இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

வியாபார உலகில், புதியவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும்படி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. அதுவே வெற்றிக்கு முதன்மையான தேவையாக இருக்கிறது. வெற்றியின் பெரும் பகுதி தைரியம், வியாபார யுக்தி, மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீதுதான் கட்டப்படுகிறது. இயல்பாகவே தன்னம்பிக்கை தைரியத்தையும், துணிச்சலையும், சகிப்புத்தன்மையையும் தருகிறது.

ஆன்ம விவகாரங்களிலும் கூட, எல்லா வெற்றியும் நம்பிக்கையின் மீதுதான் கட்டப்படுகிறது என்பதும், தைரியமின்மையே நடைமுறையில் ஒவ்வொரு தோல்விக்கும் காரணமாக இருக்கிறது. ஆனாலும் எந்த விதமான நம்பிக்கையை நாம் கொண்டிருக்க வேண்டும்? ஞான முறையில் வெற்றிகரமான மனிதனுடைய அசைவுறாத தைரியத்தையும், நம்பிக்கையையும் கவனித்துப் பார் - அர்ச். சின்னப்பர் - “என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டு எதையும் செய்ய என்னால் கூடும்!” ஒரு மனிதனிடம் வெறும் தன்னம்பிக்கை எந்த அளவுக்கு இருந்தாலும், “என்னால் எதையும், எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும்” என்று அவன் சொல்ல முடியாது. இருந்தாலும் கடவுளின் இராச்சியத்தின் வீரநாயகர்கள் எல்லோருமே, எல்லாக் காரியங்களையும் தங்களால் செய்ய முடியும் என்று ஒரே விதமாகப் பிரகடனம் செய்வதை உன்னால் கேட்க முடிகிறது. “என்னால் முடியாது” என்றோ, அல்லது, “அது செய்யப்பட முடியாதது” என்றோ அவர்கள் ஒருபோதும் சொல்வதில்லை.

இரண்டு நாடோடிகளாகிய பிச்சைக்காரர்கள் ஒருநாள் ஒரு மலையின் மீது உட்கார்ந்து, உலகை வெற்றி கொள்வதற்கான முறைகளையும் வழிகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் விவாதத்தை முடித்த போது, இருவரும் உலகத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டார்கள் - “கிழக்குப் பக்கமுள்ள எல்லாமும் உமக்கு. இந்தப் பாதியை நான் எடுத்துக் கொள்கிறேன்.” ஒரு வாளோ, அல்லது ஒரு குதிரையோ, அல்லது, போர்க்கவச உடையோ கூட சொந்தமில்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் வெளியே போய், உலகத்தை வெற்றிகொள்ள தீர்மானித்தார்கள். அப்படியே அதைச் செய்தும் முடித்தார்கள்! அர்ச். பிரான்சிஸும், அர்ச். சாமிநாதரும்தான் அந்த இரண்டு பிச்சைக்காரர்கள்! அவர்களுடைய வெற்றியைப் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அவர்களுடைய பலம் எதில் அடங்கியிருந்தது? அது அவர்களுடைய நம்பிக்கையில் அடங்கியிருந்தது! இத்தகைய பிரசித்தமில்லாத இரண்டு ஒன்றுமில்லாதவர்களால் உலகத்தை வெற்றிகொள்ள முடியும் என்று எப்படி நம்ப முடிந்தது? அர்ச். சின்னப்பரின் மாபெரும் நம்பிக்கைக்கு அவர் தருகிற பதிலை வாசித்துப் பார் - “என்னைப் பலப்படுத்துகிறவரில்.” சேசுநாதரில் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும், எல்லா எதிர்பார்ப்புகளையும் வைத்தார்கள். கடவுளில் நம்பிக்கை வைக்கிறவன் தோல்வியடைய மாட்டான்.

