அகன்ற சாலை!

நாங்கள் சாலையில் செல்லத் தொடங்கினோம். அது அழகாகவும், அகன்றதாகவும், சுத்தமாகப் பாவப்பட்டு, பராமரிக்கப் பட்டதாகவும் இருந்தது. ' ‘வியா பெக்காந்த் ஸி யும் கொம்ப்ளாநாத்தா லாப்பிதி புஸ், எத் இன் ஃபீனே இல்லாரும் இன்ஃபேரி, எத் தெனேப்ரே, எத் போனே - பாவிகளின் வழி கற்கள் பாவி சமமாயிருக்கிறது. ஆனால் அவர்களது முடிவில் நரகம், இருள், தண்டனைகள்தான் இருக்கின்றன” (சர்வப். (சீராக்) 21:11). சாலையின் இரு பக்கத்திலும் மிக அழகிய, பசுஞ்செடிகள் வரிசையாக நின்றன. அவற்றில் மிகக் கவர்ச்சியான மலர்கள் நிறைந் திருந்தன. குறிப்பாக எல்லா இடங்களிலும் ரோஜாக்கள் இலை களுக்கு நடுவிலிருந்து வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. முதல் பார்வையில் சாலை சமதளமாகவும், சௌகரியமானதாகவும் தோன்றியது. ஆகவே நான் கொஞ்சமும் சந்தேகமின்றி அதில் துணிந்து செல்லத் தொடங்கினேன். ஆனால் விரைவில் அது உணர முடியாத விதத்தில் கீழ்நோக்கி சரிவாக இருந்ததை நான் கவனித்தேன். அது கொஞ்சங்கூட செங்குத்தாக இருப்பதாகத் தோன்றவில்லை என்றாலும் கூட, நான் எவ்வளவு வேகமாக நகர்வதை உணர்ந்தேன் என்றால், காற்றின் ஊடாக எந்த வித முயற்சியுமின்றி நான் பறந்தபடி இறங்கிக் கொண்டிருந்தேன். உண்மையாகவே நான் காற்றில் பறந்தவாறுதான் இறங்கிக் கொண்டிருந்தேன். என் பாதங்களை அரிதாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது, திரும்பிச் செல்லும் பயணம் மிக நீண்டதாகவும், மிகக் கடினமான தாகவும் இருக்கப் போகிறது என்ற எண்ணம் என்னைத் தாக்கியது.

“நாம் எப்படி ஆரட்டரிக்குத் திரும்பிப் போகப் போகி றோம்?” என்று நான் கவலையோடு கேட்டேன்.

“கவலைப்படாதீர். எல்லாம் வல்லவர் நீர் போக வேண்டு மென்று விரும்புகிறார். உம்மை நடத்திச் செல்பவர், எப்படித் திரும்பக் கூட்டி வருவது என்பதையும் அறிந்திருக்கிறார்” என்று அவர் பதிலளித்தார்.

சாலை தொடர்ந்து கீழ்நோக்கி சரிவாக இறங்கிக் கொண் டிருந்தது. நாங்கள் இருபுறமும் ரோஜாக்களும், மற்ற பூக்களும் உள்ள பாதை வழியே தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, ஆரட்டரி யைச் சேர்ந்த சிறுவர்களும், நான் அறியாத இன்னும் மிகப் பலரும் என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை நான் அறிய வந்தேன். எப்படியோ நான் அவர்கள் மத்தியில் இருக்கக் கண்டேன். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவ்வப்போது ஒருவர் பின் ஒருவராய் அந்தச் சிறுவர்கள் தரையில் விழுவதும், அதே கணத்தில் கண்காணாத ஒரு விசையால் தொலைவில் தெரிந்த அச்சமூட்டும் மிக செங்குத்தான சரிவை நோக்கி இழுக்கப்படுவதை நான் கவனித்தேன். அந்தச் சரிவு ஒரு தீச்சூளையில் போய் முடிவடைந்தது. “இந்தச் சிறுவர்களைக் கீழே விழச் செய்வது எது?” என்று நான் என் தோழரிடம் கேட்டேன். “ஃபூனெஸ் எக்ஸ்தெந்தேருந்த் இன் லாக்வேயும்; இயுக்ஸ்தா இத்தேர் ஸ்காந்தாலும் போஸுவேருந்த் - என்னை மோசம் போக்க வலையை விரித்து வைத்தார்கள்; நான் நடக்கும் வழியிலே கண்ணி வைத்தார்கள்” (சங்.139:4).

“இன்னும் நெருங்கிச் சென்று பாரும்” என்று அவர் பதில் தந்தார்.

