இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நானே நல்ல ஆயன்

 "நானே நல்ல ஆயன்'' என்று சேசுநாதர் தம்மைப் பற்றிக் கூறினார் (அரு.10:11). ஒரு நல்ல ஆயனின் வேலை நல்ல புல்வெளிகளுக்குத் தன் மந்தையை இட்டுச் செல்வதும், ஓநாய்களிடமிருந்து அவற்றைப் பாதுகாப்பதும்தான்; ஆனால், ஓ இனிய இரட்சகரே, எந்த ஆயன் உம்மைப் போல் இரக்கம் உள்ளவனாக இருந்திருக்கிறான்? எந்த மேய்ப்பன் தன் மந்தைகளுக்காகத் தன் உயிரைக் கொடுத்து, அவற்றிற்குத் தகுதியாயிருந்த தண்டனையிலிருந்து அவற்றை விடுவித்திருக்கிறான்?

"நாம் பாவங்களுக்கு மரித்தவர்களாய் நீதிக்கு ஜீவிக்கும்படி அவர்தாமே சிலுவை மரத்தின் மேல் தமது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார். அவருடைய காயங்களினால் சொஸ்தமாக்கப்பட்டீர்கள்'' (1 இரா. 2:24). நம் நோய்களிலிருந்து நம்மை குணமாக்குவதற்காக இந்த நல்ல ஆயர் நம் நோய்களை எல்லாம் தம் மீது சுமந்து கொண்டு, தமது சொந்த ஆள்தன்மையில் நம் கடன்களைத் திருப்பிச் செலுத்தினார், இதற்காக அவர் ஒரு சிலுவையின் மீது அவஸ்தைப்பட்டு மரித்தார். தமது ஆடுகளின் மீது அவர் கொண்டிருந்த இந்த அளவற்ற அன்புதான் வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியாரை சேசுவுக்காகத் தம் உயிரைக் கையளிக்கும் ஆசையால் பற்றியெரியச் செய்தது. ""ஆ, என் நேசம் சிலுவையில் அறையுண்டிருக்கிறதே! என்ன! என் சர்வேசுரன் எனக்காக ஒரு சிலுவையின் மீது மரிக்கச் சித்தமாயிருந்திருக்க, அவருக்காக மரிக்கும்படி ஆசை கொள்வதற்கு என்னால் முடியாதா?'' என்று இதே அன்பு அவரைக் கதறச் செய்தது. உண்மையில் சேசுநாதர் தங்களின் மீதுள்ள அன்பிற்காகத் தம் உயிரைக் கொடுத்திருக்கும் போது, வேதசாட்சிகளும் சேசுவுக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தது பெரிய காரியமா? ஓ, சேசுநாதர் அவர்களுக்காக அனுபவித்த மரணம்--காயங்கள், குத்தித் துளைக்கும் ஆணிகள், நெருப்பால் பழுக்கச் சிவந்த இரும்புப் பாளங்கள், மற்றும் மிகக் கொடூர வேதனை தந்த மரணங்கள் போன்ற அவர்களுடைய வாதைகள் அனைத்தையும் எப்படி அவர்களுக்கு இனிமையானதாக மாற்றியது!

ஆனால் இந்த நல்ல மேய்ப்பரின் அன்பு, தம் ஆடுகளுக்காகத் தம் உயிரைத் தருவதோடு திருப்தியடையவில்லை. தமது மரணத்திற்குப் பின், முதலில் சிலுவையின் மீது பலியாக்கப்பட்ட தம் திருச்சரீரத்தை அவர்களுக்கு விட்டுச் செல்ல அவர் ஆசித்தார். அது அவர்களுக்கு உணவாகவும், அவர்களது ஆத்துமங்களுக்கு மேய்ச்சல் நிலமாகவும் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். ""நம்மீது அவர் கொண்டிருந்த தகிக்கும் நேசம் தம்மை நம்மோடு ஒரே பொருளாக ஒன்றிக்கும்படி அவரைத் தூண்டியது'' என்று அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார்.

