இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சக்தியுடையவர்களாயிருக்கிற கன்னிகையே!

நமது இரட்சகரான சேசுகிறீஸ்துநாதரிடம் தேவ சுபாவம், மனித சுபாவம் என இரு சுபாவங்கள இருக்கின்றன. தேவன் என்ற முறையில் பிதாவுக்கு இருப்பது போன்று அவருக்கும் சர்வ வல்லமையுண்டு; மனிதன் என்ற முறையிலும், தேவ சுபாவத்துடன் அவருடைய மனித சுபாவம் ஒன்றித்ததின் காரணமாக, அவருடைய வல்லமையும், சக்தியும் அளவற்றதே. 

கல்லறையினின்று உயிர்த்தபின் இவ்வல்லமை முழுமையும் உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலும் பூலோகத் திலும் சர்வ அதிகாரமும் தமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக நமது ஆண்டவர் தாமே கூறியுள்ளார். அவருடைய வல்லமையில் அவருடைய தாய்க்கும் பங்கு உண்டென்றால் அது பொய்யாகாது. 

நமது ஆண்டவருடைய பாடுகளிலும், சிலுவைகளிலும் பங்குபெற்ற பரிசுத்த மாமரி, அவருடைய மகிமையிலும், வல்லமையிலும் பங்கு பெறுதல் நியாயமே. உண்மையில், அவர்கள் இவ்வித மகிமையும், வல்லமையும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு திருச்சபையின் ஆரம்பத்திலிருந்து இதுவரை அவர்களுடைய மன்றாட்டினால் நடைபெற்ற அதிசயச் சம்பவங்களே தக்க சான்றுகள். 

மரியாயின் வல்லமை அவர்களுடைய ஜீவிய நாட்களிலேயே வெளிப்படுத்தப்பட்டதென நாமறிவோம். கானாவூரில் நடந்த கலியாணத்தின் போது, பிதாவினால் குறிக்கப்பட்ட காலம் இன்னும் வராதிருந்தும் தமது திருத்தாயாரின் மன்றாட்டிற்கு இசைந்து நமதாண்டவர் தமது முதல் புதுமையைச் செய்கின்றார்.

நம் மாதாவின் மோட்ச ஆரோபணத்திற்குப் பின் அவர்களுடைய வல்லமை சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது, அவர்களுடைய வல்லமையால் கிறீஸ்துவ அரசர்களுக்குக் கிடைத்த வெற்றிகள் எத்தனை! வேத விரோதிகளின் மீதும், பதிதர்கள் மீதும் கிறீஸ்தவர்கள் அடைந்த வெற்றிதான் என்ன! 

கடலில் பிரயாணம் செய்தபோது, புயற்காற்றினால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் அவர்களுடைய வல்லமையால் யாதொரு பொல்லாப்புமின்றிக் கரை சேர்ந்துள்ளனர். நரகப் பசாசுக்களின் மீது அவர்களுக்குள்ள வல்லமையை என்னவென்று உரைப்பது? பேயின் தலையை நசுக்கப் பிறந்தவர்களன்றோ அவர்கள்?

உலகத்தின் மீது சர்வேசுரனுக்குள்ள கோபத்தைத் தணிக்க வல்லவர்கள் அவர்களே. இன்று பிரபலமடைந் திருக்கும் பாத்திமாவில் அவர்கள் 1917-ம் ஆண்டு காட்சி தந்த போது, “ரஷ்யா என் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட வேண்டுமென்றும், மாதத்தின் முதற்சனிக் கிழமை தோறும், பரிகார நன்மை உட்கொள்ளப்பட வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். அல்லாவிடில் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும்; யுத்தம் தொடுக்கும்; திருச்சபையைத் துன்புறுத்தும்; நல்லவர்கள் துன்புறுத்தப்படுவார்கள். பரிசுத்த பிதா பாப்பரசர் மிகத் துன்பப்படுவார். பல மாசற்ற இருதயம் வெற்றி பெறும். பரிசுத்த பிதா பாப்பானவர் ரஷ்யாவை எனக்கு ஒப்புக்கொடுப்பார். ரஷ்யா மனந்திரும்பும். உலகத்திற்கு சமாதானம் அருளப்படும்” என்று அறிவித்தார்கள். இவ்வார்த்தைகளை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால், தேவன் நமதன்னைக்குக் கொடுத்திருக்கும் வல்லமையை அறியலாம். ரஷ்யா நாட்டின் பொதுவுடமைவாதிகள் உலகிற்கு இழைத்து வரும் தீங்கையும், அட்டகாசங் களையும் அறியாதவர் இல்லை. பொதுவுடமையை அழித்து ரஷ்யாவை மனந்திருப்ப நம் மாதாவால் முடியும். அவர்களுக்கு அதை நிறைவேற்றும் சக்தி உண்டு. ஆனால் நாமும் அதற்காக நம் ஜெபத்தினால் ஒத்துழைக்கக் கோருகிறார்கள் நம் மாதா.

