அன்னம்மாள் தேவாலயத்தில் ஜெபிக்கிறாள். அவள் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது.

23 ஆகஸ்ட் 1944.

பின்வருவதை எழுதுவதற்கு முன் ஒரு குறிப்பு கூற விரும்புகிறேன்.

இந்த வீடு நாசரேத்திலுள்ள நான் நன்கறிந்த வீடாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த இடமாவது வித்தியாசமாயிருக்கின்றது. இங்குள்ள பழ மரத் தோட்டமும் அதைவிடப் பெரிதாகத் தெரிகிறது. இதற்கப்பால் வயல்களைக் காண முடிகிறது. அதிகமல்ல, ஆனால் அவை உள்ளன. பின்னால் மரியாயிக்குத் திருமணம் நடக்கும் போது பெரிய பழமரத் தோட்டம் மட்டுமே காணப்பட்டது. ஆனால் அதற்கு மேல் எதுவுமில்லை. நான் இங்கே கண்ட அறையை வேறு எந்தக் காட்சியிலும் நான் காணவில்லை.

பொருளாதாரக் காரணங்களுக்காக மரியாயின் பெற்றோர் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை விற்று விட்டார்களா, அல்லது மரியன்னை தேவாலயத்தை விட்டு வந்த போது ஒரு வேளை சூசையப்பர் அவர்களுக்குக் கொடுத்த ஒரு வீட்டில் போய்த் தங்கினார்களா என்று எனக்குத் தெரியவில்லை. முந்தின காட்சிகளிலும் அறிவுரைகளிலும் நாசரேத்திலுள்ள வீடுதான் அவர்கள் பிறந்த வீடு என்பதற்கு தெளிவான அடையாளம் எனக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை.

களைப்பினால் எனக்கு அதிக தலைப் பாரமாய் இருக்கிறது. மேலும், எனக்குக் கொடுக்கப்படும் கட்டளைகள் என் மனதில் பதிந்து என் ஆத்துமத்திற்குப் பிரகாசம் அளித்தாலும், முக்கியமாக, எழுதும்படி கூறப்படும் வார்த்தைகளை நான் உடனே மறந்து விடுகிறேன். நுணுகிய விவரங்கள் உடனே மங்கி விடுகின்றன. ஒரு மணி நேரங் கழித்து நான் கேட்டவற்றைத் திரும்பக் கூற வேண்டி வந்தால், முக்கியமான ஓரிரு வாக்கியங்களைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாமல் போகின்றது. ஆனால் காட்சிகள் என் மனதில் பதிந்து விடுகின்றன. ஏனென்றால் அவைகளை நானேதான் கவனித்துப் பார்க்க வேண்டியுள்ளது. எழுதும்படி கூறப்படும் வார்த்தைகள் கேட்கின்றன. ஆனால் காட்சிகளை நான் பார்க்கிறேன். பல்வேறு கட்டங்களில் அவற்றைப் பின் தொடர்ந்து செல்வதில் என் மனம் செயல்படுவதால் அவை அதிக தெளிவாக இருக்கின்றன. நேற்றைய காட்சி பற்றி ஏதாவது அறிவிப்பு தரப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எதுவும் இல்லை.

நான் காணத் தொடங்குகிறேன். எழுதுகிறேன்.

ஜெருசலேமின் மதில்களுக்கு வெளியே குன்றுகளில், ஒலிவ மரங்களுக்கிடையில் ஒரு பெரிய கூட்டம் காணப் படுகிறது. அது ஒரு பெரிய சந்தைக்கடை போலிருக்கிறது. ஆனால் விற்பனைக் கூடங்கள் இல்லை. விளம்பரக்காரர்களோ, நடமாடும் விற்பனைக்காரர்களோ இல்லை. வேடிக்கை விளையாட்டுக்கள் இல்லை. நிலத்தில் நடப்பட்ட கம்புகளில் தொங்கும் தண்ணீர் இறங்காத முரட்டு கம்பளிக்கூடாரங்கள் உள்ளன. அந்தக் கம்புக் கால்களில் பச்சை மரக்கிளைகள் கட்டப்பட்டுள்ளன. அவை அலங்காரப் பொருள்களாகவும், குளிர்ச்சி தருவனவாகவும் உள்ளன. முழுவதும் கிளைகளால் ஆன மற்றக் கூடாரங்களும் உள்ளன. அவை தரையில் நடப்பட்டு கூரை வடிவமாயக் கட்டப்பட்டு பச்சைக் குகைகள் போலிருக்கின்றன. ஒவ்வொரு கூடாரத்திலும் எல்லா வயதுத் தரத்திலும் ஜனங்கள் இருக்கிறார்கள். அமைதியாகவும் உற்சாகமாகவும் உரையாடுகிறார்கள். இடைக்கிடையே இவ்வமைதி சிறு குழந்தைகளில் அழுகைச் சத்தத்தால் கலைகிறது.

