இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஓர் ஆத்துமம் சுயத்திலிருந்து உண்மையான பற்றின்மையின் நிலையை அடையும் விதம்!

இதில் சிந்திக்கப்பட வேண்டிய முதலாவது காரியம் நாம் சுயத்தின் மீதான இத்தகைய பெரும் நேசத்திற்கு வந்து சேர்ந்த வழியும், அதன் விளைவாக அர்ச்சிப்பின் மாபெரும் வேலையில் நாம் எவ்வளவு பலவீனர்களாகவும், செயலற்றவர்களாகவும் ஆகியிருக்கிறோம் என்பதும்தான்.

தொடக்க நிலையிலிருக்கிற நாம் பலவீனர்களாய் இருக்கிறோம். ஏதாவது ஒரு தவறை நாம் செய்கிறோம். அதன்பின், அதற்காக வெட்கப்படுவதற்குப் பதிலாக, அதை நல்லதாக ஆக்கிக் கொள்ளத் தேடி, ஆதாம் வேறு ஒருத்தியின் மீது, அல்லது தன்னுடைய எளிதாக நிலைகுலையும் தன்மையின் மீது பழி சுமத்தியது போல, நாமும் சாக்குப் போக்குகளைத் தேடுகிறோம். இந்தச் செயல்முறை நம்மை ஒருபடி கீழிறக்குகிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிக பலவீனமுள்ளவர்களாக்குகிறது. கொஞ்ச காலத்திற்கு எல்லாம் பிரச்சினையில்லாமல் சுமூகமாகப் போகிறது. அதன் பின் திடீரென்று மீண்டும் நாம் தடுமாற்றமடைகிறோம். அதே பழைய சாக்குப்போக்குகள் எழுகின்றன. புதிய சாக்குப்போக்குகள் சேர்க்கப்படுகின்றன. அதன்பின் அது நம்முடைய தவறல்ல என்பது போல, அந்த எண்ணம் விரைவில் அகற்றப்படுகிறது. அது மனித பலவீனமாக மட்டுமே இருந்தது. நம் கோபம் தூண்டப்பட்டதால் அந்தக் கருணையற்ற வார்த்தை இயல்பாகவே நம் நாவிலிருந்து வந்து விழுந்தது. இதுபோல இன்னும் நிறைய. இத்தகைய செயல்முறை சீக்கிரத்தில், எந்த அளவுக்கு நம் சுய நேசத்தில் சூழப்பட்டவர்களாக நம்மை மாற்றுகிறது என்றால், பெரிய குற்றங்களுக்காகக் கூட உத்தம மனஸ்தாபப்படுவது நமக்குக் கடினமானதாக ஆகி விடுகிறது. ஒரு பொதுவான குற்றத்தைச் செய்யாத வரையிலும் நாம் பெருமளவுக்கு நல்ல கிறீஸ்தவர்கள்தான் என்று நாம் எண்ணுகிறோம். இதுதான் ஞான அசமந்தம், அல்லது அசட்டைத்தனம் அல்லது, சோம்பல் என்று அழைக்கப்படுகிறது. கடவுளின் பார்வையில் இது அருவருக்கத் தக்க காரியமாக இருக்கிறது. இத்தகைய சுய நியாயமுள்ள மனிதர்களுக்கு முன்பாக கள்வர்களும், விபச்சாரிகளும் மோட்சத்தில் பிரவேசிப்பார்கள் என்று சர்வேசுரன் கூறினார்.

