31 மே 1944.
ஐம்பத்து மூன்று நாள்களுக்குப் பின் மாதா மீண்டும் இக்காட்சியில் காணப்பட்டு இப்புத்தகத்தில் இதைச் சேர்க்கும்படி கூறுகிறார்கள். எனக்கு மீண்டும் மகிழ்ச்சி உண்டாகிறது. ஏனெனில் மரியாயைக் காண்பது மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதாகும்.
நாசரேத்திலுள்ள சின்ன கனிமரத் தோட்டத்தை நான் காண்கிறேன். மாதா ஒரு அடர்ந்த,கனிந்து வரும் பழங்களால் நிறைந்த ஆப்பிள் மரத்தின் நிழலில் நூல் நூற்கிறார்கள். சிவந்துவரும் அதன் கனிகள் ரோஜாவைப் போல், அத்தனை குழந்தைகளின் கன்னங்கள் போலிருக்கின்றன. ஆனால் மாதாவின் முகம் ரோஜாவாக இல்லை. எபிரோனில் அக்கன்னங்களில் காணப்பட்ட பிரகாசம் மங்கிவிட்டது. உதடு மாத்திரம் வெளிறிய பவளக்கோடு போலிருக்கிறது. முகம் தந்த நிறமாக வெளிறிவிட்டது. தாழ்ந்திருக்கும் கண்ணிமைகளின் கீழ் மங்கிய வரி காணப்படுகிறது. அழுதவைபோல் கண்கள் தடித்திருக்கின்றன. தலை கவிழ்ந்துள்ளதால் அவர்களின் விழிகளைக் காண முடியவில்லை. வேலையிலும், அதைவிட துயரமான ஒரு நினைவிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இருதய துயரமுள்ளவளைப் போல் பெருமூச்சு விடுகிறார்கள். அதை என்னால் கேட்க முடிகிறது.
பூக்கள் புதிதாயிருப்பதைப் பார்த்தால் அது காலை வேளை என்று தெரிகிறது. ஆயினும் வெப்பமாகவே உள்ளது. வெப்பமாயிருப்பதால் மாதா முழுவதும் வெண்ணிறமான சணலாடை அணிந்திருக்கிறார்கள். தலையில் முக்காடு இல்லை. சூரிய ஒளி ஆப்பிள் மர இலைகளூடே வருகிறது. காற்றால் இலைகள் அசைக்கப்பட, அவற்றினூடே சூரியக் கதிர் அசைந்தாடி கரிசல் மண் தரையிலும் மலர்ப் பாத்திகளிலும் விழுகிறது. மாதாவின் தலைமேல் வட்ட வட்ட வெளிச்சமாகப் படிந்து அவர்கள் முடியை சுத்தப் பொன்போல் காட்டுகிறது.
வீட்டிலோ அண்டையிடங்களிலோ எந்த ஓசையுமில்லை. தோட்ட ஓரத்தில் கொப்பளித்து ஓடிவந்து நீர்க்கிடங்கில் பாயும் சிற்றருவியின் சலசலப்பு மட்டுமே கேட்கிறது.
வீட்டுக் கதவின் வாசல் பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு மாதா அதிர்கிறார்கள். தக்களியையும் நூற்புக் கழியையும் கீழே வைத்துவிட்டு எழுந்து கதவைத் திறக்கப் போகிறார்கள்.
சூசையப்பர் எதிரே நிற்கிறார். மாதா முழுவதும் வெளிறிக் காணப்படுகிறார்கள். அவர்கள் முகம் எப்படி இரத்தமற்று விட்டதென்றால் அது ஓர் ஓஸ்தியைப் போலிருக்கிறது. துயரமான, விசாரிக்கும் கண்களுடன் அவர்கள் அர்ச். சூசையப்பரைப் பார்க்கிறார்கள். மன்றாடும் விழிகளுடன் சூசையப்பர் மாதாவை நோக்குகிறார். இருவரும் மவுனமாகவே நிற்கிறார்கள். பின் மாதா கேட்கிறார்கள்: “சூசையே! இந்நேரம் வந்திருக்கிறீர்களே. உங்களுக்கு ஏதும் தேவையா? ஏதும் விஷயம் சொல்ல வந்தீர்களோ? உள்ளே வாருங்கள்” என்கிறார்கள்.
சூசையப்பர் உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு இன்னும் பேசாமலே நிற்கிறார்.
“சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?”
“நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என்று கூறிய சூசையப்பர் முழங்காலிடக் குனிகிறார். உடனே மாதா அவர் தோளைப் பிடித்துத் தடுத்து: “உங்களை நான் மன்னிக்கவா? மன்னிப்பதற்கு எதுவுமே இல்லை. நான் இங்கு இல்லாதபோது நீங்கள் செய்துள்ள எல்லாவற்றிற்கும் உங்கள் அன்பிற்கும் நான் உங்களுக்கே நன்றி செலுத்த வேண்டும்” என்கிறார்கள்.
சூசையப்பரின் கண்களில் இரண்டு பெரிய துளிகள் எழுந்து பொங்கி உருண்டோடுகின்றன. “மரியா, என்னை மன்னியுங்கள். உங்களை நான் நம்பாதிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். இத்தகைய பொக்கிஷத்தைக் கொண்டிருக்க நான் தகுதியற்றவன். என்னிடம் பிறர்சிநேகமில்லை. என் உள்ளத்தில் உங்களைக் குற்றம் சாட்டினேன். அது அநீதி. ஏனென்றால் உண்மை என்னவென்று உங்களிடம் கேட்கத் தவறி விட்டேன். நான் என்னைப் போல் உங்களை நேசியாததால் தேவ கட்டளைக்கெதிராய்ப் பாவஞ் செய்தேன்” என்கிறார் அர்ச். சூசையப்பர்.
“இல்லை. நீங்கள் பாவம் எதுவும் செய்யவில்லை.”
“மரியா! நான் பாவம் செய்தேன். இப்படிப்பட்ட குற்றம் நான் சாட்டப்பட்டிருந்தால் நான் என்னை தற்காத்திருப்பேன். ஆனால் நீங்களோ... உங்களைத் தற்காத்துப் பேச உங்களுக்கு நான் வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஏனென்றால் உங்களிடம் ஏதும் கேளாமலே ஒரு முடிவெடுக்கும் தறுவாயில் இருந்தேன். நான் உங்களுக்கு நியாயமாகச் செய்யவில்லை. ஏனென்றால் என் சந்தேகத்தினால் உங்களுக்குத் துரோகம் செய்தேன். ஒரேயயாரு சந்தேகமெனினும் அது குற்றமே. சந்தேகப்படுகிறவன் அறியமாட்டான். உங்களை நான் அறிந்திருக்க வேண்டியபடி அறியவில்லை. ஆனால் நான் மிகப் பாடுபட்டேன்... மூன்று நாள் வாதனை... மரியா என்னை மன்னியுங்கள்.”
“உங்களை நான் மன்னிக்க எதுவுமே இல்லை. மாறாக உங்களுக்கு நான் வருவித்த வேதனைக்காக என்னை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்.”
“ஆம். என் வேதனை பெரிதுதான். எப்படிப்பட்ட சித்திரவதை! இன்று காலையில் என்னிடம் கூறினார்கள், என் நெற்றியின் இருபுறமும் உரோமம் நரைத்துவிட்டது, என் முகத்தில் சுருக்கம் விழுந்துள்ளது என்று. கடந்த இந்நாட்கள் என் வாழ்வின் பத்து ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதல் போல் உள்ளது. ஆனால் மரியா, உங்கள் மணாளனான என்னிடமிருந்து உங்களுடைய மகிமையை மறைத்து, அதனால் நான் உங்களை சந்தேகப்பட ஏன் வைத்தீர்கள்?”
