இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அவிழ்த்து விடப்பட்ட மிருகம்!

கிறீஸ்துவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மலாக்கியாஸ் தீர்க்கதரிசியின் உரைகளில் திவ்ய பலிபூசையைப் பற்றிய ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆராதனைக்குரிய இத்திருப்பலி, தூரமாய்க் காணப் பட்ட எதிர்காலத்தில் புற இனத்தாரால் மேற்கிலும், கிழக்கிலுமிருந்து வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடன் சர்வேசுர னுடைய இராச்சியத்தில் அமரக் கூடிய பெருந்திரளான மக்களால் ஒப்புக்கொடுக்கப்படும் என்று அந்த மலாக்கியாஸ் தீர்க்கதரிசனத்தில் காணக் கிடக்கிறது.

அத்தீர்க்கதரிசி கூறுகிறார்: ''சூரிய உதய முதல் மறைவு வரையிலும் நமது நாமம் ஜனங்கள் நடுவில் மகத்தானதாயிருக்கின்றது. எவ்விடத்திலும் பலி நடைபெறுகிறது. நம் நாமத்திற்குத் தூய்மையான பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது'' (மலாக். 1:11).

உலகத்திலே எல்லாப் பிரதேசங்களிலும் பூமியின் பாகங்கள் நெடுகிலும் இலட்சக்கணக்கான குருக்களால் திருப்பலி பூசை தினமும் நடைபெற்று வருவது மலாக்கியாஸ் தீர்க்கதரிசன உரையின் நிறைவேற்ற மாகும்.

கிறீஸ்துவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தானியேல் தீர்க்கதரிசி இந்த "தொடர்ச்சியான திருப்பலி நிறைவேற்றம் தடைப் படும் என்று கூறியிருந்தார். பல தடவைகளில் அவ்வாறு கூறியிருக் கிறார். இவர் அந்திக் கிறீஸ்துவின் காலத்தைப் பற்றி எழுதியிருப் பதாகவே ஏறக்குறைய எல்லா வேதாகம விரிவுரையாளர்களும் கருத்துக் கொள்கிறார்கள்.

அந்திக் கிறீஸ்துவின் நாட்களில் உலகெங்கும் தொடர்ச்சியாக நடைபெறும் திவ்விய பலிபூசை நின்று போகும்.

உலகத்தின் ஒரு இடத்திலேயும் பூசைப்பலி நடைபெறாது என்பதல்ல இதன் கருத்து. முன்பு போல் இடைவிடாமல் திருப்பலி நடைபெறாது என்பதே இதன் பொருள். இதன் உட்பொருள் என்ன வென்று பார்க்கும்போது, உலகின் மிகப் பெரும் பகுதிகள் அழிக்கப் பட்டுப் போகும், அல்லது அந்திக்கிறீஸ்துவின் அதிகாரத்துக்கு உட்பட்டு விடும். ஆகவே பலிபூசை தொடர்ச்சியாக இடைவிடாது நடைபெறுவது சாத்தியமில்லாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது.

இது வரை ஒவ்வொரு விநாடியும் உலகம் முழுவதிலும் இருபத்து நான்கு மணி நேரமும் நான்கு குருக்கள் நற்கருணை சேசுவைக் கரங்களில் ஏந்தி எழுந்தேற்றம் செய்து, பாவ மானிடர் மீது தேவ ஆசீரை மன்றாடினார்கள். பாவியினுடைய பாவங்களுக்காக இவ்வாறு பரிகாரம் செய்தார்கள்.

இந்தப் பரிகாரத் தொடர்ச்சிப் பலி அந்திக் கிறீஸ்துவின் காலத்தில் அற்றுப் போகும்.

"பரிசுத்தமானதை நாய்களுக்குப் போடாதேயுங்கள். உங்கள் முத்துக்களையும் பன்றிகள் முன் எறியாதேயுங்கள்” (மத். 7:6).

