இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜெபமாலையின் சக்தியும் மதிப்பும்

புனிதத்தன்மையும் முத்தி பேறு பெற்ற ஆலன்ரோச் என்பவருக்கு தேவ அன்னை வெளிப்படுத்தியவை.

'புனித ஜெபமாலையின் வழியாக, கடின பாவிகள் - இருபாலரும் மனந்திருந்தினார்கள். புனித வாழ்வு வாழத் துவக்கினார்கள். உண்மையான மனஸ்தாபக் கண்ணீரோடு தங்கள் முந்திய பாவ வாழ்க்கையைக் கண்டு வருந்தினார்கள். குழந்தைகள் கூட நாம் நம்ப முடியாத தவ ஒறுத்தல்களைச் செய்தார்கள். என் குமாரன் மீதும் என் மீதும் எவ்வளவு பக்தி ஏற்பட்டு பரவி வந்ததென்றால், பூமியில் சம்மனசுக்களே வாழ்ந்தது போல் தோன்றிற்று. விசுவாசம் ஓங்கி வளர்ந்தது. அநேக கத்தோலிக்கர் விசுவாசத்திற்காக, பதிததர்களை எதிர்த்துப் போராடி தங்கள் இரத்தத்தைச் சிந்த ஆவல் கொண்டனர். இவ்வாறு, என் மிக அன்புள்ள சாமிநாதன் ஆற்றிய பிரசங்கங்களாலும் ஜெபமாலையின் சக்தியாலும் பதிதர் வாழ்ந்த நாடெல்லாம் திருச்சபையின் ஆட்சிக்குட்பட்டது. மக்கள் வெகு தாராளமாக தான தர்மம் செய்தனர். மருத்துவமனைகளும் தேவாலயங்களும் கட்டப்பட்டன. மக்கள் சட்டங்களுக்கு அமைந்து ஒழுக்கமான வாழ்க்கை நடத்தினர். சர்வேசுரன் மகிமை பெறும்படி அற்புதங்களை நிகழ்த்தினார். புனித வாழ்வும் இவ்வுலகினைச் சாராத் தன்மையும் வளர்ந்து ஓங்கின. தேவ ஊழியர் சிறந்த நல்வாழ்வு வாழ்ந்து காட்டினர். நாடாள்வோர் நீதியைக் கடைபிடித்தனர். மக்கள் தமக்குள் சமாதானமாய் வாழ்ந்தார்கள், நீதியும் சமத்துவமும் பொது நிறுவனங்களிலும் இல்லங்களிலும் ஆட்சி செய்தன.

'இதைவிட இன்னும் சிறந்த ஒன்று: தொழில் செய்யும் மக்கள் என் ஜெபமாலையைச் சொல்லும் வரை தங்கள் தொழிற் கருவிகளைத் தொடமாட்டார்கள். மேலும் முழங்காலிலிருந்து என்னை நோக்கி ஜெபிக்காமல் அவர்கள் உறங்கச் செல்லவும் மாட்டார்கள். மறந்து உறங்கி விட்டாலும் அது நினைவுக்கு வந்து விட்டால் உடனே எழுந்து - நடுச்சாமத்தில் கூட மிகுந்த வணக்கத்தோடும், தவறி விட்டோமே என்ற வருத்தத்தோடு என்னை வாழ்த்துவார்கள்.

'ஜெபமாலை எவ்வளவு பரவி வளர்ந்து வந்ததென்றால், ஜெபமாலை மீது பற்றுள்ளவர்கள் அனைவருமே ஜெபமாலை சபையில் உட்பட்டவர்கள் என மற்றவர்கள் கருதலாயினர். யாராவது பாவத்தில் வாழ்ந்து வந்தால் அல்லது தேவ தூஷணம் சொன்னால் உடனே, இவன் அர்ச். சாமிநாதரின் சகோதரனாயிருக்கவே முடியாது என்று பிறர் கூறுவது வழக்கமாகி விட்டது.

'பல நாடுகளிலும் ஜெபமாலையைக் கொண்டு நான் ஆற்றிய அதிசயங்களையும் சொல்லாமல் விடக்கூடாது. கொள்ளை நோய்களையும், கொடிய போர்களையும் நிறுத்தினேன். இரத்தப்பழி சுமந்த கொடுமைகளைத் தடுத்தேன். என் ஜெபமாலையின் உதவியால் சோதனைகளை விட்டு விலகி ஓட மக்கள் துணிவு பெற்றார்கள்.

'நீங்கள் உங்கள் ஜெபமாலையைச் சொல்லும் போது, சம்மனசுக்கள் அக்களிக்கின்றனர். பரிசுத்த தமதிரித்துவம் அதிலே மகிழ்வு கொள்கிறார். என் குமாரனும் அதிலே ஆனந்தம் கொள்கிறார். நீங்கள் நினைப்பதற்கும் அதிகமாக நானும் மகிழ்ச்சியடைகிறேன். திருச்சபையில் திருப்பலி பூசைக்குப் பிறகு நான் அதிகம் நேசிப்பது ஜெபமாலையைத் தவிர வேறு எதுவுமில்லை ' (முத். ஆலன்)

அர்ச். சாமிநாதரால் மிகவும் தூண்டப்பட்டு, அவருடைய சபை சகோதரரும் சகோதரிகளும், என் குமாரனையும் என்னையும் இடைவிடாமல் சொல்லற்கரும் நல்முறையில் ஜெபமாலையால் மகிமைப்படுத்தினார்கள்.

அவர்களில் ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது ஒரு முழு ஜெபமாலை சொல்லி வந்தனர். யாராவது இதில் தவறி விட்டால் அந்நாள் முழுவதும் வீண் என்று கருதினர்.

அர்ச். சாமிநாதரின் சகோதர துறவிகள் இப்புனித பக்தி முயற்சி மீது எவ்வளவு விருப்பம் கொண்டார்களென்றால், இதனால் அவர்கள் எல்லாவற்றையும் மிக நன்றாகச் செய்தார்கள். கோவிலுக்கும், கட்டளைச் ஜெபப் பாடலுக்கும் ஆர்வமுடன் விரைந்து சென்றார்கள். அவர்கள் யாராவது தன் கடமைகளை கவலையீனமாய்ச் செய்யக் கண்டால் மற்றவர்கள், 'ஓ சகோதரா, ஒன்றில் நீர் மரியாயின் ஜெபமாலையைச் சொல்வதில்லை; அல்லது அதை மோசமாகச் சொல்லுகிறீர்' என்று உறுதியுடன் கூறுவார்கள்.