இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே!

தேவதாயிடம் விளங்கிய பரிசுத்தத்தைப் புகழ்ந்த பின், அவர்களிடம் விளங்கிய புண்ணியங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து அவர்களைப் புகழ்கின்றது திருச்சபை. முதன்முதலாக ஒப்பற்ற பொக்கிஷமென அவர்கள் காத்து வந்த கற்பைப் பற்றி அவர்களைப் புகழ்கின்றது.

நம் சரீரத்தில் அடிக்கடி துர் இச்சைகள் எழுகின்றன. இவ்விச்சைகளை அடக்கிக் கட்டுப்படுத்துவதில்தான் கற்பென்னும் புண்ணியம் அடங்கியுள்ளது. அவ்விச்சைகளை அடக்காமல், அவற்றின் பிரகாரம் நடந்தால் இஸ்பிரீத்துசாந்துவின் ஆலயமாகிய நம் சரீரத்தைப் பங்கப்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி பகுத்தறிவற்ற மிருகங்களுக்குச் சமமாகிறோம். 

மிருகங்கள் தங்கள் சரீரத்தில் துர்இச்சைகள் தோன்றும் போதெல்லாம் அவற்றைச் செய்கைகளினால் நிறைவேற்றி விடுகின்றன. தங்கள் சரீரம் தங்களை இழுத்துச் செல்லும் பிரகாரம் நடக்கின்றன. “இதுதான் செய்யத் தகும்,” “இது செய்யத் தகாது” என்று கண்டறியும் பகுத்தறிவு அவைகளுக்குக் கிடையாது. 

ஆனால் மனிதனுக்குப் பகுத்தறிவு உண்டு. அப்பகுத்தறிவின் உதவியால், கெட்டவைகள், சர்வேசுர னுக்குத் தகாதவைகள் எவையென்று கண்டுணர்ந்து சரீரத் தையும், அதன் துர் இச்சைகளையும் அடக்கியாளக் கடமைப்பட்டுள்ளான் மனிதன். இவ்விதம் அவன் நடக்கும் போது சரீரமற்ற பரிசுத்த அரூபிகளான சம்மனசுக்களுக்குச் சமானமாகிறான். இக் காரணம் பற்றியே கற்பெனும் புண்ணியம் “சம்மனசுக்களின் புண்ணியமெனப்” (Angelic virtue) போற்றப்படுகிறது.

மனதிற்கு நற்செய்கைகளின்மேல் ஓர் அலாதி நாட்டத்தையும், சரீர ஆசாபாசங்களில் நின்று நிரந்தர விடுதலையும், அந்தஸ்தின் கடமைகளைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலும் அளிப்பது கற்பே. எக்காலத்திலும், எந்நாட்டிலும், எவ்வகைப்பட்ட மக்களிடையேயும், காட்டு மிராண்டிகளிடையே முதலாய்க் கற்பு எனும் உத்தம புண்ணியம் வெகுவாய் மதிக்கப்படுகிறது.

எஜிப்து, கிரீஸ், உரோமை போன்ற புராதன நாட்டினர் அக்காலத்திலேயே இப்புண்ணியத்தின் மேன் மையை, யாதொருவர் போதனையுமின்றி உணர்ந்தனர். நம் இந்திய நாட்டின் பழங்கால சரித்திரத்தை வாசித்தால், நம் முன்னோர் இப்புண்ணியத்தை எத்துணை பெரிதாக மதித்தனர் என்பது தெளிவாகும். இதனாலன்றோ, “பெண்டிற்கழகு கற்பு” என்ற முதுமொழி நம் நாட்டில் இன்றும் வழங்குகிறது.

சேசுவின் நேசத் தாயாரிடம் இப்புண்ணியம் எவ்வளவு மகிமைப் பிரதாபத்துடன் சுடர் விட்டு எரிகிறது பாருங்கள். நம்மைப் போல அவர்களும் ஆதாமின் சந்ததியைச் சேர்ந்தவர்களே. அவர்களுடைய சரீரமும் பிறப்பு, இறப்பு என்னும் விதிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் ஜென்மப் பாவத்தின் கறையினின்று விடுபட்ட தேவதாய், அதன் விளைவாக ஏற்படும் கீழாங்கிஷ இச்சைகளினின்றும் காப்பாற்றப்பட்டார்கள். 

