மரியாயின் திருக்கரங்களின் வழியாக, அவதரித்த ஞானமாகிய சேசுக்கிறீஸ்துநாதருக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்!

223. மனிதனாக அவதரித்த நித்திய ஞானமானவரே மிகுந்த நேசத்திற்கும் ஆராதனைக்குமுரிய சேசுவே மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதனுமானவரே நித்திய பிதாவினுடையவும், எப்பொழுதும் கன்னிகையான மரியாயி னுடையவும் ஏக திருச்சுதனே நித்தியத்தில் உமது பிதாவின் மகத்துவப் பேரொளியில் வாசம் செய்பவரும், உமது மனித அவதாரத்தின் நேரத்தில் உமது மிகவும் தகுதி பெற்ற திருமாதா வின் பரிசுத்த கன்னிமை பொருந்திய திருவுதரத்திலும் அடியேன் உம்மைத்தாழ்ச்சியோடு ஆராதிக்கிறேன்.

கொடிய பசாசின் கொடூரமுள்ள அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவிப்பதற்காக, அடிமையின் ரூபமெடுத்து உம்மையே வெறுமையாக்கிக் கொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்து கிறேன்.

உமது பரிசுத்த மாதாவின் வழியாக நான் உமக்குப் பிரமாணிக்கமுள்ள அன்பின் அடிமையாக இருக்கும்படியாக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பதைத் தேர்ந்து கொண்ட உம்மை நான் போற்றித் துதித்து மகிமைப்படுத்துகிறேன்.

ஆயினும், என் ஞானஸ்நானத்தில் மிகவும் அதிகாரபூர்வ மாக நான் உமக்குச் செய்து தந்த வார்த்தைப்பாடுகளையும், வாக்குத்தத்தங்களையும் நான் பிரமாணிக்கத்தோடு காத்துக் கொள்ளவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என் கடமைகளை நான் நிறைவேற்றவில்லை. உமது குழந்தை என்றோ, உமது அன்புக்குரிய அடிமை என்றோ அழைக்கப்படவும் நான் தகுதியற்றவனாயிருக்கிறேன்.

உமது புறக்கணிப்பிற்கும், வெறுப்பிற்கும் தகுதியுள்ளவையாயிருக்கும் காரியங்களைத் தவிர வேறு எதற்கும் நான் உரிமை பாராட்ட இயலாது என்பதால், உமது மகத்துவ சன்னதியில் தன்னந்தனியனாக வர இனியும் நான் துணியவில்லை. அதனாலேயே உமது திருமாதா எனக்காகப் பரிந்து பேசி, எனக்கு இரக்கம் காட்டும்படியாக நான் அவர்களை நோக்கித் திரும்பு கிறேன். எனக்காகப் பரிந்து பேசும் தாயாக நீர்தாமே அவர்களை எனக்குத் தந்திருக்கிறீர். அவர்கள் வழியாகவே என் பாவங்களின் மீது உத்தம மனஸ்தாபத்தையும், அவற்றிற்கு மன்னிப்பையும், என்னில் எப்போதும் வாசம் செய்ய வேண்டுமென நான் ஆசிக்கிற நித்திய ஞானமானவரையும் தேவரீரிடமிருந்து பெற்றுக் கொள் வேன் என நம்பியிருக்கிறேன்.

224. ஆகவே, ஜென்ம மாசணுகாத மரியாயே, சர்வேசுர னுடைய உயிருள்ள பேழையே, நித்திய ஞானமானவர் உம்மில் மறைந்து தங்கியிருந்து மனிதர்களுடையவும், சம்மனசுக்களுடை யவும் ஆராதனைகளைப் பெற்றுக் கொள்ள சித்தங்கொண் டிருக்கிறாரே

கடவுளுக்குக் கீழ்ப்பட்டதாக இருக்கிற சகலத்தின் மீதும் இராஜரீக அதிகாரம் கொண்டிருக்கிற பரலோக பூலோக இராக்கினியே, அடியேன் தேவரீரை வாழ்த்தி ஸ்துதிக்கிறேன்.

பாவிகளின் தப்பாத அடைக்கலமே, யாரையும் ஒருபோதும் கைவிடாத உம் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு நான் உம்மைக் கூவியழைக்கிறேன்.

தேவ ஞானமானவரைப் பெற்றுக்கொள்ள எனக்கிருக்கும் ஆசையை நிறைவேற்றியருளும். என் விண்ணப்பத்திற்கு ஆதரவாக, என் தகுதியின்மை பற்றிய முழு அறிவோடு நான் இப்போது தரும் வாக்குறுதிகளையும், காணிக்கையையும் ஏற்றுக் கொள்ளத் தயை புரியும்.

