அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - கோபவெறி கொண்ட காகங்களும், குணப்படுத்தும் களிம்பும்

ஒரு மாத காலத்திற்கும் மேலாக, டொன் போஸ்கோ ஒரு விடாப்பிடியான கண் நோயினால் துன்பப்பட்டார் என்று ருஃபினோ காலக்கிரமப் பதிவேடு நமக்குக் கூறுகிறது. இதன் காரணமாக அவர் கறுப்புக் கண்ணாடி அணிய வேண்டியதாயிற்று. அப்போதும் கூட அவர் வேலை செய்து கொண்டும், தம் குருக்களையும், இளம் துறவிகளையும் தம்மைப் போலவே வேலை செய்ய வற்புறுத்திக் கொண்டும்தான் இருந்தார். 

“தைரியம் கொள்ளுங்கள், இளம் பருவத்தினருக்காக நாம் முழு இருதயத்தோடு வேலை செய்வோம். கடவுளின் மகிமைக்காகவும், ஆன்மாக்களின் நன்மைக் காகவும் நம்மால் முடிந்ததையெல்லாம் செய்வோமாக. “நாமே மிகவும் சிறந்த உன் வெகுமானமாயிருப்போம்” (ஆதி.15:1) என்று கடவுள் ஆபிரகாமுக்கு வாக்களித்த அதே வெகுமானம் மேலே நமக்காகக் காத்திருக்கிறது. 

சில சமயங்களில் நாம் களைப்பாகவும், முற்றிலும் சோர்வுற்றவர்களாகவும், நோய்களால் மேற்கொள்ளப் பட்டவர்களாகவும் உணரலாம். ஆனால் நாம் தைரியம் கொள்ள வேண்டும், ஏனெனில் மேலே நாம் என்றென்றும் நித்திய இளைப்பாற்றியைக் கொண்டிருப்போம்” என்று அவர் கூறினார். மேலும் ஆண்டவரில் தமக்குள்ள முழுமையான நம்பிக்கையின் அடையாளமாக அவர் மோட்சத்தை நோக்கித் தம் வலக்கரத்தை உயர்த்தினார்.

செல்வம் என்பது ஒரு சோதனை

தேவ பராமரிப்பு தங்களிடம் ஒருவேளை ஒப்படைக்கக் கூடிய வேலைகளைப் பற்றி அவருடைய உடன் ஊழியர்கள் அடிக்கடி அவரோடு விவாதித்தார்கள். இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப் பத்தில், 1864 ஏப்ரல் 3 அன்று, உயர்குடியைச் சேர்ந்த குடும்பங்களின் ஆண்மக்களுக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்று நடத்துவது பற்றிய சாத்தியக்கூறு பற்றி ஒருநாள் அவர் பேசத் தொடங்கினார்கள். 

“ஓ, கூடாது!” என்று இடைமறித்தார் டொன் போஸ்கோ. “நான் உயிரோடு இருக்கும் வரை அது வேண்டாம்! ஒருபோதும் வேண்டாம்! அது நிர்வாகம் தொடர்பான ஒரு காரியம் மட்டுமே என்றால், அதைப் பற்றி நாம் சிந்திக்கலாம். வேறு விதத்தில் அதைப் பற்றி நாம் பேச வேண்டாம். ஏழைகளைக் கொண்டு தொடங்கி விட்டு, பணக்காரர்களிடம் முடிவடைந்த பல்வேறு பிரசித்தி பெற்ற துறவற சபைகளை அது அழித்து விட்டது போலவே நம்மையும் அது அழித்து விடும். அதன் காரணமாக அவர்கள் பொறாமை, காய்மகாரம், தவறான வழிகளில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சிகள் ஆகியவற்றில் விழுந்தனர். 

