இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். பிலோமினம்மாள் சுரூபத்தில் நிகழ்ந்த அதிசய மாற்றங்கள்

நேப்பிள்ஸ் நகரில் அந்தோனியோ தெர்ரஸ் மாளிகையில் அர்ச். பிலோமினம்மாள் சுரூபத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றி ஏற்கெனவே கூறப்பட்டது. அதில் மேலும் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

1805 செப்டம்பர் 29 அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் திருநாளன்று, முஞ்ஞானோ ஆலயத்தில், அர்ச். பிலோமினம்மாளின் புதுப்பீடம் மந்திரிக்கப்பட்ட போது அவளது சுரூபத்தில் இரண்டாவது மாற்றம் நிகழ்ந் தது. அதுவரையிலும் வெளியே நீண்டிராத வலது கரம் நீண்டது. அதில் இருதயத்தை நோக்கிப் பிடித்திருந்த அம்பு பாதங்களை நோக்கித் திருப்பப்பட்டிருந்தது. வாய் சற்றுத் திறந்து, பற்கள் இயல்பாக முறுவலுடன் தெரிந்தன. முகத் தின் வடிவமும், நிறமும் மாறின. முன்பிருந்த விகாரமான தோற்றம், அழகிய உருவமாயிற்று! 

அன்று கோவிலில் சக்றீஸ்தர் சில திருயாத்ரீகர்களுக்கு சுரூபத்தைக் காட்டும்படி அதன் திரையை விலக்கவும் கூச்ச லிட்டுக் கத்திவிட்டார். பங்குக்குரு சங். பிரான்சிஸ்கோ என்னவோ ஏதோவென்று பயந்தபடி கோவிலுக்கு விரைந்தார். சுரூபத்தைப் பார்த்தார். அந்தோனி தெர்ரஸின் வீட்டில் நிகழ்ந்த சுரூப மாற்றம் பளிச்சென அவர் நினைவுக்கு வந்தது. இப்பொழுது அதையும் விடச் சிறந்த மாற்றம் வந்துள்ளது. அர்ச். பிலோமினம்மாளின் தலை நிமிர்ந்து மக்களை வரவேற்பதாகக் காணப்பட்டது. கரத்தில் ஏந்திய சிவப்புப் பரிவட்டத்துகில் முஞ்ஞானோ பட்டணத்தையே மூடுவது போலிருந்தது. பிலோமினா என்ன அழகு என்றது அவர் உள்ளம். அவள் முகத்தில் விளங்கிய மோட்சப் புன்னகைதான் அவரை மிகவும் கவர்ந்தது. அர்ச். பிலோமி னம்மாள் சாந்தமுள்ள கன்னிகையாக, ஆண்டவரில் ஓய்வு பெற்ற அமைதியுடன் காணப்பட்டாள். முஞ்ஞானோ மக்கள் தங்கள் பொதுக் கருவூலத்தை அழகுடன் உறங்கும் பரலோக இளவரசி என்று பெருமையுடன் அழைத்தார்கள். அவர்கள் அவளைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை.

இந்த சுரூபத்தில் இன்னொரு மாற்றம் 1824ம் ஆண்டில் நடந்தது. சுரூபத்தை வைப்பதற்கு ஒரு அழகிய புதிய பேழை தயாரிக்கப்பட்டிருந்தது. சுரூபத்தை மிகுந்த ஆசாரத்துடன் புதுப்பேழைக்கு மாற்றினார்கள். ஆனால் இந்தப் பேழை அர்ச். பிலோமினம்மாளின் சுரூப அளவை விட 12 அங்குலம் கூடுதல் நீளமாயிருந்தது. சுரூபத்தை வைத்தபோது அந்த கூடுதல் இடம் காலியாகவே கிடந்தது. ஆனால் எப்படியோ அதிசயமாக சுரூபத்தின் கால்கள் நீண்டு, புதுப்பேழையின் அற்றத்தை எட்டின! சுரூபத்துக்கும், பெட்டிக்கும் நல்ல பொருத்தமாகி விட்டது.