அந்திக் கிறீஸ்து அல்லது எதிர்க் கிறிஸ்து என்ற சொல்லுக்கு டோனால்ட் ஆட்வாட்டர் என்பவர் தம்முடைய "கத்தோலிக்க அகராதியில் இவ்வாறு பொருள் கொடுக்கிறார்: "கிறீஸ்துவின் முக்கிய எதிரி, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் அவன் தோன்றுவான். அவனுடைய செயல்களால் கிறீஸ்துவத்திலிருந்து பரவலான விலகுதல்கள் நிகழும். அவன் ஒரு மானிடனாகத்தான் இருப்பான். எந்தச் சட்டத்தையும் உடைப்பான்; தன்னையே தெய்வமென்பான்; கிறீஸ்தவ சத்தியங்களைப் பகைப்பான்; போலி அதிசயங்களை நிகழ்த்தி, கிறிஸ்துவுக்குப் போட்டியாக நிற்பான்.''

காட்சியாகமத்திலும் அந்திக் கிறீஸ்துவைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கிறோம்.

தானியேல் தீர்க்கதரிசியின் உரைகளிலும் காண்கிறோம்..... ''அக்கிரமங்கள் அதிகமாகும்போது முன்கோபமுள்ளவனும், சூதான பேச்சுக்கள் பேசுகிறவனுமாகிய ஓர் அரசன் உதிப்பான். அவனுடைய வல்லமை பெருகும். அது அவனுடைய சுபாவத்தினாலல்ல. நம்பக்கூடிய அளவுக்கும் மேலாய் அவன் காரியங்களைச் செய்வான். அவனுக்கு எல்லாம் வாய்க்கும். சகலத்தையும் பாழாக்கி வருவான். அவன் பலவான்களையும், பரிசுத்த ஜனங்களையும் தன் இஷ்டப்படி கொலை செய்வான். வஞ்சகம் அவன் கரத்தில் வெற்றி தரும் ஆயுதமாகும். அவன் இருதயத்தில் கர்வம் கொள்வான். சகல காரியங்களும் அவனுக்கு அனுகூலமாயிருக்க, அநேகரைக் கொலை செய்வான்.

அதிபதிகளுக்கு அதிபதியானவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனால் யார் கையாலுமல்ல, தன்னாலே நாசமாக்கப்படுவான்'' (தானி. 8:23-25).

இந்த தீர்க்கதரிசனம், அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிருபத்தில் அந்திக் கிறீஸ்துவைப் பற்றிக் கூறப்பட்டிருப்பவைகளைப் போலவே இருக்கின்றது.

இடையறாது நடைபெறும் பலி நிறுத்தப்படுவது பற்றி நான்கு இடங்களில் தானியேல் ஆகமத்திலே நாம் பார்க்கிறோம். தானி. 8:11 - 12; 9:27; 11:31; 12 ; 11.

இந்த நிறுத்தத்தைக் கொண்டு வருவது தானியேல் ஆகமம் ஏழாம் அதிகாரத்தில் கூறப்படும் பயங்கரத்திற்குரிய மிருகமாகும்.

தானியேல் தம் காட்சியில் நான்கு பெரிய மிருகங்களைக் கண்டார். இவற்றில் மூன்று மிருகங்கள் ஆரம்ப காலங்களில் அரசாண்ட மூன்று கொடுங்கோல் மன்னர்கள் என்று வேதநூல் விரிவுரையாளர்கள் கூறியுள்ளார்கள். நான்காவது மிருகம் அந்திக் கிறீஸ்துதான் என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. அந்த நான்காம் மிருகத்தின் தோற்றம் எவ்வளவு பயங்கரத்துக்குரியதாயிருந்த தென்றால், அதை அடையாளம் கூறும்படி தானியேல் தாமே கேட்கின்றார். (தானி. 7:19) அவர் கூறுகிறார்: '' ... மற்றவைகளைப் பார்க்கிலும் அதிக வேற்றுமை உள்ளதும், மகா பயங்கரமானதுமாய், இரும்புப் பற்களும், நகங்களுமுடையதுமாயிருந்தது; அது பட்சித்து நொறுக்கியது; மீதியானவைகளைத் தன் கால்களால் மிதித்துப் போட்டது... பரிசுத்தவான் களுக்கெதிராகப் போராடி அவர்களை வென்றது" (தானி. 7:21).

