இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கவலை வேண்டாம்

அன்று கர்த்தர் பிறந்த விழாவுக்கு முந்தின நாள். விசாலமான பெரிய வீட்டின் அறையொன் றில் மர்கரீத் தன் தந்தையுடன் காலை உணவருந்திக் கொண்டிருந்தாள். காலைப் பத்திரிகையை கையில் வைத்திருந்த அவளுடைய தந்தை "மர்கரீத், கிறிஸ்மஸ் விழாவுக்கு முந்திய நாளாகிய இன்று உன் நண்பர்கள் இங்கு சீட்டாட வரமாட்டார்கள் என நம்புகிறேன்'' என்றார். "ஏன் வரக்கூடாது? கிறிஸ் மஸ் விழாவுக்கும் சீட்டாட்டத்துக்கும் என்ன சம்பந் தம்?" என மர்கரீத் நாற்காலியில் சாய்ந்துகொண்டு கூறினாள்.

தகப்பனார் சிந்திக்கத் தொடங்கி, விசனத்துடன் தம் தலையை அசைத்து, "மர்கரீத், வாழ்க்கையில் எது முக்கியம், எது அநாவசியம் என்பதை நீ மறந்து போகிறாய் என நான் அஞ்சுகிறேன். கிறிஸ்மசுக்கு முந்தின நாளில் நீ வேறு காரியங்களைப்பற்றி கவலை யாயிருக்க வேண்டும்'' என்றார்.

அவள் உடனே “இந்தப் பட்டணத்தில் வேறு என்ன நேரப்போக்கு இருக்கிறது?" என பதிலளித் தாள். தந்தையோ, “மர்கரீத், நீ நன்னிலையில் இருக் கிறாய், நீ படித்தவள். நூறாயிரம் மக்கள் வசிக்கும் இந்தப் பட்டணத்தில் உனக்கு நேரப்போக்கு இல்லை என்கிறாய். இது விநோதமாயிருக்கிறது. நம் பங்கில் எத்தனையோ சபைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்; ஏழைகளுக்கு உதவி செய்து வருகின்றனர். நீ ஒரு சபையிற் சேர்ந்து உழைத்தால் உனக்கு நேரம் போவது முதலாய்த் தெரியாதே'' என்றனர்.

"ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் போவது பற் றாதா? மேலும் என்ன வேண்டும்?'' என மர்கரீத் மறுத்துக் கூறியதும், அவர் துயரத்துடன் 'மர்கரீத், இதெல்லாம் என் தவறே. உன்னை நான் சரியாய் வளர்க்கவில்லை..... உன் தாய் உயிருடனிருந்திருந்தால், உன்னை நன்கு வளர்த்திருப்பாள், காரியங்களை நீ வேறுவிதமாய் நோக்குவாய்'' என்றதும் அவள் தன் தவறை நினைத்து துக்கித்து, "அப்பா, அப்பா, அப்படிச் சொல்லாதீர்கள். நான் என்ன செய்ய வேண் டும்? சொல்லுங்கள். நீங்கள் தவறு செய்து விட்டதாக ஒத்துக்கொள்ள நான் விடமாட்டேன். நான் என்னை திருத்திக்கொள்வேன்'' என்றனள்.

“மர்க்கரீத், சிறுமியாயிருக்கையில் நீ சந்தோஷ மாயிருந்தாய். எப்பொழுதும் மாதாவின் சுரூப மொன்றைக் கழுத்தில் தரித்திருந்தாய். இப்பொழுது நீ அதைத் தரிப்பதில்லை என நினைக்கிறேன். ஏன் அதைத் தரிக்கக்கூடாது?'' என அவர் சொல்லி தம் பையிலிருந்து ஒரு வெள்ளிச் சுரூபத்தை எடுக்கை யில் மர்கரீத்துக்கு சிரிப்பு வந்து விட்டது. எனினும் அதை வெளிக்காட்டாமல் சாந்தமாக ''அப்பா , கிறிஸ்மஸ்வரை . அதை நான் தரித்துக்கொண்டு, என்னைச் சுற்றிலும் நடப்பவைகளில் நான் கவலை கொள்ளச் செய்யும்படி தேவதாயை மன்றாடுவேன்'' எனச் சொல்லி, தன் கழுத்தில் தொங்கிய சங்கிலியை எடுத்து, அதிற் கிடந்த ஒரு வைர ஆபரணத்தை அகற்றி அதற்குப் பதிலாக அப்பா தந்த வெள்ளி சுரூபத்தைப் போட்டுக்கொண்டாள்.