வசதியற்ற இக்கூடாரங்களில் இங்குமங்கும் எண்ணெய் விளக்குகள் சுடர்விடுகின்றன. இருள் மூடும் நேரமா யிருக்கிறது. விளக்குகளைச் சுற்றி தரையில் அமர்ந்து சில குடும்பங்கள் இராவுணவை அருந்துகிறார்கள். தாய்மார் குழந்தைகளை மடிமீது வைத்திருக்கிறார்கள். பல களைத்துப் போன சிறு பிள்ளைகள் கோழிகளுக்கடியில் குஞ்சுகளைப் போல், தாய்மாரின் மார்பில் சாய்ந்தபடி, தங்கள் சிறு சிவந்த விரல்களுக்கிடையில் ரொட்டித் துண்டுகளைப் பிடித்துக் கொண்டே உறங்கத் தொடங்குகிறார்கள். ஒரு கையால் பிள்ளைகளை மார்பில் சார்த்தி ஏந்திக் கொண்டு மறு கையால் மட்டும் முடிந்த அளவு தாய்மார் உணவை உண்டு முடிக்கிறார்கள். மற்றக் குடும்பங்களில் இன்னும் சாப்பாடு ஆகவில்லை. மங்கிய மாலை வெளிச்சத்தில் சாப்பாடு தயாராகும் வரை காத்திருந்து பேசிக் கொண்டிருக் கிறார்கள். இங்கும் அங்கும் சிறு நெருப்புகள் மூட்டப் படுகின்றன. பெண்கள் அவற்றைச் சுற்றி அலுவலாக இருக்கிறார்கள். உறங்கக் கஷ்டப்படும் குழந்தைகளை சற்றுத் துயரமான தாலாட்டும் பாடல்கள் சாந்தப்படுத்துகின்றன.

மேலே உயரத்திலே அழகிய தெளிந்த வானம். அது வர வர ஆழ்ந்த நீலமாகி பெரிய கறுப்பு நீல மெல்லிய வெல்வெட் பட்டுத் திரை போலாகிறது. இந்தத் துணியில் ஒரு தடவை சில, மறு தடவை சிலவாக கண்காணா தொழில் வினைஞர்களும், அலங்கரிக்கிறவர்களும் இரத்தினங்களையும், இராவிளக்குகளையும் பதிக்கிறார்கள். சிலதைத் தனியாகவும் சிலதை வடிவியல் முறைகளிலும் அமைக்கிறார்கள். அவற்றுள் துலங்கித் தெரிவது விண்மீன்களின் பெருங்கரடிக் குழுவும், சிறு கரடிக் குழுவும். அவை மாடுகளை அவிழ்த்த பின் நுகம் தரையில் வைக்கப்பட்ட ஒரு வண்டியின் வடிவத்தில் காணப் படுகின்றன. துருவ நட்சத்திரம் தன் முழுப் பிரகாசத்துடன் புன்னகை செய்கின்றது.

இது அக்டோபர் மாதம் என்று உணருகிறேன். காரணம், ஒரு மனிதனின் உரத்த குரல்: "கடந்த வருடங்களில் இல்லாத அபூர்வமாக இந்த அக்டோபர் மாதம் அழகா யிருக்கிறது" என்று கூறுவது கேட்கிறது.

தட்டுப் போல் பயன்படுகிற அறுத்த ரொட்டித் துண்டின் மீது எதையோ தூவி நெருப்பிலிருந்து எடுத்துக் கொண்டு வருகிறாள் அன்னம்மாள். சிறுவன் அல்பேயுஸ் அவள் ஆடையைப் பற்றிக் கொண்டு தன் சிறு குரலில் ஏதோ மழலையாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறான். அன்னம்மாள் வரக் கண்டதும் சுவக்கீன் துரிதமாய்த் தன் விளக்கைப் பொருத்துகிறார். கிளைகளால் அமைக்கப்பட்ட தன் சிறு குடிசை வாசலில் அவர் சுமார் முப்பது வயதுடைய ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டு நிற்கிறார். அல்பேயுஸ் தூரத்திலிருந்தபடி தன் கீச்சுக் குரலில் அம்மனிதனை "அப்பா!" என்று கூப்பிடுகிறான்.

