இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வாக்குத்தத்தத்தின் பெட்டகமே!

எஜிப்து தேசத்தில் அடிமைப்பட்டிருந்த தேவ பிரஜைகளை மீட்க, கடவுள் மோயீசனை அனுப்பினார். மோயீசன் அவர்களைப் பாரவோனிடமிருந்து மீட்டு எஜிப்திலிருந்து அழைத்துச் சென்ற விபரங்களைப் பழைய ஏற்பாட்டில் யாத்திராகமம் என்னும் புத்தகத்தில் வாசிக்கிறோம். அப்புத்தகத்தின் 25-ம் அதிகாரத்தில் நாம் வாசிப்பதுபோல் மோயீசன் ஒரு சிறு பெட்டி செய்ய வேண்டுமென கடவுள் கட்டளையிட்டார்.

அப்பெட்டியை எப்பொருட்கள் கொண்டு செய்ய வேண்டுமெனவும், எவ்விதம் செய்ய வேண்டுமெனவும் சர்வேசுரனே மோயீசனுக்குப் படிப்பித்தார். சேத்திம் என்ற மரத்தின் பலகையால் செய்யப்பட்ட பெட்டி அது. அதன் நீளம் 2.5 முழம்; அகலம் 1.5 முழம்; உயரம் 1.5 முழம், பெட்டியின் உட்புறமும், வெளிப்புறமும் தூய பொன்னால் ஆக்கப்பட்ட தகடுகளினால் மூடப்பட் டிருந்தன. பெட்டியின்மேல் ஒரு தங்க முடி பொருத்தப்பட்டிருந்தது.

இப்பெட்டகத்தினுள்ளே “மன்னா” என்னும் போஜனம் வைக்கப்பட்டிருந்த பொற்பாத்திரமும், ஆரோனுடைய கோலும், சர்வேசுரன் எழுதித்தந்த பத்துக் கற்பனைப் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன (எபி. 9:4). இஸ்ராயேல் ஜனங்கள் அப்பெட்டகத்திற்கு “வாக்குத் தத்தத்தின் பெட்டகம் எனப் பெயரிட்டு வெகு பக்தி வணக்கத்தோடு அதைப் போற்றி வந்தனர்.

சாலமோன் அரசனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஜெருசலேம் தேவாலயத்தில் இருந்த பொருட்களி லெல்லாம் மேன்மையாகப் போற்றப்பட்டு வந்தது இப்பெட்டகமே. இது வைக்கப்பட்டிருந்த இடத்தில் பிரதான குரு மட்டுமே நுழைய முடியும். அதுவும் வருஷத்தில் ஒரு முறைதான் (எபி.9:7).

வேதசாஸ்திரிகள் கூறுவது போல், இப்பெட்டகம் பின்னர் வரவிருந்த நமது ஆண்டவரைக் குறித்துக் காட்டியது; நமது ஆண்டவரை மட்டுமின்றி, அவ ருடைய பரிசுத்த தாயையும் இப்பெட்டகம் குறித்துக் காட்டியது. இக்காரணம் பற்றியே திருச்சபை மாதாவை “வாக்குத்தத்தத்தின் பெட்டகமே” எனப் புகழ நம்மை ஏவுகின்றது. உண்மையில் பழைய ஏற்பாட்டிலிருந்த அப்பெட்டகத்திற்கும், புதிய ஏற்பாட்டின் பெட்டகம் எனப் புகழப்படும் நம் மாதாவுக்கும் அநேக ஒற்றுமைகள் உண்டு.