அதே பட்டணத்தின் இன்னொரு பகுதியில் அன்னா என்னும் சிறுமி ஒருத்தி தன் தம்பியுடன், கிறிஸ்மஸுக்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த சாமான்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அன்னாவின் மனதில் பெருங் கவலை. "ஐயோ, கையில் ஒரு காசும் இல்லையே. தம்பிக்கு கிறிஸ்மஸ் நாளன்று வெகுமதியாய்க் கொடுக்க ஒரு விளையாட்டுச் சாமா னும் கொஞ்சம் மிட்டாயும் வாங்க முடியவில்லையே. பணம் இருந்தால், அதோ தெரியும் கிண்ணத்தை, அழகிய பழங்கள் வரையப்பெற்ற கிண்ணத்தை வாங்கி அம்மாவுக்குக் கொடுக்கலாமே'' என அவள் ஏங்கி, மேலும் அங்கு நின்றால் ஆபத்து எனக் கருதி தன் தம்பியை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அவர்களுடைய தந்தை இறந்ததிலிருந்து தாய் வேலைக்குச் சென்றாள். அன்னா வீட்டை கவனித்து வந்தாள். மற்ற பெண்கள் விளையாடிக் குதூகலித்துக் கொண்டிருக்கையில், தான் வேலை செய்ய வேணடி யிருக்கிறதே என அன்னா ஒருபோதும் முறையிட்ட தில்லை. குளிரில் பள்ளிக்கூடத்துக்கு பசியுடன் போக நேரிட்டதைப்பற்றியும் அவள் ஆவலாதி சொல்ல வில்லை. ஆனால் கிறிஸ்மஸ் வந்ததும் அவளுடைய மனம் வாடியது. எல்லோருக்கும் வெகுமதிகள் கிடைக்கின்றன. என் தம்பிக்கு இவ்வருடம் ஒன்றுமே கிடையாது. கிறிஸ்மஸ் நன்கொடை என்றால் என்ன என அவன் அறியான்.

ஒரு பத்திரிகைக்கு புதிய சந்தா ஒன்று சேர்த்துக் கொடுத்தால் முப்பத்தைந்து சதம் கொடுக்கப்படும் என்ற அறிக்கையை முந்தின வாரத்தில் அன்னா பார்த்தாள். ஒரு சந்தா சேர்க்க ஒருவாரமாக முயன் றாள். அவளுடைய முயற்சி யாவும் வீணாயிற்று. அவள் அணிந்திருந்த அழுக்கு உடையையும் கையில் இருந்த பழைய பத்திரிகையையும் பார்த்தவர்கள் அவளைத் துரத்திவிட்டனர். இன்று கிறிஸ்மசுக்கு முந்திய நாள். ஒரு சந்தா முதலாய்க் கிடைக்கவில்லை. “தம்பியைப் பட்டணத்துக்குள் கூட்டிப்போ. கிறிஸ் மஸ் விளையாட்டுச் சாமான்களையும் ஜோடினைகளையும் அவன் பார்க்கட்டும். வேறு நமக்கு ஒன்றும் இல் லையே'' என அன்று மத்தியானத்துக்குப்பின் அன் னாவை நோக்கிச் சொல்கையில் தாய் கண்ணீர் வடித் தாள். அவள் சொன்ன வார்த்தைகளின் பொருள் அன்னாவுக்கு விளங்கிற்று. தம்பிக்கு ஒரு சிறு சாமான் முதலாய் கிறிஸ்மஸ் நாளன்று கிடையாது. அன்னா உடனே தன் மனதில் ஓர் உறுதிசெய்தாள். "இவ் வருடம் தம்பிக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண் டும். பார்க் தெருவில் பணக்காரர் பலர் வசிக்கிறார் கள். அங்குபோய் சந்தாச் சேர்க்க முயலவேண்டும். அவர்களிடம் ஏராளமாய்ப் பணம் இருக்கிறது. ஒரு சந்தாக் கட்டுவது அவர்களுக்குப் பெரிய காரியமல்ல'' என அவள் கூறித் தம்பியுடன் புறப்பட்டாள்.

