இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நேப்பிள்ஸ் நகருக்கு வரல்

மகிழ்ச்சியால் நிரம்பியிருந்த சங். பிரான்ஸிஸ்கோ வும் அவரது மேற்றிராணியார் வந். பர்தலோமேயுவும் அர்ச். பிலோமினம்மாளின் அருளிக்கப் பெட்டியை அதற்கென ஆயத்தமாக்கப்பட்ட வாகனத்தில் பத்திரமாக கெட்டியாய்ப் பொருத்தியபின் உரோமையிலிருந்து முஞ்ஞானோ ஊருக்குப் புறப்பட்டார்கள். அந்த அருளிக்கப் பேழை அவ்வாகனத்தில் வந். மேற்றிராணியாரின் இருக்கைக்கு நேர் கீழாய் இருந்தது. 

மேற்றிராணியார் தம் இருக்கையில் ஏறி அமர்ந்தார். ஆனால் ஒரு நிமிடம் கூட அதில் இருக்க முடியவில்லை. அவருக்குக் காலில் தாங்க முடியாத குத்தும் வலி ஏற்பட்டது. அவர் உடனே இறங்கி அருளிக்கப்பெட்டியை மிகப் பத்திரமாக இறுக்கிப் பொருத்தும்படி கூறினார். ஆனால் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பெட்டி மிகப் பத்திரமாகவே இறுகப் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்தது. அதை அதற்கு மேல் அதிக இறுக்கமாகப் பொருத்த முடியாது. மேற்றிராணியார் மறுபடியும் அமர்ந்தார். மீண்டும் அவருக்கு அதே பொறுக்க முடியாத வலி ஏற்படவே அவர் வாகனத்திலிருந்து மீண்டும் இறங்க வேண்டியதாயிற்று. இன்னொரு தடவை பெட்டியைப் பத்திரமாக்கும் பேச்சு எழுந்தது. ஆனால் அதுதான் மிகப் பத்திரமாயிருந்ததே! அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை. மூன்றாம் தடவையாக மேற்றிராணியார் தம் இடத்தில் அமர்ந்தார். அவரது கால்களில் அதிகக் கடூரமாக அதே வலி ஏற்படவே அவர் கீழே இறங்கி, “இந்தப் பெட்டியை நான் வேண்டுமானால் என் மடிமேல் வைத்து கரங்களில் ஏந்திக்கொள்கிறேன். எக்காரணங்கொண்டும் அது இருக்கிற இடத்தில் இருந்த படி நாம் பயணம் செய்ய முடியாது'' என்றார்.

ஆகவே பெட்டியை மேற்றிராணியாரின் இருக்கைக்குக் கீழே இருந்து எடுத்து வாகனத்தின் முன் பக்கமாய் முதன்மையான இடத்தில் வைத்தார்கள். அப்படிச் செய்து பயணத்தை ஆரம்பிக்கவே யாதொரு தொந்தரவுமின்றி பயணம் புறப்பட்டது. அப்போது மேற்றிராணியார் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை! அவர், அர்ச். பிலோமினம்மாளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கூறி அந்த அருளிக்கப் பேழையை அழுத கண்ணீரோடு மீண்டும் மீண்டும் முத்தமிட்டார்.

அவர்கள் நேப்பிள்ஸ் நகரை அடைந்து அங்கே செல்வந்தரான ஒரு நல்ல நண்பரின் வீட்டில் தங்கினார்கள்.

அந்த செல்வந்தரின் பெயர் அந்தோனியோ தெர்ரஸ். அவர் மனைவி ஆஞ்ஜெலா ரோஸ். அவர்களுக்கு இரு பெண் மக்கள். அவர்கள் வந். பர்த்தலோமேயு ஆண்டகை யிடம், முஞ்ஞானோவுக்கு அர்ச். பிலோமினம்மாள் புறப் படும் வரையிலும் தங்கள் வீட்டிலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். திருமதி. ஆஞ்ஜெலா ரோஸ் பத்து ஆண்டுகளாக தீராத ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள்.

வந். பர்தலோமேயு மேற்றிராணியார் இருதயங்களின் சின்ன அரசி என்று செல்லமாக அழைத்த அர்ச். பிலோமி னம்மாளின் எலும்புகளை வைப்பதற்கு ஒரு சுரூபம் தயாரிக்கப்பட்டது. அது சுத்தமான காகிதக் கூழால் செய்யப்பட்டது.

