இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாறைப் பிளவுகள்

ஓ, புனித ""பாறைப் பிளவுகளில்,'' அதாவது சேசுவின் திருக் காயங்களில் எத்தகைய பாதுகாப்பான தஞ்சஸ்தலத்தை நாம் கொண்டிருக்கிறோம்! ""மீட்பரின் காயங்கள் பாறைப் பிளவுகளாக இருக்கின்றன ; இவற்றில் என் ஆத்துமம் தன் நம்பிக்கையை வைத்துள்ளது'' என்கிறார் அர்ச். தமியான் இராயப்பர்.

சேசுநாதரின் திருப்பாடுகளை தியானிப்பதை விட, தேவசிநேகத்தை நம்மில் மிக நிச்சயமாகத் தூண்டக் கூடிய வேறு வழி எதுவுமில்லை. சேசுநாதரின் திருக்காயங்கள், அன்பின் காயங்களாக இருப்பதால், அவை இருதயங்களை மிகக் கடுமையாகக் காயப்படுத்தும் அம்புகளாகவும், மிகக் குளிர்ந்திருக்கிற ஆத்துமங்களையும் கூட நேச அக்கினியால் பற்றியெரியச் செய்யும் தீச்சுவாலைகளாகவும் இருக்கின்றன என்று அர்ச். பொனவெந்தூர் சொல்கிறார்: ""ஓ கல்லான இருதயங்களைக் காயப்படுத்துபவையும், குளிரால் உறைந்து போன மனங்களைப் பற்றியெரியச் செய்பவையுமான திருக்காயங்களே!'' ஆண்டவரை விசுவசித்து, அவரது திருப்பாடுகளைத் தியானிக்கிற ஓர் ஆத்துமம் அவரை நோகச் செய்வதும், அவரை நேசிக்காமல் இருபபதும் சாத்தியமேயில்லை. இன்னும் மேலாக, நம்மீது கொண்ட நேசத்தால் பைத்தியக்காரர் போல் ஆகிவிட்ட ஒரு கடவுளைக் கண்டு அது ஒரு பரிசுத்த நேசப் பைத்தியமாகாமல் இருக்க சாத்தியமேயில்லை. ""அளவுக்கு அதிகமான அன்பினால் கவரப்பட்ட தேவ ஞானத்தை நாம் கண்டிருக்கிறோம்'' என்று அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார். இதன் காரணமாகவே, சிலுவையில் அறையுண்ட சேசுநாதரின் திருப்பாடுகள் போதிக்கப்படுவதைப் புறவினத்தார் கேட்டபோது, அதை அவர்கள் மடமை என்று நினைத்தார்கள் என்று அப்போஸ்தலர் கூறுகிறார்: ""நாங்களோ சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துநாதரைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதர்களுக்கு இடறலும், அஞ்ஞானிகளுக்குப் பைத்தியமுமாயிருக்கிறார்'' (1கொரி.1:23). எங்களுக்குப் பிரசங்கிக்கப்பட்டவரைப் போல, சர்வ வல்லவரும், பூரண மகிழ்ச்சியுள்ளவருமாகிய ஒரு சர்வேசுரன் தமது சிருஷ்டிகளுக்காக மரிக்க சித்தம் கொண்டிருப்பது எப்படி சாத்தியம் என்று அவர்கள் கேட்டார்கள்.

ஆ, என் சேசுவே, உம் திருச்சரீரத்தின் வெளிப்புறத்தை நான் உற்று நோக்கினால், காயங்களையும், இரத்தத்தையும் மட்டுமே நான் காண்கிறேன். உமது திரு இருதயத்தினுள் நான் உற்று நோக்கினால், நீர் மரண அவஸ்தைகளை அனுபவிக்கச் செய்யும் கசப்பையும், வேதனையையும் தவிர வேறு ஒன்றையும் நான் காணவில்லை. ஆ, மனிதர் மீதுள்ள நேசத்தால் ஈர்க்கப்பட்டவரான தேவனே, இவ்வளவு மேலான நன்மைத்தனத்தையும், இவ்வளவு மேலான ஒரு நேசத்தையும் மனிதர்கள் இவ்வளவு மோசமாக அசட்டை செய்வது எப்படி சாத்தியமாகிறது? நேசம் நேசத்தால் ஈடுசெய்யப்படுகிறது என்று வழக்கமாகச் சொல்லப்படுகிறது; ஆனால் உமது அன்பு--எந்த வகையான அன்பைக் கொண்டு அதற்கு நாங்கள் ஈடு செய்ய முடியும்? எங்களுக்காக மரிப்பதில் நீர் எங்கள் மீது கொண்டிருந்த அன்பிற்கு ஈடு செய்ய, உமக்காக மரிக்கும் ஒரு கடவுள் எங்களுக்கு அவசியம்! ஓ சேசுநாதரின் திருச்சிலுவையே, ஓ சேசுநாதரின் திருக் காயங்களே, ஓ அவருடைய திருமரணமே! என் நேச சேசுவை நேசிக்கும்படியாக நீங்கள் என்னை அவரோடு இறுக்கமாகக் கட்டுகிறீர்கள்!

