இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் ஆன்மாவை வளப்படுத்தும் பனித்துளியாக இருக்கிறது!

"இன் ஏஸ்து தெம்பேரியெஸ்; துல்ச்சே ரெஃப்ரிஜேரியும்.''

தேவசிநேகம் ஆத்துமத்தை வளப்படுத்தும் பனித்துளியாக இருக்கிறது. இவ்வாறே ஜெபிக்கும்படி பரிசுத்த திருச்சபை நமக்குக் கற்பிக்கிறது: "பரிசுத்த ஆவியானவர் பொழியப்படுவது நம் இருதயங்களைச் சுத்திகரித்து, அவரது பனித் துளி உள்ளரங்கமாகத் தெளிக்கப்படுவதால், அவற்றை வளப்படுத்துவதாக.'' அன்பு நம் நல்ல ஆசைகளையும், நம் பரிசுத்த நோக்கங்களையும், நம் ஆத்துமங்களின் நற்செயல்களையும் வளப்படுத்துகிறது; இவை பரிசுத்த ஆவியானவரின் வரப்பிரசாதம் நம்மில் விளையச் செய்கிற மலர்களாகவும், கனிகளாகவும் இருக்கின்றன. நேசம் தீய ஆசைகள் மற்றும் சோதனைகளின் வெப்பத்தைக் குளிர்விப்பதாலும், அது பனித்துளி என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பரிசுத்த ஆவியானவரும், ""அதீத வெப்பத்தில் உபசாந்தியும், நம் துக்கத்தில் ஆறுதலுமானவர் - இன் ஏஸ்து தெம்பேரியெஸ்; துல்ச்சே ரெஃப்ரிஜேரியும்'' என்று அழைக்கப்படுகிறார்.

ஓ பரிசுத்த, தெய்வீக ஆவியானவரே, நான் இனி எனக்காக வாழ மாட்டேன்; எனக்கு எஞ்சியிருக்கிற வாழ்நாட்களை உம்மை நேசிப்பதிலும், உம்மை மகிழ்விப்பதிலும் நான் செலவிடுவேன். இது காரணமாக, ஜெபத்தின் கொடையை எனக்குத் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன். என் இருதயத்திற்குள் வந்து, நான் ஜெபிக்க வேண்டிய முறையை எனக்குக் கற்பித்தருளும். ஞான வறட்சி அல்லது சோர்வின் காலத்தில் நான் ஜெபத்தைக் கைவிட்டு விடாதிருக்க எனக்குப் பலம் தாரும்; ஜெப உணர்வை, அதாவது, உமது மிகவும் உகந்த முறையில் ஜெபிப்பதும், இத்தகைய ஜெபங்களை உமக்கு உகந்த விதத்தில் ஒப்புக்கொடுப்பதுமான வரப்பிரசாதத்தை எனக்குத் தந்தருளும்.

இந்தப் பனித்துளி நாம் ஜெபிக்கும் நேரத்தில் நம் இருதயங்களுக்குள் இறங்குகிறது. ஒரு கால்மணி நேர ஜெபம் எத்தகைய வெறுப்பையும், கோபத்தையும், ஒழுங்கற்ற அன்பையும், அவை எவ்வளவு தீவிரமானவையாக இருந்தாலும், அணைப்பதற்குப் போதுமானது: ""அவர் என்னைத் திராட்ச இரச அறைக்கு அழைத்துச் சென்றார்; என்னில் தேவசிநேகத்தை ஒழுங்குபடுத்தினார்'' (உந்.சங். 2:4). இந்தத் திராட்சை இரச உக்கிராண அறை பரிசுத்த தியானம் ஆகும். அங்கே நேசமானது எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை நாம் நேசிக்கும்படியாகவும், நம்மைப் போலவே நம் அயலாரையும் நேசிக்கும்படியாகவும் ஒழுங்குபடுத்தப்படுகிறது. கடவுளை நேசிக்கிறவன் ஜெபத்தை நேசிக்கிறான்; ஜெபத்தை நேசிக்காதவனுக்குத் தன் ஆசாபாசங்களை வெல்வது ஒருபோதும் சாத்தியமாயிராது.

ஓ என் தேவனே, என் பாவங்களால் நான் தொலைந்து போனேன். ஆனால் இப்போது நீர் எனக்குக் காண்பித்துள்ள உபகாரத்திலிருந்து, நீர் என் அர்ச்சிப்பையும், இரட்சிப்பையும் விரும்புகிறீர் என்று நான் காண்கிறேன்; உம்மை நான் மகிழ்விக்கும்படியாகவும், உமது அளவற்ற நன்மைத்தனத்தை மிகுந்த ஆவலோடு நேசிக்கும்படியாகவும், நான் நிச்சயமாக பரிசுத்தமடைய ஆசிக்கிறேன். என் இராஜரீக நன்மையே, என் நேசரே, என் சர்வமே, நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை நேசிப்பதால், என்னை முழுமையும் உமக்குத் தருகிறேன். ஓ பாக்கியவதியாகிய கன்னி மாமரியே, என்னைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.