இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இராப் போஜனம் - தொடர்ச்சி

சில விநாடிகள் மிக ஆழ்ந்த மவுனம் நிலவுகிறது. சேசுவின் தலை கவிழ்ந்திருக்கிறது.

பின் சேசு நிமிர்கிறார். தலையை உயர்த்தி சுற்றிலும் பார்க்கிறார். அவருடைய புன்சிரிப்பு சீடர்களுக்கு ஊக்கமளிக்கிறது. “நாம் இந்த மேசையை விட்டுவிட்டு ஒரு தகப்பனைச் சுற்றி பல பிள்ளைகள் இருப்பதுபோல் எல்லோரும் நெருங்கி உட்காருவோம்” என்கிறார்.

மேசைக்குப் பின்னாலிருந்த சாய்மான இருக்கைகளை (அதாவது சேசுவுடையதும், அருளப்பர், யாகப்பர், இராயப்பர், சீமோன், பிலவேந்திரர், சேசுவின் சகோதரர் யாகப்பர் ஆகியோரின் இருக்கைகளை) எடுத்து மறுபக்கத்திற்குக் கொண்டு வருகிறார்கள்.

சேசு தம் இருக்கையில் அமர்கிறார் - முன்போல் யாகப்பருக்கும் அருளப்பருக்கும் நடுவில், அப்போது பிலவேந்திரர் யூதாஸின் இருக்கையில் உட்காரப் போகையில் சேசு சத்தமாய்: “அதில் உட்காராதே” என்று அவசரமாகச் சொல்லி விடுகிறார். இந்த உணர்வுபூர்வமான வார்த்தையைத் தடுக்க அவருடைய பெரும் விவேகம் வெற்றி பெறவில்லை. பின் அவர் தம் குரலை மாற்றிக் கொண்டு: “நமக்கு இவ்வளவு இடம் தேவையில்லை. நாம் கீழே உட்கார்ந்தால் இவைகளே நமக்குப் போதும். இவை போது மானவை. நீங்கள் எனக்கு மிகப் பக்கத்தில் அமர நான் விரும்பு கிறேன்” என்கிறார்.

அவர்கள் U வடிவமாகச் சுற்றி அமர்ந்துள்ளார்கள். சேசு நடுவில் இருக்கிறார். இப்பொழுது எந்தப் பொருளும் இல்லாத மேசையும் யூதாஸின் இருக்கையும் அவருக்கு எதிரே கிடக்கின்றன.

செபதேயுவின் யாகப்பர் இராயப்பரிடம்: “நீர் இங்கே அமரும். நான் இந்த சிறிய முக்காலியில் சேசுவின் பாதங்களின் பக்கத்தில் இருந்து கொள்கிறேன்” என்கிறார்.

அதற்கு இராயப்பர்: “யாகப்பரே, கடவுள் உம்மை ஆசீர் வதிப்பாராக! இதை நான் அதிகம் விரும்பினேன்” என்று கூறி இராயப்பர் தம் ஆண்டவருடன் நெருங்கி உட்கார்ந்து கொள்கிறார். இப்பொழுது சேசுவை அருளப்பரும் இராயப்பரும் நெருக்கிக் கொள்ள, யாகப்பர் ஆண்டவரின் பாதத்தில் இருக்கிறார்.

சேசு புன்முறுவல் பூத்துக் கூறுகிறார்: “நான் முன்பு கூறிய வார்த்தைகள் வேலை செய்ய ஆரம்பித்துள்ளதைக் காண்கிறேன். நல்ல சகோதரர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். யாகப்பா, நானும் உன்னைப் பார்த்து: “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக!” என்று சொல்லுகிறேன். உன்னுடைய இந்தச் செயலும் நித்தியரால் மறக்கப்பட மாட்டாது. அதை நீ அங்கே மேலே கண்டு கொள்வாய்” என்கிறார்.

மேலும் தொடர்ந்து சேசு சொல்கிறார்:

“நான் கேட்கிற எல்லாவற்றையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியும். நீங்களே அதைப் பார்த்திருக்கிறீர்கள். சுதன் தம்மையே போஜனமாக மனிதர்களுக்கு வழங்க பிதா அனுமதிப்பதற்கு என்னுடைய ஒரு விருப்பமே போதுமானதாயிருந்தது. இப்பொழுது நடைபெற்றவற்றால் மனிதகுமாரன் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஏனென்றால், கடவுளின் சிநேகிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய புதுமையானது வல்லமைக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. புதுமை எவ்வளவுக்குப் பெரிதாயிருக்கிறதோ, அவ்வளவிற்கு தெய்வீக நட்பு அதிக நிச்சயமாகவும், ஆழமாகவும் இருக்கிறது. இந்தப் புதுமையின் வடிவம், கால அளவு, தன்மை ஆகியவற்றாலும், அது எய்துகிற உச்ச அளவையும், எல்லைகளைப் பற்றியும் அது எவ்வளவு பெரிதானதென்றால் அதைவிடப் பெரிய புதுமை இருப்பது சாத்தியமில்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன். இது எவ்வளவு வல்லமை வாய்ந்தது, சுபாவத்திற்கு மேலானது, அகங்கார மனிதரால் சிந்திக்கக் கூடாததாயிருக்கிறதென்றால், வெகு கொஞ்சப் பேரே இதைக் கண்டுபிடிப்பார்கள். பலர் இதை மறுப்பார்கள். ஆதலால் நான் என்ன சொல்வேன்? அவர்களைக் கண்டனம் செய்யவா? இல்லை. நான் கூறுவேன்: அவர்கள் மேல் இரக்கங்கொள்ளுங்கள்.

“ஆனால் புதுமை எவ்வளவு பெரிதோ, அவ்வளவிற்கு அதை ஆற்றியவருடைய மகிமை அதிக பெரிதாயிருக்கின்றது. கடவுளே இப்படிக் கூறுகிறார்: “பாருங்கள், என் நேசர் அதை விரும்பினார். பெற்றுக் கொண்டார். அதை நான் அவருக்கருளினேன். ஏனென்றால் என் பார்வையில் அவர் மாண்பு பெரிதாயிருக்கின்றது. மேலும் இங்கே அவர் உரைக்கின்றார்: அவரால் ஆற்றப்பட்ட இப்புதுமை அளவற்றதாயிருப்பது போல் அவருடைய மாண்பிற்கும் ஒரு அளவில்லை.” சர்வேசுரனிடமிருந்து இப்புதுமையை இயற்றியவருக்கு வருகிற மகிமையும், அவரிடமிருந்து பிதாவுக்குத் திரும்பும் மகிமையும் ஒன்றே. ஏனென்றால் சுபாவத்திற்கு மேலான எந்த மகிமையும் சர்வேசுரனிடமிருந்து வருவது போலவே அது தான் புறப்பட்ட இடத்தைச் சென்றடைகிறது. சர்வேசுரனின் மகிமையும், அது அளவற்றதாயிருந்தாலும் கூட, அர்ச்சிஷ்டவர்களுடைய மகிமையின் வழியாக அதிகரித்து மென்மேலும் பிரகாசிக்கிறது. ஆதலால் நான் சொல்லுகிறேன்: மனித குமாரன் சர்வேசுரனால் மகிமைப்படுத்தப்பட்டது போல, சர்வேசுரனும் மனித குமாரனால் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். சர்வேசுரனை நான் என்னில் மகிமைப்படுத்தியிருக்கிறேன். சர்வேசுரனும் தம் சுதனை தம்மிடத்தில் மகிமைப்படுத்துவார். சீக்கிரமே அவர் அவரை மகிமைப்படுத்துவார்.

இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனுடைய ஞானப் பொருண்மையே! களிகூர்ந்து அக்களிப்பாயாக! இதோ நீ உன்னுடைய ஆதீனத்திற்குத் திரும்பிச் செல்லவிருக்கிறாய்! இத்தனை நீண்ட காலமாய் சுய நாட்டை விட்டு கீழ்மைப்படுத்தப்பட்டபின் மீண்டும் மேலெழுந்து செல்லப் போகிற அவருடைய சரீரமே, மகிழ்ந்து ஆர்ப்பரிப்பாயாக! உன்னுடைய உறைவிடமாக ஆதாமின் மோட்சமல்ல, பிதாவின் உந்நத மோட்சமே உனக்கு இதோ கொடுக்கப்படவிருக்கிறது. சொல்லப்பட்டுள்ளபடியே, கடவுளின் ஆச்சரியத்துக்குரிய கட்டளை ஒரு மனிதனின் உதடுகளின் வழியாகக் கொடுக்கப்பட்டு, சூரியனை நிறுத்துமானால், மனிதரின் சரீரம் மேலே எழுந்து சென்று, அவருடைய மகிமைப்படுத்தப்பட்ட நிறை வடிவில், பிதாவின் வலது பாரிசத்தில் அமரும் ஆச்சரியத்தை நட்சத்திரங்கள் காணும்போது அவற்றின் மத்தியில் என்ன நடக்கும்!

