இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயம்!

நாம் பாவப் பரிகாரச் செயல்களில் ஈடுபட இருக்கும்போது இந்த மன்றாட்டை தியானிப்பது தகுதியுள்ளதாக இருக்கிறது. “அவமானத்தால் பொதுமியிருக்கிற சேசுவின் திரு இருதயமே” என்று இலத்தின் மொழி இன்றைய இரவின் சிந்தனையை எடுத்துரைக்கிறது. பொதுமியிருத்தல் என்றால் முழுவதுமாக நிறைந்திருத்தல் என்பது பொருள் - விளிம்பு வரை நிறைந்திருத்தல் என்பது போல. நம் இரட்சகருடைய தெய்வீக இருதயம் எதனால் நிறைந்திருக்கிறது? அது நேசத்தாலும் நன்றியாலும் நிறைந்திருக்க வேண்டுமல்லவா? தன் மாபெரும் நேசத்தை நிரூபிக்கும் முயற்சியில் அது தன்னையே உடைத்துக் கொள்ளவில்லையா? இத்தகைய தாராளம் பதிலுக்கு நன்றியாலும், நேசத்தாலும் எதிர்கொள்ளப்பட வேண்டாமா? சகல மனிதர்களையும் அளவற்ற பொக்கிஷங்களால் வளப்படுத்துவதைத் தவிர வேறு எதற்காவது சேசுவின் திரு இருதயம் ஆசைப்பட்டிருக்கிறதா? இத்தகைய நேசமும் தாராளமும் எல்லாவிடங்களிலும் நன்றியையே காண வேண்டாமா? ஆ, அது ஒரு மிக மிக சோகமான கதை! சேசுவின் அந்த நேச இருதயம், அவரே கூறியுள்ளபடி, மனிதரை இவ்வளவு அதிகமாக நேசித்த அந்த இருதயம், தான் யாரை நேசித்ததோ, யாருக்காக மரித்ததோ, அந்த மனிதர்களால் மிக மிகக் கொடிய விதமாக நடத்தப்படுகிறது. பேய்த்தன்மையுள்ள ஒரு மனம் சிந்திக்கக் கூடிய ஒவ்வொரு வேதனையும், ஒவ்வொரு அவமானமும், நம் இரட்சகரின் திருமரணத்தின் நேரத்தில் அவர்மீது கட்டவிழ்த்து விடப்பட்டது! அந்த அவமானங்களும், வெறுப்பும் அவருடைய மரணத்தோடு மட்டும் நின்று போயிருந்தால்! ஆனால் இல்லை, அப்படி நின்று போவதற்குப் பதிலாக, காலப் போக்கில் அவை இரட்டிப்பாகின, மீண்டும் மீண்டும் இரட்டிப்பாகிக் கொண்டே வருகின்றன. இப்போது நம் இரட்சகரைக் குறித்து சொல்லப்பட்டு வருகிற பயங்கரத்துக்குரிய காரியங்கள் சிலவற்றை உனக்கு நான் விவரிக்க முடியும். ஆனால் அத்தகைய தேவ நிந்தைகளுக்கு உன் செவிகள் பழக்கப்படவில்லை. அத்தகைய அருவருப்புகளை நம் இரட்சகரின் பிரசன்னத்தில் குறிப்பிடுவது நன்றாக இருக்காது. ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது என்பதில் நிச்சயமாயிரு - தேவநிந்தைகளும், அவமானங்களும் நம் நேச இரட்சகருக்கு எதிராக, வானமட்டும் குவிக்கப்படுகின்றன. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்திருக்கிற சேசுவின் திரு இருதயமே, உமது களைத்துப் போன, காயப்பட்ட இருதயத்தை எங்களை நோக்கித் திருப்புவீராக. பரிவிரக்கத்தின் தைலத்தில் ஒரு சில துளிகளை நாங்கள் கண்டுபிடிக்கக் கூடும். அதைக் கொண்டு, உம் சொந்த சிருஷ்டிகளே உம் மீது ஏற்படுத்திய அந்த அச்சத்திற்குரிய காயங்களின் வலியை சற்றாவது ஆற்ற எங்களால் முடியும். மரண மட்டும் கூட நாம் நேசிக்கிற ஒருவனால் நம்மில் ஏற்படுத்தப்படுகிற காயத்தை விட அதிக வேதனையான காயம் வேறு எதுவுமில்லை. அந்த விரிந்திருக்கிற காயத்தோடு நன்றியற்றதனமும், பிரமாணிக்கமின்மையும், நெருப்பையும், உப்பையும் சேர்க்கின்றன. இத்தகைய காயங்களையே சேசு பெற்றுக் கொண்டார். அதுவும் எத்தனை காயங்கள்? சாத்தியமான எல்லாக் காயங்களையும். அவர் அவற்றால் நிறைக்கப்படுகிறார். இப்போது திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்திலும், நாளைக்கு, உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக நாம் அவரைப் பெற்றுக் கொள்ளும்போதும், நாம் அவருக்கு கொஞ்சம் பரிவிரக்கம் காட்டுவோம். 


நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!