ஒரு பாவசங்கீர்த்தன குருவைத் தேர்ந்து கொள்ளுதல்

நாம் அனைவருமே தனிப்பட்ட சுவைகளையும், விருப்பங்களையும் கொண்டிருக்கிறோம். இயல்பாகவே நாம் இந்த சுவைகளுக்கேற்ற விதத்தில் நம் நண்பர்களைத் தேர்ந்து கொள்கிறோம்.

கடவுளும் கூட, நம்மீது தமக்குள்ள கனிவுள்ள அக்கறையில், ஒவ்வொருவரும் தனது சொந்த பாவசங் கீர்த்தன குருவைத் தேர்ந்து கொள்ள அனுமதிக்கிறார்.

நம் பங்குக் குரு நமக்கு ஞானஸ்நானம் தருகிறார். நமக்கு மெய்விவாகம் செய்து வைக்கிறார்; மரண நேரத்தில் நமக்கு அவஸ்தை நன்மை வழங்குவதும் அவருடைய கடமையாக இருக்கிறது; ஆனால் பாவசங்கீர்த்தனங்களுக் காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பல குருக்களிடையே தங்கள் சொந்தப் பாவசங்கீர்த்தன குருவைத் தெரிந்து கொள்ள அனைவருமே சுதந்திரமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஏன் இந்த சுதந்திரம் நமக்குத் தரப்பட்டுள்ளது? நாம் எந்தத் தயக்கமுமின்றி, முழு மன அமைதியோடு பாவசங்கீர்த்தனம் செய்யும்படியாகவே.

தங்களை அணுகி வருபவர்களை மிக அதிகமான பிறர்சிநேகத்தோடு நடத்தும் கடுமையான கடமை பாவசங்கீர்த்தன குருக்களுக்கு உண்டு. ஆனாலும், சாதாரண மனிதர்களைப் போலவே அவர்களும் வெவ்வேறு விதமான மனநிலைகளையும் குணநலன்களையும், நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள். தங்கள் கலாச்சாரத்திலும், எண்ணங்களிலும் வேறுபட்டிருக்கிறார்கள். ஆகவே தனக்கு விருப்பமான ஒரு குருவைத் தேர்ந்து கொள்வது பாவசங் கீர்த்தனம் செய்பவனின் பொறுப்பாகவே இருக்கிறது.

பாவசங்கீர்த்தன குருக்கள் தங்கள் சொந்த விருப்பப் படி செயல்படுவதில்லை, தங்கள் சொந்தக் கருத்துகளின் படி முடிவுகள் எடுப்பதுமில்லை. அவர்கள் சேசுக்கிறீஸ்து நாதரின் சத்தியத்தைப் போதிக்கிறார்கள், அவருடைய ஆலோசனைகளை விசுவாசிகளின் இருதயங்களுக்குள் ஊற்றுகிறார்கள், திருச்சபையின் வேதபாரகர்களால் ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறார்கள். இவ்வாறு அவர்களிடம் பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களுக்கு ஆரோக்கியமான போதனையையும், நல்ல ஆலோசனையையும் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதம் முழுமையாகக் கிடைக் கிறது.

(இன்று நல்ல ஆரோக்கியமான கத்தோலிக்க போதகத்தை பல குருக்கள் தங்கள் ஆலோசனைகளுக்கு அடிப்படையாகக் கொள்ள முடியாத நிலை இருப்பதால், இதை நடைமுறையில் அனுசரிப்பது அடிக்கடி எதிர்மறையான விளைவையே ஏற்படுத்து கிறது. ஒருவன் தன் சொந்த விருப்பப்படி ஆன்ம குருவைத் தேர்ந்து கொள்வது பற்றிய சுவாமி ஓ சல்லீவனின் வார்த்தைகள், எல்லாக் குருக்களும் நல்ல ஆரோக்கியமான கத்தோலிக்க அறிவுரை களையே தருவார்கள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில் அவர் இந்தப் புத்தகத்தை எழுதிய போது, இந்த நிலைதான் இருந்தது. இப்போது இது முற்றிலுமாக மாறி விட்டது - தொகுப்பாசிரியர், 1992.)

ஆனால் சில காரியங்களில் பாவசங்கீர்த்தன குரு பலவீனர்களையும், பலவான்களையும், சந்தோஷ உற்சாகமுள்ளவர்களையும் மனச்சோர்வுள்ளவர்களையும், வெது வெதுப்புள்ளவர்களையும் அதிக பக்தியார்வம் உள்ளவர் களையும் உரிய முறையில் கையாள்வதற்கு, தமது சொந்த விவேகத்தையும் தீர்மானத்தையும் பயன்படுத்த வேண்டி யவராகிறார். சிலரை அவர் தூண்டியெழுப்புகிறார், பேறு சிலரை அவர் கட்டுப்படுத்துகிறார், சிலரை அவர் கடிந்து கொள்கிறார், மற்றவர்களை அவர் தேற்றுகிறார். வெவ் வேறான நோய்களுக்கு அவர்கள் வெவ்வேறு விதமான மருந்துகளைப் பயன்படுத்துகிறார். ஒருவருக்கு உணவாக இருப்பது மற்றொருவருக்கு விஷமாகி விடுகிறது.

மேலும், பாவசங்கீர்த்தனம் செய்பவன், தான் மிக நன்றாகப் புரிந்து கொள்பவரும், தன்னை மிக நன்றாகப் புரிந்து கொள்பவருமான ஒரு ஆன்ம வழிகாட்டியைத் தேர்ந்துகொள்ள வேண்டியவனாக இருக்கிறான்.

