ஓர் ஒடுக்கமான, பேரச்சம் தருகிற நடைபாதை!

“அப்படியானால் என்னுடன் வாரும்” என்ற என் நண்பர், என்னை இழுத்துக் கொண்டு அந்த வாசலின் வழியாக ஒரு நடைபாதைக்குள் காலெடுத்து வைத்தார். 

அதன் மறுகோடியில், நின்று பார்வையிடுவதற்கான மேடை ஒன்று இருந்தது. அது ஒரு மிகப் பெரிய ஒற்றைப் படிகக் கண்ணாடியால் அந்த மேடை முதல் மேற்கூரை வரையிலும் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. 

அந்த மேடையின் வாசலை நான் கடந்து உள்ளே சென்ற மாத்திரத்தில், எத்தகைய விவரிக்க முடியாத கடுமையான மனத்திகிலை நான் உணர்ந்தேன் என்றால், அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க நான் துணியவில்லை. எனக்கு முன்னால், ஒரு மிக விஸ்தாரமான குகை போன்ற ஒன்றை என்னால் பார்க்க முடிந்தது. அது படிப்படியாக பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தொலை தூரத்தில் மலைகளின் குடல்களுக்குள் மறைந்து போனது. அவை எல்லாமே நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருந்தன. 

ஆனால் அவற்றினுடையது குதித்து விளையாடும் தீநாக்குகளைக் கொண்டுள்ள இவ்வுலக நெருப்பே அல்ல. அந்தக் குகை முழுவதும் - சுவர்கள், கூரை, தரை, இரும்பி, கற்கள், மரம், நிலக்கரி எல்லாமே - ஆயிரக் கணக்கான டிகிரி சென்ட்டிகிரேட் வெப்பத்தில் வெண்மையாகத் தகதகத்துக் கொண்டிருந்தன. இருந்தாலும் அந்த நெருப்பு எதையும் சாம்பலாக்கவில்லை, எதையும் சுட்டெரித்து அழித்து விடவில்லை. அந்தக் குகையில் நிலவிய பயங்கர உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. 

ப்ரேப்பராத்தா எஸ்த் எனிம் ஆப் ஏரி தோப்பெத், ஆ ரேஜே ப்ரேப்பராத்தா, ப்ரோஃபுந்தா எத் திலாத்தாத்தா. நூத்ரிமெந்தா எய்யுஸ், இஞ் ஸ் எத் லிஞ்ஞா முல்த்தா; ஃப்ளாத்துஸ் தோமினி சீக்குத் தோர்ரென்ஸ் சுப்ஃபுரிஸ் சுக்ஸெந்தென்ஸ் ஏயாம் - நெடுநாள் முன்னதாகவே தோபெத் என்னும் பாதாளம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பரலோக அரசரால் ஆழமாகவும், விசாலமாகவும் அது ஆயத்தம் செய்யப் பட்டுள்ளதாகும். அதன் உபகரணங்கள் அக்கினியும், மரக் குவியலுமே. ஆண்டவருடைய ஆவியானது அதைப் பற்றுவிக்கும் கந்தக வெள்ளம் போலாகும் (இசை. 30:33).

நான் குழப்பத்தோடு என்னைச் சுற்றிலும் பார்த்துக் கொண் டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு கதவில் மோதியபடி உள்ளே வந்தான். வேறு எதையும் அறியாதவனைப் போலத் தோன்றிய அவன், திரவ வெண்கலமுள்ள ஒரு கொப்பறைக்குள் விழவிக்கும் ஒருவனைப் போல, மிக பயங்கரமாக மயிர்க்கூச்செறியச் செய்யும் ஓர் அலறலை வெளியிட்டான். அதன்பின் அவன் அந்தக் குகையின் மையத்தில் விழுந்து மூழ்கினான். ஒரு கண நேரத்தில் அவனும் நெருப்பின் நிறத்திற்கு மாறி, முற்றிலும் அசைவற்றவனாய்க் கிடந்தான். ஆனால் அவனுடைய மரண அவலக் குரல் மேலும் ஒரு கண நேரத்திற்கு எதிரொலித்தது.