பழைய ஏற்பாட்டின் பெட்டகம் உறுதியான சேத்திம் என்ற மரத்தால் செய்யப்பட்டிருந்தது. பாவத் தினின்றும் அதன் தீமைகளினின்றும் நமது அன்னையின் சரீரம் காப்பாற்றப்பட்டு உறுதியுள்ளதாக இருந்தது. இவ்வுலகில் உதிக்கும் மனிதன் ஒவ்வொருவனும் தாவீது அரசரோடு, “நானோவென்றால் அக்கிரமத்தில் ஜென்மித் தேன்; என் தாயார் பாவத்தில் என்னைக் கர்ப்பந்தரித் தாள்” (சங். 50:7) எனச் சொல்ல வேண்டியிருக்க, நோவாவின் பேழை எவ்விதம் ஜலப் பிரளயத்தில் மூழ்கிப் போகாது தப்பியதோ, அவ்விதமே பாவமாகிய பிரளயத்தில் அகப்படாமல் தப்பினார்கள் நம் மாதா.

பெட்டகம் உள்ளும் புறமும் தூய பொன்னால் மூடப்பட்டுப் பிரகாசித்தது. மாமரியிடமிருந்த புண்ணி யங்கள் இப்பொன்னைப் போல் என்றும் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவர்களிடமிருந்த புண்ணியங்கள் மற்ற மனிதர்களிடம் காணப்படினும் எவரிடமும் அவர் களிடத்தில் போன்று சகல புண்ணியங்களும் ஒப்பற்ற விதமாய் ஜொலிக்கவில்லை.

பெட்டகத்தின் மேல் சொர்ண முடியொன்றிருந்தது. அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அறிகுறியாக மரியாயின் சிரசின் மீதும் முடியொன்றுள்ளது. விண்ணுலக மண்ணுலக அரசியாக அவர்கள் உயர்த்தப்பட்டிருப்பதால் பொன்னைப் பழிக்கும் மணிமுடி இவர்களுக்குரியதே.

இரு சம்மனசுக்கள் தம் இறக்கைகளால் பெட்டகத்தை மூடிக் கொண்டிருந்தன. “உன்னுடைய சகல வழிகளிலும் உன்னை வைத்துக் காப்பாற்ற உனக்கு ஒரு காவல் தூதனைக் கொடுத்திருக்கிறார்” (சங். 90:11) என்று சங்கீதத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காவல் தூதர் நியமிக்கப் பட்டிருக்கிறார். சாதாரண மனிதனுக்கு ஒரு காவல் தூதர் இருந்தால் ஒரு இராக்கினிக்கு எத்தனை பேர் இருந்திருக்க வேண்டும்!

பெட்டகத்தினுள் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்பாத்திரம் இருந்தது. கன்னிப் பெட்டகத்தினுள்ளோ, “மோட்சத்திலிருந்து இறங்கிவந்த ஜீவனுள்ள அப்பமே” (அரு. 6:51) இருந்தது. பத்துக்கற்பனைகள் அடங்கிய இரு கற்பலகைகள் பெட்டகத்தினுள் இருந்தன. நம் மாதரசியிடத்திலோ, கற்பலகைகளல்ல, கற்பனைகளைக் கொடுத்த கடவுளே வீற்றிருந்தார்.

அக்காலத்தில் கடவுள் பல புதுமைகளால் இந்த வாக்குத்தத்தத்தின் பெட்டகத்தை ஜனங்கள் பக்தி வணக்கத்தோடு காத்து வரும்படி செய்தார். முதல் அரசர் ஆகமம் 5-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு கவனிப்போம். பிலிஸ்தியர் அப்பெட்டகத்தைத் தூக்கிச் சென்று தங்கள் கோவிலில் தாகோன் (Dagon) என்ற சிலையின் பக்கத்தில் வைத்துச் சென்றனர். மறுநாள் தாகோனுடைய சிலை முகம் குப்புற பெட்டகத்தின் முன் கிடப்பதை அவர்கள் கண்டனர்; அதைச் சரியாக வைத்துச் சென்றனர். 

