லை. ஏனெனில், மகு தானி அதிக செல்வமும் செல்வாக்கும் உடையவள். ஆகவே அவளை நோக்கி, ''என் அருமைக் காதலியே! அந்த அந்நியன் பற்பல மாய வித்தைகள் செய்கிறதாகக் கேள்விப்படுகிறேன். அவற்றில் ஈடுபட்டு ஏமாந்து போகாதே அவன் ஓர் அறிவிலி, மாயக்காரன். அவன் வார்த்தைகளை நம்பாதே" என்றான். மகு தானி அவன் சொன்னதை முதலாய்க் கவனியாது கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கிருஷ்ணன் கோபத்துடன் எழுந்து தனிமையாக உணவறைக்குச் சென்றான்.