என் சிறு பிள்ளைகளே! சிறிது காலம் நான் உங்களோ டிருப்பேன். அதன்பின் அநாதைக் குழந்தைகள் இறந்து போன தங்கள் பெற்றோரைத் தேடுவது போல நீங்கள் என்னைத் தேடுவீர்கள். அழுது கொண்டே அவரைப் பற்றிப் பேசிக் கொண்டு அலைவீர்கள். மவுனமாகி விட்ட அவருடைய கல்லறையை வீணில் போய்த் தட்டுவீர்கள். மோட்சத்தின் நீலக் கதவுகளையும் தட்டுவீர்கள். “எங்கள் சேசு எங்கே? அவர் எங்களுக்கு வேண்டும். அவர் இல்லாமல் உலகத்தில் ஒளியுமில்லை. மகிழ்ச்சியுமில்லை, அன்பு மில்லை. அவரை எங்களுக்குத் தாருங்கள். அல்லது எங்களை உள்ளே வர அனுமதியுங்கள். அவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே நாங்கள் இருக்க வேண்டும்” என்று உங்கள் ஆன்மாக்களை அன்பைத் தேடி மன்றாடும் தேடுதலில் மேலே எழுப்புவீர்கள். ஆனால் இப்போதைக்கு நான் போகும் இடத்திற்கு நீங்கள் வர முடியாது. யூதேயர்களுக்கும் நான் இப்படிக் கூறினேன்: “பின்னால் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகுமிடத்திற்கு உங்களால் வர முடியாது” என்று. அதையே நான் உங்களுக்கும் கூறுகிறேன்.

என் தாயை நினைத்துப் பாருங்கள். அவர்களும் நான் போகிற இடத்திற்கு வர முடியாது. ஆயினும் நான் அவர்களிடம் வருவதற்கும் அவர்களின் மாசற்ற உதரத்தில் சேசு ஆவதற்கும் பிதாவை விட்டு வந்தேன். நான் பிறந்த நாளின் பிரகாசமான பரவசத்தில் பழுதற்ற பெண்மணியிடமிருந்து வந்தேன். அவர்களுடைய அன்பு அமுதாகி, அதனால் நான் போஷிக்கப் பட்டேன். நான் பரிசுத்தத்தினாலும், அன்பினாலும் ஆக்கப் பட்டிருக்கிறேன். ஏனென்றால் மோட்சத்தில் வாசம் செய்கிற வருடைய உத்தம அன்பினால் வளம் பெற்ற மரியாயின் கன்னிமையால் அவர்கள் என்னைப் போஷித்தார்கள். ஆயினும் நான் அவர்களால் வளர்ந்தேன்; அதிலே அவர்களுக்குக் களைப்பையும், கண்ணீர்களையும் கொடுத்தேன்... ஆயினும் யாருமே அடைந்திராத வீர வைராக்கியத்தை நான் அவர்களிடம் கேட்கிறேன்... அவர்களின் வீர வைராக்கியத்துடன் யூதித்துடையவும், ஜாயேலுடையவும் வீர வைராக்கியங்களை ஒப்பிட்டால், அவை ஊர்ச்சுனையில் ஸ்திரீகள் தங்களுடன் போட்டியிடுகிற பெண்களுடன் தர்க்கிக்கிற வீரம் போலவே இருக்கும். ஆயினும் அத்தாய் என்னை நேசிப்பது போல யாருமே என்னை நேசிப்பதில்லை. இவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் அவர்களை விட்டு விட்டு நான் போகிறேன். அங்கே அவர்கள் நெடுங்காலத்திற்குப் பிறகே வருவார்கள். நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளையாகிய: “நீங்கள், என்னிடம் வருவதற்கு உங்கள் நேரம் வரும்போது என்னிடம் வருவதற்குக் கூடுமாயிருக்கும் பொருட்டு, வருடம் வருடமாய், மாதம் மாதமாய், நாள் நாளாய், மணி மணி தோறும் உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்” என்ற கட்டளை அவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் வரப் பிரசாதத்தாலும், புனிதத்தாலும் நிரம்பியிருக்கிறார்கள். யாவற் றையும் பெற்றுக் கொண்டு யாவற்றையும் கொடுத்து விட்ட சிருஷ்டி அவர்களே. அவர்களிடம் கூட்டவோ, அவர்களிடமிருந்து எடுத்து விடவோ எதுவுமில்லை. சர்வேசுரனால் என்ன சாதிக்கக்கூடும் என்பதற்கு மிகப் புனிதமான சாட்சியாக அவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் என்னோடு வந்து சேர்ந்து கொள்வதை உறுதிப்படுத்தவும், உங்கள் சேசுவிடமிருந்து பிரியும் துயரத் தால் வரும் வேதனையை மறக்கவும் உங்களுக்கு நான் ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். அது இதுதான்: ஒருவரை யொருவர் நேசியுங்கள்; நான் உங்களை சிநேகித்தது போல் நீங்களும் ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டும். இந்த அன்பினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்பது அறியப்படும். ஒரு தகப்பனுக்குப் பல பிள்ளைகள் உள்ள போது அவர்கள் அவனுடைய பிள்ளைகள் என்பதை ஒருவன் எப்படி அறிவான்? அவர்களுடைய சரீரத் தோற்றத்தைக் கொண்டு அதிகம் அறிய முடியாது. ஏனென்றால் தங்களுக்குள் இரத்த உறவு இல்லாதவர்களிலும், ஏன், ஒரே நாட்டைச் சேராதவர்களிலும் கூட சகலத்திலும் ஒரே மாதிரி இருக்கிறவர்கள் உண்டு. ஆனால் பிள்ளைகளுடைய பொதுவான குடும்பப் பாசத்தைக் கொண்டும், தங்கள் தகப்பன் மீது அவர் களுக்குள்ள அன்பைக் கொண்டும், ஒருவர்க்கொருவர் கொள்ளும் சிநேகத்தைக் கொண்டும் அவர்களை ஒருவன் அறிந்து கொள்ள முடியும். தகப்பன் இறந்தாலும்கூட, ஒரு நல்ல குடும்பம் உடைந்து போகாது. ஏனென்றால் அவர்களின் இரத்தம் ஒன்றே. அதையே அவர்கள் தங்கள் தந்தையின் வித்திலிருந்து பெற்றுக் கொண்டார்கள். மரணம் முதலாய் அவிழ்க்க முடியாத முடிச்சுகளை அது கட்டுகிறது. ஏனெனில் மரணத்தை விட அன்பு வலிமையுள்ளது. நான் உங்களை விட்டுப் போனபின் நீங்கள் ஒருவரையொருவர் நேசிப்பீர்களானால், எல்லாரும் உங்களை என் பிள்ளைகளாகவும், அதனாலே என் சீடர்களாகவும் ஒருவர்க்கொருவர் சகோதரர் என்றும் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் உங்களுக்குத் தகப்பன் ஒருவரே.”

அப்போது இராயப்பர்: “ஆண்டவரே, நீர் எங்குதான் போகிறீர்?” என்று கேட்கிறார்.

“நீ இப்பொழுது என்னைப் பின்செல்ல முடியாத இடத்திற்குப் போகிறேன். ஆனால் பிந்தி நீ என்னைப் பின்செல்வாய்.” 

