வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - காட்சியும், மாட்சியும்

மாமரியன்னை வந்தாள், உலகும் வானும்
மகிழ்ந்திடக் காட்சி தந்தாள்

எனப் பாடினார் விற்பன்னர் வேத நாயகனார். மனித இனம் தடுமாறி, இறைத்தடம் மாறிப் போனபோதெல்லாம் அவள் உலகில் தோன்றி, தனது அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்துகின்றாள், இறைவழி நடக்கச் சொல்லிப் பணிக்கின்றாள்.அவள் தோன்றுவதெல்லாம் ஒன்றுபோல உள்ளது. அவள் காட்சியளிப்பது எல்லாம் எளியவர்களுக்கு, வறியவர்களுக்கு, கள்ளமில்லா நல்ல உள்ளம் படைத்த சிறுவர் சிறுமியர்க்கு, வாழ்விலே தாழ்நிலையில் உள்ளோர்க்கு, ஒதுக்கப்பட்டோர்க்கு, உலகம் ஒரு பொருட்டாய் மதியாதோர்க்கு என்றே அமைந்திருக்கின்றது.

லூர்து நகரிலே, பாத்திமாவிலே அவள் தோன்றியது ஆடு மேய்க்கின்ற சிறுவர் சிறுமியர்க்கு வேளை நகரிலே அவள் தோன்றியதும் அவ்வாறே அவள் வேளாங்கண்ணியில் எவ்வாறு தோன்றினாள்? வங்கக் கடலோரம் ஒருவரும் அறியாச் சிற்றூராக இருந்த வேளாங்கண்ணி இன்று பார்புகழும் திருத்தலமாக மாறியது எவ்வாறு என்று பார்ப்போம்.

அன்னையவள் இந்தச் சிற்றூரிலே தோன்றியதற்குச் சான்றுகளாகக் கல்வெட்டுக்களோ செப்புப் பட்டயங்களோ கிடையா. நமக்குக் கிடைத்திருப்பவையெல்லாம் வழிவழியாக வந்த பாரம்பரியச் செய்திகள் தாம். அவற்றுள் மிகவும் உறுதியான பாரம்பரியத்தைக் கொண்டிருப்பவை மூன்று நிகழ்ச்சிகள்.

1. இடையர்குலச் சிறுவனுக்குக் காட்சி. 

2. மோர் விற்ற நொண்டிச் சிறுவனுக்குக் காட்சி. 

3. புயலில் அகப்பட்ட போர்த்துக்கீசிய கப்பல் மீண்டும் கரை சேர்ந்த நிகழ்ச்சி.