இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

என் மகனே, பாவம் செய்து விட்டாயா? இனி செய்யாதே!

"என் மகனே, பாவம் செய்து விட்டாயா? இனி செய்யாதே. ஆனால் உன் முந்தின பாவங்கள் உனக்கு மன்னிக்கப்படும்படியாக மன்றாடு'' (சர்வப்.21:1). 

பிரியமுள்ள கிறீஸ்தவனே, உன் நல்ல ஆண்டவர் உன் இரட்சணியத்தை ஆசிப்பதால், அவர் உனக்குத் தரும் அறிவுரை இதோ: என் மகனே, இனி என்னை நோகச் செய்யாதே; ஆனால் இன்று முதல் உன் கடந்த காலப் பாவங்களுக்காக மன்னிப்பை மன்றாடுவதில் கவனமாயிரு. கடவுளை எவ்வளவு அதிகமாக நோகச் செய்திருக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவரை மீண்டும் நோகச் செய்ய நீ பயப்பட வேண்டும். 

ஏனெனில் நீ கட்டிக்கொள்ளும் அடுத்த பாவம் தேவ நீதியின் தராசைத் தாழச் செய்து விடலாம், நீ இழக்கப்பட்டு விடலாம். இன்னொரு முறை பாவம் செய்தாய் என்றால் இனி உனக்கு மன்னிப்பே கிடைக்காது என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் அது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அப்படியும் நடக்கலாம் என்றுதான் சொல்கிறேன். ஆகவே, நீ சோதிக்கப் படுகிறாய் என்றால்: ""ஒருவேளை கடவுள் என்னை இனி மன்னிக்கவே மாட்டார் என்றால், நான் இழக்கப்பட்டு விடுவேன்'' என்று சொல். 

மேலும், இந்தக் கேள்விக்கு எனக்கு நீ பதில் சொல்ல உன்னை மன்றாடுகிறேன்: ஒரு உணவுப்பொருளில் விஷம் இருக்கிறது என்று தெரிந்தால், அதன்பின் அதை உட்கொள்வாயா? ஒரு குறிப்பிட்ட சாலையில் உன் எதிரிகள் உன் உயிரைப் பறிப்பதற்காகப் பதுங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்தால், அந்த சாலையைத் தவிர்த்து விட்டு, அதிகப் பாதுகாப்பான வேறொரு சாலையில் செல்ல மாட்டாயா? அப்படியிருக்க, நீ மீண்டும் பாவம் செய்வாய் என்றால், பிற்பாடு மெய்யான மனஸ்தாபப்படுவாய் என்பதற்கும், பாவத்தில் மீண்டும் விழ மாட்டாய் என்பதற்கும் என்ன வாய்ப்பு இருக்கிறது? 

மேலும், நீ எதிர்காலத்தில் பாவம் செய்து கொண்டிருக்கும்போதே கடவுள் உன்னை அடித்து வீழ்த்தவோ, அதனால் நீ சாகவோ மாட்டாய் என்றும், அவர் அதற்குப் பிறகு உன்னைக் கைவிட மாட்டார் என்றும் உனக்கு எப்படித் தெரியும்?

நீ ஒரு வீட்டை வாங்குகிறாய் என்றால், அதற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதிலும், பணத்தை வீணாக்கி விடக் கூடாது என்பதிலும் முழு கவனமாக இருப்பாய். நீ மருந்து உட்கொள்கிறாய் என்றால், அது உன்னைப் பாதிக்காது என்பதை நன்கு உறுதிப்படுத்திக் கொள்வாய். நீ ஒரு காட்டாற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது என்றால், அதற்குள் விழுந்து விடாமலிருக்க எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து கொள்வாய். ஆனால் ஒரு பரிதாபமான, அற்ப திருப்திக்காக, மிருகத்தனமான ஓர் இன்பத்திற்காக, உன் நித்திய இரட்சணியத்தை நீ ஆபத்துக்கு உள்ளாக்குகிறாய்! ""நான் பாவசங்கீர்த்தனத்தில் சொல்லிக் கொள்வேன்'' என்கிறாய். ஆனால் நான் உன்னிடம் கேட்கிறேன்: எப்போது அதைப் பாவசங்கீர்த்தனம் செய்வாய்? ஞாயிறன்று. சரி, ஞாயிற்றுக்கிழமை வரை உயிரோடு இருப்பாய் என்று உனக்கு உறுதியளித்தவன் யார்? 

