இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் நம் ஆத்துமங்களில் கடவுள் தங்கி வசிக்கச் செய்கிறது!

"துல்ச்சிஸ் ஆஸ்ப்பெஸ் ஆனிமே.''

பரிசுத்த ஆவியானவர் ஆத்துமத்துக்கு மதுரமான (இனிய) விருந்தாளி என்று அழைக்கப்படுகிறார். தம்மை நேசிப்பவர்களுக்கு சேசுகிறீஸ்துநாதரால் அளிக்கப்பட்ட மாபெரும் வாக்குறுதி: ""நீங்கள் என்னைச் சிநேகித்தால், என் கற்பனைகளை அநுசரியுங்கள். நானும் பிதாவை மன்றாடுவேன்; அவர் என்றென்றைக்கும் உங்களோடுகூட வசிக்கும்படியாகத் தேற்றுகிறவராகிய வேறொருவரை உங்களுக்குத் தந்தருளுவார்'' (அரு.14:15,16). இவ்வாறு ஆத்துமம் பரிசுத்த ஆவியானவரைத் தன்னிடமிருந்து துரத்தி விடாத வரைக்கும் அவர் ஒருபோதும் அதைக் கைவிட மாட்டார்: ""தாம் கைவிடப்படாத வரை அவரும் கைவிட மாட்டார்.''

ஆகவே, நாம் கடவுளை நேசிக்கும்போது, அவர் நம் ஆத்துமத்தில் தங்கி வசிக்கிறார். ஆனால் நம் முழு இருதயங்களோடும் நாம் அவரை நேசிக்கவில்லை என்றால் தாம் திருப்தியடைவதில்லை என்று அவர் அறிக்கையிடுகிறார். உரோமை அமைச்சரவை சேசுநாதரைத் தங்கள் தெய்வங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் அவர் தம்மைத் தவிர வேறு யாரும் ஆராதிக்கப்படுவதை விரும்பாத அகங்காரமுள்ள கடவுள் என்று அவர்கள் கூறினார்கள் என்று அர்ச். அகுஸ்தினார் எழுதுகிறார். அது அப்படித்தான் இருக்கிறது: தன்னை நேசிக்கும் இருதயத்தில் ஒரு தோழனை அவர் அனுமதிக்க மாட்டார்; அவர் அங்கே தனியாகத் தங்கியிருக்க வேண்டும், அவர் மட்டுமே நேசிக்கப்படுபவராக இருக்க வேண்டும். தாம் மட்டுமே அங்கு நேசிக்கப்படவில்லை என்பதை அவர் கண்டால், அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் எழுதுவது போல, ஒரு பேச்சு வகைக்கு, தமக்கு மட்டுமே சொந்தமாயிருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிற அந்த இருதயத்தின் அன்பைத் தம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிருஷ்டிகளின் மீது அவர் பொறாமை கொள்கிறார்! ""உங்களுக்குள்ளே வாசமாயிருக்கிற இஸ்பிரீத்துவானவர் பொறாமையான சிநேகமுள்ளவரென்று வேதவாக்கியம் சும்மா சொல்வதாக நினைக்கிறீர்களோ?'' (யாக.4:5).

ஓ என் தேவனே, நான் முழுவதும் உம்முடையவனாயிருக்க வேண்டுமென்று நீர் ஆசிக்கிறீர் என்று காண்கிறேன். நான் பல தடவைகள் உம்மை என் ஆத்துமத்திலிருந்து துரத்தியிருக்கிறேன், ஆயினும் நீர் என்னிடம் திரும்பி வருவதிலும், உம்மை என்னோடு ஒன்றிப்பதிலும் வெறுப்புக் கொள்ளவில்லை. ஓ, இப்போது என் முழு சுயத்தையும் உம் சொந்தமாக்கிக்கொள்ளும். நான் இந்நாளில் என்னை முழுவதுமாக உமக்குத் தருகிறேன்.

ஒரே வார்த்தையில் சேசுநாதர் பொறாமையுள்ளவர் என்று அர்ச். ஜெரோம் சொல்கிறார். இதன் காரணமாக, பரலோக மணவாளர் மாடப் புறாவைப் போலத் தனிமையிலும், உலகிலிருந்து மறைந்தும் வாழ்கிற ஆத்துமத்தைப் புகழ்கிறார்: ""உன் கன்னங்கள் மாடப் புறாவைப் போல் அழகானவை'' (உந்.சங்.1:9), ஏனெனில் முழுவதுமாகத் தம்முடையதாகக் கொண்டிருக்க அவர் ஆசிக்கிற அன்பில் உலகம் எந்த விதத்திலும் பங்கெடுக்கக் கூடாது என்று அவர் ஆசிக்கிறார். மேலும், மணவாளி முத்திரையிடப்பட்ட தோட்டமாக, எல்லா உலக அன்பிற்கும் எதிராக சுற்றி அடைக்கப் பட்ட ஒரு தோட்டமாக இருப்பதாலும் அவள் புகழப்படுகிறாள் (உந்.சங்.4:12). சேசுநாதர் நம் முழு அன்பிற்கும் தகுதியானவராக இல்லாதிருக்க முடியுமா? ""அவர் தமக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தம்மை முழுவதும் உனக்குத் தந்தார்'' என்கிறார் அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர். அவர் தம் திரு இரத்தத்தையும், தம் உயிரையும் உனக்குத் தந்திருக்கிறார்; உனக்குத் தருவதற்கு இதற்கு மேல் அவரிடம் ஒன்றுமில்லை.

ஓ என் சேசுவே, என்னை ஏற்றுக் கொள்ளும். எதிர்காலத்தில், நான் உமது அன்பிலிருந்து ஒரு கணம் கூட விலக்கப்படாமல் வாழும்படி எனக்கருளும். நீர் என்னைத் தேடுகிறீர். நானும் வேறு யாரையுமன்றி உம்மை மட்டும் தேடுகிறேன். நீர் என் ஆத்துமத்தை ஆசிக்கிறீர், என் ஆத்துமமும் வேறு யாரையுமன்றி உம்மை மட்டும் ஆசிக்கிறது. நீர் என்னை நேசிக்கிறீர், நானும் உம்மை நேசிக்கிறேன்; நீர் என்னை நேசிப்பதால், இனி ஒருபோதும் உம்மை விட்டுப் பிரிக்கப்பட முடியாத விதத்தில் என்னை உம்மோடு சேர்த்துக் கட்டியருளும். ஓ பரலோக இராக்கினியே, எனக்காக ஜெபியுங்கள்.