இந்த நான்காம் மிருகத்தை தெய்வ வல்லமை தலையிட்டு, அதன் சக்தியை அடக்குவதாக தானியேல் கூறுகிறார். ஆனால் அதற்கு முன் அம்மிருகம் பெரிய நாசத்தையும், அழிவையும் உண்டுபண்ணி விடும். இம்மிருகத்தின் வலிமை இதற்கு முந்திய கொடுங்கோலரின் வலிமைகளையெல்லாம் மிஞ்சியது என்றும், அது உலகை முழுவதும் விழுங்கி, மிதித்து நொறுக்கும் என்றும் தானியேல் கூறுகிறார் (தானி. 7:23). இது அந்திக் கிறீஸ்துவைக் குறிப்பிடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. வேறு யாராகவும் இம்மிருகம் இருக்க முடியாது. முந்திய அத்தியாயத்தில் கூறப்பட்ட பல நம்பிக்கைக்குரிய தீர்க்கதரிசனங்களில் காணப்படும் பொதுவான உண்மைக்கு முற்றும் பொருந்தியதாக இது உள்ளது.

காலஞ்சென்ற R.J. Culleton என்ற குரு அந்திக் கிறீஸ்துவைப் பற்றி அரிய ஆராய்ச்சிகள் செய்தவர். "தீர்க்கதரிசிகளும், நமது நாட்களும் " என்று அவர் ஒரு நூலை எழுதினார். 1943-ம் ஆண்டு அது வெளியிடப்பட்டது. அந்நூலில் அவர் கூறுகிறார்:

கடைசிக் காலங்களின் ஒரு முக்கிய அடையாளம் எதுவென்றால் தப்பறையான போதனைகளும், அவற்றால் விளையும் கேடுகளுமாம். வேதத்தை விட்டு விலகிச் செல்லுதல்; கத்தோலிக்கரிடையிலேயும் விசுவாசமின்மை, நல்லொழுக்கச் சிதைவு இவைகள் காணப்படும்.

இவ்வித கடவுள் எதிர்ப்பு, கிறீஸ்துவை எதிர்த்தால், அந்திக் கிறீஸ்துவின் ஆட்சி வருமுன் உலகமெங்கும் பரவி வரும். கத்தோ லிக்கரிலும் பெருந்தொகையானவர்கள் வேதத்தை விட்டு விலகிப் போவார்கள். சமயத்தின் மட்டில் பொதுவான அலட்சியம் ஏற்படும்; ஏன், பகையே ஏற்படும். இத்தோடு சேர்ந்து மக்கள் மத்தியில் முழு அளவில் நல்ல ஒழுக்கம் சிதைவுபட்டு வரும். இந்த ஒழுக்கக் கேடு எப்படி இருக்குமென்றால், கிறிஸ்தவ வேதம் உலகில் தோன்றுமுன் எப்படி ஒழுக்கம் கெட்டுப் போயிருந்ததோ, அப்படி இருக்கும். கிறீஸ்தவ நாகரீகம் ஏற்படுமுன் இருந்த நிலையில் இருக்கும்.

அண்மையில் வந்து கொண்டிருக்கும் இறுதி முடிவைக் காட்டும் அடையாளங்கள், முந்திய காலங்களிலும் பலதரப்பட்ட முறைகளில் நிறைவேறி வந்துள்ளன. இவற்றிற்கும் இறுதி முடிவிற்கு அடையாள மாக நிகழும் வேத மறுதலிப்புகளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. இறுதி முடிவிற்கு முன் நிகழும் வேத மறுதலிப்புகள் எங்கும் பரவலாகக் காணப்படும். அதோடு இவைகள் அதிக தீய குணமுடையவைகளாயிருக்கும்.