இனி, மாபெரும் சுய பற்றின்மையின் நிலையையும், கடவுளின் பேரில் பெரும் சிநேகத்தையும் அடைவதறகு நாம் எப்படி செயல்பட்டிருக்க வேண்டும்? நாம் தொடக்கத்திற்குத் திரும்பிப் போவோம். நாம் ஒரு தவறைச் செய்யும் போது, சாக்குப்போக்கு எதையும் தேடக் கூடாது. உன்னையே தீர்ப்பிட்டுக் கொள், நீ இரட்சிக்கப்படுவாய் என்கிறது பரிசுத்த வேதாகமம். உன்னைப் பற்றி வெட்கப்படு. கடவுள் உனக்குத் தந்துள்ள பரலோக வரப்பிரசாதங்களின் அநேக ஆண்டுகளையும், தேவத்திரவிய அனுமானங்களில் பெறப்பட்ட எல்லாப் பொக்கிஷங்களையும், எல்லா உதவி வரப்பிரசாதங்களையும் உற்றுப் பார். அதன்பின்: “ஒன்றுக்கும் உதவாத சோம்பேறியே! கடவுள் உன் மட்டில் இவ்வளவு நல்லவராய் இருந்த பிறகு, நீ அவரிடமிருந்து திரும்பி, இத்தகைய பாவங்களைக் கட்டிக் கொள்கிறாய். நன்றிகெட்ட ஜென்மமே! இப்போது அதிகப் புண்ணியங்களைச் செய்வதன் மூலம் அந்தப் பாவத்திற்குப் பரிகாரம் செய்வதில் சுறுசுறுப்பாயிரு, அதற்காக முயற்சி செய்” என்று நீ உன்னைப் பார்த்தே சொல்லிக் கொள். உன்னையே இப்படி திட்டிக் கொண்ட பிறகு, போய், புதுப்பிக்கப்பட்ட பிரதிக்கினையோடு உன் கடந்தகாலத் தவறைத் திருத்திக் கொள்ளத் தொடங்கு. அது உன்னை ஒரு பெரிய படிக்கு மேலாக உயர்த்தி, உன் சித்தத்தை மிகப்பெரும் அளவுக்கு பலப்படுத்துகிறது. இனி, நீ இரண்டாவது தடவை விழும்போது, அதே திட்டுதலைச் செய், இந்த முறை, இன்னும் சற்று அதிகக் கடுமையோடு! இந்தப் பாவகரமான மாம்சத்தை உத்தமதனத்தின் சாலையில் ஓட்டுவதற்கான ஓர் அதிகப்படியான தாற்றுக்கோலாக, ஒரு சரீரபூர்வமான தவ முயற்சியை - சிறியதுதான் - ஏற்றுக் கொள்.