பார்க் தெருவிலிருந்த வீடுகள் யாவும் மிகப் பெரியவை. பார்த்தாலே உள்ளே நுழைய அன்னா வுக்குப் பயமாயிருந்தது. வெள்ளையடித்திருந்த ஒரு பெரிய வீட்டைப் பார்த்ததும் அவளுக்கு சிறிது நம் பிக்கை பிறந்தது. அந்த வீட்டின் முற்றத்தில் பல பெரிய மோட்டார் கார்கள் நின்றன. அங்கு ஒருவரா வது சந்தா கட்டுவார் என அன்னா நிச்சயித்து, வீட்டை நோக்கிப் புறப்பட்டாள். வீட்டை அணுக அணுக அவளுடைய பயம் அதிகரித்தது. எனினும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பக்கத்து வாச லைய ணுகி, மணியை அடித்து விட்டு தம்பியின் கரத்தை இறுகப் பிடித்துக்கொண்டு மூச்சு விடவும் அஞ்சினவள் போல் நின்றாள்.

ஒரு வயோதிபப் பெண் வாசலுக்கு வந்து "கண்ணே , நீயா மணியை அடித்தவள்?" என்றாள். பணக்கார வீடுகளில் இவ்வளவு பட்சமாய்ப் பேசுகிற வர்கள் இருப்பார்கள் என அன்னா கனவிலும் கருத வில்லை. அன்னா தன் நிலையைத் தெரிவித்து, ஒரு சந்தாத் தொகை கொடுக்கும்படி கெஞ்சினாள். "இரு வரும் தயவுசெய்து உள்ளே வந்து நான் தயாரித்திருக் கும் தின்பண்டங்களைச் சாப்பிடுங்கள். நான் போய் மர்கரீத் துரைசானியை அழைத்து வருகிறேன்'' என்றுசொல்லி அவள் இருவரையும் உள்ளே கூட் டிப்போய் இருவருக்கும் நிறைய இனிய பண்டங் களும் ஒரு கோப்பையில் சுடச்சுட சாக்கலட் பானமும் கொடுத்தாள். ஆவலுடன் இருவரும் சாப்பிட் டார்கள். ஒரே நேரத்தில் இனிய பண்டங்களும் சாக்கலட் பானமும் எப்பொழுதாவது சாப்பிட்டதாக அவர்களுக்கு நினைவில்லை.

அவர்களுடன் பட்சமாய்ப் பேசிய பெண் சிறிது நேரத்தில் திரும்பிவந்து, அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள். ஒரு பெரிய அறையில் நுழைந் தார்கள் அங்கு ஓர் அழகிய வாலிபத் துரைசானி அவர்களுக்காகக் காத்திருந்தாள். அவள் தன் கழுத் தில் தொங்கிய வெள்ளிச் சுரூபத்தைப் பிடித்துக் கொண்டு, "குழந்தாய், உன் சரித்திரத்தைச் சொல்'' என்றாள். அன்னா பயத்துடன் தன் வரலாற்றைக் கூறினாள். ''நாளை கர்த்தர் பிறந்த நாள். சாப்பிட உணவு வாங்க அம்மாவிடம் பணம் இல்லை. என் தம்பிக்கு சிறு விளையாட்டுச் சாமான் வாங்கிக் கொடுக்க முதலாய்க் காசு கிடையாது. வழியிலிருந்த ஒரு கடையில் அழகிய கோப்பைகள் தங்கநிறச் சித் திரங்களுடன் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கி, கிறிஸ்மஸ் கொடையாக அம்மாவுக்குக் கொடுத்தால் எவ்வளவு மகிழ்வார்கள் ! தேவதாயை யும் சின்ன யேசுவையும் நோக்கி நான் ஜெபித்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை'' என்றாள்.

'நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?'' என மர்கரீத் துரைசானி கேட்டு, பெயரையும் விலாசத்தையும் எழுதிக்கொண்டாள். உடனே மர்கரீத் எழுந்து அன் னாளின் அருகே நின்று அவளுடைய உயரத்தை ஒப் பிட்டுப் பார்த்து, “உன் வயதுக்கு நீ பெரிய பிள்ளையா யிருக்கிறாயே'' என்றாள். "ஆம் தாயே. அம்மாவும் நானும் அதே உடைகளைத் தரிக்கலாம். அவை கொஞ் சம் நீளம் " என சிறுமி கூறியதும், மர்கரீத் "என் நண்பர்கள் சிலர் இங்குவந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருக்கிறார்கள். நான் கேட்டால் உன் பத்திரி கைக்கு அவர்களும் சந்தாக் கொடுப்பார்கள். இப்பொழுது உனக்கு நான் கொஞ்சம் பணம் தருகிறேன். அதை உன் அம்மாவிடம் கொடு. சந்தாப் பணத்தை நானே பத்திரிகைக்கு அனுப்பிவிடுகிறேன். உனக்கு அந்தச் சிரமம் வேண்டாம்'' என்றனள்.