ஆனால் மறுநாள் தாகோனுடைய தலையும், கைகளும் உடைபட்டுக் கிடந்தன. இது மட்டுமா? ஜனங்களுக்கு அநேக கஷ்டங்களும், துன்பங்களும் ஏற்பட்டன. இவைகளினால் பயமடைந்து பிலிஸ்தியர் அப்பெட்டகத்தை இஸ்ராயேல் ஜனங்களுக்குத் திரும்ப அனுப்பினர். இஸ்ராயேலர் தக்க மேரை மரியாதையுடன் அதைப் போற்றி வந்தனர். சுவாமியேது, பூதமேது என்று பிதற்றும் இக்காலத்தில் கூட மாமரிக்குக் கத்தோலிக்கர் மட்டுமல்ல, வேறு பல மதத்தினரும் காட்டும் சங்கையையும் மேரை மரியாதையையும் கண்கூடாகக் காண்கிறோமல்லவா?

இஸ்ராயேலர் வாக்குத்தத்தத்தின் நாட்டை நெருங்குகையில் ஜோர்தான் நதியைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது கடவுள் அவர்களிடமிருந்த பெட்டகம் எல்லோருக்கும் முன்னதாகக் கொண்டு போகப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார். அவ்வாறே குருக்கள் பெட்டகத்தை ஏந்தி நதியில் இறங்கினர். ஆச்சரியம்! அவர்கள் கால் தண்ணீரில் பட்ட மாத்திரத்திலேயே நீரோட்டம் நின்றது, தண்ணீர் வடிந்தது. இஸ்ராயேலர் பயமின்றி கால் நனையாது அக்கரை அடைந்தனர். இவ்வுலகில் நாம் உள்ளளவும் துன்ப துயர நதியானது நம்மீது பாய்ந்தோடி வரும். அச்சமயங்களில் தேவதாயார் நம் அருகில் இருப்பார்களானால், அத்தாயாரின் சலுகையை நாம் தேடினால், துயர ஆறு தூர ஓடிப் போகுமன்றோ?

வாக்குத்தத்தத்தின் பெட்டகத்தால் தேவ பிரஜை கள் சர்வேசுரனிடமிருந்து விசேஷ வரப்பிரசாதத்தைப் பெற்றனர். இதற்குச் சான்று வேதாகமமே. கர்த்தரின் பெட்டகம் ஒபேதெதோம் வீட்டில் மூன்று மாதமளவாகத் தங்கியிருக்கையில், கர்த்தர் ஒபேதெதோமையும், அவன் வீட்டாரையும், அவனுக்குண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் (2 அரசர் 6:11,12). 

“வழியும், சத்தியமும், ஜீவனுமான” பரம தேவனைக் கொண்டிருந்த ஜீவிய பேழையாக மாமரி சக்கரியாஸின் வீட்டிற்கு வரப் பிரசாதத்தைப் பெற்றளித்தார்கள். “எலிசபெத்தம்மாள் மரியம்மாளுடைய மங்கள வசனத்தைக் கேட்டவுடனே அவள் உதரத்திலிருந்த பிள்ளை துள்ளிற்று. அவள் இஸ்பிரீத்து சாந்துவால் ஏவப்பட்டு, “இதோ உமது மங்கள சத்தம் என் செவிகளில் பட்டவுடன் என் பிள்ளை களிப்பினால் துள்ளிற்று என்றாள்” (லூக். 1:39-44). எனவே இச்சீவிய பெட்டகம் நம் மனமாகிய இல்லத்தில் இருக்கும்வரை நமக்குத் தேவ உதவி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

“ஓ மரியாயே! தேவாதி தேவன் உறைந்த புதிய ஏற்பாட்டின் பெட்டகமே! இதோ உமது மைந்தர் உம்மை நோக்கி ஓடி வருகிறோம். அம்மா! ஆசாபாசங்களால் அழகு குன்றி தேவன் உறைவதற்குத் தகுதியற்ற நிலையிலிருக்கின்ற எங்கள் இருதயங்களைப் பரிசுத்தப்படுத்தி, என்றும் அவருக்கு ஏற்ற இருப்பிடமாகச் செய்ய எங்களுக்கு வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தாரும். உமது மன்றாட்டின் உதவியால் எங்கள் உள்ளங்கள் சர்வேசுரன் உறையும் பேழைகளாக என்றும் விளங்குவனவாக!” 


வாக்குத்தத்தத்தின் பெட்டகமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!