சூசையப்பர் சிரம் தாழ்ந்து பணிந்து நிற்கிறார். எவ்வளவு பணிந்தருந்தாரென்றால் அவர் முழங்காலில் நிற்பது போலிருக்கிறது. மாதா புன்னகையுடன் அவர் தலைமீது தன் கையை வைப்பது, அவருக்குப் பாவப் பொறுத்தல் அளிப்பது போலிருக்கிறது. பின் மெல்லக் கூறுகிறார்கள்: “நான் மிகச் சிறந்த தாழ்ச்சியுள்ளவளாயிராவிட்டால், எதிர்பார்க்கப்பட்டவர் என் உதரத்தில் உற்பவிக்க நான் தகுதி பெற்றிருக்க மாட்டேன். அவரோ மனிதனை நாசமாக்கிய ஆங்காரத்திற்கு உத்தரிக்கும்படியாக வருகிறார். நான் கீழ்ப்படிந்தேன்... கடவுள் அந்தக் கீழ்ப்படிதலை என்னிடம் கேட்டார். அது எனக்கு எவ்வளவோ வேதனையளித்தது. உங்களால்தான் - அதனால் நீங்கள் பட வேண்டிய வேதனையினால்தான். ஆயினும் கீழ்ப்படியாதிருக்க என்னால் கூடாதிருந்தது. நான் ஆண்டவரின் அடிமையா யிருக்கிறேன். அடிமைகள் தங்களுக்குக் கொடுக்கப்படும் ஆணைகளை, அவை கசப்பான கண்ணீர்களை வருவித்தாலும் நிறைவேற்ற வேண்டுமேயன்றி அவைகளை விவாதிக்கக் கூடாது.” மாதா அழுதுகொண்டே இதைக் கூறுகிறார்கள். குனிந்து நின்ற சூசையப்பர் அதைக் காணவில்லை. மாதாவின் கண்ணீர் தரையில் விழக் கண்டபோதுதான் அது அவருக்குத் தெரிந்தது.
அப்போது சூசையப்பர் நிமிர்ந்து மாதாவின் விரல்களை கையில் எடுத்து முத்தமிட்டுச் சொல்வார்: “நாம் இனி துரிதப்பட வேண்டும்... நான் இங்கு வருவேன். மெய்விவாகச் சடங்கை அடுத்த வாரம் பூர்த்தி செய்வோம். சரியா?...”
“நீங்கள் செய்வதெல்லாம் சரியே. நீங்களே குடும்பத்தின் தலைவர். நான் உங்கள் ஊழியக்காரி.”
“இல்லை. நானே உங்கள் ஊழியன். உங்கள் உதரத்தில் வளர்ந்து வரும் ஆண்டவருடைய பாக்கியம் பெற்ற வேலைக்காரன் நான். இஸ்ராயேலின் சகல ஸ்திரீகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள். இன்று மாலை என் உறவினருக்கு அறிவித்து பின் நான் இங்கு வந்து நாம் அவரை வரவேற்க செய்ய வேண்டியதை யெல்லாம் செய்வோம்... ஓ! சர்வேசுரனை என்னுடைய வீட்டில் எப்படி நான் வரவேற்பேன்? கடவுளை... என் கரத்தில் எப்படி என்னால் ஏந்த முடியும்? மகிழ்ச்சியினாலேயே நான் மரித்து விடுவேன்... அவரைத் தொட நான் துணிய மாட்டேன். அப்படிச் செய்ய என்னால் கூடவே கூடாது...”
“உங்களால் கூடும், தேவ வரப்பிரசாதத்தினால் நான் செய்வதுபோல நீங்களும் அப்படிச் செய்யக் கூடும்.”
“உங்களால் கூடும்... நான் வறிய மனிதன். கடவுளின் பிள்ளைகள் அனைவரிலும் மிகவும் வறியவன்...”
“சேசு நம்மிடம் வருகிறார். எளியவர்களான நம்மை கடவுளில் செல்வந்தர்கள் ஆக்கும்படி வருகிறார். நம் இருவரிடம் அவர் வருகிறார். காரணம், நாம்தான் எல்லாரிலும் வறியவர்கள். அதை நாம் ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம். சூசையே அக்களியுங்கள். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசரை, தாவீதின் வீட்டார் பெற்றுக் கொண்டனர். நம் இல்லம் சாலமோனுடைய அரண்மனையைக் காட்டிலும் அதிகமாய்ப் பிரகாசிக்கும். ஏனென்றால் மோட்சம் இங்கே இருக்கும். இரகசிய சமாதானத்தை கடவுளுடன் நாம் பகிர்ந்து கொள்வோம். மனிதர்கள் அதை பிந்தி அறிய வருவார்கள். அவர் நம் மத்தியில் வளர்ந்து வருவார். நம் கரங்கள் இரட்சகருக்குத் தொட்டிலாக இருக்கும். நம் உழைப்பு அவருக்கு ஆகாரம் தேடித் தரும். ஆ! கடவுளின் குரல் “அப்பா! அம்மா!” என்று நம்மை அழைப்பதை நாம் கேட்போமே...”
மாதா மகிழ்ச்சியினால் அழுது கண்ணீர் சிந்துகிறார்கள். எத்தகைய ஆனந்தத்தின் கண்ணீர்!