இந்தப் பரவலான வேத மறுதலிப்பு ஏற்படுமுன் தப்பறை களைப் போதிக்கும் போதகர்கள் வந்து மக்கள் மனதில் பெரும் குழப்பத் தையும் இருளையும் ஏற்படுத்துவார்கள். இதனால் நாடுகள் மொத்தமாக சத்திய விசுவாசத்தை இழந்து போகும். இது அந்திக் கிறிஸ்துவின் வருகைக்கு நல்ல தயாரிப்பாக அமையும். சிலர் (புரோட் டெஸ்டாண்ட்) சீர்திருத்தமும், அதன் தொடர்பாக ஏற்பட்ட தீமை களும்தான் இந்த வேத மறுப்பு என்று கருதுகிறார்கள். ஆனால் இவைகளை விட அதிகத் தீமைகள் நிகழவுள்ளன.

அந்திக் கிறீஸ்துவின் பிறப்பிற்கும், அவன் தன் கொடுங்கோலை ஏற்படுத்துவதற்கும் இடையில், தப்பறைக் கொள்கைகள் அதிகமாகப் பரவி வரும். எந்த அளவிற்கு இத்தவறான கொள்கைகள் பரவும் என்றால், கத்தோலிக்கர்கள் கூட பல விசுவாச சத்தியங்களைச் சந்தேகிப் பார்கள்; சந்தேகித்துக் கெடுவார்கள். இது சாதாரண விசுவாசிகளோடு மட்டும் நிற்பதில்லை -- பல குருக்களும் அவ்வாறு சந்தேகித்துக் கெடு வார்கள் - - மேற்றிராணிமார்களுக்குள்ளும் சிலர் அவ்வாறு இருப் பார்கள். அவர்களுடைய ஆன்ம இரட்சண்ய தாகம் இந்த விசுவாசக் குறைவினால் அதிகம் பாதிக்கப்படும்.

இந்த வேத மறுதலிப்பினால், கத்தோலிக்கர்கள் கடினமாகத் தண்டிக்கப்படுவார்கள். ஏனென்றால், கடவுள் தம் மக்களைத் திருத்தி, அவர்கள் தம்மைச் சார்ந்திருக்கச் செய்ய வேண்டுமானால், அது தண்டனையால்தான் முடியும். இதனிமித்தமாக குருக்களும், கிறீஸ்தவர்களும் பரவலாக இம்சிக்கப்படுவார்கள். இந்தத் துன்பங் களினால் விசுவாசமும், தேவசிநேகமும் மீண்டும் தழைக்கும். ஏனெனில், பகலுக்குப் பின் இரவு வருவது போல, இந்த நாகரீகம் அழியும்; உலகம் அறியாமை என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கும்; பகையும், போரும் ஏற்படும். உலகின் ஒளியான சர்வேசுரன் தம் மக்களின் உள்ளங்களை ஆள மாட்டாராதலால் இங்ஙனம் நடைபெறும்.

1943-ம் ஆண்டு Culleton என்ற குரு இவற்றை எழுதினார். அப்பொழுதே அவர் இன்னொரு முக்கிய நிகழ்ச்சியையும் கூறினார். அதாவது இஸ்ரேல் நாட்டிற்கு யூத மக்கள் திரும்பி வருவார்கள், அது ஒரு அடையாளமாயிருக்கும் என்று குறிப்பிட்டார். 1947-ல் (அதாவது 4 ஆண்டுகளுக்குப் பின்) இஸ்ரேல் ஒரு தனி சுதந்திர நாடாக நிலைப் படுத்தப்பட்டது. இதை நாம் உற்றுப் பார்க்கையில், மேற்குறிக்கப் பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் அண்மையில் உள்ளது என்று கருத இடமிருக்கிறது.

இந்த அந்திக்கிறீஸ்து எப்படிப்பட்டவனாயிருப்பான் என்று 1274-ல் இறைவனடி எய்திய 'சம்மனசுக்கொத்த வேதபாரகர்,'' அர்ச். தாமஸ் அக்வீனாஸ் கூறுவதைப் பார்ப்போம்.