225. பிரமாணிக்கமற்ற பாவியாகிய நான் உம் வழியாக இன்று என் ஞானஸ்நான வார்த்தைப்பாடுகளைப் புதுப்பித்து, உறுதிப் படுத்துகிறேன். பசாசையும், அதன் கிரியைகளையும், ஆரவாரங் களையும், அதன் வெற்று வாக்குறுதிகளையும், அவனுடைய தீய திட்டங்களையும் நான் விட்டு விடுகிறேன், மேலும் மனிதனாக அவதரித்த ஞானமாகிய சேசுக்கிறீஸ்துநாதரின் பின்னால் என் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் என் சிலுவையைச் சுமந்து வரும் படியாகவும், இது வரை இருந்துள்ளதை விட அவருக்கு அதிகப் பிரமாணிக்கமாக இருக்கும்படியாகவும், அவருக்கு என்னை முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன்.

மரியாயே இன்று சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும், இராக்கினியாகவும் நான் தெரிந்து கொள் கிறேன். என் சரீரத்தையும், ஆத்துமத்தையும், நான் சொந்தமாகக் கொண்டிருக்கிற ஞான், இலௌகீக நன்மைகள் அனைத்தையும், என் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால செயல்களின் பலன்கள் அனைத்தையும் உமக்கு அர்ப்பணித்துக் கொடுத்து விடுகிறேன். கடவுளின் அதிமிக மகிமைக்காக, என்னையும், எனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் எனக்குள்ள சகலத்தையும் உமது விருப்பப்படி இப்பொழுதும், நித்தியமாகவும் நீர் பயன்படுத்திக் கொள்ளும்படியாக, அவைகளை உமக்கே முழு உரிமை யாக்குகிறேன்.

தயையுள்ள கன்னிகையே என் அடிமைத்தனமாகிய இந்தச் சிறிய காணிக்கையை, நித்திய ஞானமாகிய சேசுக்கிறீஸ்துநாதர் உமது பாக்கியமுள்ள தாய்மைக்குச் செலுத்திய கீழ்ப்படிதலுடன் ஒன்றித்து அதன் மகிமைக்காக ஏற்றுக் கொள்வீராக. அற்பப் புழுவும், பரிதாபத்திற்குரிய பாவியுமாகிய என் மீது சேசுநாத ருக்கும், தேவரீருக்கும் உள்ள அதிகாரத்தை அங்கீகரிக்க அடியேன் விரும்புகிறேன். அதைக் கொண்டு, மகா பரிசுத்த தமத்திரித்துவத்தால் உம்மீது பொழியப்பட்ட சகல வரப்பிரசாத சலுகைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தவும் நான் விரும்பு கிறேன். எதிர்காலத்தில். உம்முடைய உண்மையான அன்பின் அடிமையாக, எல்லாக் காரியங்களிலும் உம்மைக் கனப்படுத்த வும், உமக்குக் கீழ்ப்படிந்திருக்கவும் நான் முயல்வேன் என்று அதிகாரபூர்வமாக அறிக்கையிடுகிறேன்.

ஓ ஆச்சரியத்திற்குரிய மாதாவே, உம் வழியாக என்னை மீட்டு இரட்சித்த உமது பிரிய குமாரன், உம் வழியாக இப்போது என்னைக் கையேற்றுக்கொள்ளும்படியாக, இப்போதும், எப்போ தைக்கும் அவருடைய அடிமையாக என்னை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.

227. கிருபைதயாபத்தின் மாதாவே, கடவுளின் உண்மையான ஞானத்தை நான் அடைந்து கொள்ள எனக்கு அருள்வீராக. இதற்கு ஏதுவாக, நீர் நேசித்து, கற்பித்து, வழிநடத்துபவர்களில் ஒருவனாகவும், உமது பிள்ளைகளாகவும், அடிமைகளாகவும் நீர் போஷித்துப் பாதுகாப்பவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கியருளும்.

மகா பிரமாணிக்கமுள்ள கன்னிகையே, உமது மன்றாட்டாலும், மாதிரிகையாலும், உமது திருக்குமாரனாகிய சேசுக் கிறீஸ்துநாதருடைய நிறைவயதை நான் இவ்வுலகிலும், மோட்சத்திலும் அடைந்து கொள்ளும்படியாக, சகல காரியங்களிலும் நித்திய ஞானமாகிய அவருடைய உத்தம சீடனாகவும், அவரைக் கண்டுபாவிப்பவனாகவும், அவருடைய அடிமையாகவும் என்னை ஆக்கியருளும் தாயாரே, ஆமென்.


கண்டுபிடிக்க வல்லவன் கண்டுபிடிக்கட்டும் (மத்.19 12).

ஞானமுள்ளவர்கள் இந்தக் காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கட்டும் (ஓசே. 149, காண்க எரே. 9.12, சங். 106.43).