இனி, கிறீஸ்துநாதருக்காக உலகத்தை வெற்றி கொள்வது போலவே கடினமானதாக இருக்கிற ஒரு காரியம் இருக்கிறது. இதற்கும் அதே அளவு நம்பிக்கை தேவைப்படுகிறது. சுயத்தின் மீது வெற்றிபெறும் வேலை, உலகத்தை வெற்றி கொள்வது போலவே கடினமானது. உண்மையில், தேசங்களின் மீது வெற்றி பெறுகிற ஒரு படைத்தலைவனை விட, சுயத்தை ஆண்டு நடத்துகிறவன் பெரியவன் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது (பழ. 16:32). எனவே கிறீஸ்துநாதரின் இனிய நுகத்தடிக்கு சுயத்தைக் கீழ்ப்படுத்துவது ஒரு பெரும் வேலையாகும். அநேக பக்தியார்வமுள்ள ஆத்துமங்கள் இந்த மாபெரும் வேலையைச் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் சாதாரண மனிதர்களுக்கு இது மிக அதிகம் என்று சொல்லி அதைக் கைவிட்டு விட்டார்கள். அர்ச்சிஷ்டவர்கள் இந்த வேலையைச் செய்ய அதிகத் திடசித்தத்தை, அல்லது அதிக செயல்திறனைக் கொண்டிருந்ததால்தான் அவர்களால் அதில் வெற்றிபெற முடிந்தது என்று அவர்கள் கற்பனை செய்கிறார்கள். ஆனால் அவர்களின் வெற்றியின் இரகசியத்தைக் கண்டுபிடிக்கும்படி அர்ச்சிஷ்டவர்களின் ஜீவியங்களை ஆராய்ந்து பார்க்க மறந்து விடுகிறார்கள். அர்ச்சிஷ்டவர்களின் பெயர்களை மேலோட்டமாகப் பார்ப்பதே அவர்களில் எத்தனை விதமானவர்களை நமக்கு வெளிப்படுத்துகிறது என்றால், நாமும் அவர்களில் ஏதாவது ஒரு வகையினரோடு பொருந்தக் கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். அவர்களில் ஜீவியம் முழுவதும் சம்மனசுக்களைப் போல பரிசுத்தமாய் இருந்த மாசற்ற ஆத்துமங்கள் இருந்தார்கள்; தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதி முழுவதும் எல்லா வகையான மனிதப் புலனிச்சைகளிலும் மூழ்கியிருந்த பாவிகளும் இருந்தார்கள்; தைரியமுள்ள போர்வீரர்களும், சரீர பலமற்ற இளம்பெண்களும் இருந்தார்கள்; வயோதிபர்களும், குழந்தைகளும், பால வேதசாட்சிகளும் கூட இருந்தார்கள்; அறிஞர்களும் இருந்தார்கள், தங்கள் பெயர்களைக் கூட எழுதத் தெரியாதவர்களும் இருந்தார்கள்; அமைதியான அடைபட்ட துறவற ஜீவியத்தைச் சேர்ந்த அர்ச்சிஷ்டவர்களும் இருந்தார்கள், பரபரப்பான சந்தை ஸ்தலங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள்; சிலர் பராக்கு ஏற்படுத்தும் ஏராளமான கடமைகளுக்கு மத்தியில் வாழ்ந்த அரசர்களும், அரசிகளுமாக இருந்தார்கள்; மற்றவர்கள் அமைதியில் தங்கள் எஜமானர்களுக்கு ஊழியம் செய்த வேலைக்காரர்களாக இருந்தார்கள்; சிலர் மேற்றிராணிமாராகவும், பாப்பரசர்களாகவும் இருந்தார்கள்; மற்றவர்கள் விவசாயிகளாகவும், தொழிற்சாலைப் பணியாளர்களாகவும் இருந்தார்கள்; சிலர் ஒரு கோபமான மனநிலையின் மீது வெற்றிகொள்ளவும், அதை எப்போதும் தடுத்து நிறுத்தவும் வேண்டியவர்களாக இருந்தார்கள்; சிலர் புலனின்பத்தின் கொடுக்கை எதிர்த்துப் போராடினார்கள்; சிலர் புகழாசை, அதிகார