ஆதித்தாய் தந்தையர் செய்த பாவத்தின் விஷம் அண்டாமல் அவர்களைக் காப்பாற்றிய ஆண்டவர், சரீர இச்சைகளுக்கு அடிமைப்பட்டிருக்க, அவர்களை விட்டு விடுவாரோ? ஏவை சர்வேசுரனுடைய கட்டளைக்கு விரோமாய்ப் பாவம் செய்யுமுன் சரீர இச்சைகளினின்றும் விடுபட்டிருந்தாளல்லவா? 

சரீர ஆசாபாசங்களிலிருந்து ஆண்டவர் பரிசுத்த மரியம்மாளை விலக்காதிருந்தால், ஏவையின் முதல் பாக்கியமான நிலையை விடக் கீழ்ப்பட்ட ஸ்திதியில் அவர்களைப் படைத்திருப்பார் என்றாகுமல்லவா? அவ்வாறாயின் தேவனின் தாய், “அந்தோ நான் நிர்ப்பாக்கியவதி; யார் என்னை இச்சரீரச் சாவினின்று விடுவிப்பார்?” என்று முறையிட்டிருக்க நேர்ந்திருக்கும் (ரோமர் 8:24).

மரியாயின் ஆத்துமத்தைப் போலவே அவர்களுடைய சரீரமும் தூய்மையாய் இருந்தது. கன்னிமையைக் குறித்துப் பொதுவில் அர்ச். அகுஸ்தீனார் கூறுவதை அட்சரம் பிசகாமல் கன்னிமாமரியைக் குறித்துச் சொல்லலாம்: “அவர்களுடைய மாமிசத்தில் மாமிசத்தைச் சேராத தொன்று இருந்தது.”( De Sancta Virginit., t. vi. n.12 - She had in the flesh something that was not of the flesh). அது மனித சுபாவத்திலிருந்து மாறுபட்டு சம்மனசுக்களின் சுபாவத்தை ஒத்திருந்தது. அது சுபாவத்திற்கு மேற்பட்டதாயிருந்தது. இக்குணம் பற்றியன்றோ “மகிமையின் அரசர் ஒரு மானிடக் கன்னிகையின் உதரத்தில் வசிப்பதை அருவருக்கவில்லை” (Cfr. “Te Deum”.) என்று திருச்சபை பாடுகின்றது.

நம் காலத்தில் கற்பிற்கு விரோதமாக ஓர் யுத்தமே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றால் மிகையாகாது. நம்மைச் சுற்றிலும் நடப்பனவற்றை ஒரு முறை நோக்கின் இதன் உண்மை புலப்படும். மனிதனுடைய புத்தியையும், ஆத்துமத்தையும் சுலபமாகக் கெடுத்து மிருகங்கள் போல நடக்க அவனைத் தூண்ட, சாதனங்கள் பல வழங்கப்படுகின்றன. 

ஆசாபாசமான கதைகளையும், கட்டுரைகளையும், படங்களையும் தாங்கி தற்காலத்தில் வெளிவரும் பத்திரிகைகளும் புத்தகங்களும், சினிமாப் படங்களும் அவைகளில் ஒரு சில. எத்தனை இளம் வாலிபருடைய ஆத்துமங்கள் இவற்றினால் ஒவ்வொரு நாளும் நாசமடைகின்றன! எத்தனை ஆத்துமங்கள் இவற்றினால் தங்கள் கற்பை இழந்து நரகத் தண்டனைக்கு ஆளாகின்றன! 