அன்னம்மாள் குடிசைகளின் வரிசை வழியே கம்பீரத் தோற்றத்துடன் நடந்து வருகிறாள். அவள் கம்பீரமாய், ஆயினும் தாழ்ச்சியுள்ளவளாயிருக்கிறாள். யாருடனும் அகம்பாவம் காட்டுவதில்லை. அப்போது, நிதானமில்லாமல் ஓடி வந்த ஒரு சிறுவன் அவள் காலடியில் விழுந்து விட்டான். ஒரு மிக ஏழைப் பெண்ணின் மகன் அவன். அவனை எடுத்து நிறுத்துகிறாள் அன்னம்மாள். அவன் முகமெல்லாம் அழுக்காயிருக்கிறது. அவன் அழுகிறான். அதைத் துடைத்து சுத்தப்படுத்தி அவனைத் தேற்றுகிறாள். அதற்குள் அவன் தாய் ஓடி வந்து மன்னிப்புக் கேட்கிறாள். "இதொன்றுமில்லை. அவனுக்குக் காயம் படவில்லை என்று சந்தோஷப் படுகிறேன். நல்ல பிள்ளை. அவன் வயதென்ன?" என்கிறாள் அன்னம்மாள்.

"இவனுக்கு மூன்று வயது. கடைசி பையனுக்கு மூத்தவன். எனக்கு ஆறு பையன்கள். இன்னொரு பிள்ளையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். அது பெண்ணாயிருக்க வேண்டும். பெண் குழந்தை தாய்க்கு எவ்வளவு நல்லது...''

''கடவுள் உனக்கு நிரம்ப ஆறுதல் அளித்துள்ளாரம்மா'' என்று சொல்லி பெருமூச்சு விடுகிறாள் அன்னம்மாள்.

அந்தப் பெண் தொடர்ந்து சொல்கிறாள் : "நான் ஏழைதான். ஆனால் பிள்ளைகள் தான் எங்கள் மகிழ்ச்சியா யிருக்கிறார்கள். மூத்த பிள்ளைகள் ஏற்கெனவே வேலை செய்து உதவுகிறார்கள். மேலும் சீமாட்டியம்மா! (அன்னம்மாள் சமூக நிலையில் அப்பெண்ணை விட உயர்ந்தவள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதை உணர்ந்திருக்கிறாள் அவள்.) உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?''

"ஒன்றுமில்லை .'' "ஒன்றுமில்லையா? இவன் உங்கள் பிள்ளையில்லையா?''

"இல்லை. இவன் ஒரு நல்ல அயலகத்துப் பையன். என் ஆறுதல் இவன்தான்..."

“உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்களா, அல்லது..." "எனக்குப் பிள்ளைகளே கிடையாது.''

"ஓ!'' என்று சொன்ன அவள் இரக்கத்துடன் அன்னம்மாளைப் பார்க்கிறாள்.

அன்னம்மாள் அந்த ஸ்திரீயிடம் விடை பெற்றுக் கொண்டு ஆழ்ந்த பெருமூச்சுடன் தன் குடிசைக்குச் செல்கிறாள்.

''சுவக்கீன், உங்களைக் காக்க வைத்து விட்டேன். ஆறு பையன்களுக்குத் தாயான ஒரு ஸ்திரீயிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். பாருங்கள்! அவளுக்கு சீக்கிரம் இன்னொரு பிள்ளை பிறக்கப்போகிறது.''

சுவக்கின் நெடுமூச்செறிகிறார்.

அப்போது அல்பேயுஸின் தந்தை அவனைக் கூப்பிட அவன் : "அன்னம்மாவுடன் இருக்கிறேன் அப்பா. அவர்களுக்கு உதவி செய்வேன்'' என்கிறான். எல்லாரும் சிரிக்கிறார்கள்.