"மற்றொரு மணி நேர வாழ்வு கூட உனக்கு நிச்சயமில்லாதபோது, மற்றொரு நாளைப் பற்றி ஏன் கனவு காண்கிறாய்?'' என்று அர்ச். அகுஸ்தீனார் கேட்கிறார். நீ வாழ இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதைக் கூட உறுதிப் படுத்திக் கொள்ள முடியாத நீ, நாளைக்குப் பாவசங்கீர்த்தனம் செய்து கொள்வேன் என்று உனக்கே எப்படி வாக்களிக்க முடியும்? ""மனஸ்தாபப்பட்டுத் தவம் செய்யும் பாவிக்கு மன்னிப்பை வாக்களித்திருக்கிறவர், நாளைய தினத்தை அவனுக்கு வாக்களிக்கவில்லை. நாளைய தினத்தை அவர் தரலாம், தராமலும் போகலாம்.'' 

அர்ச். அகுஸ்தீனார் தொடர்ந்து, "மனஸ்தாபப் படுவோருக்குக் கடவுள் மன்னிப்பை வாக்களித்திருக்கிறார். ஆனால் தம்மை நோகச் செய்பவர்களுக்கு நாளைய தினத்தை அவர் வாக்களிக்கவில்லை. இப்போது நீ பாவம் செய்கிறாய் என்றால், ஒருவேளை தவம் செய்யக் கடவுள் உனக்குக் காலம் தரலாம், தராமலும் போகலாம். அப்படி அவர் உனக்குக் காலம் தராமல் போனால், நித்தியம் முழுவதும் உனக்கு என்ன ஆகும்? இதனிடையே, நீ ஒரு ஈனமுள்ள இன்பத்திற்காக உன் ஆன்மாவை ஏற்கெனவே இழந்து போய், அதை என்றென்றைக்குமாக இழந்து போகும் ஆபத்திற்கும் உள்ளாகிறாய்'' என்று எச்சரிக்கிறார்.

ஆண்டவரே, தனது ஆத்துமத்தையும், உமது வரப்பிரசாதத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்ளும் அசட்டு நம்பிக்கையுடன் அவற்றை மிக அடிக்கடி இழந்து போகும் பைத்தியக்காரர்களில் ஒருவனான என்னைப் பாரும்! நான் பாவத்தில் இருந்த அந்தக் கணத்தில், அந்த இரவில் நீர் என்னை எடுத்துக் கொண்டிருந்தீர் என்றால், எனக்கு என்ன ஆகியிருக்கும்! எனக்காகக் காத்திருந்த உமது இரக்கத்திற்கு நான் நன்றி செலுத்துகிறேன், இப்போது அதே இரக்கம் என் மூடத்தனத்தை நான் உணரும்படி செய்கிறது. 

ஓ அளவற்ற நன்மைத்தனமே, மிக அடிக்கடி உம்மிடமிருந்து மிக அடிக்கடி திரும்பிக் கொண்டதற்காக நான் மனஸ்தாபப்படுகிறேன்; என் முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்கிறேன். ஓ என் சேசுவே, உமது திருப்பாடுகளின் பேறுபலன்களின் வழியாக, இனி அவ்வளவு மூடனாயிருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்; என்னை விரைவாய் மன்னித்து, உமது தயவு ஆதரவுக்குள் என்னை ஏற்றுக்கொள்ளும், ஏனெனில் இனி உம்மை விட்டு ஒருபோதும் விலகாதிருக்க நான் விரும்புகிறேன்.