நானும் அப்படியே பார்த்தேன். அங்கே எங்கு பார்த்தாலும் வரைகள் இருந்தன. சில வரைகள் நிலத்திற்கு மிக அருகிலும், வேறு சில, கண்மட்டத்திலும் இருந்தன. ஆனால் அவை நன்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஆபத்தை உணராமல், பல சிறுவர்கள் அவற்றில் சிக்கிக் கொண்டு இழுக்கப்பட்டார்கள்; அவர்கள் கால்கள் தரையை நோக்கியிருக்க அலங்கோலமாகத் தரையில் விழுந்தார்கள். அதன்பின் ஒரு வழியாக சமாளித்து அவர்கள் எழுந்து நிற்கும்போது, கீழே தெரிந்த பாதாளத்தை நோக்கி, சாலையில் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். வலையில் சிலருடைய தலை மாட்டிக் கொண்டன, வேறு சிலருக்கு கழுத்து, கை, மேற்கைகள், கால்கள், அல்லது விலாப்புறங்கள் ஆகியவை சிக்கிக் கொண்டன. இவர்கள் அதே வினாடியில் கீழ் நோக்கி இழுக்கப்பட்டார்கள். சிலந்தி வலைகளைப் போல மென்மையாகவும், எளிதில் காண முடியாதவையாகவும் இருந்த நிலத்திலுள்ள வலைகள் எளிதாக அறுந்து போகக் கூடியவை போலவும், தீங்கற்றவை போலவும் தோன்றின. ஆனால் நான் ஆச்சரியப்படும் விதமாக, அவற்றில் சிக்கிக் கொண்ட ஒவ்வொரு சிறுவனும் தரையில் விழுந்தான்.

என் பேராச்சரியத்தைக் கண்ட என் வழிகாட்டி, “இருது என்ன என்று உமக்குத் தெரிகிறதா?” என்று கேட்டார்.

“ஒரு மெல்லிய இழை, அவ்வளவுதான்” என்று நான் பதில் கூறினேன்.

“ஓர் ஒன்றுமில்லாமை மட்டுமே. அது வெறும் முகத் தாட்சணியம் மட்டுமே” என்றார் அவர்.

பல சிறுவர்கள் இந்த வலைகளில் சிக்கிக் கொள்வதைக் கண்டு, நான் அவரிடம்: “ஏன் இவ்வளவு அதிகமானவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்? கீழே அவர்களை இழுப்பது யார்?” என்று கேட்டேன்.

“இன்னும் அருகில் செல்லும், அப்போது நீரே பார்ப்பீர்” என்று அவர் கூறினார்.

நான் அவருடைய அறிவுரையைப் பின்பற்றி அருகில் சென்று பார்த்தபோதும், எனக்கு விசித்திரமாக எதுவும் தெரியவில்லை.

"இன்னும் நன்றாகக் கூர்ந்து பாரும்” என்று அவர் வற்புறுத்திக் கூறினார்.

நான் அந்த வலைகளில் ஒன்றைக் கையில் எடுத்து, அதை இழுத்தேன். உடனே ஒரு எதிர்விசையை நான் அதில் உணர்ந்தேன். ஆகவே நான் இன்னும் அதிக வேகமாக இழுத்தேன். ஆனால் அந்த நூல் எனக்கு இன்னும் அருகில் வருவதற்குப் பதிலாக, நானே கீழ் நோக்கி இழுக்கப்படுவதைத்தான் என்னால் உணர முடிந்தது. நான் எதிர்ப்புக் காட்டவில்லை. விரைவில் ஒரு பயங்கரமான குகையில் விளிம்பில் நான் இருக்கக் கண்டேன். அந்த ஆழமான குகைக்குள் செல்லத் துணியாதவனாக, நான் அங்கே நின்று விட்டேன். மீண்டும் அந்த நூலை என்னை நோக்கி இழுத்தேன். அது சற்று விட்டுக் கொடுத்தது, ஆனாலும் நான் மிக சிரமப்பட்டு இழுத்த பிறகே அதை ஓரளவுக்கு இழுக்க முடிந்தது. நான் தொடர்ந்து இழுத்துக் கொண்டிருந்தேன். நீண்ட நேரத்திற்குப் பிறகு, ஒரு பிரமாண்டமான, அருவருப்பான இராட்சத மிருகம் ஒரு கயிற்றைக் கையில் பிடித்தபடி வெளியே வந்தது. எல்லா வலைகளும் அந்தக் கயிற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அந்த மிருகம்தான் அந்த வலைகளில் சிக்கிக் கொண்ட யாரையும் அதே கணத்தில் கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருந்திருக்கிறது. “அதன் பலத்திற்கு என் பலம் சமமாக முடியாது. நான் நிச்சயமாகத் தோற்று விடுவேன். ஆகவே சிலுவை அடையாளத்தாலும், சிறு மனவல்லய ஜெபங்களாலும் அதை எதிர்த்துப் போராடுவதுதான் எனக்கு நல்லது” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

அதன்பின் நான் என் வழிகாட்டியிடம் திரும்பிச் சென்றேன். “இப்போது அவன் யார் என்பது உமக்குத் தெரியும்” என்று அவர் என்னிடம் சொன்னார்.

“நிச்சயமாகத் தெரியும்! அவன் சாத்தானேதான்!”