நடுநடுங்கிப் போனவனாக நான் அவனை சற்று நேரம் உற்றுப் பார்த்தேன். அவன் என் ஆரட்டரி சிறுவர்களில் ஒருவர்களில் ஒருவனைப் போல எனக்குத் தோன்றினான். “இவன் இன்னான் அல்லவா?” என்று நான் என் வழிகாட்டியிடம் கேட்டேன்.

“ஆம்” என்று பதில் வந்தது.

“ஏன் இப்படி அசையாமலும், வெப்பத்தால் பழுக்கச் சிவந்தும் தெரிகிறான்?"

“நீர் பார்ப்பதை மட்டும்தான் தெரிந்து கொண்டீர். ஆகவே அத்துடன் திருப்திப்பட்டுக் கொள்ளும். மேலும், “ஓம்னிஸ் ஏனிம் இஞ்ஞே சாலியேத்தூர் எத் ஓம்னிஸ் விக்திமா ஸாலே ஸாலியேத்தூர் - எல்லாப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எவனும் அக்கினியால் உப்பிடப்படுவான்” (மாற்கு. 9:48).

நான் மீண்டும் பார்த்தபோது, மற்றொரு சிறுவன் தலை தெறிக்கும் வேகத்தில் வந்து மோதி குகைக்குள் வந்து விழுந்தான். அவனும் ஆரட்டரியைச் சேர்ந்தவன்தான். அவன் எப்படி விழுந்தானோ அப்படியே கிடந்தான். அவன் இருதயத்தைக் கிழிக்கும் ஓர் ஒற்றை அலறலை வெளியிட்டான். அது அவனுக்கு முந்திய சிறுவனின் அலறலின் கடைசி எதிரொலியுடன் கலந்தது. மற்ற சிறுவர்களும் தொடர்ந்து மேலும் மேலும் அதிகமாக வந்து கதவுகளில் மோதி இதே முறையில் குகைக்குள் வந்து விழுந்தார்கள். அதன்பின் எல்லோருமே ஒரே விதமாக அசைவற்றும், நெருப்புத் தணல் போல பழுக்கச் சிவந்தும் போனார்கள். முதலில் விழுந்தவன் ஒரு கையும், ஒரு காலும் அந்தரத்தில் இருக்க, அப்படியே உறைந்து போனதை நான் கவனித்தேன். இரண்டாவது சிறுவன் ஏறக்குறைய இரண்டாக மடிந்தது போலத் தோன்றினான். மற்றவர்கள் பல்வேறு நிலைகளில் நின்று கொண்டும், அல்லது தொங்கிக் கொண்டும், ஒற்றைக் கால் அல்லது கையில் தங்களை சமநிலைப்படுத்திக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும், மல்லாக்க அல்லது ஒருக் களித்துப் படுத்துக் கொண்டும், நின்று கொண்டும், முழங்காலிட்ட படியும், இருந்தார்கள். கரங்களால் தங்கள் தலைமுடியை இறுகப் பற்றியிருந்தார்கள். சுருங்கச் சொல்வதானால், இந்தக் காட்சி முழுவதும் மிக அதிக வேதனையான உடலிருப்பு நிலைகளில் செய்யப்பட்ட சிறுவர் கூட்டம் ஒன்றின் ஒரு பெரிய சிலைக் கூடத் தைப் போன்று இருந்தது. வேறு சிறுவர்களும் அதே தீச்சூளைக்குள் வந்து விழுந்தபடி இருந்தார்கள். சிலரை நான் அறிந்திருந்தேன்; மற்றவர்கள் எனக்கு அந்நியர்களாக இருந்தார்கள். அப்போது, நரகத்தில் ஒருவன் எப்படி விழுகிறானோ, அப்படியே என்றென்றும் நிலைத்திருப்பான் என்பதன் உவமையாக வேதாகமத்தில் உள்ள ஒரு வாக்கியம் என் நினைவுக்கு வந்தது: “லிஞ்ஞம், இன் க்வோகும்க்வே லோக்கோ செச்சிதெரித், இபி எரித் - மரமானது... விழுந்த இடத் திலேயே கிடக்கும்” (சங்கப்.11:3).