இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

நாம் நடக்கிற நிலமாகிய இந்தப் பூமி பாவத்தால் அவசங்கைப்படுத்தப் பட்டிருக்கிறது. அது மீண்டும் ஆசீர்வதிக்கப்படுவது தேவையாயிருக்கிறது. பூமியானது முதல் கொலைகாரனின் கரத்தில் ஆபேலின் இரத்தத்தைக் குடித்தது. அன்றிலிருந்து அது எல்லா வகையான கோடானுகோடிக் கணக்கான பாவங்களால் அவசங்கைப்படுத்தப் பட்டுள்ளது. அதற்கு இரட்சகர் தேவைப்படுகிறார். அவர் வந்து கல்வாரியின் உச்சியில் தமது தெய்வீக இரத்தத்தினால் தாம் சிவந்தபோது, பூமியை மீண்டும் அர்ச்சித்தார். தேவத் திரவிய அனுமானங்களில் பூமி ஒரு முக்கியமான பங்கைப் பகிர்ந்து கொள்கிறது. ஒலிவ மரத்தின் எண்ணெய் மந்திரிக்கப்பட்டு, ஞானஸ்நானத்திலும், அவஸ்தைப் பூசுதலிலும் பயன்படுத்தப்படுகிறது. நீரூற்றுகளிலிருந்து பெறப்படும் தண்ணீர் ஞானஸ்நானத்தில் பயன்படுத்தப்படுகிறது. இனிய நறுமணமுள்ள க்றீஸ்மா தைலம் உறுதிப்பூசுதலிலும், குருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. நம் வயல்களிலிருந்தும், திராட்சைத் தோட்டங்களிலிருந்து பெறப்படும் அப்பமும், திராட்சை இரசமும் பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன. விலக்கப்பட்ட கனி, ஆபேலின் இரத்தத்தைக் குடித்தல் போன்ற முதல் பாவங்களில் பூமியானது பங்கு பெற வேண்டியிருந்தது போலவே, இப்போது மனுக்குலத்தின் மறு புதுப்பித்தலிலும் அதனால் பங்குபெற முடியும்.

இறுதி நாளில், நம் சரீரங்கள் மகிமைப்படுத்தப்படும்போது, இந்த பூமியின் களிமண்ணானது, ஆவியைப் போன்றதாக மாற்றப்படுவதிலும், சர்வேசுரனுடைய திவ்ய பத்திராசனத்திற்கு முன்பாகப் பிரவேசிப்பதிலும், தனது அனைத்திலும் உயர்ந்த மகிமையை அடைந்திருக்கும். அப்போது, அர்ச். சின்னப்பர் பேசுகிற இயற்கையின் வேதனையுள்ள புலம்பல் நின்று விடும். ஏனென்றால் அனைத்திலும் அதிக மகிமை எட்டப் பட்டிருக்கும்.

ஆயினும் “நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்ய இருதயமே” என்ற இந்த மன்றாட்டிற்கு அநேகமாக வேறொரு அர்த்தமும் இருக்கிறது. சிகரங்கள் என்பது தங்கள் சக மனிதரிடையே தனித்து நிற்கிற மனிதர்களைக் குறிக்கிறது. இந்தப் பெரும் மனிதர்கள் யார்? ஆதாம், நோவே, ஆபிரகாம், மோயீசன், மற்றும் பழைய வேதப் பிரமாணத்தின் பெரும் தீர்க்கதரிசிகள் - இந்த மாபெரும் மனிதர்கள் தங்களைவிடக் குறைந்த கோடிக்கணக்கான மக்கட் கூட்டங்களுக்கு மத்தியில் சிகரங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் இரட்சகரின் வருகைக்காக ஏங்கினார்கள். தீர்க்கதரிசனங்களில் தங்களுக்கிருந்த ஆசையை உரைத்தார்கள். நம் இரட்சகரும் தம்மைப் பற்றிக் கூறும்போது, அவர்கள் தம்மைக் காண விரும்பினார்கள், ஆனால் அவர்களால் முடியவில்லை என்றும், “தேசங்களால் ஆசிக்கப்பட்டவர்” பேசுவதைக் கேட்கவும், அவரைப் பார்க்கவும் வாய்ப்புப் பொற்றிருந்த யூதர்களில் அநேகர், தங்கள் வாய்ப்புகளை மதிக்காததால், அவர்கள் சபிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார்.

இந்த மாபெரும் மனிதர்கள் இரட்சகருக்காக ஏங்கினார்கள். அவருக்கான அவர்களுடைய ஏக்கம் அவர்களுடைய தாழ்ச்சியையும், அவர்களுடைய நேசத்தையும் காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் தங்கள் பாவத்தன்மையையும், ஒரு இரட்சகரைத் தாங்கள் சார்ந்திருக்க வேண்டிய தேவையையும் ஏற்றுக் கொண்டதன் மூலமாக, அவர்களுடைய தாழ்ச்சி காட்டப்படுகிறது. அவர்கள் அவரைக் காணவும், அவரோடு பேசவும், அவருக்கு அருகில் இருக்கவும் விரும்பினார்கள் என்பதில் அவர்களுடைய நேசம் காணப்படுகிறது. இந்த இருமடங்கான தாழ்ச்சி மற்றும் நேசத்தின் ஆத்மார்த்த உணர்வு மனிதர்களிடையே அவர்களை அர்ச்சித்தது. நாமும் நம் இரட்சகருக்காக ஏங்கினோம் என்றால் இதே காரியத்தை அது நமக்கும் செய்யும். பயணம் செய்வது அல்லது நம் வேலையின் மூலம் நாம் அவரிடமிருந்து பிரிக்கப்படும் போதும், நோயினால் திவ்ய நன்மையில் அவரை உட்கொள்ள நம்மால் முடியாத போதும், நாம் அவரைக் காணாமல் தவிக்கிறோமா? நம் நேசருக்காக நாம் ஏங்குகிறோமா? இல்லையென்றால் ஏதோ சரியில்லாமல் இருக்கிறது. நாம் அவரைக் காணத் தவிக்கிறோம் என்றால், அவர் நம்மிடம் மிகுந்த பிரியமுள்ளவராக இருப்பார், நம் இருதயங்களை அவர் அர்ச்சிப்பார்.


நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!