இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நேப்பிள்ஸ் நகரிலிருந்து முஞ்ஞானோவுக்குப் புறப்படல்

திட்டமிட்டபடி 1805 ஆகஸ்ட் 9-ம் நாள் மாலையில் பிலோமினம்மாளைச் சுமந்து கொண்டு கால்நடையாகவே முஞ்ஞானோவுக்குப் போகத் தீர்மானித்தார்கள். நேரமும் வந்தது. சங். பிரான்சிஸ்கோ சுவாமி சுரூபத்தைச் சுமந்து செல்வதில் உதவி செய்ய முஞ்ஞானோவிலிருந்து இரண்டு பேரைத் தருவித்திருந்தார். அவர்களில் ஒருவனான ஸ்தெபானோ குவெரியேரோ என்பவனுக்கு அடி வயிற் றினுள் வீக்கம் ஏற்பட்டு வேதனைப்பட்டான். குருவானவர் அவனை அர்ச். பிலோமினாளிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னபடி அவன் செய்யவே குணமடைந்து தன் அலுவலை உற்சாகத்துடன் செய்தான். இது ஒரு இறகின் பாரம்தான் என்று கூறினான். 

அதிசய வெளிச்சம்

அதன்பின் நேப்பிள்ஸிலிருந்து சுரூபத்தை முஞ்ஞானோவுக்குக் கொண்டு செல்லப் புறப்பட்டார்கள். அந்தக் குறுகிய பயணத்திலும் அநேக புதுமைகள் நிகழ்ந்தன. அவர்கள் இரவில் கால்நடையாக அருளிக்கம் இருந்த சுரூபத்துடன் சென்றார்கள். நிலா வெளிச்சம் உள்ளது. அந்த நிலவொளியே போதும் என்று கருதிச் சென்றார்கள். ஆனால் எங்கும் மேகம் படர்ந்து ஒரே இருள் சூழ்ந்து பாதை தெரியாதபடி இருந்ததால் பயணம் மிகக் கடினமாயிற்று அப்போது அவர்களுக்கு அர்ச். பிலோமினம்மாளை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போவே அவளைப் பார்த்து மன்றாடினார்கள். என்ன ஆச்சரியம்! உடனே இருண்ட கனத்த மேகங்கள் நடுவே ஒரு ஒளிக்கீற்று பிரகாசமாய்ப் பாயும் அளவிற்கு மேகங்கள் விலகின. அந்த ஒளியில் அவர்கள் எளிதாக நடந்து சென்றார்கள். அந்த ஒளிக்கீற்று வேதாகமத்தில் இஸ்ராயேல் மக்களுக்கு அருளப்பட்ட ஒளி மேகத்தூண் போன்று இருந்திருக்க வேண்டும்.

அற்புத பாரம்

இப்படி முஞ்ஞானோவை நோக்கிச் செல்கையில், திமித்தீலே என்னும் இடத்திற்கு வந்தபோது திடீரென சுரூபத்தைச் சுமந்து சென்றவர்களால் அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் போயிற்று. அவர்கள் நடக்க முடியாமல் நின்றார்கள். திமித்தீலே என்ற இடம் முன் காலத்தில் எண்ணற்ற வேதசாட்சிகள் கொல்லப்பட்ட இடம். அந்த மகிமையான இடத்தில் அவர்களுடன் சற்று நேரம் தங்குவதற்காக அர்ச். பிலோமினம்மாள் விரும்பியதாகத் தெரிந்தது. அதன்பின் சிறிது நேரத்தில் சுரூபத்தின் பாரம் எளிதாகி விடவே அவர்கள் சாதாரணமாய் நடந்து சென்றார்கள்.

அதிசய மழை 

முஞ்ஞானோவின் விவசாய மக்கள் அப்போது ஏற்பட் டிருந்த கடும் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந் தார்கள். அவர்கள் இந்த அற்புத வரத்தியான வேதசாட்சியை வரவேற்க பெரும் திரளாய்க் கூடி வந்திருந்தார்கள். அவர்கள் ஒரு மனமாக என்ன எண்ணினார்களென்றால், அர்ச். பிலோமினம்மாள் சர்வேசுரனுடன் வல்லமை பெற் றிருப்பதை நமக்குக் காண்பிக்க விரும்பினால், இப்பொழுது நாம் படும் இந்த வறட்சியின் அவதியை அவள் போக்க வேண்டும். இப்படி எண்ணிய அம்மக்கள் அந்த நம்பிக்கையுடனே அர்ச். பிலோமினம்மாளை நோக்கி வேண்டிக் கொள்ளவே திடீரென ஏராளமான மழை கொட்டியது. நிலம் குளிர்ந்தது. மக்களின் உள்ளங்களும் நன்றியால் நிரம்பி வழிந்தன.