அர்ச். பிலோமினம்மாளின் திருப்பண்டங்கள் ஐந்து சிப்பங்களில் பார்சல்களாக, தூய வெண் பஞ்சினால் சுற்றப் பட்டு முத்திரையிடப்பட்டிருந்தன. ஒரு சிப்பத்தில் அவளு டைய புனித இரத்தச் சிமிழ் முத்திரையிடப்பட்டு இருந் தது. தலை எலும்புகள் தனியாக ஒரு பார்சலில் இருந்தன. இன்னும் மூன்று பார்சல்களில் கன்னியின் எலும்புகளும், சரீரத்தின் சாம்பலும் வைக்கப்பட்டிருந்தன. இத்திருப் பண்டங்களை அதனதன் இடத்தில் வைத்து, அந்த சுரூபம் சயன பாவனையாக செய்யப்பட்டது. ஆனால் சுரூபத்தைச் செய்தவன் நுண்கலைஞனல்ல. மிகவும் செல்லமாக வளர்க்கப் பட்ட சிறுமியான அரசிளங்குமாரியின் மென் உருவத்திற் குப் பதிலாக அவன் ஒரு குண்டான உருவமுடைய பெண் ணின் உருவத்தைச் செய்து விட்டான். அந்த உருவம் எவ்வகை யிலும் அழகில்லை. வந். பர்தலோமேயுவும் சங். பிரான் ஸிஸ்கோவும் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஆயினும் மரியாதையினிமித்தம் அந்த சுரூபத்தை வெளிப்படையாக மறுக்கக் கூடாதிருந்தனர். அப்படியிருந்தும் இருவருமே என்னவென்றும் சொல்லக்கூடாத ஒரு இரகசிய நம்பிக்கை யால் தூண்டப்பட்டு, அந்த சுரூபம் நன்றாக இருக்கும் - எப்படியும் சரியாக வந்துவிடும் என்ற பெரும் எதிர்பார்ப் பில் இருந்தனர். அது எப்படி வரும் என்பது அவர் களுக்குத் தெரியவில்லை. அர்ச். பிலோமினம்மாளின் விலா எலும்புக்கூட்டுக்குள் இருதயம் இருக்கும் இடத்தில் சேசுவின் மெய்யான சிலுவையின் இரு சிறு புனித துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. தலை முடியாக இருண்ட செக்கர் நிறப் பட்டு நூற்கற்றை சேர்க்கப்பட்டது. அர்ச்சியசிஷ்டவளின் திருப்பண்டங்களை ஏந்திய சுரூபம் முறைப்படி பத்திரமாக முத்திரையிடப்பட்டது. சுரூபத்தை உடுத்துவிக்கும் பணியை சிரமத்தையும் செலவையும் பாராமல் வீட்டெஜமானி ஆஞ்ஜெலா ரோஸும் அவள் பிள்ளைகளும் ஏற்றுச் செய்தனர். அவள் தன் உள்ளத்தில் கொண்ட நம்பிக்கையின்படியே, அர்ச். பிலோமி னம்மாளின் அருளிக்கத்தைத் தொட்ட பின் ஒரு வாரத்திற்குள் முழுச் சுகம் அடைந்தாள். அவளுடைய தீராப் பிணி தீர்ந்து போயிற்று.

திருச்சபையில் வேதசாட்சியம் முதலாவதாகவும் கன்னிமை அதற்கு அடுத்தபடியிலும் போற்றப்படுகிறது. அர்ச். பிலோமினம்மாள் கன்னி வேதசாட்சி. அதிலும் தன் கன்னிமையை சேசுவுக்காக காப்பதற்கெனவே வேதசாட்சி யானாள். ஆகவே கன்னிமைக்கு வெண்மையும், வேத சாட்சி யத்திற்குச் சிவப்புமாக சுரூபத்தின் உடுப்புகள் தயாரிக்கப் பட்டன. தலையில் பொன் மலர் மகுடம் வைக்கப்பட்டது. வலது கரத்தில் ஒரு அம்பு இருதயத்தை நோக்கியபடியும், இடதுகரத்தில் குருத்தோலையும், லீலி மலரும் கொடுக்கப் பட்டன. சுரூப அலங்கரிப்பை தனக்கு முழு திருப்தியாக முடித்த ஆஞ்ஜெலா உறங்கும் அழகான அர்ச். பிலோமி னாளை நன்றியுணர்வுடனும் மன நிறைவுடனும் பார்த் தாள். அர்ச். பிலோமினம்மாள் அவ்வில்லத்திற்கு வந்த நேரம் முதல் அதை விட்டுப் போகும் வரையிலும் அங்கு நிரம்பியிருந்த ஒரு மிக இனிய வாசனையை எல்லாரும் உணர்ந்தனர். ஆனால் சங். பிரான்சிஸ்கோவிற்கு தான் நேசித்து இத்தனை சிரமப்பட்டுக் கொண்டு செல்லும் அவருடைய பிலோமினாளை இந்நிலையில் காண சற்றும் பிடிக்க வில்லை. இதற்கிடையில் சுரூபத்தை வைக்க ஒரு அழகிய மரப்பேழையை வந். பர்தலோமேயு அர்ச். பிலோமினம் மாளுக்கு காணிக்கையாகச் செய்வித்தார். பெட்டகம் செய்து வந்தது. சுரூபத்தின் அளவான 5 அடி நீளமே அந்தப் பெட்டியும் இருந்தது. அதனால் சுரூபத்திற்கு அதற்குரிய பஞ்சணைகள் அணிகலன்கள் ஆகியவற்றைப் பொருத்திய போது பெட்டியில் இடம் பற்றவில்லை. பெட்டியை மாற்றவோ வேறு பேழை செய்யவோ வாய்ப்புமில்லை நேரமில்லை. ஆதலால் சுரூபத்தை அப்படி இப்படிப் புரட்டி எப்படியோ அப்பெட்டிக்குள் திணித்து வைக்க வேண்டிய தாயிற்று. இதில் வேறு அந்த சிற்பி அர்ச். பிலோமினம் மாளின் முழங்கால்களை சாதாரணமாக விடாமல் சற்று எழும்பிய நிலையில் செய்திருந்தது நன்றாகவேயில்லை. சங். பிரான்சிஸ்கோ பெரும் ஏமாற்றமும் துயரமும் அடைந்தார்.