ஆகவே, என் சேசுவே, நீர் யாருக்காக உம் உயிரைக் கையளித்தீரோ, அந்த ஆடுகளில் நானும் ஒருவன் என்பதை நினைத்தருளும். ஆ! முன்பு எனக்காக நீர் இறந்து கொண்டிருந்த போது, என் மீது வீசிய தயவுள்ள பார்வைகளில் ஒன்றை இப்போது என் மீது வீசியருளும். என்னைக் கண்ணோக்கி, என்னை மாற்றும், என்னை இரட்சியும். நீர் அன்புள்ள ஆயன் என்று உம்மையே அழைத்துக் கொண்டீர். நீர் காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடித்து, மகிழ்ச்சியோடு உமது தோள்களின் மீது அதைச் சுமந்து வந்து, அதன்பின் உம்மோடு அக்களிக்கும்படி உம் நண்பர்களை அழைக்கும் நல்ல மேய்ப்பராக இருக்கிறீர். என் நல்ல ஆயரே, நான் உம்மை நேசிக்கிறேன். மீண்டும் ஒருபோதும் உம்மை விட்டு நான் பிரிய என்னை ஒருபோதும் அனுமதியாதேயும்.

இந்த நல்ல மேய்ப்பர் காணாமல் போன ஓர் ஆட்டைக் காணும்போது, அதை மீண்டும் தம்முடையதாக்கிக் கொள்ள என்னதான் செய்ய மாட்டார், என்ன வழியைத்தான் அவர் கையாள மாட்டார்! அதைக் கண்டு பிடிக்கும் வரை அவர் அதைத் தேடுவதை நிறுத்துவதில்லை. ""... அவைகளில் ஒன்று காணாமற்போனால்... காணாமல் போன ஆட்டைக் காணும் வரையும் அதைத் தேடித் திரிய மாட்டானா?'' (லூக்.15:4). அதைத் தாம் கண்டுபிடித்ததும், இனி மீண்டும் அது தொலைந்து விடாதபடி, அதை அக்களிப்போடு தம் தோளின்மீது போட்டுக் கொண்டு, திரும்பி வந்து, காணாமல் போன ஆட்டைத் தாம் தேடிக் கண்டுபிடித்தது பற்றித் தம்மோடு அகமகிழ்ந்து களிகூரும்படி தம் நண்பர்களையும், அயலாரையும், அதாவது சம்மனசுக்களையும், புனிதர்களையும், அவர் அழைக்கிறார். அப்படியிருக்க, தமக்கு முதுகைத் திருப்பிக் கொண்டு, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிற பாவிகளுக்கு இவ்வளவு அன்புள்ளவராகத் தம்மைக் காட்டுகிற இந்த நல்ல ஆண்டவரை யார்தான் தனது முழு நேசப் பற்றுதலோடு நேசிக்க மாட்டான்?

ஓ என் முழு அன்பிற்கும் தகுதியுள்ளவராகிய என் இரட்சகரே, காணாமல் போன ஓர் ஆட்டை உமது பாதங்களின் அருகில் பாரும்! நான் உம்மை விட்டு விலகிச் சென்றேன், ஆனால் நீர் என்னைக் கைவிட்டு விடவில்லை. என்னை மீண்டும் சொந்தமாக்கிக் கொள்ள எல்லா வழிகளையும் நீர் முயன்று பார்த்து விட்டீர். என்னைத் தேடுவதை நீர் நிறுத்தி விட்டிருந்தால், எனக்கு என்ன ஆகியிருக்கும்! ஓ எனக்கு ஐயோ கேடு! எவ்வளவு நீண்ட காலம் நான் உம்மிடமிருந்து தொலைவாக வாழ்ந்திருக்கிறேன்! இப்போது, உம் இரக்கத்தின் வழியாக, நான் உமது வரப்பிரசாதத்தில் இருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் முதலில் உம்மை விட்டு ஓடிப் போனதால், இப்போது வேறு எதையுமன்றி உம்மை நேசிக்கவும், உமது பாதங்களைத் தழுவியபடி வாழவும் இறக்கவும் நான் ஆசிக்கிறேன். ஆனால் நான் வாழும்போது, உம்மை விட்டு விலகும் ஆபத்தில் நான் இருக்கிறேன்; ஓ, உமது பரிசுத்த அன்பின் பந்தத்தால் என்னைக் கட்டி, உமது அன்பின் சங்கிலிகளால் என்னைப் பிணைத்தருளும். நான் இந்த பூமியில் வாழும் வரைக்கும், என்னைத் தேடுவதை ஒருபோதும் நிறுத்தி விடாதேயும். ""காணாமல் போன ஆட்டைப் போல வழிதவறிப் போனேன். உமது ஊழியனைத் தேடி வாரும்'' (சங்.118:176). ஓ மரியாயே, பாவிகளுக்காகப் பரிந்து பேசுகிறவர்களே, எனக்குப் பரிசுத்த நிலைமை வரத்தைப் பெற்றுத் தாருங்கள்.