இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எழுந்து வாரும் ஆண்டவரே, உமது இளைப்பாற்றியின் ஸ்தலத்திற்கு எழுந்து வாரும்

உயிர்த்தெழுந்த இரட்சகரின் உரிமையுள்ள வீடு, ஆசீர்வதிக்கப் பட்டவர்களின் இல்லமாகிய பரலோகமே. ஆனால் சேசுநாதர் இன்னும் நாற்பது நாட்கள் இவ்வுலகில் தங்கியிருக்க விரும்பினார். இந்நாட்களில் அவர், தாம் பரலோகத்திற்கு ஆரோகணமாவதற்கு முன்பாக, தமது உயிர்ப்பில் தம் சீடர்களுக்குள்ள விசுவாசத்தை பலப்படுத்தவும், அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரவும் மீண்டும் மீண்டும் அவர்களுக்குக் காட்சியளித்தார். இதனிடையே தேவதூதர்கள் தங்கள் அரசரைத் தங்கள் பரலோக நாட்டில் கொண்டிருக்க ஏக்கத்தோடு ஆசித்தார்கள். இதன் காரணமாக அவர்கள், ""எழுந்தருளி வாரும் ஆண்டவரே, உமது இளைப்பாற்றியின் ஸ்தலத்திற்கு எழுந்தருளி வாரும்'' (சங்.131:8) என்ற தாவீதின் வார்த்தைகளில் தொடர்ந்து அவரை அழைத்துக் கொண்டே இருந்தார்கள். வாரும் ஆண்டவரே, இப்போது மனிதர்களை நீர் மீட்டு இரட்சித்து விட்டதால், விரைந்து வாரும்; உமது இராச்சியத்திற்கு வந்து, எங்களோடு தங்கும்.

அந்த மகிமையான நேரம் எப்படி வந்து சேர்ந்து நம் திவ்ய இரட்சகர், சுமார் நூற்றிருபது சீடர்களோடு ஒலிவ மலையின் மீது ஏறிச் செல்கிறார் என்று பார். அதன்பின் தமது கரங்களை வானை நோக்கி உயர்த்தி, சேசுநாதர் அவர்களை ஆசீர்வதித்த பின், வெற்றி வீரராக, மாபெரும் மகிமை தம்மைச் சூழ்ந்திருக்க, வானங்களுக்குள் எழுந்தருளிச் செல்கிறார். ஓர் அரசன் தன் இராச்சியத்திற்குள் ஆடம்பரமான முறையில் நுழையும்போது, அவன் தன் தலைநகரத்தின் மதில் வாயில்கள் வழியாகக் கடந்து போவதில்லை, ஏனெனில் அவ்விழாவன்று அவனுக்கு வழிவிடும்படியாக, வாயில்கள் அகற்றப்படுகின்றன. இவ்வாறே சேசுகிறீஸ்துநாதர் இப்போது பரலோகத்திற்குள் நுழையும் வேளையில் சம்மனசுக்கள் கூடி நின்று: ""மன்னர்களே! உங்கள் கதவுகளை உயர்த்துங்கள்; நித்திய கபாடங்களே (வாசல்களே)! உயர்ந்து நில்லுங்கள்; மகிமையின் அரசர் உட்பிரவேசிப்பார்'' என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