முஞ்ஞானோவில் வரவேற்பு 

பசாசுக்களின் ஆர்ப்பாட்டமும் அணையா மெழுகுவர்த்திகளின் அதிசயமும்

நேப்பிள்ஸிலிருந்து புறப்பட்ட சிறு பவனி வர வர பெருகியது. முஞ்ஞானோவிலிருந்து சில மைல்களுக்கு முன் பாகவே பக்கத்துக் கிராம மக்கள் பெருந்திரளாய் வந்து பவனியில் சேர்ந்து கொண்டனர். பிலோமினம்மாளின் சுரூபம் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவர்களின் உற்சாகம் கரைபுரண்டது. வாழ்க பிலோமினா, வாழ்க பிலோமினா என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன.

பவனி முஞ்ஞானோவுக்கு அதிகாலை வேளையில் வந்து சேர்ந்தது. கூட்டம் எவ்வளவென்றால் பிலோமினா தன் சேத்திரத்திற்குள் நுழைவதே சாத்தியமில்லையெனத் தெரிந்தது. ஒரே அமளி, வாழ்த்து, சத்தம்! இதை அமர்த்தி வழி கண்டுபிடிக்க பங்குக்குரு சகல அர்ச்சியசிஷ்டவர் களின் பிரார்த்தனையைத் தொடங்கினார். கூட்டம் கத்தி பதிலளித்தது. அமைதி வந்தது. மிகுந்த மரியாதையுடன் பவனி முன்னேறியது. அச்சமயம் பக்கத்துக் குன்றுகளில் திடீரென ஒரு பெரும் புயல் எழும்பி நரக் கூளிகளின் ஊளைபோல் ஓசையெழுப்பி எல்லாவற்றையும் தன் வேகத்தில் அடித்துச் சென்று விடுவதாகப் பயமுறுத்தியது. மக்கள் மிகவும் பயந்து நடுங்கினர். “ஆண்டவரே, அர்ச். பிலோமினம்மாளே, எங்களை காப்பாற்றுங்கள்'' என்ற பேரொலி விண்ணை நோக்கி எழும்பியது. மக்களின் பீதியைப் போக்க ஒரு குருவானவர் தன் குரலை உயர்த்தி “மக்களே, அஞ்சாதீர்கள். இந்தப் புயலைக் கிளப்பி விடுகிறவை பசாசுக்களே; அவை கோபம் தாங்காமல் இந்தக் கொந்தளிப்பை ஏற்படுத்து கின்றன. நீங்கள் இந்த வீர வைராக்கிய கன்னி வேதசாட்சி யார், அவள் எப்படிப்பட்டவள் என்று இப்பொழுது அடை யாளம் கண்டுகொள்ளுங்கள். அவளுடைய வல்லமையை பசாசுக்கள் அறிந்துள்ளன. பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் இக்கன்னிகை அப்பசாசுக்களை அடக்கி வெற்றி கொண் டாள். இப்பொழுது இங்கேயும் அவைகளை மேற்கொள்ள அவள் வருவது பசாசுகளுக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார். புயலோ இன்னும் சீறி ஓசையெழுப்பி முன் வந்தது. ஆனால் அர்ச். பிலோமினம்மாளின் சுரூபம் உள்ள இடத்திற்கு வந்ததும் திடீரென அப்படியே அடங்கி நின்று விட்டது. ஆயினும் காற்று சுற்றிச் சுழன்று வீசியது. ஆனால் ஜனங்கள் இப்பொழுது பயப்படவில்லை. ஏனென்றால் அர்ச். பிலோமினம்மாளின் அருளிக்க சுரூபத்தின் இரு மருங் கிலும் ஏந்தப்பட்டு வந்த ஆறு மெழுகுவர்த்திகளில் ஒன்றைக் கூட அந்தக் காற்றினால் அணைக்க இயலவில்லை!