படிப்படியாக உன்னையே நீ வெறுக்கத் தொடங்குகிறாய். கடவுளின் பார்வையில் நீ எத்தகைய ஒரு மிருக ஜென்மமாக இருக்கிறாய் என்பதையும், நீ நரகத்தைத் தவிர வேறு எதற்கும் தகுதியற்றவனாக இருந்தாலும், உன் மட்டில் அவர் எவ்வளவு கருணையுள்ளவராகவும், மன்னிக்கிறவராகவும் இருக்கிறார் என்பதையும் காணத் தொடங்குகிறாய். நிலம் பிளந்து இன்னும் ஏன் உன்னை விழுங்காமல் இருக்கிறது என்று ஆச்சரியம் கூட அடையும் அளவிற்கு, உன் மட்டில் எப்போதும் அதிகரிக்கிற ஒரு வெட்க உணர்வைக் கொண்டிருக்கத் தொடங்குகிறாய். அதன்பின், உன்னுடைய ஒவ்வொரு வீழ்ச்சிக்கும் பிறகு சேசுநாதர் எவ்வளவு கருணையோடும், மென்மையோடும் இருக்கிறார் என்பதை நீ காணும்போது, உன் இருதயம் அவரை மிகப் பெரும் அளவுக்கு நேசிக்காமல் இருக்க முடியாது. அதன்பின் உன் கஷ்டத்திலிருந்து வெளியே வருவதற்கு ஒரு புதிய வழியைப் பற்றி நீ சிந்திக்கத் தொடங்குகிறாய். உன் பழைய பாவகரமான சுயத்தை உத்தமதனத்தின் பாதையில் செலுத்த உன்னால் முடியாது என்பதால், நீ சேசுவிடம் போய், இந்தப் பிரச்சினை முழுவதையும் அவர் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கிறாரா என்று பார்க்கிறார். நீ மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, இந்தக் கையளித்தல் சேசுவுக்கு அளவுகடந்த விதமாய் பிரியமுள்ளதாயிருப்பதையும், அவர் உனக்கு சமாதான முத்தமளிப்பதையும் நீ காண்கிறாய் (கிறீஸ்துநாதர் அநுச்சாரம், அத்தியாயம் 52, மூன்றாம் காண்டம்). இப்போதிலிருந்து நீ செய்கிற எல்லாக் காரியங்களிலும் சேசுநாதர் மீதுள்ள நேசமே நோக்கமாகவும், உந்துசக்தியாகவும் இருக்கிறது. வாழ்க்கையே இனிமையானதாகிறது. ஏனென்றால் அது இப்போதிலிருந்து, சேசுவுக்கான வாழ்வு மட்டுமல்லாமல், சேசுவிலும், சேசுவோடும் வாழும் வாழ்க்கையாகிறது. பூமியின் மீது மோட்சம் தொடங்குகிறது. நம் கட்டளை ஜெபப்புத்தகத்தில் உள்ள அர்ச். அகுஸ்தினாரின் ஜெபத்தின்படி, நீ உன்னை எவ்வளவுக்கு அதிகமாக வெறுக்கிறாயோ, அவ்வளவுக்கு அதிகமாக தேவசிநேகம் உன் இருதயத்திற்குள் ஊற்றப்படுகிறது. ஓ! இந்த தேவசிநேகம் எவ்வளவு இனிமையானதாயிருக்கிறது! தேவசிநேகம் மகிழ்ச்சியானது, குழந்தைத்தன்மையுள்ளது, வீரமுள்ளது, பொறுமையுள்ளது, பிரமாணிக்கமுள்ளது, விவேகமுள்ளது, முக்கியமாக, தாழ்ச்சியுள்ளது - வீணான காரியங்களின் மட்டில் அது மென்மையாகவோ, இலேசானதாகவோ, அல்லது அவற்றை நோக்கமாகக் கொண்டதாகவோ இருப்பதில்லை - மாறாக, அது மட்டுமிதமும், கற்பும், திடமும் உள்ளதாகவும், மேலதிகாரிகளுக்குப் பணிவதாகவும், தானே தன் சொந்தக் கண்களுக்கு அருவருப்பானதாகவும், இழிவானதாகவும், கடவுள் மட்டில் பக்தியுள்ளதாகவும், எப்போதும், எல்லாக் காரியங்களிலும் அவரை நம்பியிருப்பதாகவும் இருக்கிறது. நேசத்தை விட அதிக இனிமையானது வேறு எதுவுமில்லை. பரலோகத்திலும் சரி, பூலோகத்திலும் சரி, அதைவிட அதிக வல்லமையுள்ளதும், உயர்வானதும், அதிக மகிழ்ச்சியானதும், அதிக நல்லதுமாகிய வேறெதுவும் இல்லை. நேசிக்கிறவன் பறக்கிறான், ஓடுகிறான், அகமகிழ்கிறான்; அவன் எப்போதும் சுதந்திரமுள்ளவனாக இருக்கிறான். எதனாலும் நிறுத்தப்படுவதில்லை. அவன் எல்லாவற்றையும் எல்லோருக்காகவும் கொடுக்கிறான், எல்லாவற்றையும், எல்லோருக்காகவும் கொண்டிருக்கிறான். அவன் எந்தச் சுமையையும் உணர்வதில்லை, கடின உழைப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை, சாத்தியமற்றதைப் பற்றி முறையிடுவதில்லை. ஏனென்றால் எல்லாமே சாத்தியம் என்று அவன் நினைக்கிறான். சேசுநாதரின் உன்னதமான நேசம் ஒரு மனிதனை மாபெரும் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது, அதிக உயர்வான காரியங்களுக்காகப் பாடுபடும்படி அவனை உந்தித் தள்ளுகிறது! நேசம் கடவுளிடமிருந்து பிறக்கிறது. கடவுளில் இளைப்பாற்றி அடையும் வரையிலும் அதனால் ஓய்வெடுக்க முடிவதில்லை. இத்தகைய மாபெரும் பொக்கிஷத்தை மனிதனுக்கு வழங்கியதற்காக சர்வேசுரனுக்கு அளவற்ற ஸ்துதி புகழ்ச்சியும், நன்றியும் உண்டாவதாக.


எங்கள் பேரில் வைத்த சிநேகத்தால் பற்றியெரியும் சேசுவின் திவ்விய இருதயமே!
எங்கள் இருதயங்களும் உமது சிநேகத்தால் பற்றியெரியச் செய்தருளும்!