இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய நற்கருணை தேவத் திரவிய அனுமானம் தேவசிநேகத்தை நம்மில் பற்றியெரியச் செய்கிறது!

மேலும், இந்தத் தேவத் திரவிய அனுமானம் தேவசிநேகத்தை நம்மில் பற்றியயரியச் செய்கிறது: "அவர் என்னைத் திராட்சை இரசம் வைக்கும் அறைக்குக் கூட்டி வந்தார்; என்னில் நேசத்தைத் திட்டப்படுத்தினார். புஷ்பங்களை வைத்து என்னைக் காத்துக் கொள்ளுங்கள்; என்னைத் தாங்கக் கனிகளை என் சுற்றிலும் வையுங்கள்; அன்பின் மிகுதியால் சோகம் அடைந்திருக்கின்றேன்'' (உந்.சங்.2:4,5). திராட்சை இரசம் வைக்கும் இந்த அறை திவ்விய நன்மையே என்று அர்ச். நிஸ்ஸா கிரகோரியார் கூறுகிறார். அதில் ஆன்மா தேவசிநேகத்தால் எவ்வளவு போதை கொள்கிறது என்றால், அது இவ்வுலகையும், படைக்கப்பட்ட எல்லாவற்றையும் மறந்து போகிறது. 

சேசுநாதர் தங்களில் தேவசிநேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் தம்மைப் பெற்றுக் கொள்ளும் ஆத்துமங்களில் அவர் எத்தகைய உக்கிரமான அன்பின் சுவாலைகளைப் பற்றியயரியச் செய்கிறார்! ஒரு நாள் ஒரு குருவின் கரங்களில் சேசுநாதர் அன்பின் தீச்சூளை போல் இருப்பதை அர்ச். சியயனா கத்தரீனம்மாள் கண்டாள். இதன் காரணமாக, திவ்விய நன்மை வாங்கும் அனைவரின் இருதயங்களும் எவ்வாறு இப்படிப்பட்ட ஒரு நெருப்பால் பற்றியயரியாமலும், முற்றிலும் சுட்டெரிக்கப்படாமலும் இருக்கின்றன என்று அவள் வியந்தாள். அர்ச். லீமா ரோஸ், தான் திவ்விய நன்மை வாங்கும் போதெல்லாம் சூரியனையே நாவில் வாங்குவது போலத் தனக்குத் தோன்றுவதாகக் கூறுவது வழக்கம். இதன் காரணமாக, எத்தகைய மிகப் பிரகாசமான ஒளிக்கதிர்கள் அவளது முகத்திலிருந்து சுடர் வீசின என்றால், அவளைப் பார்ப்பவர்கள் கண்கூசிப் போவது வழக்கமாக இருந்தது! எத்தகைய கடும் வெப்பம் அவளுடைய வாயினின்று புறப்பட்டது என்றால், அவள் திவ்விய நன்மை வாங்கிய பின், அவளுக்கு ஏதாவது குடிக்கக் கொடுப்பவர்கள், ஏதோ தீச்சூளையின் அருகில் சென்றவர்களைப் போல, தங்கள் கரம் பொசுங்குவது போல் உணர்ந்தார்கள். 

பக்தியுள்ள அரசரான அர்ச். வென்செஸ்லாஸ் திவ்விய நற்கருணை சந்திக்கச் சென்ற போதெல்லாம், தமது வெளித் தோற்றத்திலும் கூட அவர் எப்பேர்ப்பட்ட பக்தியார்வத்தால் பற்றியெரிவதாகத் தோன்றினார் என்றால், அவரோடு துணைக்குச் செல்லும் ஊழியன், தரையெங்கும் பனி படர்ந்திருக்கும் சமயங்களில், புனிதரின் பாதச் சுவடுகளிலேயே தன் பாதங்களை வைத்து நடந்து செல்வான். இதனால் அவன் எப்போதும் ஒரு கதகதப்பை உணர்ந்தானே தவிர, குளிர் அவனை ஒருபோதும் பாதித்ததேயில்லை. "திவ்விய நற்கருணை நம்மை நெருப்புப் பற்றியெரியச் செய்யும் தீச்சுவாலையாக இருக்கிறது. இதன் காரணமாக, நெருப்பைக் கக்கும் சிங்கங்களைப் போல, பசாசுக்கு அச்சம் தருபவர்களாக, அந்தத் திவ்விய பந்தியிலிருந்து நாம் திரும்பி வரலாம்'' என்று அர்ச். கிறிசோஸ்தோம் கூறுகிறார். முடிந்த போதெல்லாம் ஆசையோடு திவ்ய நன்மை உட்கொள்வோம் என்றால், பசாசு ஒருபோதும் நம்மை சோதிக்கக் கூட தைரியம் கொள்ள மாட்டான்.