செல்வமும், செல்வந்தர்களோடு முறையற்ற சமூக உறவு கொள்வதும் பொதுவான சோதனைகளாகும். ஏழை மாணவர்களுக்காக நாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்போம் என்றால், இதையன்றி வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் யாராவது கருணையோடு நம்மை சகித்துக் கொள்வார்கள், இதற்காகவே மற்றவர்கள் ஒரு வேளை நம்மைப் புகழ்வார்கள் என்றால், நாம் சமாதானத்தோடு இருப்போம். நம் உடமைகளை யாரும் விரும்ப மாட்டார்கள். நம்முடைய கந்தைத் துணிகளைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்ள மாட்டார்கள்.”

வருடாந்தர தியானம்

சிறுவர்களின் வருடாந்தர தியானம் ஏப்ரல் 11 அன்று தொடங்கும் என்று டொன் போஸ்கோ ஏப்ரல் 4 அன்று சிறுவர்களுக்கு அறிவித்தார். அவருடைய உரையின் சாராம்சம் இப்படி இருந்தது: “ஒரு நல்ல தியானம் செய்ய நீங்கள் தயாராக வேண்டும். இப்போது உறுதியான திட்டங்களைச் செயல்படுத்த நீங்கள் தொடங்கவில்லை என்றால், உங்கள் தியானம் எந்த விதமான எதிர் காலப் பலனையும் தராது. 

“நான் நன்கு உறங்கிக் களைப்பாறிக் கொள்வேன்” என்று ஒருவன் சொல்லலாம், அல்லது, “ஏதாவது விறுவிறுப்பான புத்தகத்தை வாசித்து, அல்லது எதையாவது வாயில் அசை போட்டுக் கொண்டிருந்து என் நேரத்தை மிக நன்றாக செலவழிப்பேன்” என்று சொல்லலம், அல்லது, “நான் ஏதாவது ஒரு காரியத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதில் என் நேரத்தைப் பயன்படுத்துவேன்” எனலாம். 

மற்றவர்கள், “ஏதாவது ஞானப் பலனை சம்பாதிக்கப் போகிறேன், என் தேவ அழைத்தலைப் பற்றி சிந்திக்கப் போகிறேன்” என்று சொல்லலாம். இது புத்திசாலித்தனமான காரியம். மற்றவர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது? அவர்களிடம் நாம் என்ன சொல்வது? என் பிரியமான சிறுவர்களே, இந்த தியானமே உங்கள் கடைசி தியானமாக இருக்க நிறைய வாய்ப் புள்ளது! அதைப் பற்றி நினைத்துப் பாருங்கள்!”

தியான நாள் ஏப்ரல் 11 என்று முடிவாகி விட்டது. இதுதான் மாணவர்களோடு, வேலையாட்களும் தியானத்தில் பங்கு பெற்ற கடைசி முறையாக இருந்தது. மேலும் மேலும் அதிக சிறுவர்கள் சேர்ந்து கொண்டிருந்ததால், அதன்பிறகு, இரண்டு தனித்தனி
அவசியமாயிற்று. இந்த தியானப் பயிற்சிகளைப் போதித்தவர் சுவாமி இக்னேஷியஸ் ஆர்ரோ ஆவார். 

பாவசங்கீர்த்தனம்

டொன் போஸ்கோ பாவசங்கீர்த்தனத் தொட்டியில் மிக நீண்ட நேரம் செலவிட்டு வந்தார். “இந்த ஊழியத்தில், இளையோர் மற்றும் முதியோரிடம் அவர் கொண்டிருந்த கருணை அசாதாரண மானதாகவும், அசைவுறாததாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் இருந்தது. கிட்டத்தட்ட நாங்கள் எல்லோருமே அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யச் சென்றோம். 

அவருடைய கனிவும், பொறுமையுமுள்ள மென்மையும், பிறர்சிநேகமுமே அதற்குக் காரணம். அவர் கடுமையாயிருப்பதற்குப் பதிலாக அதிக செல்லம் கொடுப்பவராக இருந்தார். கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கை வைக்கும்படி எங்களைத் தூண்டும் அதே வேளையில், எங்கள் இருதயங்களில் பரிசுத்த தெய்வ பயத்தையும் அவர் தூண்டியெழுப் பினார்” என்று கர்தினால் காலியேரோ குறிப்பிடுகிறார்.