அப்போதுதான் அர்ச் பிலோமினம்மாள் அவரை மகிழ்விக்க வந்தாள். சுரூபம் இன்னும் அந்தோனியோ தெர்ரஸின் மாளிகையில்தான் இருந்தது. அங்கே யாருக்கும் புலப்படாத முறையில் அர்ச். பிலோமினம்மாளின் திரு வுருவம் தன்னையே சரிப்படுத்தியது. சாய்மணையாக வைக்கப்பட்ட இரண்டு தடித்த பஞ்சணைகளில் ஒன்று ஓரந்தள்ளப்பட்டது. முழங்கால்கள் சாதாரண நிலைக்குத் தாழ்ந்தன. சுரூபமும் சற்று சரிந்து கொடுத்து ஒரு அர்ச்சிய சிஷ்டவளுக்குரிய சயன பாவனையைப் பெற்றது! இந்த மவுனப் புதுமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சங். பிரான்சிஸ்கோ அளவிலா ஆனந்தமடைந் தார். வந். பர்தலோமேயுவும் பெரும் மகிழ்ச்சியும் ஆச்சரிய மும் அடைந்தார். அவர்களின் இனந்தெரியாத நம்பிக்கை இவ்வாறு சன்மானம் பெற்றது!

நேப்பிள்ஸ் நகர் அந்தோனியோ தெர்ரஸ் இல்லத்தில் அர்ச். பிலோமினம்மாள் தங்கியிருந்த செய்தி அப்பட்டண மெங்கும் பரவியது. நேப்பிள்ஸ் அர்ச். அஞ்செலா பங்குக் குரு சங். வின்சென்ட் அமிக்கோவின் விண்ணப்பப்படி அர்ச். பிலோமினம்மாளின் சுரூபம் பெரிய பவனியாக அங்கே கொண்டு செல்லப்பட்டது. மூன்று நாள் இரவும், பகலும் சுரூபம் அந்தப் பங்குக் கோவிலில் இருந்தது. ஆனால் அர்ச். பிலோமினம்மாள் அங்கு எந்தப் புதுமையும் செய்யவில்லை.

அங்குள்ள பங்குக் குருவும் துணைக் குருக்களும் பின்னால் மகிழ்ச்சியுடனேயே விஷயத்தைக் கூறினார்கள். அங்கே ஒரு புதுமை நடந்திருந்தாலும் கூட அதற்குப் பின் அர்ச்சியசிஷ்டவளை அங்கிருந்து அகற்ற விடக்கூடாது என்று அவர்கள் தீர்மானம் செய்திருந்தார்களாம். இதைக் கேட்ட சங். பிரான்சிஸ்கோ புன்னகை செய்தார். வேண்டு மென்றே அர்ச். பிலோமினம்மாள் அங்கே எந்தப் புதுமை யும் செய்யவில்லை.

ஆனால் அந்தோனியோ தெர்ரஸின் மாளிகைக்கு அர்ச். பிலோமினம்மாள் திரும்பி வந்ததும் அநேக புதுமைகள் நிகழ்ந்தன! ஆகஸ்ட் 9-ம் தேதி 1805ல் அப்பரிவாரம் முஞ்ஞானோ ஊருக்குப் புறப்பட வேண்டும். திருமதி ஆஞ்ஜெலா ரோஸுக்கு தன்னை குணப்படுத்தியவளும். தான் மிகவே நேசிக்கிறவளுமான பிலோமினம்மாளை விட்டுப் பிரிய முடியவில்லை. தன் வீட்டிலேயே அவளை வைத்துக் கொள்ள முடியாதா என்று அவள் பரிதவித்தாள். அவளை சாந்தப்படுத்துவதற்காக சங். பிரான்சிஸ்கோ, அர்ச். பிலோமினம்மாளை வைத்திருந்த பேழையின் சாவியை அவளிடம் ஒப்படைத்தார். அவள் மட்டுமே அப்பேழை யைத் திறக்க முடியும்.