அன்று நமதன்னை, பாத்திமாவின் மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தபோது, நரகத்தையும், அவ்விடத்திற்கு ஆத்துமங்கள் செல்வதையும் காட்டி, அவர்களில் பெரும்பாலானோர் கற்புக்கு விரோதமான பாவங்களைக் கட்டிக் கொண்டதனால்தான் அங்கு செல்லுவதாகக் கூறினார்கள். ஆ! எத்தனை நடுக்கம் கொடுக்கும் விஷயம்!

இவ்வுலகத்தில் துன்ப துரிதங்களில் சிக்கி, அதனால் ஆன்ம விரோதிகளோடு போர் புரிய வேண்டியவர்கள் நாம். எனினும் நாம் எவ்வளவு பலவீனர்களாயிருப்பினும், நம்மைப் பலப்படுத்தும் சர்வேசுரனுடைய ஒத்தாசையால் நமக்கு இயலாதது ஒன்றுமில்லை. மேலும் அவருடைய திருத் தாயாரின் மன்றாட்டு நம்முடன் என்றுமிருப்பதால் தேவ உதவி நம்மை விட்டு என்றும் நீங்காது. 

ஆயினும் ஒரு காரியம் கவனிக்க வேண்டும். சோதனைகளை ஜெயிக்க மாதா உதவி செய்வார்கள் என்றெண்ணி அதற்காகத் திருச்சபை நமக்குக் காட்டும் வழிகளைக் கையாளாது வாளாவிருப்போமாகில் நாம் மோசம் போவோம். இவ்வாறு இருத்தல் மிதமிஞ்சிய நம்பிக்கையாகும். கடவுளைச் சோதித்தலாகும். சோதனைகளை ஜெயிக்க நம் மாதா நமக்கு உதவி புரியத் தயாராயிருக்கிறார்கள். ஆனால் அவைகளை ஜெயிக்க நாமும் நம்மால் இயன்றவரை முயலக் கடமைப்பட்டுள்ளோம். 

தேவ உதவியோடு நமது முயற்சியும் சேர வேண்டும்; அப்போதுதான் முழு வெற்றி கிட்டும். ஆகவே, நாம் எப்போதும் விழிப்பாயிருப்போம். ஜெபம், தவம் என்னும் ஆயுதங்கள் தாங்கி, நம்மைத் தாக்கும் சோதனைகளை விரட்டியடிப்போம். நமது பஞ்சேந்திரியங்களை வெகு கவனமாய் அடக்கியொடுக்கி ஆளுவோம். இதுவே கற்பைக் காப்பதற்கு ஏற்ற வழி.

“கற்பின் அரசியே! உமது ஆத்தும சரீரம் உற்ப வித்த கணமே ஆண்டவரில் அக்களித்தன. “இஸ்பிரீத்து சாந்து தேவனுக்கு உகந்த கனிகள், கன்னிமையும் கற்பும்” என்று அர்ச். சின்னப்பர் சொன்ன வாக்கியம் உம்மில் அதிசயிக்கத்தக்க விதமாய் நிறைவேறியது. சரீர இச்சைகளினின்று காப்பாற்றப்பட்ட கன்னிகையே! நாங்கள் சரீர இச்சைகளாலும், கெட்ட அரூபிகளாலும் அலைக்கழிக்கப் பட்டு, நிலைகலங்கித் தவிக்கிறோம். 

மரியாயே! உமது திரு நாமத்தின் மகிமையைக் குறித்து, உம்மை மன்றாடும் பக்தர்களையும், சோதனை வேளையில் “தாயே அடைக்கலம்” என்று உம்மை அண்டிவரும் தாசர்களையும் ஆதரியும் அம்மணி; சின்னஞ்சிறு சோதனையிலும் மனங்குன்றி விழுந்துவிட அனுமதியாதேயும். எமக்கு இதய சாந்தி அளிக்கும் தேவன், எதிரிகளை வெல்லவும், சரீர இச்சைகளின்மேல் வெற்றி கொள்ளவும், சாத்தானைக் காலால் மிதித்துத் துரத்தவும் வேண்டிய பலத்தை எங்களுக்கு அளிக்குமாறு மன்றாடும்.” 


அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!