இவை வெறும் வார்த்தைகள் அன்று; தான் சொல்வதை நிறைவேற்றத் தனக்கு வல்லமையுண்டு என்பதை மாதா மற்றொரு புதுமையால் காட்டத் திருவுளம் கொண்டார்கள். போர்த்துக்கல் நாட்டில் நம் மாதா பாத்திமாவில் காட்சியளிப்பதற்கு முன்னால் ஏற்பட் டிருந்த சீர்கேடான நிலைமையும், பின்னர் அதில் நிலவிய நிரந்தர அமைதியையும்தான் இங்கு குறிப்பிடுகிறோம். ஐரோப்பாவிலுள்ள இச்சிறிய நாட்டில் 16 வருடங் களுக்குள், 16 புரட்சிகள் நடந்தன; மந்திரி சபை 43 தடவைகள் மாற்றமடைந்தது; தேசத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கிடை இவ்வளவெனச் சொல்லும் தர மன்று. இவ்வளவு சீர்கேடான நிலையிலிருந்த அந்நாட்டில் மாதாவின் காட்சிக்குப் பின் ஏற்பட்டுள்ள சமாதானத்தைக் கண்டு அரசியல் நிபுணர் யாவரும் வியப்புறுகின்றனர். மாதா தமது வல்லமையைக் காட்டச் செய்து வரும் கணக்கற்ற செயல்களில் இதுவும் ஒன்றல்லவா?

பிதாவின் பிரிய குமாரத்தியும், சுதனின் பரிசுத்த தாயும், இஸ்பிரீத்துசாந்துவின் நேசப் பத்தினியுமாயிருக்கிற மாமரிக்கன்றி வேறு யாருக்கு தேவன் அதிக வல்லமையை அருளக் கூடும்? உண்மையாகவே “சர்வ வல்லபர் அவர் களிடம் அரும்பெரும் காரியங்களைச் செய்துள்ளார்.” இவ்வளவு சக்தி வாய்ந்த நமது மோட்ச அன்னையை, நமது சகல துன்பங்களிலும் கஷ்டங்களிலும் அண்டிப் போவோம். நமது அதி முக்கிய அலுவலான ஆத்தும இரட்சணியத்தில் நமக்கு உதவி புரியுமாறு அவர்களை நம்பிக்கையுடன் வேண்டுவோம். நமக்கு உதவி புரிய அவர்கள் ஒருபொழுதும் தவற மாட்டார்கள் என்பது நிச்சயம்.

“ஓ பரிசுத்த மரியாயே, நீர் மெய்யாகவே அதிக வல்லபமுள்ளவர்கள்; ஆண்டவர் உம்முடனிருக்கிறார். உம்மைப் பலப்படுத்துகிற அவரைக் கொண்டு உம்மால் சகலமும் செய்யக்கூடும். பழைய ஏற்பாட்டில்,தேவ பிரஜைகளின் விரோதிகளின் மீது வெற்றி கொண்ட ஜாஹேல், (நியாயாதிபதிகள் ஆகமம் 4-ம் அதிகாரம்.) யூதித் (யூதித் ஆகமம் 13-ம் அதிகாரம்.) முதலான ஸ்திரீகளின் வல்லமையை உம்முடைய வல்லமையுடன் ஒப்பிட்டால், அவை எவ்வளவு அற்பமானவை என நாங்கள் அறிவோம். உமது வல்லமையின் கீழ் எப்பொழுதும் எங்களை ஆதரியும் அம்மா. எங்கள் வாழ்நாள் முழுவதிலும், முக்கியமாக எங்கள் மரண நேரத்தில் எங்கள் ஆத்தும விரோதிகளுடன் கடைசிப் போர் புரியும் சமயம் எங்களுக்கு உதவி புரிந்து, எங்களை மோட்ச பாக்கியத்திற்கு அழைத்துச் செல்லக் கிருபை புரியும் தாயே.” 


சக்தியுடையவர்களாயிருக்கிற கன்னிகையே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!