“ஏன் இப்பொழுது முடியாது? “என்னைப் பின்செல்” என்று நீர் சொன்னதிலிருந்து எப்பொழுதும் உம்மை நான் பின்சென்று வந்திருக்கிறேன். ஒரு துக்கமில்லாமல் எல்லாவற்றையும் விட்டு விட்டேன்... இப்பொழுது உம்முடைய எளிய சீமோனை விட்டு நீர் போவது - எனக்கு எல்லாமாக இருக்கிற நீர், உமக்காக முன்பு என்னிடமிருந்த கொஞ்ச சொத்தையும் நான் விட்ட பிறகு - இப்படிப் போவது நியாயமல்ல, நன்றாகவுமில்லை. நீர் உம் மரணத்திற்குப் போகிறீரா? சரி, நானும் உம்முடன் வருகிறேன். மறுவுலகத்திற்கு நாம் இருவரும் சேர்ந்து போவோம். ஆனால் அதற்கு முன் உம்மை நான் பாதுகாக்க வேண்டும். உமக்காக என் உயிரைக் கொடுக்க நான் தயாராயிருக்கிறேன்.” 

“எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயா? இப்பொழுதா? இப்பொழுது கொடுக்க மாட்டாய். இதோ நான் உனக்குச் சொல்கிறேன். சேவல் கூவுமுன் என்னை நீ மூன்று தடவை மறுதலித்திருப்பாய். இப்போது முதலாம் சாமம். இதன்பின் இரண்டாம் சாமம் வரும். அதன்பிறகு மூன்றாம் சாமம். இன்றிரவு சேவல் உரக்கக் கூவுமுன் நீ உன் ஆண்டவரை மும்முறை மறுதலித்திருப்பாய்.”

“நடக்க முடியாதது ஆண்டவரே! நீர் சொல்கிற எல்லாவற்றையும் நான் ஏற்கிறேன். ஆனால் இதை அல்ல. நான் என்னைப் பற்றி நிச்சயமாயிருக்கிறேன்.” 

“இப்பொழுது, இந்நேரம் நீ நிச்சயமாயிருக்கிறாய். ஏனென்றால் என்னை இன்னும் கொண்டிருக்கிறாய். கடவுளை உன்னோடு கொண்டிருக்கிறாய். சீக்கிரத்திலே மாம்சமான கடவுள் பிடிபட்டு விடுவார். அப்பொழுது அவரை நீ கொண்டிருக்க மாட்டாய். சாத்தான் உன்னைப் பளுவாக்கியபின் உன்னைப் பயங்காட்டுவான். உன்னுடைய நிச்சயிப்பே சாத்தானுடைய தந்திரம்தான் - உன்னைக் கீழே வீழ்த்தும் அடிப்பாரம் அது. அவன், உன்னிடம் சுட்டிக் காட்டிப் பேசி: “கடவுள் இல்லை. நான் இருக்கிறேன்” என்று சொல்வான். நீயும் அச்சத்தினால் உள்ளம் மங்கியிருந்தாலும் இன்னும் உன்னால் வாதிட முடியுமாதலால் நீ இதைக் கண்டுபிடிப்பாய். சாத்தான் இந்த நேரத்தில் உலகின் எஜமானாயிருக்கையில், நல்லது இறக்கும்; தீமை செயலாற்றும்; உள்ளம் சலிப்படையும்; மனிதமே வெற்றிபெறும். அப்போது நீங்கள் தளபதி இல்லாத போர் வீரரைப் போலிருப்பீர்கள். எதிரியால் துரத்தப்படுவீர்கள். தோற்கடிக்கப்படும் அங்கலாய்ப்பில் நீங்கள் வெற்றி கொள்பவனுக்கு உங்கள் கழுத்தைத் தாழ்த்துவீர்கள். நீங்கள் கொல்லப்படாதபடிக்கு விழுந்து விட்ட வீரரை மறுதலிப்பீர்கள். ஆனால் தயவு செய்து உங்கள் இருதயங்களைக் கலங்க விடாதீர்கள். சர்வேசுரனை விசுவசியுங்கள். என்னையும் விசுவசியுங்கள். வெளித் தோற்றங்களுக்கெல்லாம் மாறாக என்னை விசுவசியுங்கள். நிலைத் திருக்கிறவர்களும் விட்டு ஓடிப் போகிறவர்களும் என்னுடைய இரக்கத்தையும் பிதாவின் இரக்கத்தையும் நம்பக் கடவார்கள். மவுனமாயிருக்கிறவனும், “அவனை அறியேன்” என்று சொல்ல தன் உதடுகளை அசைப்பவனும் அப்படியே நம்பக்கடவான். மேலும் அதே போல என் மன்னிப்பிலும் நம்பிக்கை கொள்ளுங்கள். வருங்காலத்தில் உங்கள் செயல்கள் எப்படியிருந்தாலும் - நன்மையிலும், என் போதனையிலும். ஆகவே என் திருச்சபையிலும் - அவை உங்களுக்கு மோட்சத்தில் சம இருக்கைகளைத் தரும் என்றும் நம்புங்கள். என்னுடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உள்ளன. அப்படியில்லாவிட்டால் உங்களிடம் சொல்லியிருப்பேன். ஏனென்றால் உங்களுக்கு ஒரு இடம் ஆயத்தம் செய்வதற்காக நான் முந்திப் போகிறேன். நல்ல தகப்பன்மார்கள் தங்கள் சிறு பிள்ளைகளை வேறிடத்திற்குக் கொண்டு செல்லும்போது அப்படிச் செய்வதில்லையா? அவர்கள் முந்திப் போய் வீட்டையும், ஜாமான்களையும், உணவு காரியங்களையும் ஆயத்தம் செய்கிறார்கள். அதன்பின் அவர்கள் தங்கள் அருமைக் குழந்தைகளைக் கூட்டி வரப் போகிறார்கள். சிறு பிள்ளைகளுக்கு எதுவும் குறையிருக்கக் கூடாதென்பதற்காகவும், புது இடத்தில் அவர்களுக்கு அசெளகரியம் ஏற்படாதிருக்கவும் அன்பினால் அப்படிச் செய்கிறார்கள். நானும் அதையே செய்கிறேன். அந்தக் காரணத்திற்காகவே செய்கிறேன். இப்பொழுது நான் போகிறேன். பரலோக ஜெருசலேமில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் தயார் செய்தபின், நான் இருக்குமிடத்தில் நீங்களும் இருக்கும்படியாக நான் திரும்ப வந்து உங்களைக் கூட்டிக் கொண்டு போவேன். அங்கே மரணமும் துக்கங் கொண்டாடுதலும் இல்லை. கண்ணீர்களும், கூச்சல்களும் இல்லை. பசியும் நோவும் இருட்டும், வறட்சித் தாகமும் இல்லை. அங்கே எல்லாம் ஒளியும், அமைதியும், மகிழ்ச்சியும், பாடலும்தான். தெரிந்து கொள்ளப்பட்ட பன்னிருவரும் இஸ்ராயேல் கோத்திரங் களின் பன்னிரு பிதாப்பிதாக்களுடன் ஞான அன்பின் நெருப்பின் ஆர்வத்தில் உந்நதமாய் உயர்ந்த மோட்சத்தின் பாடலைப் பாடுவார்கள். அவர்கள் மோட்ச பாக்கியமாகிய சமுத்திரத்தில் நேராய் நின்று அந்த நித்தியப் பாடலை சம்மனசுக் கூட்டங்களின் துரித இயக்கமாய் மீட்டப்படும் இசை நரம்புகளுடன் முடிவில்லா அல்லேலூயாவைப் பாடுவார்கள்.. நான் எங்கே இருப்பேனோ, அங்கே நீங்களும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். நான் எங்கே போகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். அங்கு போகும் வழியையும் அறிவீர்கள்.” 

அப்போது தோமையார்: “ஆண்டவரே, எங்களுக்கு எதுவும் தெரியாது. நீர் எங்கே போகிறீர் என்று எங்களிடம் சொல்ல வில்லையே. அப்படியானால் உம்மை நோக்கி வருவதற்கு பின்பற்ற வேண்டிய பாதையை நாங்கள் எப்படி அறிவது? காத்திருப்பதைத் தவிர்ப்பதெப்படி?” என்று கேட்கிறார்.

“நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். நான் இப்படிக் கூறியதையும், அதைப் பல தடவைகளிலும் விளக்கிச் சொல்லியதையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். உண்மையாகவே கடவுள் இருக்கிறார் என்று கூட அறியாத சிலர் என் வழியில் முன்னால் சென்றுள்ளார்கள். அவர்கள் ஏற்கெனவே உங்களை முந்திவிட்டார்கள். ஓ! இழக்கப்பட்டு என்னால் மந்தைக்குக் கொண்டுவரப்பட்ட கடவுளின் ஆடுகளே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உயர்த்தப்பட்ட ஆன்மாக்களையுடையவர்களே, நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்?” 