''அவனை விட்டு விடுங்கள். அவன் நம்மைத் தொந்தரவு செய்யவில்லை. வேதப் பிரமாணம் அவனை இன்னும் கட்டுப் படுத்தவில்லை. இங்கே அல்லது அங்கே சாப்பிடுகிற ஒரு சின்னப் பறவைதான் அவன்'' என்கிறாள் அன்னம்மாள். பின் அவள் அவனை மடியில் வைத்து கொஞ்சம் இனிப்புப் பண்டமும், பொரித்த மீன் என்று நினைக்கிறேன், அதையும் அவனுக்குக் கொடுக்கிறாள். அதைக் கொடுக்குமுன் அவள் ஏதோ செய்கிறதைக் காண்கிறேன் - ஒரு வேளை ஒரு மீன் முள்ளை அகற்றக் கூடும். அவள் தன் கணவருக்கு முதலிலேயே சாப்பாடு கொடுத்து விட்டாள். அவள் பிந்திச் சாப்பிடுவாள்.

இரவில் மேலும் மேலும் நட்சத்திரக் கூட்டம் பெருகுகிறது. குடிசைகளில் விளக்குகள் கூடுகின்றன. பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக பல விளக்குகள் அணைக்கப் படுகின்றன. முதலில் இராச் சாப்பாட்டை முடித்துக் கொண்டவர்களுடைய விளக்குகள் அவை. அவர்கள் உறங்கச் செல்கிறார்கள். சந்தடியும் மெல்லக் குறைகிறது. குழந்தை களின் குரல் கேட்கப்படவில்லை. அமுதுக்கு அழுகிற சில குழந்தைகளின் சத்தமே கேட்கிறது. இரவானது இடங்கள் மீதும், மக்கள் மீதும் தன் சுவாசத்தை ஊதி, வேதனைகளையும், நினைவுகளையும், எதிர்பார்ப்புகளையும், அன்பற்ற உணர்தல் களையும் மறக்கடிக்கச் செய்கிறது. இறுதியில் சொல்லப்பட்ட இரண்டும் உறக்கத்தால் சாந்தமடைந்தாலும் கனவுகளில் உயிர் பெறும் போலும்.

அன்னம்மாளின் கரங்களில் அயர்ந்து விட்ட அல்பேயுஸை தாலாட்டிக் கொண்டே அவள் சுவக்கீனிடம் கூறுகிறாள் : "நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அடுத்த வருடம் ஒரு திருவிழாவிற்கல்ல, இரண்டு திருவிழாக்களுக்கு நான் பரிசுத்த நகரத்திற்கு வருவேன். அதிலே ஒன்று என் குழந்தையை தேவாலயத்தில் காணிக்கையாக்குவதற்காக இருக்கும் ... ஓ சுவக்கீன்!'' என்கிறாள்.

"நம்பிக்கையோடிரு அன்னா. வேறு எதுவும் உனக்குக் காணப்படவில்லையா? ஆண்டவர் உன் இருதயத்திடம் ஒன்றும் கூறவில்லையா?' என்று கேட்கிறார் சுவக்கீன்.

"இல்லை. ஒரு கனவு மட்டும்தான்.”

'நாளை ஜெபத்தின் இறுதி நாள். எல்லா காணிக்கைகளும் செலுத்தப்பட்டு விட்டன. நாளை அவைகளைப் புதுப்பிப்போம். நம் பிரமாணிக்கமுள்ள சிநேகத்தினால் கடவுளிடமிருந்து நம் சகாயத்தைப் பெற்றுக் கொள்வோம். எல்கானா அன்னாளுக்கு நடந்தது போலவே உனக்கும் நடக்கும் என்றுதான் நான் எப்போதும் நினைப்பேன்'' என்கிறார் சுவக்கீன்.

"கடவுள் அதை அருள்வாராக... யாராவது இப்பொழுது என்னிடம் : "சமாதானமாய்ப் போ. நீ கேட்ட வரத்தை இஸ்ராயேலின் தேவன் உனக்குத் தந்து விட்டார் என்று சொல்ல மாட்டார்களா என்று இருக்கிறது.''

''அந்த வரம் உனக்குக் கிடைத்தால் உன் உதரத்தில் உன் குழந்தை முதல் தடவையாக அசைந்து அதை உனக்குச் சொல்லும். அது ஒரு மாசற்ற சிசுவின் குரலாயிருக்கும். ஆகவே கடவுளின் குரலாகவே இருக்கும்.''

