இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியிடம் தஞ்சமடைதல்

"பரலோக இராக்கினி எந்த அளவுக்குத் தயவும் தாராளமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மிக அற்பமான, சிறு சிறு பக்தி முயற்சிகளுக்கும் கூட மிகப் பெரிய அளவில் தமது ஊழியர்களுக்கு வெகுமதியளிக்கிறார்கள்'' என்று அர்ச். கிரீட் பெலவேந்திரர் கூறுகிறார். ஆயினும் இதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அவை:

முதலாவது, நாம் நம் பக்தி முயற்சிகளை மாமரிக்கு ஒப்புக் கொடுக்கும்போது, நாம் பாவத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்; இல்லாவிடில், அர்ச். பீற்றர் செலஸ்தீன் கூறுகிற கெட்ட போர்வீரனிடம் தான் பேசிய அதே முறையில்தான் மாமரி நம்மிடமும் பேசுவார்கள். அவன் திவ்விய கன்னிகைக்குத் தோத்திரமாக ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பக்தி முயற்சியில் ஈடுபட்டு வந்தான். ஒரு நாள் அவன் பசியால் வெகுவாகத் துன்பப் பட்டுக் கொண்டிருந்த போது, மாமரி அவனுக்குத் தோன்றி, சில மிகச் சுவையான மாமிச வகைகளை அவனுக்குத் தந்தார்கள். ஆனால் அவை இருந்த பாத்திரம் எவ்வளவு அசுத்தமாயிருந்தது என்றால், அவன் அந்த உணவு வகைகளைச் சுவைபார்க்கக் கூட விரும்பவில்லை. திவ்ய கன்னிகை அவனிடம், ""நான் சர்வேசுரனின் தாய். உன் பசியைப் போக்குவதற்காக நான் வந்திருக்கிறேன்'' என்று சொல்ல, அவன் பதிலுக்கு, ""ஆனால், என் இராக்கினியே, இவ்வளவு அசுத்தமான ஒரு பாத்திரத்தில் என்னால் சாப்பிட முடியாது'' என்றான். ""அப்படியானால், இவ்வளவு அசுத்தமான உன் ஆத்துமத்திலிருந்து எனக்கு ஒப்புக்கொடுக்கப்படும் பக்தி முயற்சிகளை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறாய்?'' என்று கேட்டார்கள் மாமரி. இதைக் கேட்டதும், அந்த வீரன் மனந்திரும்பி, ஒரு வனவாசியாகி, ஒரு பாலைவனத்தில் முப்பது வருடங்கள் வாழ்ந்தார். அவரது மரணத்தின் போது மாமரி மீண்டும் அவருக்குத் தோன்றி, அவரைத் தன்னோடு மோட்சத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

மாமரியின் பக்தன் இழக்கப்படுவது தார்மீக ரீதியாக சாத்தியமே யில்லாத காரியம் என்று நாம் சொல்கிறோம்; ஆனால் இதற்கு அவன் ஒன்றில் பாவமில்லாமல் இருக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் அதை விட்டு விடும் ஆசையாவது அவனுக்கு இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் திவ்ய கன்னிகை அவனுக்கு உதவி செய்வார்கள். ஆனால் இதற்கு மாறாக, மாமரி எப்படியும் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் ஒருவன் பாவம் செய்வான் என்றால், அவன் அதன் மூலம் மாமரியின் பாதுகாவலுக்குத் தன்னைத் தகுதியற்றவனாக ஆக்கிக் கொள்கிறான். தனது இரட்சணியத்தை சாத்தியமற்றதாக மாற்றி விடுகிறான்.

ஆ, என் இராக்கினியே, நரகத்திலிருந்து தொடர்ந்து என்னைக் காத்துக் கொள்ளுங்கள்; ஏனெனில், நான் இழக்கப்படுவேன் என்றால், உங்கள் இரக்கத்தாலும், நீங்கள் எனக்குச் செய்துள்ள நன்மைகளாலும் எனக்கு என்ன பயன் இருக்கும்? நான் எப்போதும் உங்களை நேசித்ததில்லை என்றாலும், குறைந்தபட்சம் இப்போதாவது, கடவுளுக்குப் பிறகு, எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை நேசிக்கிறேன். உங்கள் பரிந்துரையின் வழியாக, ஏராளமான வரப்பிரசாதங்களை எனக்குத் தந்தருளுகிற கடவுளிடம் இருந்தோ, உங்களிடமிருந்தோ நான் திரும்பிக் கொள்ள என்னை அனுமதியாதீர்கள். ஓ மரியாயே, என் நம்பிக்கையே, நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். ஆயினும் முதலில் பாவத்திலிருந்து என்னைக் காத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது மட்டுமே நரகத்திற்கு என்னைத் தீர்ப்பிட வல்லதாயிருக்கிறது. 