“யார்? யாரைப் பற்றிப் பேசுகிறீர்? லாசருடைய மரியாளைப் பற்றியா? அவள் உமது தாயுடன் அடுத்த அறையில் இருக்கிறாள். அவளைக் கூப்பிடவா? அல்லது ஜோஹான்னாவைத் தேடுகிறீரா? நிச்சயமாக அவள் தன் மாளிகையில் இருப்பாள். நீர் விரும்பினால் நாங்கள் அவளைக் கூட்டி வருகிறோம்...” 

“அல்ல, அவர்களை அல்ல. மோட்சத்திலே மட்டும் வெளிப் படுத்தப்படவிருக்கிற ஓர் ஆளைப் பற்றியே நான் நினைக்கிறேன்... அதோடு ஃபோற்றினாளைப் பற்றியும். (சேசுவால் மனந்திருப்பப்பட்டவள்.) அவர்கள் என்னைக் கண்டு கொண்டார்கள். அதன்பின் அவர்கள் என் வழியை ஒருபோதும் விட்டுவிடவில்லை. அவர்களில் ஒருவருக்கு பிதாவை உண்மையான கடவுளென்றும், இஸ்பிரீத்துவை இத்தனி ஆராதனையில் ஒரு (தெய்வ) லேவியரென்றும் சுட்டிக் காட்டினேன். மற்றவள் தனக்கு ஒரு ஆன்மா உண்டென்பதைக் கூட அறியாதிருந்தாள். அவளிடம்: “என் பெயர் இரட்சகர். இரட்சிக்கப்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் உடையவர்களை நான் இரட்சிக்கிறேன். இழக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறவர் நான். நான் சீவனையும் சத்தியத்தையும் பரிசுத்தத்தையும் கொடுக்கிறேன். என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்... பலவீன ஏவாள்களாயிருந்த உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் யூதித்தை விட தைரியசாலிகளானீர்கள்” என்றேன்... நான் வருகிறேன்... நீங்கள் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன். நீங்கள் எனக்கு ஆறுதலாயிருக்கிறீர்கள்... நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக!...” 

அப்போது பிலிப்பு: “ஆண்டவரே! பிதாவை எங்களுக்குக் காட்டும். அப்போது நாங்களும் அவர்களைப் போலிருப்போம்” என்று சொல்கிறார்.

“நான் உங்களெல்லாரோடும் இத்தனை நீண்ட காலம் இருந்திருக்கிறேன். இருந்தும், பிலிப்புவே, நீ இன்னும் என்னை அறியவில்லையா? என்னைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான். அப்படியிருக்க, “பிதாவை எங்களுக்குக் காட்டும்” என்று நீ சொல்வதெப்படி? நான் பிதாவில் இருக்கிறேனென்றும், பிதா என்னில் இருக்கிறாரென்றும் உன்னால் விசுவசிக்கக் கூடவில்லையா? நான் உங்களுக்குச் சொல்லும் வார்த்தைகளை நானாக உங்களுக்குச் சொல்லவில்லை. என்னில் ஜீவிக்கிற பிதாவே என் செயல்களை யெல்லாம் நிறைவேற்றுகிறவர். நீயும் நீங்கள் எல்லாரும் நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறோமென்று விசுவசிக்க வில்லையா? உங்களை விசுவசிக்க வைப்பதற்கு நான் என்ன பேச வேண்டும்? நீங்கள் என் வார்த்தைகளை விசுவசிக்காவிட்டால் என் கிரிகைகளையாவது விசுவசியுங்கள். நான் உங்களுக்குச் சொல் கிறேன்: உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை விசுவசிப்பவன் நான் செய்யும் கிரிகைகளைத் தானும் செய்வான். அவற்றை விட பெரியவைகளையும் செய்வான். ஏனென்றால், நான் பிதாவிடம் போகிறேன். என் நாமத்தினிமித்தம் நீங்கள் பிதாவிடம் கேட்பதெல்லாவற்றையும் பிதா சுதனிடத்தில் மகிமை பெறும் பொருட்டு நான் செய்தருளுவேன். என் நாமத்தினிமித்தம் நீங்கள் எதையும் கேட்டால், நான் அதைச் செய்தருளுவேன். என் நாமம் உண்மையாகவே எப்படிப்பட்டதென்பது எனக்கும், என்னை ஜெனிப்பிக்கிற பிதாவுக்கும் எங்கள் அன்பிலிருந்து புறப்படுகிற இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மட்டுமே தெரியும். அந்த நாமத்தால் அனைத்தும் செய்யக் கூடும். அன்போடு என் நாமத்தை நினைக்கிறவன் என்னை நேசிக்கிறான், அடைந்து கொள்கிறான். ஆனால் என்னை நேசிப்பது மட்டும் பற்றாது. உண்மையான அன்பைக் கொண்டிருப்பதற்கு என் கட்டளைகளை அனுசரிப்பது அவசியமாயிருக்கிறது. உணர்வுகள் கிரிகைகளினால் சாட்சியம் பெறுகின்றன. உங்கள் அன்பின் நிமித்தம் நான் பிதாவை மன்றாடுவேன். அவர் என்றென்றைக்கும் உங்களோடு தங்கும் படியாக தேற்றுகிறவராகிய இன்னொருவரை உங்களுக்குத் தருவார். அவரை எதிர்த்து சாத்தானும் உலகமும் கொடூரமாய் செயல்பட முடியாது. அவரே சத்திய இஸ்பிரீத்துவானவர். உலகம் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. அவரை அதனால் தாக்கவும் கூடாது. ஏனென்றால் உலகம் அவரைக் காணக் கூடாது. அவரை அறியவும் செய்யாது. உலகம் அவரைப் பரிகசிக்கும். ஆனால் அவர் எவ்வளவு உந்நதமானவரென்றால் பரிகாசம் அவரை நோகச் செய்ய இயலாது. அவரோ எல்லா வரையையும் தாண்டிய அவ்வளவு இரக்க முள்ளவராயிருக்கிறார். தம்மை நேசிக்கிறவர்களுடன் அவர் எப்போதும் இருப்பார். அவர்கள் வறிய பலவீனர்களாயினும், அவர்களுடன் இருப்பார். நீங்கள் அவரை அறிவீர்கள். ஏனெனில் அவர் ஏற்கெனவே உங்களுடன் இருக்கிறார். இனி சீக்கிரம் உங்களில் இருப்பார். உங்களை நான் அனாதைகளாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன் என்று ஏற்கெனவே சொல்லி யிருக்கிறேன். உங்களை அழைத்துக் கொண்டு என் இராச்சியத் திற்குப் போவதற்கு நேரம் வருவதற்கு முன்பாக உங்களிடம் வருவேன். சீக்கிரத்தில் உலகம் என்னைக் காணமாட்டாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்கிறீர்கள். இன்னும் காண்பீர்கள். ஏனென்றால் நான் சீவிக்கிறேன். நீங்களும் சீவிப்பீர்கள். அந்த நாளில் நான் என் பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் என் கட்டளைகளை ஏற்று அவற்றை அனுசரிக்கிறவன் என்னை நேசிக்கிறான். என்னை நேசிக்கிறவன் என் பிதாவினால் நேசிக்கப்படுவான். அவன் கடவுளைக் கொண்டிருப்பான். ஏனென்றால் கடவுள் அன்பாயிருக்கிறார். ஆதலால் நேசிக்கிறவன் கடவுளைத் தன்னில் கொண்டிருக்கிறான். அவனை நான் நேசிப்பேன். ஏனென்றால் அவனிடத்தில் நான் கடவுளைக் காண்பேன். என் அன்பினுடையவும், என் ஞானத் தினுடையவும் மனிதாவதாரமான என் தெய்வீகத்தினுடையவும் இரகசியங்களை அவனுக்கு வெளிப்படுத்துவேன். மானிடப் புத்திரருள் இவை என்னுடைய மறு வருகைகளாக இருக்கும். அவர்கள் பலவீனர்களாயும், ஏன் எதிர்ப்பாயிருந்தாலும் கூட நான் அவர்களை நேசிக்கிறேன். ஆனால் இவர்கள் பலவீனர்களாக மட்டும் இருப்பார்கள். நான் அவர்களைத் திடப்படுத்துவேன். அவர்களை நோக்கி: “எழுந்திருங்கள்” என்பேன். “வெளியே வாருங்கள்!” என்பேன். “என்னைப் பின்செல்லுங்கள்” என்பேன். “கேளுங்கள்” என்பேன். “எழுதுங்கள்” என்பேன். நீங்கள் இவர்களுள் ஒன்று.” 