எல்லாக் குடிசைகளிலும் அமைதி நிலவுகிறது. அன்னம்மாள் அல்பேயுஸை அடுத்த குடிசைக்குத் தூக்கிச் சென்று ஏற்கெனவே உறங்கி விட்ட அவனுடைய சிறு சகோதரர்கள் பக்கத்தில் படுக்கையில் கிடத்துகிறாள். பின் அவளும் வந்து படுத்துக் கொள்கிறாள். விளக்கு அணைக்கப் படுகிறது - பூமியின் ஒரு நட்சத்திரம், அதை விட அழகாக வானத்தில் நட்சத்திரங்கள் - - மனுக்குலம் துயில் அவை விழித்திருக்கின்றன. சேசு கூறுகிறார்:

நீதியுடையவர்கள் எப்பொழுதும் ஞானமுடையவர்களா யிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கடவுளின் நண்பர் களாயிருப்பதால், அவருடன் வாழ்கிறார்கள்; அவரால் கற்பிக்கப் படுகிறார்கள். ஆம். அளவற்றஞானமே அவர்களுக்குக் கற்பிக்கிறது.

என் தாயின் பெற்றோர் நீதிமான்கள். ஆதலால் அவர்கள் ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் புத்தகத்திலிருந்து (புத்தகம் என்பது வேதாகமம்) வாக்கியங்களை சரியாக எடுத்துக் கூறுவார்கள்; ஞானத்தின் புகழ்ச்சிகளைப் பொருத்தமுடன் எடுத்தாள்வார்கள். "என் இளமையிலிருந்து நான் தேடியது அதனையே; அதனையே என் பத்தினியாக்கத் தீர்மானித்தேன்." (ஞானாகமம் 8:2).

நம் முன்னவர் எடுத்துக்காட்டும் வல்லமை வாய்ந்த ஸ்திரீ ஆரோனின் அன்னம்மாள்தான. தாவீதின் வம்சத்தில் வந்த சுவக்கீன், புண்ணியத்தைத் தேடியது போல் கவர்ச்சியையும், செல்வத்தையும் தேடவில்லை. அன்னம்மாளிடம் ஒரு பெரிய புண்ணியம் இருந்தது. எல்லாப் புனித குணங்களும் சேர்ந்து நறுமணம் வீசும் ஒரு மலர்க் கொத்து போலாகி, அந்த அபூர்வ அழகிய புண்ணியமாகியிருந்தது. இவ்வுண்மையான புண்ணியம் தேவ சிம்மாசனத்தின் முன்பாக வைக்கக் கூடிய தகுதியைப் பெற்றிருந்தது.

ஆதலால் சுவக்கீன் ஞானத்தை இரு முறை விவாகஞ் செய்து கொண்டார். ''அதை வேறு எந்தப் பெண்ணையும் விட அதிகம் நேசித்தார். நீதியுள்ள ஒரு ஸ்திரீயின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த கடவுளின் ஞானம் அதுவாகும். ஆரோனின் அன்னம்மாள் குடும்ப மகிழ்ச்சி என்பது நேர்மையில்தான் அடங்கியுள்ளதென்பதை நிச்சயித்த வளாய் தன் வாழ்வை நேர்மையுள்ள ஒரு மனிதனுடன் இணைத்துக் கொள்வதைத் தவிர வேறு எதையும் தேடினவளல்ல. அன்னம்மாள் "வல்லமையுள்ள ஸ்திரீயாக" விளங்குவதற்கு அவளுக்குக் குறைவாயிருந்தது குழந்தைகள் என்னும் மகுடமே. அதுவே விவாகமான பெண்ணின் மகிமை. சாலமோன் கூறுகிறபடி அதுவே திருமணத்தை நியாய மாக்குவது. அவளுடைய மகிழ்ச்சிக்கும் மக்களே குறையா யிருந்தனர். குழந்தைகள், பக்கத்து மரத்துடன் ஒன்றாகி விட்ட ஒரு மரத்தின் மலர்கள். அம்மரம் ஏராளமான புதிய கனிகளைப் பெற்றுக் கொள்கின்றது. அதில் இரு நற்குணங்களும் ஒன்றாயிணைகின்றன. ஏனெனில் அன்னம்மாள் தன் கணவனின் நிமித்தம் எந்த ஏமாற்றத்தையும் அனுபவத்தில் கண்டதில்லை.