அன்னா தன் தம்பியுடன் வீட்டை நோக்கி நடக் கையில் தரையில் நடந்ததாகத் தெரியவில்லை, ஆகா யத்தில் பறந்தாப்போலிருந்தது. இரண்டு டாலர் அவ ளுடைய கையில் இருந்தது. அதைக்கொண்டு என்ன என்ன வாங்கலாம் என ஆனந்தமாய் நினைத்துக் கொண்டு போனாள். அவள் வீட்டை அடைந்ததும் அவளுடைய கனவுகள் யாவும் சிதறின. ஏனெனில் அவளுடைய தாய் கவலை மிகுதியினால் அழுதுகொண் டிருந்தாள். ''கடைக்காரனுக்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவன் சாமான் கொடுக்க மறுக் கிறான். கிறிஸ்மஸ் நாளில் நாம் பட்டினி கிடக்க வேண்டும். உன்னையும் தம்பியையும் அகதிகளின் விடுதியில் விட்டு வைப்பதைத் தவிர வேறு வழி ஒன் றும் இல்லை'' என தாய் கூறினாள். அன்னா தன் கையைத் திறந்து, புது டாலர் தாள் இரண்டையும் காண்பித்தாள். ''அம்மா, அழாதீர்கள், கிறிஸ்மஸ் விருந்துக்கு இது போதும்'' எனத் தேற்றினாள்.

அன்றிரவு அன்னா படுக்கைக்குச் செல்கையில் மகிழ்ச்சியுடனிருந்தாள். தன் தாய்க்கு உதவி செய்ய சந்தர்ப்பம் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள். எனினும் கண்ணீர் வடித்தாள். அந்த அழகிய கோப்பைகளில் ஒன்றை அம்மாவுக்கு வாங் கித் தரமுடியவில்லையே. தம்பிக்கு சிறு சாமான்கள் முதலாய் வாங்கவில்லையே என்று ஏங்கினாள். என்றா லும் காலையில் காண இருக்கும் கர்த்தர் பிறந்த திரு நாட் பூசை அவளுக்கு ஆறுதலை அளித்தது. சின்ன யேசுவும் ஏழையே. மாட்டுத் தொழுவத்தில் அவர் பிறந்தாரே என நினைத்து தன்னைத் தேற்றிக் கொண் டாள்.

இவ்விதம் சிந்தித்துக்கொண்டு அன்னா தூங்கி விட்டாள். ஆனால் வாசல் மணியை யாரோ நெடுநேரம் அடித்து அவளுடைய தூக்கத்தைக் குலைத்தார்கள். தாய் இன்னும் படுக்கவில்லை. அவள் போய் மெது வாய்க் கதவைத் திறந்தாள். ஒருவரையும் காணோம். ஆனால் பெரிய மோட்டார் கார் விரைந்தோடுவதை அவள் கவனித்தாள். வாசலில் ஒரு பெரிய கூடை இருந்தது. தாயும் மகளும் சேர்ந்து அதைத் தூக்கி உள்ளே கொண்டு போனார்கள். யாரோ தவறுதலாக அந்தக் கூடையைத் தங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்களுடைய விலாசம் அதில் எழுதப்பட்டிருந்தது. “அன்னா மக்டோனல்டுக்கும் அவள் தாய்க்கும் தம்பிக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்'' என்று எழுதி இருந்தது.

சந்தோஷமிகுதியினால் அவர்கள் அழுதுகொண்டு கூடையைத் திறந்து அதிலிருந்த சாமான்களை நாற் காலிகள் மீதும் சமையற்கட்டிலிருந்த மேஜை மீதும் வைத்தார்கள். மேலே ஒரு கோழியும் கிறிஸ்மஸ் விருந்துக்கு வேண்டிய இதர பொருட்களும் இருந் தன. பின் பழ வகைகள், சிறுவருக்கு வேண்டிய மிட்டாய்கள், விளையாட்டுச் சாமான்கள். ஒரு சிவப்பு பெட்டியில் ஆறு ஜோடி கோப்பைகளும் தட்டுகளும் அழகிய தங்கநிறச் சித்திரங்களுடன் காட்சியளித்தன. மூவருக்கும் போதுமான உடைகள், சட்டைகள், சப்பாத்துகள் முதலியன கீழே இருந்தன. எல்லாவற் றிற்கும் அடியில் ஒரு பெரிய பணப்பை. அது நிறைய பணம். பலர் சேர்ந்து தங்களிடமுள்ள பணத்தை எல்லாம் அந்தப் பையிற் போட்டிருக்க வேண்டும். ஆனந்தமிகுதியினால் அன்னா குதித்தாள். இதையெல் லாம் கொடுத்தது யார்? அந்தப் பெரிய வீட்டில், தான் கண்ட அழகிய துரைசானியை அன்னா நினைத்தாள். அவர்களே இதன் காரணம் என அவள் நிச்சயமாய் நம்பினாள். "சின்ன யேசுவும் அவளுடைய தாயாரும் என் ஜெபத்தைக் கேட்டார்கள்'' என குதூகலத்து டன் தன் தாயிடம் கூறினாள்.

