கிறிஸ்துவுக்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே, பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவரால் இந்திய நாட்டில் மெய் மறை ஒளி வீசப்பட்டது வெளிப்படை. அன்று தொட்டு கிறிஸ்துவின் அரசு பரவி ஓங்கி வளரப் போதகர்கள் முன் வந்துள்ளனர். சிற்சில சமயங்களில் ஓய்ந்திருந்தது உண்மை. 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய வணிகர்கள் அந்நிய நாடுகளில் சிலுவை விருதை முந்த முந்த நிலை நாட்ட ஆசையும் மன உறுதியும் கொண்டனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர் மீண்டும் கிறிஸ்து வேதமென்னும் மரம் கிளை விட்டு வளரத் தொடங்கியது.
போர்த்துக்கல் நாட்டு அரசனது சலுகையால் அனுப்பப் பட்ட புனித சவேரியார், அவரோடு உழைத்த வேறு பலர் மேற்கொண்ட கடின முயற்சியால் தென்னாட்டில் திருமறை தீவிரமாகப் பரவியது. அதன் பின் தத்துவப்போதகர், வீரமாமுனிவர் முதலிய வேத போதகர்களின் பெருந் தொண்டு களினாலும், முத்திப் பேறு பெற்ற அருளாநந்தர் முதலிய வேத சாட்சிகளின் இரத்தத்தாலும் மெய் மறை சுடர் விடலாயிற்று. தற்காலமும், மன உறுதி நிறைந்த திரு மறைத் தொண்டர்களின் அரிய முயற்சியால் திருச்சபை நாடெங்கும் தழைத் திருப்பது வெள்ளிடை மலை.
ஆயினும், கத்தோலிக்கர் தொகையை மற்றவர்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவில், கத்தோலிக்கர் ஒரு சிறு புள்ளியே. இந்தியாவில் 50 கோடிக்கு மேலான மக்களுளர். அவர்களுள் கத்தோலிக்கர் ஏறக்குறைய 76 லட்சம் பேர்களே மற்றோரும் கிறிஸ்துவை அறிய வேண்டாமா? அதற்காக ஆவன செய்ய வேண்டியது உண்மைக் கத்தோலிக்கரின் இன்றியமையாத கடமையாகும். இக்கடமை மிகப் பழங்காலந்தொட்டுத் துறவிகளாலேயே செய்யப்பட்டு வந்துளது. இவ்வேலை அவர்களை மட்டும் சார்ந்த தென்று எண்ணுவது தவறாகும்.
ஏனெனில், சாதாரண கிறிஸ்தவர்களும் தங்களைப்போல பிறரை நேசிக்கக் கடமைப் பட்டுள்ளனர். பிறர் நேசத்தின் அடையாளங்களில் முக்கியமானது நம் சகோதரனின் ஆத்துமத்தை இரட்சிப்பதாகும். கிறிஸ்தவர் எல்லாருக்கும் சிறப்பாகத் துறவறத்தாருக்கும் இக்கடமை இருத்தலால், இரு திறத்தாரும் ஒன்றித்து அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு இத்துறையில் இறங்கிப் பணியாற்ற வேண்டும். சில சூழ்நிலையில் துறவறத்தோரைவிட இல்லறத்தாருக்கே கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்கும் வாய்ப்புகள் அதிகமாய் உள்ளன. எவ்வாறாயினும், சாதாரண கிறிஸ்தவர்களுக்கும் இவ்வுயர்ந்த அலுவல் இன்றியமையாத கடமை என்பது மறுக்கப்படாத உண்மையாகும். ஆதலால் அவர்கள் அதை எவ்வாறு செய்யலாம் என்பதை ஆராய்வோம்.