அவள் இப்பொழுது முதுவயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும், சுவக்கீனின் மனைவியாக பல ஆண்டுகள் இருந்தாலும், அவள் அவருக்கு எப்போதும் "தன் இளமையின் மணவாளியும், மகிழ்ச்சியும், மிக நேசமுள்ள பிணைமானும், வடிவுள்ள மான்கன்றுமே'. அதன் சீராட்டுதல்கள் முதல் மண் மாலைப் பொழுதின் புதிய கவரும் ஆற்றலை எப்போதும் கொண்டிருந்தன. அவருடைய அன்பை இனிமையுடன் ஈர்த்தன். அதை பனி தெளிக்கப்பட்ட மலரைப் போலும் விடாமல் எரிய வைக்கப்பட்ட நெருப்பைப் போன்ற ஆர்வமுடனும் புத்தம் புதிதாக வைத்திருந்தன. ஆகவே மகப்பேறற்ற அவர்களுடைய துயரத்தில் அவர்கள் "தங்கள் நினைவுகளிலும் உபத்திரவங்களிலும் ஒருவருக் கொருவர் ஆறுதலான வார்த்தைகளைப் பேசிக் கொண்டனர்.''

நித்திய ஞானமானது காலம் வந்தபோது, விழிப்பில் அவர்களுக்குக் கற்பித்ததோடு, இரவில் கனவுகள் மூலம் அவர்களுக்குத் தெளிவைத் தந்தது. அவர்களிடமிருந்து வரவிருந்த மகிமையின் கவிதைக் காட்சியாக அவை இருந்தன. அதுவே மகா பரிசுத்த மாமரி , என் அன்னை. அவர்களுடைய தாழ்ச்சி அவர்களைத் தயங்கச் செய்தாலும், கடவுளுடைய வாக்குறுதியின் முதல் அறிகுறியிலேயே அவர்களின் இருதயங்கள் நம்பிக்கையினால் அதிர்ந்தன. சுவக்கீனுடைய வார்த்தைகளில் உறுதி ஏற்கெனவே தொனித்தது:

"நம்பிக்கையோடிரு... நம் பிரமாணிக்கமுள்ள சிநேகத்தினால் கடவுளி டமிருந்து நம் சகாயத்தைப் பெற்றுக் கொள்வோம்.'' அவர்கள் ஒரு குழந்தைக்காகக் கனவு கண்டு கொண்டிருந்தார்கள்; கடவுளின் தாயை பெற்றுக் கொண்டார்கள்.

ஞானாகமத்தின் வாக்கியங்கள் அவர்களுக்கென எழுதப் பட்டதாகத் தெரிகிறது: "ஜனங்கள் முன்பாக அவளால் (ஞானத்தால்) நான் துலங்குவேன். அவளால் சாகாமை என்னுடையதாகும்; எனக்குப் பின் வருகிறவர்களுக்கு நித்தியமான நினைவை விட்டுச் செல்வேன்." (ஞானாகமம் 8:10, 13) இவையெல்லாவற்றையும் அவர்கள் அடைவதற்கு, எதுவும் கறைப்படுத்தாத , உண்மையான, நீடித்த புண்ணியத்தின் எஜமான்களாக அவர்கள் ஆக வேண்டியிருந்தது - விசுவாசமென்னும் புண்ணியம், பிறர் சிநேகப் புண்ணியம், நம்பிக்கையென்னும் புண்ணியம், கற்பென்னும் புண்ணியம், விவாகமான தம்பதிகளின் கற்பென்னும் புண்ணியம்! அவர்கள் அதைக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் கற்பைக் கொண்டிருக்க கன்னியாயிருப்பது அவசியமில்லை. கற்புள்ள குடும்ப வாழ்க்கை சம்மனசுக்களால் காக்கப்படுகிறது. அதிலிருந்து நல்ல குழந்தைகள் வருகிறார்கள்; அவர்கள் தங்கள் பெற்றோரின் புண்ணியங்களைத் தங்கள் வாழ்க்கையின் சட்டமாகக் கொள்கிறார்கள்.

ஆனால் இப்பொழுது குழந்தைகளை எங்கே? இப்பொழுது அவர்கள் வேண்டப்படாதவர்கள். கற்பும் வேண்டப்படாததாகி விட்டது. ஆதலால் நான் சொல்லுகிறேன், அன்பும், திருமணமும் அவசங்கைப்பட்டுவிட்டன.