* * * * மர்கரீத் கிறிஸ்மஸ் விழாவன்று காலையில் எழுந்து தன் தந்தைக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக் கூறி னாள். அவளுடைய கண்க ளில் புதுப் பிரகாசம் காணப்பட்டது. உள்ளத்தில் என்றுமில்லா ஆனந் தம் பொங்கியது. தந்தையும் மகளும் மேற்றிராசனக் கோவிலில் நடந்த காலைப் பூசைக்குப் போகும்படி புறப்பட்டுக் கொண்டிருந்தனர். "மர்கரீத், இந்த அழகிய புன்முறுவல் உனக்கு எங்கிருந்து வந்தன? கனவில் புதுத் திரவியம் ஏதாவது கிடைத்ததா?'' எனத் தந்தை மொழிந்ததும், மர்கரீத், “அப்பா, என் இன்பத்தின் காரணத்தை உங்களால் யூகிக்க முடி யாது. நேற்று ஒரு சிறு பெண் இங்கு வந்து, ஒரு பத்திரிகைக்கு சந்தா தரும்படி கேட்டாள். பத்திரிகை விற்காவிடில் வீட்டில் கிறிஸ்மஸ் கிடையாது என் றாள் சிறுமி. முப்பத்தைந்து சதம் அந்தச் சிறுமிக் குப் பெரிய தொகை. அது இல்லாமற்போனால், கிறிஸ்மஸ் விழாப்போல் இராது.... நாங்கள் சீட்டா டிக்கொண்டிருந்தோம். ஓர் ஏழைச் சிறுமி என்னைப் பார்க்க வந்திருப்பதாக மேரி தெரிவித்தாள். சிறுமி யை அனுப்பிவிட நினைத்தேன். எனினும் மனது கேட்கவில்லை. பிச்சைக்காரப் பெண்ணைப்பற்றி நான் அவ்வளவு கவலையெடுத்ததை என் சிநேகிதிகள் விரும்பவில்லை. ஆனால் அவளுடைய வரலாற்றைக் கேட்ட பிற்பாடு, அவளுக்கு உதவி செய்ய எல்லோ ருமே தீர்மானித்தனர். உடனே சீட்டாட்டத்தை நிறுத்தி, கிறிஸ்மஸ் வெகுமதிக் கூடை ஒன்று தயா ரிப்பதில் முனைந்து நின்றோம். சிநேகிதிகளிற் சிலர் கிறிஸ்மஸ் சாமான்கள் வாங்கும்படி கடைக்குப் போனார்கள். நானும் சிலரும் உடைகளைத் தயாரித்தோம். இரவு ஒன்பது மணிக்கு கூடை தயாராகி விட்டது. ஜேம்ஸ் தன் பெரிய மோட்டார் காரில் கூடையை வைத்து வீட்டில் சேர்த்து விட்டு வந்தான். நானும் என் சிநேகிதர்களும் என்றுமில்லா இன் பத்தை நேற்று அனுபவித்தோம்'' என்றாள்.

மர்கரீத் பேசி முடிந்ததும், அவளையுமறியாமலே கை அவள் கழுத்தில் தொங்கிய வெள்ளிச் சுரூபத்தை நாடியது. “அப்பா, தேவதாய் எனக்கு ஒரு புதிய அலுவலைக் கொடுத்திருக்கிறாள். அவளுடைய சுரூ பத்தை இன்னும் கொஞ்சக்காலம் தரித்திருக்கத் தீர் மானித்திருக்கிறேன். சிறுமி அன்னா குடும்பத்தை நான் மறக்கமாட்டேன்'' என்றனள். பரலோக அன் னையின் சுரூபத்தை அவள் கையாடிய விதத்திலிருந்து இனி மகளைப் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை என தந்தை அறிந்துகொண்டார்.