ஆனால், "நான் அடிக்கடி திவ்விய நன்மை உட்கொள்வதில்லை, ஏனெனில் தேவசிநேகத்தில் நான் மிகவும் குளிர்ந்திருப்பதாக உணர்கிறேன்'' என்று சிலர் கூறுவார்கள். தனக்குக் குளிர் அதிகமாக இருப்பதால், தான் நெருப்பின் பக்கத்தில் செல்வதில்லை என்று ஒருவன் சொல்வதற்கு இது ஒப்பானது. உண்மையாகவே கடவுளை நேசிக்க நாம் விரும்பினால், நாம் எவ்வளவு அதிகம் குளிர்ந்தவர் களாக உணர்கிறோமோ, அவ்வளவு அடிக்கடி பீடத்தின் இந்த மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தை நாம் அணுகிச் செல்ல வேண்டும் என்று ஜெர்ஸன் கூறுகிறார். ""ஏன் அடிக்கடி திவ்விய நன்மை வாங்குகிறாய் என்று யாராவது உன்னைக் கேட்டால், உத்தமமானவர்களும், குறைபாடுள்ளவர்களுமான இரு வகையினரும் திவ்விய நன்மை வாங்க வேண்டும்; உத்தமமானவர்கள் தங்கள் உத்தமதனத்தில் நிலைத்திருப்பதற்கும், குறைபாடுள்ளவர்கள், உத்தமதனம் அடைவதற்கும் இதைச் செய்ய வேண்டும் என்று பதில் சொல்'' என்று அர்ச். பிரான்சிஸ் சலேசியார் எழுதுகிறார். இதே முறையில் அர்ச். பொனவெந்தூரும், ""நீ குளிர்ந்தவனாகவே இருந்தாலும், தேவ இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அவரை அணுகிச் செல். ஒருவன் எவ்வளவு அதிக சுகவீனமாக உணர்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவனுக்கு மருத்துவர் தேவைப்படுகிறார்'' என்கிறார். சேசுநாதர் அர்ச். மெட்டில்டம்மாளிடம்: ""நீ நன்மை வாங்க இருக்கும்போது, எந்த ஒரு இருதயமும் உணர்ந்திருக்கக் கூடிய முழுமையான அன்பை என்மீது நீ கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பு; அப்போது, நீ விரும்புவது போலவே, அத்தகைய அன்பு நிஜமாகவே உன்னுடையது என்பது போல, நான் அதை ஏற்றுக்கொள்வேன்'' என்றார்.

என் சேசுவே, எல்லாவற்றிற்கும் மேலான நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை மட்டுமே நேசிக்க நான் விரும்புகிறேன். உம்மோடு தொடர்பில்லாத எல்லா நாட்டங்களையும், ஆசாபாசங்களையும் என் இருதயத்திலிருந்து அகற்றும்படி உம்மை மன்றாடுகிறேன். உம்மை நேசிக்கவும், உமக்கு எதிராக நான் செய்த பாவங்களுக்காக அழவும் எனக்குக் காலம் கொடுத்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் சேசுவே, நீர் ஒருவரே என் பிரியத்துக்குரியவராக இருக்க வேண்டுமென நான் ஆசிக்கிறேன். எனக்கு உதவும், என்னைக் காப்பாற்றும், என் இரட்சணியம் என் முழு இருதயத்தோடு உம்மை நேசிப்பதிலும், இவ்வாழ்விலும், மறுவுலகிலும் உம்மை எப்போதும் நேசிப்பதிலும் அடங்கி யிருப்பதாக. மரியாயே, என் தாயாரே, சேசுகிறீஸ்துநாதரை நேசிக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள், எனக்காக அவரிடம் ஜெபியுங்கள்.