வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - மோர் விற்ற சப்பாணி

வேளாங்கண்ணி கிராமத்திலே ஏழை விதவை ஒருத்தி இருந்தாள். அவளுடைய மகனோ பிறவியிலேயே சப்பாணியாக இருந்தான். பிழைப்பைக் கருதி அவ்விதவை நடுத்திட்டு என்று பெயர் வழங்கி வந்த ஓர் இடத்தில் தன் மகன் சப்பாணியையும், மோர் நிறைந்த பானை ஒன்றையும் தூக்கிக்கொண்டு போய் வைத்து, மோர் விற்கச் சொல்லி வந்தாள்.

நடுத்திட்டு என்பது ஊருக்கு வெளியே உள்ள ஓர் உயரமான நிலம். அங்குச் சில மரங்கள் உயர்ந்து நின்றன. அப்பக்கம் போவோர் வருவோர் அங்குள்ள மரத்தடியில் தங்கிப் போவது வழக்கம். சப்பாணிச் சிறுவன் அங்கமர்ந்து மணக்கும் மோர் விற்று வந்தான்.

அப்பொழுது ஒருநாள் அவன் வழக்கம்போல் நடுத்திட்டு ஆலமரத்தடியில் மோர்ப் பானையுடன் உட்கார்ந்து கொண்டு யாராவது வரமாட்டார்களாவென்று வழிமீது விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவரும் தென்படவில்லை.

திடீரென்று ஓர் அதிசயக் காட்சி.

சுந்தர அன்னையின் கையில்
சுதனையும் நோக்கினான், இளைஞன்; 
சிந்திய வெண்பனி தோற்கும்
சித்திரத் திருமுகம் பார்த்தான், 

கதிரோனைப் பழிக்கும் பேரொளியோடும், தண் மதியைப் பழிக்கும் அழகு முகத்தோடும், வானிலிருந்து பெண்ணொருத்தி கீழே இறங்கி வருவதைக் கண்டான். அழகு மிகு பாலகன் ஒருவனை அவள் கையில் கொண்டிருந்தாள். மோர் விற்ற சிறுவனோ அப்பேரொளிக் காட்சியிலே திளைத்துத் தன்னை மறந்தான். அந்த வானுலகப் பேரரசி சப்பாணிச் சிறுவனிடம் " என் பாலகனுக்குக் கொஞ்சம் மோர் தா எனக் கேட்டாள். பரவசம் அடைந்த முடவன் தான் பெற்ற பேற்றினை எண்ணி, பயபக்தியோடு மோர்க் குவளையைத் தந்தான். அதைப் பெற்று அந்தத் தாய், தன் மகனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கருணைக் கடலாம் இறைவனின் அன்னை, தயவை மழையெனப் பொழிந்தாள். தம் திருமகனை நோக்கி, மோர் தந்த சிறுவனின் கால் ஊனம் போக்க வேண்டினாள். தாயின் வேண்டுகோளைத் தனயனும் நொடியில் முடித்தார். உட்கார்ந்த வண்ணமாகவே இருந்த சப்பாணி, இஃதை உணரவில்லை. உலர்ந்து போயிருந்த காலில் உயிர் வந்துவிட்டதை அவன் உணரவில்லை. மோர் பருகக் கொடுத்ததில் தனக்கு மகிழ்ச்சி எனக் கூறி, இன்னும் ஓர் உதவி தனக்குச் செய்யுமாறு, அவனிடம் கூறினாள் அன்னை.