ஆசை, மற்றும் பேராசைக்கு எதிராகப் போராடினார்கள். சிலர் பசாசுக்களையே எதிர்த்து நின்றார்கள்; வேறு சிலரோ தங்கள் ஜீவியம் முழுவதும் பேரமைதியிலேயே கழித்தவர்களாகத் தோன்றுகிறார்கள். தன் விவகாரம் நம்பிக்கைக்கு இடமில்லாதது என்று யாருமே சொல்ல முடியாது. கடந்து போன காலங்களில், எதிர் வரக்கூடிய எல்லா விதமான சிரமங்களும் எதிர்த்துப் போராடப் பட்டுள்ளன, வெற்றி கொள்ளப் பட்டுள்ளன. வெற்றி பெறுவதும் பெறாததும், சிரமத்திலோ, அல்லது போராட்டத்திலோ அடங்கியிருக்கவில்லை. பல மனிதர்கள் போராடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தோற்றுப் போகிறார்கள். எங்கே தவறு உள்ளது? சரியான இடத்தில் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைக்கவில்லை. நம் போராட்டம் “மாம்சத்தோடும், இரத்தத்தோடும், வல்லமைகளோடும், துரைத்தனங்களோடும் (ஆளும் அதிகாரத்தோடும்) அல்ல” - அது மனித சுபாவத்திற்கு மேற்பட்ட சக்திகளோடுதான். எனவே தன் சொந்த முயற்சிகளைக் கொண்டு மனித சுபாவத்திற்கு மேற்பட்ட தீமைகளோடு போராடுகிற மனிதன் ஒரு முட்டாளாக இருக்கிறான். நமக்கு தெய்வீக பலம் தேவைப்படுகிறது. அதை நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும். ஏதாவது ஒரு ஞான ரீதியான பிரச்சினையின் மீது நாம் வெற்றி கொள்ளும்போது, அது கடவுளாலேயே நடந்தது என்று ஒப்புக்கொள்ள கடவுளிடமிருந்தே கற்றுக் கொள்வோம்! ஆனாலும் ஒரு சிறு வெற்றிக்குப் பிறகு, அந்த வெற்றிக்கு நம் சொந்த வல்லமைகளே காரணம் என்று நாம் நினைப்பதை நம் சுய திருப்தி காட்டுகிறது. அதன்பின், கடவுள் நம்மை நம்மிடமே விட்டு விடும்போது, நாம் தோற்றுப் போகிறோம், உடனே அதைரியப்படுகிறோம். முயற்சியைக் கைவிட்டுவிடத் தயாராகிவிடுகிறோம். சுய திருப்தியும், அதைரியப்படுதலும் தவறான இடத்தில் வைக்கப்பட்ட நம்பிக்கையின், அதாவது சுயத்தின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையின் இரண்டு தீய கனிகளாக (விளைவுகளாக) இருக்கின்றன. ஆனால் தோல்வியில் தைரியமும், வெற்றியில் தாழ்ச்சியும் சேசுநாதரில் நாம் வைக்கும் பரிசுத்த நம்பிக்கையின் கனிகளாக இருக்கின்றன. அது சுயத்திற்கும், கடவுளுக்கும் இடையே - சுய நேசத்திற்கும், கடவுளின் மீதுள்ள நேசத்திற்கும் இடையே - சுயத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கும், கடவுளின் மீதுள்ள நம்பிக்கைக்கும் இடையே - நிகழும் பழைய போராக இருக்கிறது. நம் முழு ஞான ஜீவியத்திற்கும் தேவையானது ஒரே ஒரு காரியம்தான் என்பதை நாம் எப்போதுதான் கற்றுக் கொள்ளப் போகிறோம்? அந்த ஒரே ஒரு காரியம், சுயத்தை ஒரு கடைசியான முறையில் முழுமையாக அடக்குவதும், நேசத்தில் கடவுளுக்கு ஊழியம் செய்வதுமே.


உம்மில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுக்கு இரட்சணியமாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!