சூசையப்பரும் முழங்காலிலிருந்தபடி கண்ணீர் பெருக்குகிறார்... காட்சி முடிகிறது.
மாதா கூறுகிறார்கள்:
நான் முகம் வெளிறியிருந்ததற்கு யாரும் மாற்று அர்த்தம் கொள்ளக் கூடாது. மனித அச்சத்தினால் அது ஏற்படவில்லை. மனித முறைப்படி பார்த்தால் கல்லால் எறிந்து கொல்லப்படுவதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆயினும் அதற்காக நான் பயப்படவில்லை. சூசையப்பரின் வேதனையினால்தான் நான் வேதனையடைந்தேன். அவர் என்னைக் குற்றம் சாட்டுவார் என்ற நினைவாலும் நான் குழப்பமடையவில்லை. அவர் என்னைக் குற்றம் சுமத்துவதில் முனைப்பாக இருந்துவிட்டால், அதனால் அவர் பிறர் சிநேகத்துக்கு விரோதம் செய்துவிடக் கூடாதே என்பதுதான் என் கவலையாயிருந்தது. அதனாலேயே அவரை நான் கண்டபோது என் இரத்தமெல்லாம் என் இருதயத்தினுட் பாய்ந்தது. அது எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பமென்றால் ஒரு நீதிமான் கூட பிறர் சிநேகத்திற்கு எதிராய் நடந்து, அதனால் நீதிக்கு எதிராக நடந்து விடக் கூடிய தருணம் அது. ஒரு நீதிமான் தப்பறையைச் செய்வதாயிருந்தால் நான் மிகவும் கலங்கிப் போயிருந்திருப்பேன். காரணம் அவர் ஒருபோதும் தப்பறையாகச் செய்ததில்லை.
நான் சூசையப்பரிடம் கூறியது போல கடைசி வரம்பு வரையிலும் நான் தாழ்ச்சியுடன் இல்லாதிருந்தால், மனுக்குலத்தின் அகங்காரத்தைப் பரிகரிப்பதற்காக, தாமே மனிதனாகும் அளவிற்குத் தம்மைத் தாழ்த்திய கடவுளை எனக்குள் தாங்கியிருக்க நான் தகுதி பெற்றிருக்க மாட்டேன்.
சுவிசேஷம் எதிலும் கூறப்படாத அக்காட்சியை நான் உனக்குக் காண்பித்தேன். ஏனென்றால், மிஞ்சிய விதமாய்த் தவறிப் போகிற மனித சிந்தனையை, கடவுளுக்குப் பிரியப்படவும், உங்கள் இருதயத்திற்கு அவர் விடுக்கிற இடைவிடாத அழைப்புகளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான நிபந்தனைகளை நீங்கள் தெரிந்து கொள்ளும்படியாகவுமே.
விசுவாசம்: மோட்ச தூதரின் வார்த்தைகளை சூசையப்பர் கேள்வி எழுப்பாமல் விசுவசித்தார். அவர் விசுவசிக்கவே விரும்பினார். ஏனென்றால், கடவுள் நல்லவர் என அவர் உண்மையிலேயே உறுதி பெற்றிருந்தார். ஆண்டவரில் தம் நம்பிக்கையை வைத்திருந்தால், நான் துரோகமிழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு அயலாரால் பரிகசிக்கப்படும் கொடுமையை தமக்கு தேவன் அனுப்ப மாட்டார் என்று உறுதியாயிருந்தார். அவர் என்னை நம்புவதற்குத்தான் உதவியை மன்றாடினார். ஏனென்றால் அவர் நேர்மையுள்ளவரா யிருந்ததினால் மற்றவர்கள் நேர்மை தவறுகிறார்கள் என்று எண்ணுவது அவருக்கு வேதனையாயிருந்தது. அவர் வேதப் பிரமாணத்தின்படி நடந்தார். வேதப் பிரமாணம் என்ன சொல்கிறது? “உன்னைப் போல் உன் அயலானையும் நேசி” என்று. நம்மையே நாம் எவ்வளவு சிநேகிக்கிறோமென்றால் உத்தமதனம் இல்லாதிருக்கும்போதே நாம் உத்தமர் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே நம் அயலான் குற்றமுள்ளவனென்று நாம் நினைக்கிற காரணத்தினாலேயே அவனை நாம் நேசிக்கக் கூடாதா?