சேசுநாதர் நமக்காக மரிப்பதற்கு முன், மோட்சம் மூடப் பட்டிருந்தது. ஆனால் இன்று, ஆண்டவரே, கைதிகளின் மகிமை மிக்க ஒரு கூட்டத்தோடு, லிம்போவிலிருந்து வந்து, உம்மோடு மோட்சத்திற்குப் பறந்து செல்கிற ஆசீர்வதிக்கப்பட்ட, பெருந்திரளான ஆத்துமங்களோடு நீர் வானமண்டலங்களின்மீது எழுந்தருளிச் செல்கிறீர். ""உன்னதத்தில் தேவரீர் ஆரோகணமாகி அடிமைப்பட்டவர்களைக் கூட்டிக்கொண்டு போனீர்'' (சங்.67:16). தமது மரணத்தாலும், மகிமையுள்ள மோட்ச ஆரோகணத்தாலும் நம் இரட்சகர் தம்மை நேசிக்கிற அனைவருக்கும் மோட்சத்தைத் திறந்து வைத்திருக்கிறார். ஆ, மனிதர்களுக்காக மகிமையின் அரசரான சேசுநாதர் பரலோக இராச்சியத்தை வெற்றி கொள்ளும்படி எவ்வளவோ அதிகமான துன்பங்களை அனுபவித்த பின்னும், ஏராளமான மூடத்தனமுள்ள பாவிகள் எந்த மதிப்புமற்ற இன்பங்களுக்காகவும், ஒரு வெறும் ஒன்றுமில்லாமைக்காகவும் மோட்சத்தை வேண்டாமென்று தள்ளி விடுவதும், மோட்சப் பேரின்பத்தைத் தள்ளி விட்டு, நரக வாதைகளை ஏற்றுக் கொள்வதும் எவ்வளவு புலம்புதலுக்குரியது!

நம் மத்தியஸ்தரான சேசுநாதரின் பேறுபலன்களின் வழியாக, நாம் ஞானஸ்நானத்தில் கடவுளின் பிள்ளைகளாக ஆகும் வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டோம். ""அப்படியே நாம் பிள்ளைகளென்றால், சுதந்தரக்காரராகவும் இருக்கிறோம். அதாவது: சர்வேசுரனுடைய சுதந்தரக்காரரும், கிறீஸ்துநாதருக்கு உடன் சுதந்தரக்காரராகவும் இருக்கிறோம்.'' ஆனால் அர்ச். சின்னப்பர் தொடர்ந்து: ""ஆயினும் அவரோடுகூட மகிமை யடையும்படிக்கு அவரோடுகூடப் பாடுப்பட்டால்தான் அப்படி இருப்போம்'' என்கிறார் (உரோ.8:17). அதன்பின் பரலோக நம்பிக்கையால் பலப்படுத்தப்பட்டு, தைரியத்தோடு துன்புறும்படி நம் அனைவருக்கும் அறிவுறுத்துகிறார்.  ""இக்காலத்தின் துன்ப துரிதங்கள் இனி நம்மிடத்தில் வெளிப்படப்போகிற மகிமைக்குச் சரிதகைமையானதல்ல என்று எண்ணுகிறேன்'' (உரோ.8:18). தன் கந்தைத் துணிகளைக் கொடுத்து மகிழ்ச்சியோடு ஒரு பெரிய இராச்சியத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பாத அளவுக்கு மூடத்தனமுள்ள பிச்சைக்காரன் ஒருவனுமில்லை.

ஓ, என் சேசுவே, என் பாவங்களை நான் பார்க்கும்போது, மோட்சத்தை நாட வெட்கப்பட்டு நிற்கிறேன். ஆனால் சிலுவையின் மீது தேவரீரை அடியேன் காணும்போது, நான் அறிந்துள்ளபடி, என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், எனக்கு மோட்சத்தைப் பெற்றுத் தரவுமே நீர் மரித்தீர் என்பதால், மோட்சத்தை அடைவேன் என்று நம்புவதை நிறுத்தி விட என்னால் இயலாது. ஆ, என் சேசுவே, உம்மை இழந்து போகும் எல்லா ஆபத்திலிருந்தும் என்னை விடுவிக்கும் அந்நாள் என்று வந்து சேரும்? ஓ மரியாயே, மோட்ச இராக்கினியே, உங்கள் பரிந்துரை கடவுளின் திருமுன் முழு வல்லமையுள்ளது. அடியேன் உங்களில் என் நம்பிக்கையை வைக்கிறேன்.

பரலோகமே! ஓ பரலோகமே! ஓ என் ஆண்டவரே, உம்மை இழந்து போகும் அச்சமின்றி, தேவரீரை நான் எப்போது முகமுகமாய்த் தரிசித்து, உம்மைத் தழுவிக் கொள்வேன்!