காகங்கள் அல்லது பசாசுக்கள்

டொன் போஸ்கோ ஏப்ரல் 14 அன்று சிறுவர்களுக்கும், மறுநாள் இரவில் ஊழியர்களுக்கும் “நல்லிரவு” உரையாற்றினார். ஒவ்வொரு குழுவுக்கும் அவர் இரண்டு கனவுகளை விவரித்துக் கூறினார். இவை தம்மை மலைப்படையச் செய்ததாக அவர் கூறினார். முதலாவது கனவு தியானத்திற்கு முன்னும், இரண்டாவது, தியானத்திற்குப் பின்னும் வந்தன.

அவர் பின்வருமாறு பேசினார்:

ஏப்ரல் 2, தாழ்நிலை ஞாயிறுக்கு முந்தின சனிக்கிழமை இரவில், நான் முகப்பு மாடியில் நின்று நீங்கள் கீழே விளையாடு வதைக் கவனித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. திடீரென ஒரு விஸ்தாரமான வெண்ணிற விரிப்பு ஒட்டுமொத்த விளையாட்டுத் திடலுக்கு மேலாகத் தோன்றியது. 

அதன்பின் பெரும் எண்ணிக்கை யிலான காக்கைகளின் கூட்டம் ஒன்று வந்தது. அவை அந்த விரிப்பின் ஓரங்களிலுள்ள ஒரு திறப்பைக் கண்டுபிடிக்கும் வரை அதற்கு மேலாக இறக்கைகளை அடித்தபடி பறந்து கொண்டிருந்தன. அப்படி ஒரு திறப்பைக் கண்டுபிடித்தவுடன், அதன் வழியாக ஊடுருவி, சிறுவர்களின் முகங்களை நோக்கிப் பறந்தன. 

அவர்களுடைய கண்களைப் பிடுங்கின, அவர்களுடைய நாக்குகளைக் கிழித்தன, அவர்களுடைய நெற்றிகளிலும், இருதயங்களிலும் கொத்தின. என்ன ஒரு பரிதாபமான காட்சி! ஆயினும் நம்ப முடியாத விதமாக - என்னால் இதை நம்ப முடியவில்லை! - யாருமே அழவில்லை, வலியால் கதறவுமில்லை. ஒவ்வொருவனும் மரத்துப் போனவனைப் போலத் தோன்றினான். 

தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக் கூட யாரும் முயலவில்லை. “நான் கனவு காண்கிறேனா?” என்று நான் வியந்தேன். “நான் கனவுதான் கண்டு கொண்டிருக்கிறேன். வேறு எப்படி இந்தச் சிறுவர்கள் ஒரு சிறு முணுமுணுப்பு கூட இன்றி, இப்படி இரத்தக் களறியாக்கப்பட தங்களையே அனுமதிக்க முடியும்?” என்றாலும், விரைவில் கூக்குரல்களையும் அலறல்களையும், புலம்பல்களையும், அழுகைகளையும் என்னால் கேட்க முடிந்தது. 

காயம்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து ஊர்ந்தபடி விலகிச் செல்லத் தொடங்கினார்கள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. “ஒருவேளை இன்று தாழ்நிலை ஞாயிறாக இருப்பதால், ஆண்டவர் தமது வரப்பிரசாதத்தைக் கொண்டு தாம் நம்மை மூடிக் காப்பதாக நமக்குக் காட்ட விரும்புகிறாரோ என்னவோ? 

இந்தக் காகங்கள் பசாசுக்களாக இருக்கலாம்” என்று நான் நினைத்தேன். ஏதோ ஒரு சத்தம் என்னை எழுப்பியதால், என்னுடைய இந்தக் காட்சி திடீரென அறுபட்டுப் போனது அப்போது நல்ல பகல் வெளிச்சம் இருந்தது. யாரோ என் அறைக்கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

திங்களன்று வழக்கத்தை விடக் குறைவானவர்களே திவ்விய நன்மை வாங்கச் சென்றதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். செவ்வாயன்று இன்னும் குறைவான சிறுவர்களே நன்மை வாங்கினர். புதனன்று மிகச் சிலர் மட்டுமே நற்கருணை உட்கொண்டனர். அன்று பாதிப் பூசை முடிந்த நிலையிலேயே பாவசங்கீர்த்தனங்கள் முடிந்து விட்டன. நான் எதுவும் சொல்வதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். ஏனெனில், தொடங்கவிருக்கும் தியானத்தில் காரியங்கள் சரியாகி விடும் என்று நான் நம்பினேன்.