வரையற்ற பிறர் சிநேகம்: மன்னிக்கத் தெரிந்ததும், மன்னிக்க விரும்புவதும், நம் அயலாருடைய குறைபாடுகளை முழுமனதோடு பொறுத்து, முன்கூட்டியே மன்னிக்கக் கூடியதுமான பிறர் சிநேகம் அது. குற்றத்தைக் குறைக்கக்கூடிய எல்லா சூழ்நிலைகளையும் ஒப்புக்கொண்டு உடனே மன்னிப்பது அவசியம்.
தாழ்ச்சி: பிறர் சிநேகத்தைப் போலவே வரம்பற்றது. சாதாரண நினைவுகளிலும்கூட நீ தவறக் கூடியவன் என்பதை நீ ஒப்புக்கொள்ள வேண்டும். “நான் செய்தது தப்புத்தான்” என்று சொல்ல மறுக்கும் அளவிற்கு நீ ஆங்காரம் கொண்டிருக்கக் கூடாது. ஏனென்றால் அப்படிப்பட்ட கர்வம் முந்திய குற்றத்தைவிட அதிக தீமையானது. கடவுளைத் தவிர மற்றெல்லோரும் தவறு செய்கிறார்கள். “நான் ஒருபோதும் தவறியதில்லை” என்று சொல்லக் கூடியவன் யார்? இதைவிடக் கடினமான தாழ்ச்சி ஒன்று உள்ளது: கடவுள் நம்மிடம் செய்துள்ள ஆச்சரியத்திற்குரிய காரியங்களைப் பற்றி, அவருடைய மகிமைக்காக அவற்றைப் பறைசாற்ற அவசியமில்லாத போது, நம்மைப் போல் அப்படி விசேஷ கொடைகளை அடைந்திராத மற்றவர்களைத் தளர்வுறச் செய்யாதபடிக்கு, மவுனமாயிருக்கத் தெரிந்த தாழ்ச்சி அது. ஓ! அவர் விரும்பினால் போதுமே, தம் ஊழியனிடத்தில் கடவுள் தம்மை வெளிப்படுத்துவாரே! நான் எப்படி இருந்தேன் என்பதை எலிசபெத் “கண்டு கொண்டாள்.” நான் எப்படி இருந்தேன் என்பதை சூசையப்பர் அறியும் காலம் வந்தபோது அறிந்து கொண்டார்.
ஆண்டவரின் ஊழியர்கள் நீங்கள் எனப் பிரசித்தம் செய்வதை அவருக்கே விட்டு விடுங்கள். அவர் அப்படிச் செய்ய ஆவலாயிருக்கிறார். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட அலுவலுக்கு உயர்ந்து வருகிற ஒவவொரு சிருஷ்டியும் அவருடைய அளவற்ற மகிமையுடன் கூட்டப்படும் ஒரு புது மகிமையாயிருக்கிறது. மனிதன் எப்படியிருக்க வேண்டுமென்று கடவுள் விரும்பினாரோ, அதற்கு, அதாவது அவரைப் பிரதிபலிக்கிற சிறிய நினைவு என்பதற்கு அது ஒரு சாட்சியமாக இருக்கிறது. வரப்பிரசாதத்தினால் நேசிக்கப்படுகிறவர்களே! நிழல் மறைவிலும் மவுனத்திலும் இருந்து கொள்ளுங்கள். அப்போதுதான் சீவியத்தின் வார்த்தைகளை மட்டுமே கேட்பீர்கள். அப்போதுதான் நித்தியமாய்ப் பிரகாசிக்கும் சூரியனை உங்கள் மேலும் உங்களிலும் கொண்டிருக்க தகுதியாவீர்கள்.
ஓ மிக ஆசீர்வதிக்கப்பட்ட ஒளியே! இறைவனே! உமது ஊழியர்களின் மகிழ்வே! அவர்கள் உம்மை, உம்மை மாத்திரமே, புகழவும் தங்கள் தாழ்மையில் அக்களிக்கவும் அவர்கள் மீது பிரகாசித்தருள்வீராக! ஏனெனில் நீர் செருக்குடையவர்களைச் சிதறடிக்கிறீர். ஆனால் உமது இராச்சியத்தின் பிரதாபத்திற்கென உம்மை நேசிக்கும் தாழ்ச்சியுடையவர்களை உயர்த்துகிறீர்.