“ஆண்டவரே, உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தி உலகிற்கு ஏன் உம்மை வெளிப்படுத்தவில்லை?” என்று யூதா ததேயுஸ் கேட்கிறார்.

“ஏனென்றால் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள். என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிறீர்கள். அப்படிச் செய்கிறவன் என் பிதாவினால் சிநேகிக்கப்படுவான். நாங்கள் அவனிடம் வருவோம். அவனுடனும், அவனிலும் வாசம் பண்ணுவோம். ஆனால் என்னை நேசியாதவன் என் வார்த்தைகளை அனுசரியான். அவன் மாம்சப் பிரகாரமும் உலகப் பிரகாரமும் நடக்கிறான். இப்பொழுது இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சொன்னது நாசரேத் சேசுவின் வார்த்தையல்ல. அது பிதாவின் வார்த்தையாகும். ஏனென்றால் என்னை அனுப்பின பிதாவின் வார்த்தையாக நான் இருக்கிறேன். நான் இவ்வாறு பேசி இக்காரியங்களை உங்களிடம் கூறியது ஏனென்றால் சத்தியத்தையும் ஞானத்தையும் நீங்கள் முழுவதும் கொண்டிருக்கும்படி நானே உங்களை ஆயத்தம் செய்ய ஆசிக்கிறேன். ஆயினும் இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவோ ஞாபகத்தில் வைக்கவோ கூடாதவர்களாயிருக்கிறீர்கள். ஆனால் தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவை என் நாமத்தினால் பிதா உங்களுக்கு அனுப்பி, அவர் உங்களிடம் வரும்போது, நீங்கள் கண்டுபிடிக்கக் கூடியவர்களாயிருப்பீர்கள். அவர் சகலத்தையும் உங்களுக்குப் படிப்பிப்பார். நான் உங்களுக்குக் கூறியவற்றை உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

“என் சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறேன். உலகம் தருவதைப் போல் நான் உங்களுக்கு அதைத் தருவதில்லை. இதுவரையிலும் அதை நான் உங்களுக்குத் தந்தது போலுமல்ல. ஆசீர்வதிக்கப்பட்டவரின் ஆசீர்வதிக்கப்பட்ட உபசார வாழ்த்துதலை ஆசீர்வதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுப்பதல்ல அது. இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கும் சமாதானம் அதை விட அதிக ஆழ்ந்ததாயிருக்கிறது. இந்த விடைபெறுதலில் நான் என்னையே உங்களுக்கு எடுத்தளிக்கிறேன். என்னுடைய சமாதானத்தின் இஸ்பிரீத்துவை உங்களுக்கு அளிக்கிறேன். என் சரீரத்தையும் இரத்தத்தையும் உங்களுக்களித்தது போல் அளிக்கிறேன். அடுத்திருக்கிற போரில் உங்களுக்குப் பலம் ஏற்படும்படியாக அளிக்கிறேன். சாத்தானும் உலகமும் உங்கள் சேசுவுக்கெதிராய் ஒரு போரை மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் நேரம். உங்கள் அகத்துள் சமாதானத்தைக் கொண்டிருங்கள். அது என்னுடைய இஸ்பிரீத்துவாகிய சமாதானத்தின் ஆவியாகும். ஏனெனில் நான் சமாதானத்தின் அரசராயிருக்கிறேன். நீங்கள் அதிகம் கைவிடப்பட்டதாக உணராதபடி அதைக் கொண்டிருங்கள். தனக்குள்ளே சர்வேசுரனுடைய சமாதானத்தைக் கொண்டவனாய் துன்பப்படுகிறவன், துன்பப்பட்டாலும் தேவதூஷணஞ் சொல்ல மாட்டான். நம்பிக்கையிழக்க மாட்டான்.

“அழாதீர்கள். “நான் பிதாவிடம் போகிறேன். பின் திரும்பி வருவேன்” என்று நான் சொன்னதையும் நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் என்னை மாம்சத்தைத் தாண்டி நேசித்தீர்களானால், நான் என் தாயகத்திற்கு வெளியே இத்தனை நீண்ட காலம் இருந்தபின் பிதாவிடம் போகிறதைப் பற்றி மகிழ்ச்சியடைவீர்கள்... என்னை நேசிக்கிறவரும் என்னிலும் பெரியவருமாயிருக்கிறவரிடம் நான் போகிறேன். இது நடைபெறுமுன் உங்களுக்குச் சொல்கிறேன். இரட்சகரின் எல்லாப் பாடுகளையும், அவற்றைச் சந்திக்குமுன் உங்களுக்கு அறிவித்தேன். காரணம், எல்லாம் நிறைவேறும்போது நீங்கள் மேலும் மேலும் என்னை விசுவசிக்கும்படியாகவே. கலக்கமடையாதீர்கள். பயப்படாதீர்கள். உங்கள் இருதயங்களுக்கு சமநிலை அவசியமாயிருக்கிறது. 

“நான் உங்களுடன் பேச அதிக நேரமில்லை... ஆனால் சொல்ல வேண்டியவை எவ்வளவோ உள்ளன. என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் முடிவுக்கு வந்திருக்கிற நான் எதையுமே சொல்லவில்லை. இன்னும் எவ்வளவோ சொல்லப்பட வேண்டியிருக்கிறது என்றே உணருகிறேன். உங்களுடைய மனநிலை என்னை உணர்வுட்படுத்துகிறது. ஆனால் நான் என்ன சொல்வேன்? என் அலுவலில் தோற்று விட்டேனென்றா? அல்லது நீங்கள் கடின இருதயமுடையவர்களானதால் என் வேலையால் ஒரு பயனும் இல்லையென்றா? உங்களைப் பற்றி நான் சந்தேகப்படவா? இல்லை. நான் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து, என் அருமை யானவர்களே, உங்களை அவரிடம் ஒப்படைக்கிறேன். தம்முடைய வார்த்தையானவரின் வேலையை அவர் முற்றுப்பெறச் செய்வார். மனித ஒளியைத் தவிர வேறு எந்த ஒளியுமில்லாமல் இறக்கிற தகப்பனைப் போல் நான் இல்லை. நான் சர்வேசுரனை நம்பி யிருக்கிறேன். உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய எல்லா ஆலோசனைகளின் அவசரத் தன்மையை நான் எனக்குள் உணர்ந்தாலும், அவை உங்களுக்குத் தேவை என நான் கண்ட போதிலும், காலம் விரைந்து செல்கிறதை நான் கண்டுபிடித் தாலும், நான் என் கதியை நோக்கி அமைதியான மனதுடனே செல்கிறேன். உங்களிடம் விதைக்கப்பட்ட விதைகளின் மேல் பனி பொழியப் போகிறது என்பதை அறிவேன். அது அவ்விதைகள் எல்லாவற்றையும் முளைக்கச் செய்யும். அதன்பின் தேற்றுகிறவ ராகிய சூரியன் வருவார். அவை பெரிய விருட்சங்களாக வளரும். இவ்வுலகத்தின் தலைவன் வரப் போகிறான். அவனிடம் எனக்கு எதுவுமில்லை. மீட்பின் காரியத்திற்கல்லாதிருந்தால் அவனுக்கு என்மேல் எந்த வல்லமையுமிராது. ஆனால் அது நடக்கிறது. ஏனென்றால் நான் என் பிதாவை நேசிக்கிறேனென்றும் அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேனென்றால், மரணமட்டும் அவருக்குக் கீழ்ப்படிவேனென்றும், ஆகவே அவர் எனக்கு என்ன கட்டளையிட்டாரோ அதை நிறைவேற்றுவேன் என்றும் இந்த உலகம் அறியும்படியாகவே.