நாகையில் இருக்கின்ற கத்தோலிக்கச் செல்வந்தர் ஒருவரிடம் சென்று, இந்த இடத்தில் கோவில் ஒன்று கட்டுமாறு சொல்லும்படி அவனிடம் கூறினாள். இதைக் கேட்டவுடன் சப்பாணி மிகவும் தயங்கினான். நடக்க முடியாத தன் கால்களையும், அந்த அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தானே தவிர, தான் நடக்க முடியாத சப்பாணி என்று எடுத்துச் சொல்ல நா துணியவில்லை. தான் நொண்டி, எழுந்து நிற்கக் கூட முடியாத தன்னை ''நாகை போய் வா" என்றால், அஃது எப்படி முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருந்த அவனிடம் அந்த அன்னை ''எழுந்து நட'' என்றாள். எனவே சப்பாணி தன்னையுமறியாமல் புதுப்பலம் கொண்டு எழுந்தான் தன் காலிலே செங்குருதி பாயும் உணர்வு கண்டான்; காலை நன்றாக ஊன்றி வைத்து நின்றான். சில அடிகள் எடுத்து வைத்தான் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். அத்தாய்க்கு எவ்விதமாக நன்றி செலுத்துவது எனத் தெரியாது திகைத்தான். காட்சியும் மறைந்தது. அவளது கட்டளை நினைவுக்கு வரவே, அந்தச் செல்வந்தரிடம் செய்தியைச் சொல்லிட நாகைக்கு ஓடினான்.

கல்லையும் மண்ணையும் மிதித்தான்
கலங்கிய நீரிலும் குதித்தான் 
மெல்லவே நடந்தனன் ; பின்னால்
வேகமாய்ப் பாதையில் சென்றான்

நாகையில் வாழ்ந்த கத்தோலிக்கச் செல்வந்தரிடம் செய்தியைத் தெரிவித்தான். தான் குணமானதையும் கூறினான். அவரும் இதற்கு முந்திய இரவு திருச் சுதனை ஏந்தியவண்ணமாய் தேவதாய் தனக்களித்த காட்சியையும் கண்டிருந்தார். எனவே அன்னைக்கு ஆலயம் கட்டுவது பற்றித் திட்டமிட்டார். சொன்னவை எல்லாம் கேட்டும், முடவன் நடப்பதைக் கண்டும் வியந்து, தானும் அன்னை காட்சி தந்த இடம் போக எண்ணினார். இருவரும் நடுத் திட்டையடைந்து, முழந்தாட்படியிட்டு, அன்னையை இறைஞ்சி மன்றாடினர். பிறவிச் சப்பாணி ஓடி ஆடித் திரிவதைக் கண்ட ஊர் மக்களும் வியந்தனர். அந்த நாகப்பட்டினத்துச் செல்வந்தர்; ஊர் மக்களின் ஒத்துழைப்போடு, மண்ணாலே சுவரெழுப்பி, மேலே கூரை வேய்ந்து ஒரு சிறு கோவிலைக் கட்டி முடித்தார். தமது திருக்கரங்களில் உலக மீட்பரை ஏந்திய வண்ணமாய் அருள் முகங் கொண்ட அன்னையின் சுரூபத்தைத் தான் கனவில் கண்டவாறு செய்து, பீடத்தில் வைத்தார்.

மின்னிய வானமீன் மாமுடி யாக,
வீசிய கதிரொளி பொன்னுடை யாகக் 
கன்னியும் அமர்ந்தனள் ; புதல்வனை ஏந்திக்
கனிவுற வையகக் காவலும் ஆனாள்.

நடுத் திட்டில் மோர் விற்றுக் கொண்டிருந்த சப்பாணி குணமடைந்த புதுமை எப்பக்கமும் பரவியது. குடிசைக் கோவிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கினர். பலருக்குப் பலவிதமான நலன்களை மரியன்னை தந்தாள். முதன்முதல் சப்பாணிக்கு ஆரோக்கியம் அளித்ததாலும், அதற்குப் பின்னர் பல்வேறு துயரங்களால் வருந்தியவர்க்கும் ஆரோக்கியம் தந்ததாலும், அவ்வன்னைக்கு ஆரோக்கிய மாதா என மக்கள் காரணப் பெயரிட்டு, அன்புடன் அழைத்தார்கள்.

உடம்பிலே பெரும்பிணி வேதனை ஒழித்தாள்;
உயிர்கெட வருத்திய துயரமும் மாய்த்தாள்; 
சுடும்பகைப் பாம்பினை ஒடுக்கிய செல்வி
தூய ஆரோக்கிய அன்னையாய் நின்றாள்!