ஏப்ரல் 14, நேற்றிரவு நான் மற்றொரு கனவு கண்டேன். நான் நாள் முழுவதும் பாவசங்கீர்த்தனம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆகவே, வழக்கம்போல, நான் உங்கள் ஆன்ம நலத்தைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். இரவில் படுக்கச் சென்றாலும், என்னால் உறங்க முடியவில்லை. 

நான் மீண்டும் முகப்பு மாடியில் நின்று நீங்கள் விளையாடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தது போலத் தோன்றியது. காகங்களால் காயம்பட்டிருந்தோர் யார் யாரென்று என்னால் அடையாளம் காண முடிந்தது. திடீரென இரண்டு மனிதர்கள் அங்கே தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் களிம்பு நிறைந்த ஒரு சிறு ஜாடியையும், மற்றவர் துடைக்கும் துணி ஒன்றையும் கையில் வைத்திருந்தார்கள். 

அவர்கள் உடனடியாக காயம் பட்டவர்களைக் கவனிக்கத் தொடங்கினார்கள். அந்தக் களிம்பு காயங்களைத் தொட்ட வினாடியிலேயே சிறுவர்கள் குணப்படுத்தப்பட்டார்கள். பலர் வைத்தியம் செய்து கொள்ள மறுத்து, அந்த இரு மனிதர்களும் தங்கள் அருகில் வந்தபோது, அவர்களிடமிருந்து தொலைவாகத் தரையில் ஊர்ந்தபடி நகர்ந்து சென்றனர். 

என்னை அதிகமாக வேதனைப்படுத்தியது என்னவென்றால், இந்தச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததுதான். அவர்களுடைய பெயர்களைக் குறித்து வைத்துக் கொள்ள நான் எண்ணினேன். ஏனெனில் அவர்கள் எல்லோரையும் நான் அறிந்திருந்தேன். ஆனால் அப்படி எழுதிக் கொண்டிருந்த போதே என் உறக்கம் கலைந்து விட்டது. என் கனவில் நான் அவர்களுடைய பெயர்களை எழுதிக் கொண்டிருந்ததால், அவை இன்னும் என் மனதில் தெளிவாக இருக்கின்றன. 

உண்மையைச் சொல்வதானால், சிலருடைய பெயர்களை நான் மறந்து விட்டிருக்கக் கூடும் என்றாலும், அவை இப்போத தெளிவாக உள்ளன. அப்படி ஒருவேளை நான் பெயர் மறந்தவர்கள் மிகச் சிலர்தான் இருப்பார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். படிப்படியாக, நான் இந்தச் சிறுவர்களிடம் பேசி - ஏற்கனவே சிலரிடம் நான் பேசி விட்டேன் - தங்கள் காயங்களுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ள அவர்களை வற்புறுத்த முயல்வேன்.

இந்தக் கனவுக்கு உங்கள் விருப்பப்படி அர்த்தம் கற்பித்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் முழுமையாக நம்பினால் ஆன்ம ரீதியான தீங்கு எதுவும் நேரப் போவதில்லை என்பதில் நான் உறுதியா யிருக்கிறேன். ஆனாலும் இந்தக் கனவு இந்த ஆரட்டரியைத் தாண்டி வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். 

நான் உங்களிடம் எல்லாவற்றையும் முழுவதுமாகத் திறந்து சொல்லி விடுகிறேன். என்றாலும், இந்தக் காரியங்களை உங்கள் மனதுக்குள்ளேயே நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்.