“நாம் போக நேரமாயிற்று. எழுந்திருங்கள். என் இறுதி வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நானே உண்மையான திராட்சைச்செடி. பிதா திராட்சையைக் கழிப்பவர். கனி கொடாத கிளையையெல்லாம் அவர் தறிக்கிறார். கனி கொடுக்கிற கிளையை, அது மேலும் அதிக கனிதரும் பொருட்டு அதைக் கழிக்கிறார். என் வார்த்தையினால் நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள். அதில் நீடித்திருக்கும்படியாக என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். திராட்சைச் செடியிலிருந்து வெட்டப்பட்ட கிளை கனி கொடுக்க முடியாது. நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால் உங்கள் மட்டிலும் அது உண்மையாகும். நானே திராட்சைச் செடி. நீங்கள் அதன் கிளைகள். என்னுடன் ஐக்கியத்தில் நிலைத்திருப்பவன் மிகுதியான கனிகளைத் தருவான். ஆனால் வெட்டப்படுகிற ஒருவன் உலர்ந்த கிளையாகி நெருப்பில் போடப்பட்டு எரிவான். ஏனென்றால் நீங்கள் என்னிடம் ஐக்கியப்பட்டிராவிட்டால், உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. ஆதலால் என்னில் நிலைத்திருங்கள். என் வார்த்தையும் உங்களில் நிலைத்திருக்கக் கடவது. அதன்பின் நீங்கள் விரும்பும் எதையும் கேளுங்கள். அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் எவ்வளவிற்கதிகமாய் கனி கொடுத்து என் சீடர்களா யிருப்பீர்களோ, அந்த அளவிற்கு என் பிதா எப்போதும் அதிக மகிமை பெறுவார்.

பிதா என்னை சிநேகித்திருப்பது போல் நானும் உங்களைச் சிநேகித்திருக்கிறேன். காப்பாற்றுகிற என் சிநேகத்தில் நிலைத் திருங்கள். என்னைச் சிநேகிப்பதினால் நீங்கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாயிருப்பீர்கள். கீழ்ப்படிதல் பரஸ்பர அன்பை அதிகரிக்கும். நான் சொன்னதையே திருப்பிச் சொல்வதாகக் கருதாதீர்கள். உங்கள் பலவீனத்தை நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் இரட்சிக்கப்பட நான் விரும்புகிறேன். நான் உங்களுக்குக் கொடுக்க விரும்பிய மகிழ்ச்சி உங்களிடம் இருக்கும்படியாக, அது முழுமையா யிருக்கும்படியாக, இதை நான் உங்களுக்குக் கூறினேன். ஒருவர் ஒருவரை நேசியுங்கள். ஒருவர் ஒருவரை நேசியுங்கள்! இதுவே என் புதிய கட்டளை. நீங்கள் ஒவ்வொருவரும் தன்னைத்தானே நேசிப்பதைக் காட்டிலும் ஒருவர் மற்றவரை நேசியுங்கள். தன் சிநேகிதர்களுக்காகத் தன் உயிரை ஒருவன் கொடுக்கிறதை விட பெரிய சிநேகம் வேறில்லை. நீங்கள் என்னுடைய சிநேகிதர்கள். உங்களுக்காக நான் என் உயிரைக் கொடுக்கிறேன். நான் உங்களுக்குப் போதித்து கட்டளையிடுகிறவற்றைச் செய்யுங்கள். இனிமேல் நான் உங்களை ஊழியர் என்றழைக்க மாட்டேன். ஏனென்றால் தன் எஜமான் செய்கிறதை ஓர் ஊழியன் அறிய மாட்டான். ஆனால் நான் செய்கிறதை நீங்கள் அறிகிறீர்கள். என்னைப் பற்றியதெல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்னை மட்டுமல்ல, பிதாவையும் தேற்றுகிறவரையும், நான் கடவுளிடம் கேள்வியுற்ற அனைத்தையும் வெளிப்படுத்தி யிருக்கிறேன். உங்களை நீங்களே தெரிந்தெடுக்கவில்லை. ஆனால் நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். நானே உங்களைத் தேர்ந் தெடுத்தேன். நீங்கள் ஜனங்கள் நடுவே போய், உங்களிடத்திலே நீங்கள் கனி தரும்படியாகவும், சுவிசேஷம் போதிக்கப்படுகிறவர் களின் இருதயங்களிலும் பலன் தரும்படியாகவும், உங்கள் பலன் நிலைத்திருக்கும்படியாகவும், என் நாமத்தினால் நீங்கள் பிதாவை எதெது கேட்பீர்களோ அதையெல்லாம் அவர் உங்களுக்குத் தந்தருளும்படியாக உங்களை ஏற்படுத்தினேன். 

“நீர் எங்களைத் தெரிந்து கொண்டீரானால், ஒரு துரோகியை ஏன் தெரிந்து கொண்டீர்? எல்லாம் உமக்குத் தெரியுமானால் ஏன் அப்படிச் செய்தீர்?” என்று சொல்லாதீர்கள். அவன் யார் என்று கூட கேளாதீர்கள். அவன் ஒரு மனிதனல்ல. அவன் சாத்தான். என் பிரமாணிக்கமுள்ள சிநேகிதனிடத்தில் நான் அப்படிக் கூறினேன். என் அருமை மகன் அப்படிக் கூறவும் அனுமதித்தேன். அவன் சாத்தானாயிருக்கிறான். சர்வேசுரனுடைய நித்திய நையாண்டிக் காரனான சாத்தான் மனித மாம்சத்தில் அவதாரமெடுக்காதிருந்தால், இப்பேய் பிடித்த மனிதன், சேசுவாகிய என் வல்லமைக்குத் தப்பியிருக்க மாட்டான். “பேய் பிடித்தவன்” என்று சொன்னேன். இல்லை. அவன் அதைவிடக் கூடுதல்: அவன் சாத்தானில் நிர்மூலமாகி விட்டான்.”

“நீர் பசாசுக்களை விரட்டியிருக்கிறீரே. இவனை ஏன் விடுவிக்கவில்லை?” என்று அல்பேயுஸின் யாகப்பர் கேட்கிறார்.

“அவன் நீதான் என்று பயந்து உன் சார்பாகவே இப்படிக் கேட்கிறாயா? நீ அது பற்றிக் கவலைப்படாதே.” 

“அது நானா?” 

“நானா?” 

“நானா?” 

“அமைதியாயிருங்கள். அந்தப் பெயரை நான் சொல்லப் போவதில்லை. நான் இரக்கம் காட்டுகிறேன். நீங்களும் அப்படிச் செய்யுங்கள்.” 

“ஆயினும் அவனை நீர் ஏன் தோற்கடிக்கவில்லை? உம்மால் அதைச் செய்யக் கூடாதா?” 

“கூடும். ஆனால் சாத்தான் என்னைக் கொல்வதற்கு சரீர வடிவமெடுப்பதைத் தடை செய்வதற்காக நான் மனுக்குலத்தை இரட்சிக்குமுன்பே அதை அழிக்க வேண்டியிருக்குமே. அப்போது நான் யாரை இரட்சிப்பேன்?” 

அப்போது இராயப்பர் முழங்கால்களில் விழுந்து மூளைக் கோளாறு பிடித்தவனைப் போல் சேசுவை வெறித்தனமாய் பிடித்து அசைத்துக் கொண்டு: “சொல்லும், ஆண்டவரே, சொல்லும். அது நானா? அது நானா! என் மனச்சாட்சியைச் சோதித்துப் பார்க்கட்டுமா? அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் நீர்... நீர் சொன்னீர், நான் உம்மை மறுதலிப்பேன் என்று... எனக்கு நடுக்கமாயிருக்கிறது... அப்படியிருந்தால், ஓ! என்ன கொடிய பயங்கரம்!...” என்கிறார்.

“இல்லை. யோனாவின் சீமோனே. அது நீயல்ல.” 

“இராயப்பர் என்ற பெயரை எனக்கு ஏன் மறுக்கிறீர்? நான் மறுபடியும் சீமோன் ஆகி விட்டேனா? பாரும்! நீரே அப்படிச் சொல்கிறீர்... இந்த நான்! நான் அதை எப்படிச் செய்வேன்? சொல்லுங்கள்... நீங்கள் எல்லாரும் சொல்லுங்கள்... எப்போது நான் துரோகியானேன்? சீமோனே!... அருளப்பா... சொல்லுங்கள்...” 

“இராயப்பா, இராயப்பா, இராயப்பா! நம்முடைய முதல் சந்திப்பை நான் நினைத்ததால் உன்னை சீமோன் என்று சொன்னேன். அப்பொழுது நீ சீமோனாகத்தான் இருந்தாய். அந்த முதல் கணத்திலிருந்து நீ எப்போதும் எப்படிப் பிரமாணிக்கமாயிருந்தாய் என்று நினைத்தேன். அது நீயல்ல - சத்தியமாகிய நான் உனக்குச் சொல்கிறேன்.” 