இதோ, உன் இரட்சகர் மரிப்பதையும், அவரது இறுதி மூச்சு, ""எல்லாம் முடிந்தது!'' (அரு.19:30) என்று சொல்வதையும் பார். ""மனிதர்களே, உங்கள் மீட்பிற்காக எல்லாம் செய்து முடிக்கப்பட்டு விட்டது. நீங்கள் என்னை நேசிக்கும்படி செய்ய இதற்கு மேல் என்னால் எதையும் செய்ய முடியாது என்பதால், என்னை நேசியுங்கள்'' என்று அவர் சொன்னது போலாயிற்று. என் ஆத்துமமே, நீ உன் கண்களை உயர்த்தி, இப்போது மரிக்கும் தருவாயிலிருக்கிற உன் சேசுவைப் பார். மங்கிக் கொண்டிருக்கும் அந்தத் திருவிழிகளையும், வெளிறிக்கொண்டிருக்கும் அந்தத் திருமுகத்தையும், மிகப் பலவீனமாகத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த இருதயத்தையும், இப்போது மரணத்திற்குத் தன்னைக் கையளித்துக் கொண்டிருக்கும் அந்தத் திருச்சரீரத்தையும் பார். அந்தத் திருச் சரீரத்தை விட்டுப் பிரியும் நிலையில் இருக்கும் அந்த அழகிய ஆத்துமத்தைப் பார். வானங்கள் இருண்டு போகின்றன, பூமி நடுங்குகிறது, கல்லறைகள் திறக்கின்றன. இவை உலகத்தைப் படைத்தவர் மரிக்கப் போகிறார் என்பதற்கான அடையாளங்களாக இருக்கின்றன. இதோ, இறுதியாக, சேசுநாதர் தமது பிதாவிடம் தமது ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்துமத்தை ஒப்படைத்தபின், தமது உயிரைக் கையளிப்பதன் அடையாளமாக அவர் தம் தலைகுனிகிறார். இந்தக் கணத்தில் தமது இந்த ஒப்புக்கொடுத்தலை நம் இரட்சணியத்திற்காக புதுப்பிக்கிறார். நீண்ட நேரமாகத் தமது துயரத்தின் வன்முறைக்கு உட்பட்டிருந்தபின், அவர் மரணமடைந்து, தமது ஆத்துமத்தைத் தமது நேசப் பிதாவின் திருக்கரங்களில் ஒப்படைக்கிறர்.

என் ஆத்துமமே, இந்தப் பரிசுத்த சிலுவையை அணுகி வா. மரித்த உன் இரட்சகரின் திருப்பாதங்களை அணைத்துக் கொண்டு, உன் மீது வைத்த அன்பினாலேயே அவர் மரித்திருக்கிறார் என்பதைத் தியானி. ஆ என் சேசுவே, என் மீது நீர் கொண்ட பாசம் எந்த அளவுக்கு உம்மைத் தாழ்த்தி விட்டது! , என்னை விட அதிகமாக வேறு யார் உமது மரணத்தின் கனிகளைச் சுவைத்திருக்க முடியும்? இன்று முதல், வேறு யாரையுமன்றி, உம்மை மட்டுமே நான் நேசிக்கும்படியாக, ஒரு சர்வேசுரன் எனக்காக மரிக்கும் அளவுக்கு, அவர் என் மீது கொண்டிருந்திருக்க வேண்டிய அன்பின் தன்மையை நான் புரிந்துகொள்ளச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறேன். ஓ அனைத்திலும் மேலான நன்மையே, நான் உம்மை நேசிக்கிறேன்; ஓ என் ஆன்மாவின் மெய்யான நேசரே, உமது திருக்கரங்களில் அதை நான் இப்போது ஒப்புக்கொடுக்கிறேன். என் முழு நேசத்திற்கும் தகுதியுள்ள ஒரே ஒருவரான உம்மை மட்டுமே நான் நேசிக்கும் படியாக, உமது திருமரணத்தின் பேறுபலன்களைப் பார்த்து, உலக நேசங்கள் அனைத்திற்கும் நான் மரிக்கும்படி செய்ய உம்மை மன்றாடுகிறேன். மரியாயே, என் நம்பிக்கையே, எனக்காக சேசுவிடம் மன்றாடுங்கள். சேசுவே, எங்கள் நேசமே, வாழ்க! மரியாயே எங்கள் நம்பிக்கையே, வாழ்க!