"அந்திக்கிறீஸ்து என்பவன் வற்புறுத்தி சிலரைத் தன் காலத்தில் தவறிப் போகச் செய்வான். தீயவர்களுக்கெல்லாம் அவனே தலைவன்; ஏனெனில் அவனிடம் தீமை பூரணமாயிருக்கும். தெய்வத்துவம் எப்படி கிறீஸ்துவிடம் முழுமை பெற்று விளங்குகிறதோ, அதே போல எல்லாத் தீமைகளும் அந்திக் கிறீஸ்துவிடம் பூரணமாக இருக்கும். அவனுடைய மனிதத் தன்மையைப் பசாசு தன்னுடன் சேர்த்துக் கொள்ளும். ஆனால் அவனும் பசாசும் ஒரே ஆள் என்று கூறும் அளவுக்கல்ல. தன் தீமைகளையெல்லாம் அந்திக் கிறீஸ்துவினுள் பசாசு புகுத்தும். மற்றெந்த மனிதரிடமும் புகுத்தியதைப் பார்க்கிலும் அதிக முழுமையாக இவனிடம் புகுத்தும். இங்ஙனமாக, இதற்கு முன் இருந்த எல்லாத் தீயவர்களும் அந்திக் கிறீஸ்துவின் முன்னோடிகளைப் போல இருக்கிறார்கள்'' (Summa III, 8:8).

டாக்டர் பெர்னார்ட் ஜே. லெஃரா, S.V.D. என்பவர் காட்சி யாகமத்தைப் பற்றிய தம் உரையில் (இவர் ஒரு பெரிய வேதாகம விரிவுரையாளர்) கூறுகிறார்: "மரியாயின் பாதுகாவலிலுள்ள திருச்சபை எதிர்க்கிறீஸ்துவிடமிருந்து பயப்படுவதற்கு எதுவுமேயில்லை . இந்தப் பறவை நாகத்தின் தாக்குதல், மரியாயிக்கு வசீகரிக்கப்பட்டு, ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளவர்களை ஒன்றும் செய்ய இயலாது" என்று.

நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு காரியம் உள்ளது. அதாவது பாத்திமாவில் கூறப்பட்ட செய்திகளிலும், இன்னும் சில வெளிப்படுத்தல்களிலும் துலக்கமாகக் காணப்படும் உண்மை என்னவென்றால், வரவிருக்கும் இந்த ஆபத்தான காலங்களில், தேவ தாய்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ள யாவரும் பாதுகாக்கப்படும் வார்கள்; இந்த ஒப்புவித்தலை வேண்டாமென்பவர்கள் அழிவுறு வார்கள் என்பதே. இந்த அந்திக் கிறீஸ்துவின் காலம் ஆன்மாக்களுக்கு மிகவும் ஆபத்தான காலம் என்று எல்லா வேதாகம அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்களை மாமரிக்கு ஒப்புக்கொடுக்க சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய ஜெபமாலையைச் சொல்வதற்குச் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய உத்தரியத்தை (அல்லது உத்தரிய சுரூபத்தை) அணிந்து கொள்ள சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும். பாத்திமாவின் மூன்றாம் காட்சியில், அம்மூன்று சிறுவர்களுக்கும் நரகக் காட்சியைக் காட்டிய பின் தேவதாய் இவ்வாறு உரைத்தார்கள்:

"பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை இப்பொழுது நீங்கள் கண்டீர்கள். இவர்களைக் காப்பாற்றுவதற்காகவே உலகில் என்னுடைய மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார். இதன் பொருளென்ன? உண்மையாகவே தேவ தாய்க்கு ஒப்புக்கொடுக்கப் பட்ட ஆன்மாக்கள் தீமையின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். அர்ச்சியசிஷ்டவர்களும், வேதசாஸ்திர எழுத்தாளர்களும் இதை எப்போதும் கூறி வந்துள்ளார்கள். ஆதலால் என்ன சொல்வோம்! பாத்திமாவில் நமக்குக் கிடைத்த இந்த ஞானமும் வெளிச்சமும் பொதுவாக கத்தோலிக்கர்களால் ஏற்றுக்கொள்ளப் படாமலிருப்பது உலகிற்கு ஒரு பெரும் கேடாக அன்றோ உள்ளது. இதனால் எத்தனை ஆன்மாக்கள் நித்தியத்திற்கும் இழக்கப்படுகின்றன! எத்தனை வேதனைகளும், சாவுகளும், யுத்தங்களும் இதனால் ஏற்பட இருக்கின்றனவோ!