“பின் வேறு யார்?” 

அப்போது யூதா ததேயுஸ் தம்மையே கட்டுப்படுத்தக் கூடாமல் சத்தமிட்டு: “அது யூதாஸ் இஸ்காரியோத்! அது இன்னுமா உமக்குத் தெரியவில்லை?” என்கிறார்.

“இதை நீர் ஏன் முன்கூட்டிச் சொல்லவில்லை? ஏன்?” என்று இராயப்பரும் சத்தமிடுகிறார்.

“அமைதி! அது சாத்தான். அவனுக்கு வேறு பெயர் இல்லை. எங்கே புறப்படுகிறாய் இராயப்பா?” 

“அவனைத் தேட.” 

“அந்த மேல் வஸ்திரத்தையும், அந்த ஆயுதத்தையும் உடனே வைத்து விடு. இல்லாவிடில் இங்கிருந்து உன்னைத் துரத்தவா? உன்னைச் சபிக்கவா?” 

“வேண்டாம் என் ஆண்டவரே, வேண்டாம்! எனக்கு என்ன?... எனக்கு என்ன? எனக்கு ஜன்னி கண்டுவிட்டதா? ஓ!... ” இராயப்பர் தரையில் விழுந்து சேசுவின் பாதத்தடியில் கிடந்து அழுகிறார்.

சேசு தொடர்ந்து சொல்கிறார்: “நான் என் கட்டளையைக் கொடுக்கிறேன்: ஒருவரையொருவர் நேசியுங்கள். மன்னியுங்கள். கண்டுபிடித்தீர்களா? உலகத்திலே பகை இருக்கிறது. ஆனால் உங்களிடத்திலே அன்பு மட்டுமே இருக்கக்கடவது. எல்லார் மீதும் எத்தனை துரோகிகளை உங்கள் பாதையிலே நீங்கள் சந்திப் பீர்கள்! ஆனால் நீங்கள் அவர்களைப் பகைக்கக் கூடாது. தீமைக்குத் தீமை செய்யக் கூடாது. இல்லாவிட்டால் பிதா உங்களைப் பகைப்பார். உங்களுக்கு வெகு முன்பே நான் பகைக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டேன். ஆயினும் நீங்களே பார்ப்பதுபோல நான் பகைக்கிறதில்லை. உலகமானது தன்னிலிருந்து வேறுபாடா யிருப்பதை நேசிக்க முடியாது. ஆகவே அது உங்களை நேசிக்காது. நீங்கள் அதற்குச் சொந்தமாயிருந்தால் அது உங்களை நேசிக்கும். ஆனால், உங்களை நான் உலகத்திலிருந்து அகற்றி விட்டதால் நீங்கள் உலகத்தினுடையவர்களாயில்லை. அதுதான் நீங்கள் பகைக்கப் படுவதின் காரணம். 

“உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன்: ஊழியன் தன் எஜமானனிலும் பெரியவன் அல்ல. அவர்கள் என்னை இம்சைப் படுத்தினார்களென்றால் உங்களையும் இம்சைப்படுத்துவார்கள். அவர்கள் எனக்குக் காது கொடுத்தால் உங்களுக்கும் காது கொடுப் பார்கள். ஆனால் அவர்கள் என் நாமத்தினிமித்தம் எல்லாவற் றையும் செய்வார்கள். காரணம் அவர்கள் அறியவில்லை. என்னை அனுப்பினவரை அறிந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை. நான் வராமலும், போதியாமலுமிருந்தால் அவர்களுக்குப் பாவமிராது. ஆனால் இப்பொழுது அவர்கள் தங்கள் பாவங்களைப் பார்த்திருக்கிறார்கள். என் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் என்னைப் பகைத்தார்கள். என்னுடன் பிதாவையும் பகைத்தார்கள். இது ஏனென்றால் பிதாவும் நானும் அன்பினால் ஒரே ஒன்றாயிருக்கிறோம். ஆயினும் இப்படி எழுதப்பட்டிருக்கிறது: “இலவசமாய் என்னைப் பகைத்தார்கள்” என்று. ஆனால் பிதாவினின்று புறப்படுகிறவரான சத்தியத்தின் இஸ்பிரீத்துவாயிருக்கிற தேற்று கிறவர் வரும்போது அவர் எனக்குச் சாட்சியாயிருப்பார். நீங்களும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். ஏனெனில் துவக்க முதலே நீங்கள் என்னோடு இருந்தீர்கள்.

“இதை நான் உங்களுககுச் சொல்லுகிறதேனென்றால் நேரம் வரும்போது நீங்கள் மனஞ் சோர்ந்து இடறல் படாதிருக்கும் படியாகவே. இதோ நேரம் வரப் போகிறது. அப்போது உங்களை ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள். உங்களைக் கொலை செய்கிறவர்கள் கடவுளுக்கு ஒரு புனித கடமையைச் செய்வதாக நினைப்பார்கள். அவர்கள் பிதாவையோ, என்னையோ அறியார்கள். அதுவே அவர்கள் அப்படிச் செய்வதன் காரணம். இந்நேரத்திற்கு முன் இவ்விஷயங்களை இவ்வளவு விரிவாக நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால் நீங்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போலிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தாய் உங்களை விட்டுப் பிரிகிறாள். நான் போகிறேன். வேறு உணவுகளுக்கு நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

“நீர் எங்கே போகிறீர்?” என்று மறுபடி நீங்கள் ஒருவர் கூட கேட்கவில்லை. துயரம் உங்கள் வாயை மூடுகிறது. ஆயினும் நான் போவது உங்களுக்கும் நல்லதாயிருக்கிறது. நான் போகா விட்டால் தேற்றுகிறவர் வர மாட்டார். அவரை நான் உங்களிடம் அனுப்புவேன். அவர் உங்களிடம் வந்தபின் உங்களுக்குள் அவர் புகட்டுகிற ஞானத்தாலும், வார்த்தைகளாலும் செயல்களாலும், வீர வைராக்கியத்தாலும், உலகத்திற்கு அதன் தெய்வக் கொலை என்ற பாவத்தையும், என் புனிதத் தன்மையைப் பற்றிய நீதியையும் அறிவுறுத்துவார். உலகமானது தீர்ப்பிடப்பட்டவர்கள் கடவுளின் பகைவர்கள் என்றும், விசுவசிக்கிறவர்கள் என்றும் இரு தெளிவான பிரிவாகப் பிரிக்கப்படும். விசுவாசிகள் தாங்கள் விரும்பு கிறபடி கூடுதல் அல்லது குறைவான புனிதமுடையவர்களா யிருப்பார்கள். ஆனால் இவ்வுலகத்தின் தலைவன் மீதும் அவனுடைய அசுத்த ஊழியர்கள் மீதும் தீர்ப்புக் கூறப்படும். இதற்குமேல் நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கக் கூடாதவர்களாயிருக்கிறீர்கள். ஆனால் அவர், தேற்றுகிறவர் முழு உண்மையையும் உங்களுக்குப் போதிப்பார். ஏனெனில் அவர் தாமாகப் பேசாமல், கடவுளின் மனத்திலிருந்து தாம் கேட்ட அனைத்தையும் உங்களுக்குச் சொல்லி, வரப் போகிறவைகளையும் உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதினின்று - அதுவும் பிதாவினுடையதே - எடுத்து உங்களுக்குக் கூறுவார்.

“நாம் ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்ள இன்னும் கொஞ்ச நேரம் உள்ளது. அதன்பின் நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள். மேலும் கொஞ்சத்திற்குப் பின் என்னைக் காண்பீர்கள்.

“நீங்கள் உங்களுக்குள்ளும் உங்கள் இருதயங்களிலும் முனகிக் கொள்கிறீர்கள். ஓர் உவமையைக் கேளுங்கள்: உங்கள் போதகரின் கடைசி உவமை:

“ஒரு ஸ்திரீ கர்ப்பிணியாகி அவளுடைய பிரவச காலம் வரும்போது அவள் பெரும் சஞ்சலமடைகிறாள். ஏனென்றால் அவள் வேதனைப்படுகிறாள். புலம்புகிறாள். ஆனால் அவளுடைய சிறு குழந்தை பிறந்து, அதை அவள் தன் மார்போடணைக்கும்போது அவளுடைய வேதனையெல்லாம் நின்று விடுகிறது. அவள் துயரம் மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது - ஒரு மனிதன் உலகத்தில் தோன்றி யிருக்கிறான் என்பதற்காக.

