இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுகிறீஸ்துநாதரின் திருப்பாடுகள் பற்றிய சிந்தனைகளும், அவற்றின் மீதான நாட்டங்களும்!

 பிரசங்கம் 02

சேசுவை, சிலுவையில் அறையுண்ட சேசுவையன்றி வேறு எதையும் அறியத் தாம் விரும்பவில்லை என்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் கூறினார்; அதாவது, சிலுவையின்மீது அவர் நமக்குக் காண்பித்த நேசத்தை ; ""உங்களுக்குள்ளே நான் சேசுக் கிறீஸ்துநாதரை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் அறிந்தவனாயிருக்க வேண்டுமென்று எண்ணவில்லை'' (1 கொரி.2:2). உண்மையில், சிலுவையில் அறையுண்ட சேசுநாதரிடமிருந்து அல்லாமல், புனிதர்களின் அறிவை, அதாவது கடவுளை நேசிப்பது பற்றிய அறிவை எந்தப் புத்தங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும்? கடவுளின் மாபெரும் ஊழியரும், கப்புச்சின் துறவியுமான சகோதரர் கோர்லியோனின் பெர்னார்ட் என்பவர் வாசிக்க இயலாதவராக இருந்ததால், அவரது சக துறவி ஒருவர் அவருக்குக் கற்பிக்க விரும்பினார். இதைப் பற்றி அவர் தமது பாடுபட்ட சுரூபத்தோடு கலந்தாலோசிக்கச் சென்றார். ஆனால் சேசு சிலுவையிலிருந்து அவருக்குப் பதில்மொழியாக: ""வாசகம் என்பதென்ன? புத்தகங்கள் என்பவை என்ன? இதோ, நான் உன் மீது கொண்டுள்ள அன்பை நீ தொடர்ந்து வாசித்து அறிந்து கொள்ளக் கூடிய புத்தகம் நானே!'' என்றார். ஓ, எங்கள் வாழ்நாள் முழுவதிலும், நித்தியத்திலும் நாங்கள் சிந்திக்க வேண்டிய மாபெரும் பாடமே! நம் மீதுள்ள நேசத்திற்காக மரித்தவராகிய ஒரு சர்வேசுரன்! நம் மீதுள்ள நேசத்திற்காக மரித்த ஒரு சர்வேசுரன்! ஓ எங்கள் சிந்தனைக்குரிய அதியற்புதக் கருத்தே!

அர்ச். தாமஸ் அக்குயினாஸ் ஒரு நாள் அர்ச். பொனவெந்தூரைச் சந்தித்து, அவர் எழுதியுள்ள அழகிய பாடங்கள் அனைத்தையும் எந்தப் புத்தகத்திலிருந்து அவர் எடுத்தார் என்று கேட்டார். அர்ச். பொனவெந்தூர் சிலுவையில் அறையுண்டவரின் சுரூபம் ஒன்றை அவருக்குக் காட்டினார். அது புனிதரின் ஏராளமான முத்தங்களால் முற்றிலும் கருத்துப் போயிருந்தது. அர்ச். பொனவெந்தூர் அர்ச். தாமஸிடம், ""இதுவே என் புத்தகம், இதிலிருந்துதான் நான் எழுதும் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்கிறேன்; அதுவே நான் பெற்றுள்ள மிகக் கொஞ்சமான அறிவை எனக்குக் கற்பித்துள்ளது'' என்றார். சுருங்கக் கூறினால், பாடுபட்ட சுரூபத்தைப் பற்றிய தங்கள் ஆய்விலிருந்தே கடவுளை நேசிக்கும் கலையைப் எல்லாப் புனிதர்களும் கற்றுக்கொண்டார்கள். சகோதரர் ஆல்வெர்னியாவின் ஜான் என்பவர், காயப்பட்ட சேசுçக் காணும் ஒவ்வொரு தடவையும், தமது கண்ணீரை அடக்க இயலாதவராக இருந்தார். சகோதரர் ட்யூடெர்ட்டோவின் ஜேம்ஸ் என்பவர், நம் மீட்பரின் திருப்பாடுகள் வாசிக்கப்படுவதைக் கேட்டபோது, மனங்கசந்து அழுதது மட்டுமின்றி, அவரிடமிருந்து பலத்த கேவுதல்களும் வெளிப்பட்டன. அந்த அளவுக்கு தமது நேச ஆண்டவர் மீதான பற்றியெரியும் அன்பால் அவர் மேற்கொள்ளப்பட்டார்.