ஆகவே தங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான ஒரு ஞானத் தகப்பனைத் தங்களுக்குத் தரும்படி எல்லோரும் கடவுளிடம் நீண்ட நேரம், பக்தியார்வத்தோடு ஜெபிக்க வேண்டும். ஒரு மிகச் சரியான, திறமைகள் நிறைந்த வழிகாட்டியின் கரங்களில் ஒருவன் அடையும் ஞான முன்னேற்றமும், அவன் அனுபவிக்கும் திடமான ஆறுதலும் நம்ப முடியாதவையாக இருக்கின்றன. ஒரு நல்ல பாவசங் கீர்த்தன குரு என்னும் கொடை சந்தேகமின்றி, கடவுளிட மிருந்து வருகிற மிகச் சிறந்த வரப்பிரசாதங்களில் ஒன்றாக இருக்கிறது. நன்றாகச் செய்யப்பட்ட ஒரு பாவசங்கீர்த்தனம் நம் வாழ்வின் போக்கையே மாற்றி விடக் கூடியதாக இருக்க லாம். இத்தகைய பல பாவசங்கீர்த்தனங்கள் நிச்சயமாக நம் வாழ்வைத் திருத்தியமைத்து விடும்.

நமக்குப் பொருத்தமான ஒரு தந்தையை, ஒரு நண்பரைக் கண்டுபிடித்த பின், நாம் அவ்வளவு எளிதில் அவரை மாற்றிவிட்டு வேறொருவரிடம் போய்விடக் கூடாது. தன் மருத்துவரிடம் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிற யாரும் வேறு ஒரு புதிய மருத்துவரிடம் செல்வதில்லை.

அடிக்கடி பாவசங்கீர்த்தன குருக்களை மாற்றிக் கொண்டே இருக்கும் வழக்கம், அல்லது, முதலில் அகப்படும் குருவிடம் செல்லும் பழக்கம் ஏற்புடையது அல்ல. ஏனெனில் பல மருத்துவர்கள் இணைந்து வைத்தியம் செய்வது நோயாளியின் உயிரைக் குடித்து விடக்கூடும் என்பது போலவே, பல ஆன்ம குருக்கள் ஒரு பாவியின் மனநிலையைக் குழப்பி விடக் கூடும். எல்லோருமே சந்தேக மின்றி நல்ல அறிவுரையைத்தான் தருகிறார்கள், என்றாலும் அறிவுரை என்பது, மருந்தைப் போன்றது. அது சரியான முறையிலும், சரியான தீர்மானப்படியும் தரப்பட வேண்டும். ஒருவன் அடிக்கடி தன் ஆன்ம குருவை மாற்றிக் கொண்டேயிருந்தால், ஒரு புதிய ஆன்ம குரு அவனுடைய குணத்தையும், தேவைகளையும் உடனடியாகப் புரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?

ஒரு பாவசங்கீர்த்தன குரு தம்மில் நம்பிக்கை வைக்கும் ஆத்துமங்களை அர்ச்சிப்பதில் விசேஷ அக்கறை எடுத்துக் கொள்வதும், அதிக விழிப்பாயிருப்பதும் கூட இயல்பான காரியம்தான். அவர் திவ்விய பலிபூசையில் அவர்களுக்காக மன்றாடுகிறார்; அவர்களுடைய முன்னேற் றத்தில் கவனமாயிருக்கிறார், அவர்களுடைய முயற்சிகளால் ஊக்கப்படுத்தப்படுகிறார். அவர்கள் கடவுளால் தமக்குத் தரப்பட்டவர்கள் என்றும், தம் சொந்தக் குழந்தைகள் என்றும், தமது மகிழ்ச்சி என்றும், தமது மகிமையின் முடி என்றும் கருதுகிறார்: க்ளோரியா எத் கொரோனா மேயா (“என் மகிமையும், என் மகுடமும்'' - அர்ச். சின்னப்பர்).

எல்லா வித ரசனைகளையும், வகுப்புகளையும், பண்பாட்டு நிலைகளையும் கொண்ட பாவசங்கீர்த்தன குருக்கள் இருக்கிறார்கள். பங்குக் குரு தமது மக்களால் அதிகமாகத் தேடப்படுகிறார். அவர் அவர்களுடைய மேய்ப்பராகவும், கிறீஸ்துவில் அவர்களுடைய தந்தை யாகவும் இருக்கிறார். அவரே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், அவர்களைத் திருமணத்தில் இணைத்தார், அவர்களுடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொண்டார். அமைதியான கல்லறைத் தோட்டத்தில் எத்தனை பேருடைய இறுதி வீட்டிற்கு அவர் அவர்களுடன் சென்றிருக்கிறார்! அவருக்கு அவர்கள் மீது பல உரிமைகள் உண்டு, அவர்களும் அதை நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

பல துறைகளைச் சேர்ந்த மனிதர்கள், மருத்துவர் களும், வழக்கறிஞர்களும், விஞ்ஞானிகளும், பத்திரிகை யாளர்களில் அநேகரும் கூட, தங்கள் தொழில்களில் வரும் பிரச்சினைகளுக்கு நல்ல ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும்படி அர்ச். அக்குயினாஸ் தோமையாரின் போதனைகளில் நல்ல அறிவும் அனுபவமும் உள்ள ஓர் அர்ச். சாமிநாதர் சபைக் குருவைத் தேடி வருகிறார்கள்.

இந்த கத்தோலிக்க குருக்கள் உண்மையாகவே எவ்வளவு அற்புதமான மனிதர்களாக இருக்கிறார்கள், பாவசங்கீர்த்தனம் உண்மையாகவே எப்பேர்ப்பட்ட ஒரு வல்லமையாக இருக்கிறது!