“இது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் அழுவீர்கள். உலகமோ உங்களைப் பார்த்துச் சிரிக்கும். ஆனால் பிறகு உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறி விடும். அந்த மகிழ்ச்சியை உலகம் ஒருபோதும் அறியாது. இப்பொழுது நீங்கள் துயரமாயிருக்கிறீர்கள். ஆனால் என்னை மறுபடியும் நீங்கள் காணும்போது உங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பும். அதை உங்களிடமிருந்து ஒருவனும் பறித்துக் கொள்ள மாட்டான். அந்த மகிழ்ச்சி எவ்வளவு நிறைவாயிருக்குமென்றால், உங்கள் மனதிற்கோ, இருதயங்களுக்கோ, சரீரங்களுக்கோ எதையும் கேட்க வேண்டியதின் அவசியம் இல்லாமல் ஆகிவிடும். என்னைக் காண்பதிலேயே நீங்கள் போஷிக்கப்படுவீர்கள். மற்ற அனைத்தையும் மறந்து விடுவீர்கள். அந்த நேரத்திலிருந்து நீங்கள் எதையும் என் பெயரால் கேட்கக் கூடியவர்களாயிருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி மேலும் மேலும் பெரிதாகும்படி அது பிதாவினால் உங்களுக்கு அருளப்படும். கேளுங்கள், கட்டாயம் கேளுங்கள். நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

“பிதாவைப் பற்றி உங்களிடம் நான் திறந்து பேசக் கூடிய நேரம் வருகிறது. அது நடைபெறும். ஏனென்றால் சோதனை துன்பத்தில் நீங்கள் பிரமாணிக்கமாயிருந்திருப்பீர்கள். அனைத்தும் வெல்லப்பட்டுமிருக்கும். உங்களுடைய சிநேகம் துன்ப சோதனை யில் உங்களுக்குத் திடம் தந்திருக்குமாதலால் அது உத்தம சிநேகமாயிருக்கும். அதிலே உங்களுக்கு குறைவுபட்ட எதையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். என் அளவற்ற பொக்கிஷத் திலிருந்து எடுத்துக் கொடுத்து பிதாவைப் பார்த்து: “பிதாவே, நீரே காண்பது போல் நான் உம்மிடமிருந்து வந்தேன் என்று இவர்கள் விசுவசித்து, என்னை நேசித்திருக்கிறார்கள்.” என்று சொல்வேன். பூமியில் இறங்கி வந்தபின் இப்போது அதை விட்டு நான் பிதாவிடம் போகிறேன். உங்களுக்காக மன்றாடுவேன்.”

“ஆ! இப்பொழுது நீர் விஷயங்களை தெளிவாக விளக்குகிறீர். உம்முடைய கருத்து என்னவென்று இப்பொழுது எங்களுக்குத் தெரிகிறது. உமக்கு எல்லாம் தெரியும். யாரும் கேள்வி கேட்காமலே நீர் பதில்களைச் சொல்லுகிறீர். மெய்யாகவே நீர் சர்வேசுரனிட மிருந்து வருகிறீர்.” 

“இப்பொழுது நீங்கள் விசுவசிக்கிறீர்களா? இக்கடைசி நேரத்தில்? மூன்று ஆண்டுகளாக உங்களிடம் பேசியிருக்கிறேன்! அதற்கு, மனிதனிடமிருந்து வராத, கடவுளாக இருக்கிற அப்பமும், இரத்தமாயிருக்கிற திராட்சை இரசமும் உங்களிடம் கிரியை செய்து கொண்டிருக்கின்றன. தெய்வமாக்கப்படுவதின் முதல் உள்ளக் கிளர்ச்சியை உங்களுக்குத் தருகின்றன. என் அன்பிலும், என்னைக் கொண்டிருப்பதிலும் நீங்கள் நிலைத்திருந்தால், நீங்கள் தெய்வங் களாவீர்கள். அது ஆதாம், ஏவாளிடம் சாத்தான் சொன்னது போலல்ல. ஆனால் நான் சொல்லுவது போல். நன்மை யினுடையவும், ஜீவனுடையவும் மரத்தின் உண்மையான கனி இது. இதில் போஜனம் செய்கிறவனிடம் தீமை தோற்றுப் போகிறது. மரணம் மாண்டு போகிறது. இதை உண்கிறவன் நித்தியத்திற்கும் வாழ்வான். சர்வேசுரனுடைய இராச்சியத்தில் “தெய்வம்” ஆவான். என்னில் நீங்கள் நிலைத்திருந்தால் நீங்கள் தெய்வங்கள் ஆவீர்கள். எனினும் இப்பொழுது... உங்களிடத்தில் இந்த அப்பத்தையும், இந்த இரத்தத்தையும் நீங்கள் கொண்டிருந்தாலும், நீங்கள் சிதறடிக்கப்படும் நேரம் வருவதால், நீங்கள் உங்கள் போக்கில் போய் விடுவீர்கள். என்னைத் தன்னந்தனியே விட்டு விடுவீர்கள். ஆனால் நான் தனியாக இல்லை. என்னோடு பிதா இருக்கிறார். பிதாவே! பிதாவே! என்னைக் கைவிடாதேயும்! உங்களுக்கு நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்... உங்களுக்கு சமாதான மளிப்பதற்காக. என்னுடைய சமாதானம் அது. உங்களுக்கு இன்னும் உபத்திரவம் இருக்கிறது. ஆனால் விசுவாசம் கொண் டிருங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்.” 

சேசு எழுந்து நிற்கிறார். தம் கைகளை சிலுவை வடிவமாக விரிக்கிறார். அவருடைய முகம் பிரகாசமாய் ஜொலிக்கிறது. அவ்வாறு நின்றபடி பிதாவுக்கு அவ்வுன்னதமான ஜெபத்தைச் சொல்கிறார். அருளப்பர் அந்த ஜெபம் முழுவதையும் எழுதி யிருக்கிறார்.

அப்போஸ்தலர்கள் கூடக்குறைய வெளிப்படையாகவும், சத்தமாகவும் கண்ணீர் வடிக்கிறார்கள். கடைசிக் காரியமாக அவர்கள் ஒரு பாடல் பாடுகிறார்கள். 

சேசு அவர்களை ஆசீர்வதிக்கிறார். பின் அவர்களைப் பார்த்து, “இப்பொழுது நாம் நம் மேல் வஸ்திரங்களைப் போட்டுக் கொள்வோம். புறப்படுவோம். பிலவேந்திரா, வீட்டெஜமானிடம் எல்லாவற்றையும் இருக்கிறபடியே விட்டுவிட நான் விரும்புவதாகச் சொல். நாளைக்கு... இந்த இடத்தைக் காண்பது உங்களுக்கு நன்றாயிருக்கும்” என்கிறார். சேசு அவ்விடத்தைப் பார்க்கிறார். அதன் சுவர்கள், தட்டுமுட்டு ஜாமான்கள் எல்லாவற்றையும் அவர் ஆசீர்வதிப்பது போல் காணப்படுகிறார். பின் தம் மேல் வஸ்திரத்தை அணிந்து கொண்டு வெளியேறுகிறார். சீடர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். அவர் பக்கத்தில் அருளப்பர் - அவர் மேல் சாய்ந்தபடி நடக்கிறார்.

“உம் தாயிடம் விடைபெறவில்லையா?” என்று செபதேயுவின் குமாரர் கேட்கிறார்.

“வேண்டாம். எல்லாம் செய்து முடிந்தன. மேலும் ஓசை யெழுப்ப வேண்டாம்.” 

சீமோன் கிளை விளக்கில் ஒரு பந்தத்தை ஏற்றியிருக்கிறார். அது வாசலுக்கு வருகிற அகன்ற நடைக் கூடத்தை பிரகாசப் படுத்துகிறது. இராயப்பர் முன் கதவை எச்சரிக்கையாகத் திறக்கிறார். எல்லாரும் தெருவில் இறங்குகிறார்கள். ஒரு விசைக் கொண்டியால் வெளியிலிருந்தே கதவைப் பூட்டி விட்டு நடந்து செல்கிறார்கள்.