இரண்டாவது நிபந்தனை மரியாயின் மீது கொள்ளும் பக்தியில் நிலையாயிருப்பதாகும்: ""நிலைமை வரம் மட்டுமே நித்திய முடியைப் பெற்றுத் தரும்'' என்கிறார் அர்ச். பெர்னார்ட். தாமஸ் அ கெம்பிஸ் இளைஞனாயிருந்த போது, சில குறிப்பிட்ட ஜெபங்களைச் சொல்லி, திவ்ய கன்னிகைக்குத் தம்மை அனுதினமும் அர்ப்பணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்பின் இந்த வழக்கத்தை அவர் சிறிது காலம் நிறுத்தி விட்டார். இறுதியாக அதை முழுமையாகக் கைவிட்டு விட்டார். ஒருநாள் இரவில் அவர் மாமரியைக் கனவில் கண்டார்; மாமரி அவருடைய தோழர்களை எல்லாம் அன்போடு அணைத்துக் கொண்டார்கள். ஆனால் அவருடைய முறை வந்தபோது, அவர்கள் அவரிடம்: ""உன் பக்தி முயற்சிகளைக் கைவிட்டு விட்ட நிலையில் நீ என்ன எதிர்பார்க்கிறாய்? போய்விடு, என் சீராட்டல்களுக்கு நீ தகுதியற்றவன்'' என்றார்கள். இதைக் கேட்டவுடன் தாமஸ் திடுக்கிட்டு விழித்தார். அதன்பின் அவர் தம் வழக்கமான ஜெபங்களை மீண்டும் ஜெபிக்கத் தொடங்கினார். இதனாலேயே அர்ச். லாரென்ஸின் ரிச்சர்ட் என்பவர் சரியான காரணத்தோடு: ""மாமரியின் மீது தனக்குள்ள பக்தியில் நிலையாயிருப்பவன் தன் நம்பிக்கையில் ஆசீர்வதிக்கப்படுவான், அவன் தான் ஆசித்ததையெல்லாம் பெற்றுக்கொள்வான்'' என்று கூறுகிறார். ஆனாலும் இப்படி நிலையாயிருப்பது பற்றி யாரும் உறுதியோடு இருக்க முடியாது என்பதால், மரணத்திற்கு முன் தான் இரட்சிக்கப் படுவது பற்றியும் யாரும் உறுதியோடு இருக்க முடியாது. சேசு சபையின் அர்ச். பெர்க்மான்ஸ் இக்காரியத்தில் நம் தனிப்பட்ட கவனத்திற்குத் தகுதியுள்ளவராக இருக்கிறார். இந்தப் புனித இளைஞர் மரணத் தருவாயில் இருந்த போது, அவர் இவ்வுலகை விட்டுப் புறப்படுமுன், அவருடைய தோழர்கள், பரிசுத்த மாமரிக்கு முற்றிலும் உகந்த எந்த பக்தி முயற்சியைத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தங்களுக்குச் சொல்லும்படி அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள். ""எவ்வளவு சிறியதாயிருந்தாலும், நிலையானதாயிருக்கும் எந்த பக்தி முயற்சியும் மாமரிக்குப் பிரியமானதே'' என்ற அற்புதமான வார்த்தைகளைப் பதிலாகத் தந்தார். ஓ, முன்பு மாமரிக்குத் தோத்திரமாகத் தாங்கள் கடைப்பிடித்து வந்த பக்தி முயற்சிகளில் நிலையாயிருந்திருந்தால் இரட்சிக்கப்பட்டிருக்கக் கூடிய எத்தனை பேர், அதில் நிலைத்திராததால் இப்போது நரகத்தில் இருக்கிறார்கள்!

ஓ என் தாயாரே, என் நம்பிக்கைகளையெல்லாம் உங்கள் பேரில் வைக்கிறேன்; உங்களிடமிருந்து ஒவ்வொரு வரப்பிரசாதத்தையும் நான் எதிர்பார்க்கிறேன். அந்தோ, நான் கொடிய நீசப் பாவியாக இருப்பதால், இது வரை நான் பாவத்தில் விழுந்து வந்தேன், ஏனெனில் உங்களிடம் நான் தஞ்சமடைந்ததில்லை. இப்போதோ, சேசுநாதரின் பேறுபலன்களின் வழியாகவும், உங்கள் ஜெபங்களின் வழியாகவும், என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக் கொண்டேன் என்று நான் நம்புகிறேன். ஆனால் நான் தேவ வரப்பிரசாதத்தை மீண்டும் இழந்து போகலாம். ஆபத்து கடந்து போய்விடவில்லை; என் எதிரிகள் உறங்குவதேயில்லை. நீங்கள் எனக்கு உதவுவீர்கள் என்றும், நான் என்னை உங்களிடம் அர்ப்பணித்தால், உங்கள் உதவியைக் கொண்டு வெற்றி பெறுவேன் என்றும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் ஆபத்துக் காலத்தில், உங்களைக் கூவியழைப்பதை நான் அசட்டை செய்து, அதனால் இழக்கப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். ஆகவே, நரகத்தின் தாக்குதல்களின் போது, ""மரியாயே, எனக்கு உதவி செய்யுங்கள்! என் தாயாரே, என் சர்வேசுரனை இழந்து போக என்னை அனுமதிக்காதீர்கள்'' என்று சொல்லி உங்களிடம் எப்போதும் தஞ்சமடையும் வரத்தை உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்.