பாடுபட்ட சுரூபத்தைப் பற்றிய இந்த ஆய்வுதான் அர்ச். பிரான்சிஸ் அசிசியாரை ஒரு மாபெரும் பக்திச்சுவாலகராக மாற்றியது. சேசுகிறீஸ்துநாதரின் துன்பங்களைப் பற்றி தியானிப்பதில் அவர் எவ்வளவு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்தார் என்றால், அவர் கிட்டத்தட்ட தமது பார்வைத் திறனையை இழந்து விட்டார். ஒரு முறை, அவர் அழுதுகொண்டிருப்பதை ஒருவர் கண்டு, அவரை வேதனைப்படுத்துவது எது என்று அவரிடம் கேட்டார். ""என்னை வேதனைப்படுத்துவது எதுவா? என் ஆண்டவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட துயரங்கள் மற்றும் அவமானங்களைப் பற்றி நான் அழுகிறேன்; அவரை நேசியாமலும், அவரைப் பற்றிய எந்த சிந்தனையும் கூட இல்லாமலும் இருக்கிற நன்றியற்ற மனிதர்களைப் பற்றி நினைக்கும்போது என் துக்கம் அதிகரிக்கிறது'' என்று புனிதர் பதில் கூறினார். ஒரு செம்மறிக்குட்டி கத்தும் சத்தத்தை அவர் கேட்ட போதெல்லாம், உலகின் பாவங்களுக்காகச் சிலுவையின் மீது தன் இறுதித் துளி இரத்தத்தையும் சிந்திவிட்ட மாசற்ற செம்மறிப்புருவை யாகிய சேசுநாதரின் மரணத்தைப் பற்றிய நினைவால் புனிதர் வேதனைப்பட்டார். ஆகவே, வேறு எதிலும் அன்றி சேசுவின் திருப்பாடுகளை எப்போதும் நினைவுகூர்வதில் மட்டுமே அதிக ஆவல் கொண்டிருக்கும்படி அவர் தம் சகோதரர்களுக்கு அறிவுறுத்தினார்.

எனவே, இதுவே - சிலுவையில் அறையுண்ட சேசுநாதரே - நம் புத்தகம், இதை நாம் நிலையான முறையில் தொடர்ந்து வாசித்து வருவோம் என்றால், அது ஒரு புறத்தில், பாவத்தின் மீதான ஓர் உயிருள்ள அச்சத்தைக் கொண்டிருக்க நமக்குக் கற்பிக்கும்; மறு புறத்தில், நம் மீதுள்ள நேசத்தால் நிரம்பி வழியும் ஒரு சர்வேசுரன் மீதுள்ள நேசத்தால் நாம் பற்றியெரியச் செய்யும்; இந்தத் திருக் காயங்களில், தேவ நீதியை சாந்தப்படுத்துவதற்காக இத்தகைய கசப்பான மரணத்தை அடையும் அளவுக்கு கடவுளாகிய ஒருவரைத் தாழ்த்திய பாவத்தின் மாபெரும் கொடூரத் தன்மையையும், தாம் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை நமக்கு எண்பிக்கும்படி, இவ்வளவு அதிகமாகத் துன்புறுவதைத் தேர்ந்து கொண்டதில் நம் இரட்சகர் நமக்குக் காண்பித்துள்ள நேசத்தையும் நாம் அறிந்து கொள்வோம்.

ஏராளமான நேசமுள்ள இருதயங்கள் சுட்டெரிக்கப்படுகிற இந்த நேசத்தின் தீச்சூளைகளுக்குள் நாமும் நுழையும் வரப்பிரசாதத்தை தேவதாய் கன்னிமாமரி தனது திருமகனிடமிருந்து நமக்குப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் மன்றாடுவோம். அப்போது, அங்கே நம் உலக நாட்டங்கள் சுட்டெரிக்கப்படுவதோடு, நாமும் ஆசீர்வதிக்கப் பட்ட தீச்சுவாலைகளால் பற்றியெரிவோம், இதனால் பூமியின் மீது ஆன்மாக்கள் பரிசுத்தமடையும், மோட்சத்தில் அவை ஆசீர்வதிக்கப் பட்டவையாக இருக்கும். ஆமென்.