வரலாற்றில் போர்த்துக்கீசியர்

வேளாங்கண்ணித் திருத்தலம் முதலில் நாகப்பட்டினம் பங்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. புயலில் அகப்பட்ட போர்த்துக்கீசியர் வேளாங்கண்ணியில் கரை சேர்ந்ததும், அதன் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது எனலாம். எனவே இத்திருத்தலத்தின் வரலாறு போர்த்துக்கீசியரின் வரலாற்றோடும் தொடர்பு கொண்டுள்ளது'.

போர்த்துக்கல் நாடு அமைப்பில் நீண்டதொரு செவ்வகமானது. இதன் வடகிழக்கில் ஸ்பெயின் நாடும், தென் மேற்கில் அட்லாண்டிக் கடலும் உள்ளன. 12-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை இது அரச மரபினரால் ஆளப்பட்டது. கனிவளமும், காட்டு வளமும் கொண்ட இந்நாட்டவர், தங்களது நாட்டின் விளை பொருட்களையும், கைவினைப் பொருட்களையும், விலைப் பொருட்களாக்கிட கடல் கடந்து வணிகத்தை மேற்கொண்டனர்.

போர்த்துக்கீசியரான வாஸ்கோடா-காமா கடல் வழியாக 1492-ம் ஆண்டு முதன் முறையாக இந்தியா வந்தடைந்தார். அவரது மரக்கலத்தில் மரியாளின் கொடி நாற்புறமும் விரிந்து பறந்துகொண்டிருக்கும். கலப்பாய்கள் காற்று விசையால் குவிந்து பெரியதொரு சிலுவைக் குறியுடன் காணப்படும். வாஸ்கோடா-காமா கரை இறங்கிய இடங்களில் எல்லாம், சிலுவைச் சின்னத்தைக் கட்டி எழுப்புவது வழக்கமாயிற்று.

கடல் பயணத்தில் ஆன்மப் பணியாற்றிட குருவும் உடன் இருப்பார். மாக்கலத்தின் அடித்தள அறையில் இயேசுவின் அன்னை மரியாளின் திருவுருவம் அமைந்த பீடம் அழகுறக் காணப்படும். வாஸ்கோடகாமாவும் அவரது துணைவர்களும் தங்களது பயணம் எளிதாகவும், வாணிகம் வெற்றியாகவும் முடிய திருப்பலியில் பங்கேற்று இயேசு கிறிஸ்துவை அப்பத் திருவிருந்தில் உண்பர்.

போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் பெலமின் புனித மரியன்னை என்ற பெயரில் திருத்தலம் ஒன்று உள்ளது. போர்த்துக்கீசிய மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற மரியன்னை மீதான அன்பு, அவர்கள் சென்ற இடமெல்லாம் பக்தியின் நினைவு ஆலயங்களை எழுப்பிடச் செய்தது. வாஸ்கோ -ட-காமா கடல் வழிகாட்டியாக மட்டுமல்ல, தனக்குப் பின் வருபவர்களிடம் மரியாளின் மீது பக்தியை வளர்ப்பவராகவும் விளங்கினார்.

16-வது, 17-வது நூற்றாண்டுகளில் போர்த்துக் கீ சிய வணிகர் ஆப்ரிக்கா, இந்தியா, கிழக்கிந்தியத் தீவுகள், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டனர். அத்துடன் மரியாளின் புகழ்சாற்றும் ஆலயங்களையும் ஆங்காங்கே கட்டுவித்தனர், '' போர்த்துக்கீசியர் நாட்டைக் காத்து ஆளுவதைவிட கோவிலைக் கட்டுவதில் திறமை மிக்கவர்கள், என்று ஓர் ஆங்கில ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நாளாவட்டத்தில் நாடுகளையெல்லாம் இழந்த போதிலும், அவர்கள் கட்டிய ஆலயங்கள் அழியாமல், அவர்களின் மறைப் பற்றுக்குச் சான்று பகர்கின்றன.